23
ஒளவை அற வுரையென்று கேட்பீர்
அவ்வழியில் செல்லவே பார்ப்பீர்
செவ்வைநெறி யதுகன்று கேட்பீர்
செய்யநலம் கண்டினிதே யார்ப்பீர்
காடுமலை சூழ்ந்தபாழ் நாடோ
காட்டாறு பாயுமொரு நாடோ
தேடரிய கூடுவள நாடோ
தீயமுட் செடிநிறைந்த காடோ
பள்ளத்தில் உள்ளதொரு நாடோ
பருமேட்டில் திகழுமொரு நாடோதள்ளரிய நல்லார்கள் வாழும்
தகைமிக்க நாடேபொன் னாடு
நன்மக்கள் வாழாத நாடு
நல்வளம் சூழ்ந்தநா டேனும்
என்னபயன் இன்பநா டாமோ
இன்மக்கள் வாழ்நாடே நாடு
இந்தவுரை செந்தமிழில் தந்தார்
இனியகவி யமுதத்தை யீந்தார்
நந்தமிழ் ஒளவையினைப் பெற்ற
நன்னாடிங் நாடுபொன் னாடே !
“நாடா கொன்றே ; காடா கொன்றே ;
அவலா கொன்றே : மிசையா கொன்றே :
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்ல வாழிய! நிலனே.”
ஒளவைக் கிழவி நம்கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் பழங்கிழவிநெல்லிக் கனியைத் தின்றுலகில்
நீடு வாழ்ந்த தமிழ்க்கிழவி
வெல்லற் கரிய மாந்தரெல்லாம்
வியந்து போற்றும் ஒருகிழவி
கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி அவள்மொழியை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோமே !
கலைவாணி உருவான தலைவிவா ழியவே!
நிலையான தமிழ்செய்த தலைவிவா ழியவே!
மலைசூழும் உயர்நாட்டு மாதர்வா ழியவே!
அலையாத அறமருள் ஒளவைவா ழியவே!
வாழியவே ! பல்லாண்டு வந்துகதை கேட்டவர்கள்
வாழியவே ! ஒளவைகதை மனமகிழக் கேட்டவர்கள்
வாழியவே ! அவர்மொழியை வாயாரச் சொன்னவர்கள்
வாழியவே! அவர்வழியை வையமதிற் கொண்டவர்கள்.