="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

13

பாட்டு
காஞ்சி மாநகர் ஆண்ட மன்னன்
கர்வமிகக் கொண்ட தொண்டை மானாம்
ஆய்ந்த படைபலம் ஆர்ந்த என்றன்
ஆற்றல் அறியாமல் சீற்ற முற்றான்
என்றன் திறமை பெருமை யெல்லாம்
இன்றே தொண்டைமான் அறிய வேண்டும்
நன்றுநீர் தூதுசென்றேத வேண்டும்
நாயவன் செருக்கை யடக்க வேண்டும்
இவ்விதம் அதியமான் வேண்டி நின்றான்
இன்றமிழ் ஒளவை அதற்கிசைந்தார்
கவ்வைகொள் காஞ்சி நகர் அடைந்தார்
காவலன் தொண்டைமான் எதிர் கொண்டான்
மன்னன் விருந்தாய் மகிழ்ந்து இருந்தார்
வந்த செயற்கெதிர் பார்த்து இருந்தார்

அன்னவன் ஒளவையை உடன் அழைத்தான்
ஆயுதச் சாலையைக் காணு மென்றான்
படைக்கலக் கொட்டிலைப் பார்த்து நின்றார்
பார்த்திபன் தொண்டைமான் பக்கம் வந்தான்
உடைப்பரும் தண்டம் ஒளிர் வேல்வாள்
ஒளியுடன் நெய்யணிக் திலங்கக் கண்டார்
மன்னன் செருக்கு மடியும் வண்ணம்
வன்மையாய்ப் பேசும் வாய்ப்பை யுற்றார்
மன்னா! பொன்னேளிர் வேலும் வாளும்
மயிற்பீலி அணிந்தொளி வீசு மையோ !
குந்தம் ஈட்டிவேல் தண்ட மெல்லாம்
கொள்ளுறை உள்ளே குலவு மையோ!
கொந்தணி மாலைகள் கொண்ட வையோ !
கொற்றவ! நன்றுநன்று இவைகள் எல்லாம்
பகுத்துண் வள்ளல் அதிய மானின்
படைக்கலம் எதுவும் மனையில் இல்லை
தொகுத்த அவன்படைக் கலங்கள் எல்லாம்
தொடுத்தபோர் தன்னால் சிதைந்த ஐயோ!
குத்திப் பகைவர்ச் சிதைத்த எல்லாம்
கொல்லன் உலைக்களம் கிடக்குமையா
எத்திக் கும்புகழ் இனிய வள்ளல்
ஏந்தல் அதியமான் வீரம் என்னே!

 

வசனம்
இவ்விதம் சாதுரியமாகப் பேசித் தொண்டைமானைப் புகழ்வதுபோல இகழ்ந்தார். இவ்விதம் இகழ்வதுபோல் புகழ்வதும், புகழ்வதுபோல் இகழ்வதுமாகிய செயலை வஞ்சப்புகழ்ச்சி என்று வழங்குவார்கள். நிந்தாஸ்துதி என்றும் சொல்லுவார்கள். வசைக்கவி பாடுவதில் வல்லா ராகிய காளமேகப்புலவர் இத்தகைய நிந்தாஸ்துகி பாடுவதில் இணையற்ற புலவர். ஆறுமுகப் பெருமானுடைய அருமையைக் கூறவந்த அந்தப் புலவர்,

பாட்டு

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்(கு)
எண்ணும் பெருமை யிவை

வசனம்
என்று வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடினார். இது போன்ற வாக்குவன்மையால் அதியமான் ஆற்றலை இகழ்வதுபோலப் புகழ்ந்து, தொண்டைமான் செருக்கை அடக்கினார். அந்தக் காலத்தில் திருக்கோவலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி என்னும் மன்னன், அரசர் பலரை வென்று, செருக்குக் கொண்டிருந்தான். இதனை அறிந்தான் அதியமான்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, Creative Commons has waived all copyright and related or neighboring rights to , except where otherwise noted.