24
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் -1
(இதன் பொருள்) உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் – உயிர்கள் எல்லாவற்றாலும் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவன்; நிலவு உலாவிய நீர்மலிவேணியன் – (அங்ஙனம் அரியவனாயினும் தன்னை யாவரும் எளிதில் கண்டு தரிசித்து உய்ய வேண்டும் என்னும் கருணையினால்)மூன்றாம் பிறைச்சந்திரன் உலாவுதற்கு இடமாய்க் கங்கை நீர்நிறைந்த சடையை உடையவனாயும்; அலகு இல்சோதியன் – அளவில்லாத ஒளியுரு வுடையனாயும்; அம்பலத்து ஆடுவான் – திருத்தில்லையில் திருச்சிற்றம்பலத்தினிடத்தே ஆனந்தத் திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள இறைவனுடைய; மலர்சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் – எங்கும் நீக்கமின்றி மலர்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம்.
இனி, இவ்வாறன்றி, அரியவனாகிச் சோதியன் என்றும்,
வேணியனாகி ஆடுவான் என்றும் இரண்டாகப் பகுத்து நிரனிறையே
கூட்டிப் பொருள் உரைத்தலும் ஆம். இங்ஙனம் கொள்ளும்போது
அவனே தானாகிய வந்தெறி ஏகனாகி நின்று கருவி கரணங் கடந்து
அறியப்பெறும் நிலை ஒன்றும் அவற்றுடன் கூடி அறியப்படும் நிலை
ஒன்றும் குறித்தவாறு. “உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை
யொழிவின்றி யுருவின்கண், அணையு மைம்பொறி யளவினு மெளிவர
அருளினை” (திருஞான – புரா – 161).