="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

20

பாட்டு

திருக்கோவ லூரை யாளும்
தெய்வீக ! சொல்லக் கேளாய்
உருக்கோல மிக்க மாதர்
உத்தமக் கற்பின் மாதர்
பேரருள் வள்ளல் பாரி
பெற்றாற் றவத்து மாதர்
பாரியோ மறைந்துவிட்டான்
பாவையர் கலங்கி நின்றார்
அங்கவை சங்கவை என்பார்
அன்புள்ள இன்ப நல்லார்
மங்கையரை மணந்து கொள்வாய்
மற்றவரை ஏற்றுக் காப்பாய்
தெய்வீகன் ஏது சொல்வான்
தேர்தமிழ்த் தாயே! கேளீர்
பெய்மாரி யன்ன பாரி
பேரரசர் மூவர் பகையே
இன்னவரை ஏற்பே னாயின்
இன்னல்கள் மூவர் செய்வர்
மன்னுபுகழ்ச் சேரன் சோழன்
மதிவழியன் துன்பம் சேரும்
அஞ்சுவேன் என்று மறுத்த
அன்பனுக் கவ்வை சொல்வார்
அஞ்சற்க மன்னர் மூவர்
அவரையான் அழைப்ப னென்றார்
மூவர்க்கும் ஒலை வரைந்தார்
முன்னவர்க் கனுப்பி விட்டார்
யாவரும் வருக என்றார்
அரியதிரு மணம் முடிப்பார்

சேரனுக்கு எழுதியது
சேரலர்கோன் சேரன் செழும்பூங் திருக்கோவல்
ஊரளவும் தான்வருக ! உட்காதே—பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
சங்கவையை யுங்கூடத் தான்.

சோழனுக்கு எழுதியது
புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து—நகாதே
கடுக வருக ! கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டாம் நாள்.

பாண்டியனுக்கு எழுதியது
வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே—தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியஈர் ஒன்பான்நாள்
ஈண்டு வருக ! இயைந்து.

வசனம்
ஒளவையாரின் ஒலையை அரசர் மூவரும் கண்டார்கள். அத் தெய்வத்தமிழ் மூதாட்டியின் அழைப்பை மறுப்பின் வெறுப்புடன் ஏதும் வசைக்கவி பாடிவிடலாகாதே என்று அஞ்சிப் பாரிமகளிரின் திருமணத்தை முடித்துவைக்கத் திருக்கோவலூரை வந்தடைந்தனர்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, Creative Commons has waived all copyright and related or neighboring rights to , except where otherwise noted.