கல்வியின் தெய்வமாகிய கலைவாணி – சரசுவதி தேவியின் திருஅவதாரம் என்று கற்றவரெல்லாம் கொண்டாடும் கண்டமிழ் மூதாட்டியராகிய ஒளவையாரின் அரிய பெரிய கதையை அறிவில் சிறியவர்களாகிய நாங்கள், இந்த வில்லிசையில் அமைத்துச் சொல்லப்போகிறோம். ஒளவையாரைப்பற்றி அறியாதவர் எவருமே இந்த நாட்டில் இருக்கமாட்டார்கள். எல்லோரும் தெரிந்திருப்பார்கள். முதல்வகுப்புப் படிக்கும் சிறுபிள்ளைகளும் ‘ஒளவை தமிழ்க்கிழவி’ என்று படித்திருப்பார்கள். இங்ஙனம் சிறுவர்முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் அறிந்த ஒளவையாரைப்பற்றி, “நாங்கள் என்ன சொல்லப்போகிறோம்? நீங்கள் எங்களிடமிருந்து என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?” என்பவற்றையெல்லாம் அன்போடும் அமைதியோடும் இருந்து இந்தக் கதையைக் கேட்ட பின்புதான் சொல்லமுடியும். ஆதலினாலே, கதையைத் தொடங்குகிறோம். காதைக்கொடுத்துக் கேளுங்கள் ஐயா!