3
அறுசுவை உணவுள்ள விருந்து
ஆர்ந்தவர்க் கமுதாம் விருந்து
உறுசுவைப் பண்டங்கொள் விருந்து
உற்றவர்க் கரிதாம் விருந்துஎண்ணற்ற கனிநிறை விருந்து
எண்ணவே தித்திக்கும் விருந்து
பண்ணுற்ற தீஞ்சுவை விருந்து
பண்பான அன்புமன விருந்து
விருந்தினை அருந்திட நிறைந்தார்
வேல்வேந்தர் எண்ணற்ற பேர்கள்
பொருந்தினர் புலவர்கள் பல்லோர்
டொற்புடைய வள்ளல்கள் நல்லோர்
அடைந்தனர் செல்வர்கள் பல்லோர்
அமர்ந்தனர் விருந்தறை யதிலே
மிடைந்திட்ட இலைமுன் னிருந்தார்
மேலாக ஒரன்பர் நின்றார்
இலைபோட இடமங்கே யில்லை
இருந்திட அவர்க்கிடமு மில்லை
நிலைகண்ட சேரமான் எங்கும்
நீள்விழிப் பார்வையது செய்தான்
நின்றிட்ட புதியவரை அங்கே
இருத்திட நினைந்துவழி கண்டான்
நன்றுள்ள ஒளவையரு குற்றான்
நற்கரம் பற்றியெழுப் பிட்டான்
“ஒளவைவா ராய்” என்று அழைத்தான்
அப்புறம் உண்போமென்று உரைத்தான்
செவ்வையாய் நின்றவரை ஆங்கே
சேர்த்திலை முன்னமரச் செய்தான்
உரிமையால் பேரன்பு செய்த
உத்தமன் சேரமான் உள்ளம்
பெருமையது பெருமையது என்றே
பேரன்பு கொண்டுபோற் றிடுவார்
பின்னர்ச் ஒளவையாரைத் தனது அருகில் அமரச்செய்து அருஞ்சுவை யுணவூட்டித் தானும் உண்டு மகிழ்ச்சி கொண்டான். தான் உள்ளன்பால் உரிமையோடு செய்த செயலை உணர்ந்து போற்றிய உயர்தமிழ் மூதாட்டியை உவந்து பாராட்டினான். அவனது அரண்மனையில் பன்னைளிருந்து, பின்னர் விடைபெற்று வழிநடந்தார். திருக்கோவலூரை நோக்கி வந்துகொண்டிருக்கும் வழி நடுவே பெருமழை பெய்யத் தொடங்கியது. மழைக்கு ஒதுங்கிநிற்க இடையே இடம் ஏதும் இல்லாமையால் விரைந்து திருக்கோவலூரை அடைந்தார். இரவுவேளை, மழையோ விட்டபாடில்லை. உடுத்திய ஆடை மிகவும் நனைந்துவிட்டது. உடலோ குளிரால் நடுங்கியது. ஊருள் நுழைந்ததும் எதிரே காணப்பெற்ற குடிசையுள்ளே ஒளவையார் நுழைந்தார்.