="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

14

பாட்டு

திருக்கோவ லூரை யாண்ட
திருமுடிக் காரி யென்பான்
செருக்கினை யடக்க வேண்டிச்
சேருங்கள் படையை என்றான்
நால்வகைப் படைகளோடும்
நன்கவனைத் தாக்க லுற்றான்
மேலான அறிவுச் செல்வி
மேன்மைகொள் ஒளவை கண்டார்
போரிலே எண்ணில் உயிர்கள்
போதலைக் கண்டு நைந்தார்

காரியினை நேரில் கண்டார்
கடும்போரை நிறுத்துக என்றார்
அதியமான் வாளின் வன்மை
அவனது வேலின் திண்மை
குதிரைகள் யானைச் சேனை
கொண்டதிறம் கூறி நின்றார்
ஒளவையின் அமுதச் சொல்லை
மலேயமான் அறிந்தா னில்லை
கவ்வைகொள் போரை அன்றே
கடுமையாய்த் தொடங்கி விட்டான்
அதியமான் படைக்கு முன்னே
அஞ்சியே நெஞ்சு குலைந்தான்
பதியினை யிழந்து சிதைந்து
பற்றற்றே யோடி மறைந்தான்
மலையமான் திருமுடிக் காரி
மன்னவனின் கோவ லூரும்
அதியமான் வசமாயிற்றே
அயலவர் பகையா யிற்றே
அதியமான் அடைந்த வெற்றியை
ஒளவையார் புகழ்ந்து பாடினார்
குதிகொள்ளும் படைகள் கொண்ட
கொற்றவனைப் பாடல் எளிதோ !
வாளினைத் தாங்கும் தோளாய் !
வள்ளலே உங்தன் வீரம்
கேளாரின் உள்ளம் நடுங்கும்
கேட்டார்தம் உடல் பூரிக்கும்
போர்வென்றி புகழ்ந்து பாடிய
புலவரைப் போற்றி மகிழ்ந்தான்
போர்தனில் ஊரை யிழந்த
புரவலன் காரி சினந்தான்

பெருஞ்சேர லிரும்பொறை என்பான்
பெருவீரன் சேரன் தன்னை
அருந்துணை வேண்டி கின்றான்
அவனதற் கிசைந்து கொண்டான்
சேரனும் காரிமன் னவனும்
சேர்ந்துவல் வில்லோரி தன்னைப்
போரினில் எதிர்த்திட லானர்
பொருப்பினைப் பற்றவே போனார்
ஒரியும் போர்த்துணை வேண்டி
உற்றனன் அதியமான் தன்னை
போரினில் விருப்புற்ற அன்னான்
போர்த்துணை மன்னரை அழைத்தார்
நண்பராம் சோழபாண் டியரை
நல்லதுணை யாகவே பெற்றார்
வன்பொடு போர்புரிந் திட்டார்
வல்வில் லோரியின் நட்டார்
நால்வரையும் வென்று விரட்டி
நற்கொல்லி மலையினைப் பற்றி
வேல்வீரர் சேரனும் காரி
வேந்தனும் வெற்றியைக் கண்டார்
தோற்றிட்ட அதியமான் அஞ்சி
தோய்ந்ததக டுர்மதில் சேர்ந்தான்
மாற்றலர்க் கஞ்சியக் கோட்டை
மதிலடைத் துள்ளே யிருந்தான்
வென்றிட்ட மலையமான் சேரன்
வேந்தர்கள் கோட்டையைச் சூழ்ந்தார்
துன்றிட்ட அதியமான் தோன்றல்
தோல்விநிச் சயமென்று கண்டான்
மதில்சூழ்ந்த பகைவரை மன்னன்
மலையாது வாளா விருந்தான்

அதுகண்ட ஒளவை எழுந்தார்
அதியமான் நிலைகண் டுணர்ந்தார்
தளர்ந்திட்ட அஞ்சியின் நெஞ்சம்
தனிவீரம் கொள்ளவுரை சொல்வார்
கிளர்ந்தெழும் வீரமொழி சொல்வார்
கிளையான படைவீரம் விள்வார்
அவ்வையின் ஊக்கமொழி யாலே
அதியமான் போருக் கெழுந்தான்
நவ்விமேல் பாய்புலிப் போலே
நயந்தவன் போரைப் புரிந்தான்
பகைகொண்ட இருகட்சி யாரும்
பார்த்தவர் நடுங்க மலைந்தார்
வகைகொண்ட சேனைமிகு சேரன்
வன்மையுடன் வேலே விடுத்தான்
சேரனின் கூரிய வேலும்
தீயகடுங் கூற்றினைப் போல
சீரதிய மானவன் மார்பில்
சென்று டுருவியே செல்லும்
வலமிக்க தேரில் இருந்த
வள்ளலும் உயிரை யிழந்தான்
புலியன்ன மன்னவன் போரில்
பொன்னுடல் சாயவே மாய்ந்தான்
மன்னவன் மாய்ந்ததைக் கண்ட
மதிவல்ல அவ்வையார் கொண்ட
இன்னலுக் கோரெல்ல யில்லை
எதுசெய்வர் வந்தது தொல்லை
ஐயையோ அதியன் மறைந்தான்
அவனருள் வள்ளன்மை என்னே!
மெய்யாக மார்பைத் துளைத்த
வேல்பல இடங்கள் துளைக்கும்

பாணர்தம் பாத்திரம் துளைத்து
பைந்தமிழ்ப் புலவர்நாத் துளைத்து
பேணிடும் உறவோர்கண் துளைத்து
பெரும்பசி யாளர்கைத் துளைத்து
மறைந்ததே அவ்வேலும் ஐயா !
மாநிலம் பாடுநரும் இல்லை
நிறைந்தவர்க் கீகுநரும் இல்லை
நீணிலத் துயிர்கள்மிக வாடும்.

வசனம்
இங்ஙனம் அதியமான் போரில் இறந்தது கண்டு ஆறாத தூயமடைந்த ஒளவையார், பலவாறு புலம்பிக் கலங்கி அவனது கொடைத்திறத்தைக் கொண்டாடிப் பாடினார். அதியமான் இறந்த பின்னர் அவன் மகன் பொகுட்டெழினி என்பான் முடிசூடினான்.

License

Copyright © 2018 by Creative Commons. All Rights Reserved.