18
அகத்தில் நுழைந்த ஒளவையின் வரவை
அங்கவை சங்கவை மங்கையர் கண்டார்
தாயே வருகெனத் தழுவியே நின்றார்
தையலர் யாரெனப் பையவே கண்டார்
யாரிவர்? நீங்கள் பாரியின் மக்காள் !
சீருற வாழ்ந்தீர்! சிறுகுடில் வந்தீர் !
பாரியோ மறைந்தான் பார்ப்பவர் இல்லையோ ?
பார்த்திபர் சினத்தீப் பற்றி அழித்ததோ ?
கலங்கிப் புலம்பும் கற்றமூ தாட்டி
நடுங்கும் உடலம் நங்கையர் கண்டார்
நீலச்சிற் றுடை யொன்று நீட்டினார்
நீவிர்இவ் வாடை உடுத்திடும் என்றார்நனைந்த ஆடையை களைந்திடும் என்றார்
இனைந்த ஒளவையின் இரும்பசி களைந்தார்
மனையில் இருந்தகூழ் மகிழ அளித்தார்
நனிசுவைக் கீரைக் கறியும் நல்கினார்
கூழும் கீரையும் சுடச்சுடக் கொடுத்தார்
கொண்டுள் குளிர உண்டமூ தாட்டி
பேரருள் வள்ளல் பாரியின் அழிவும்
பெருந்தவ மக்கள் இருகண் மணிகள்
பார்ப்பனர் இல்லில் பரிந்து வாழ்வதும்
பார்த்து நெஞ்சம் பதைத்துத் துடித்தார்
குளிரும் பசியும் அகலக் கொடுத்த
கூழும் ஆடையும் கொண்டு புகழ்ந்தார்
வசனம்
பாரியின் மக்களாகிய அங்கவையும் சங்கவையும் அங்கம் குளிர்நீங்கத் தந்துதவிய நீலச்சிற்றாடையினை நினைந்தார். அன்று பாரிவள்ளல் தன்மீது கொண்ட தணியாத பேரன்பால் பிரிவதற்குப் பெரிதும் வருந்தித் திரும்ப அழைக்க விரும்பிக், கொடுத்த பரிசுகளைக் கொள்ளையடித்துப் பிடுங்கி வருமாறு வீரர்களை அனுப்பினான். பழையனூர் வேளாளச் செல்வனாகிய காரியோ என்னைப் பிரிய வருந்தி, விடைபெறச் சென்றபோது, தடையாகக் கையிலிருந்து களைக்கட்டைத் தந்து களை பிடுங்கச் செய்தான். சேரமான், என்பால் கொண்ட அன்பால் உரிமைகொண்டு, விருந்து மன்றத்தில் இலைமுன்னிருந்த என்னை வாராய்! என்று அழைத்து எழச் செய்தான். இந்த மூவர் காட்டிய பேரன்பும் சரி, இப்போது பாரி மகளிராகிய இம் மங்கையர் எனது குளிர் போக்கச் சிற்றாடை வழங்கிய பேரன்பும் சரி; அந்த மூவர் அன்பினும் இவ்விரு பெண்கள் காட்டிய அன்பு மேலானது என்று பாராட்டிப் பாடினர். அப்போது அவர் பாடிய பாட்டுத்தான் இது !
பாரி பறித்த கலனும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கட்டும்-சேரமான்
வாராய் எனஅழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர்.