12
பாட்டு
வானவர் வணங்கும் மலையதுதனிலே
வந்திட்ட செந்தமிழ் மன்னா!
தானவர் நடுங்கும் தலமிதுதனிலே
சார்ந்திட்ட வேந்தர் வேந்தே!
பிறையணி பெருமான் அருளது தன்னால்
பெருமலை யிதனில் வாழும்
நிறைமொழி முனிவன் தமிழ்வளர்இனியன்
அகத்தியன் நிலைத்து வாழும்
பொதியநன் மலையின் பொற்புயர் சிகரம்
பொருந்திய பிளவங் கொன்றில்
அதிமது ரந்தரு கருநெல்லிக்கனி
அருமரம் அங்கே உண்டு
அம்மர மதனில் பன்னிராண்டுக்
கொருமுறை அக்கனி தோன்றும்
செம்மைகொள் அக்கனி தின்றவர் பன்னாள்
செகத்தினில் நீடு வாழ்வார்
நறுஞ்சுவை அக்கனி முற்றிடும் நன்னாள்
நண்ணிய துடனே செல்வாய்அருங்கனி பெற்றினி துண்டுமகிழ்வாய்
அவனியில் நீடு வாழ்வாய்
இங்ங்னம் இயம்பி அம்முனி சென்றார்
இன்னருள் வள்ளல் விரைந்தான்
பொங்குயர் பொதிய மாமலைப் பிளவைப்
போய்க்கண்டு அரிதில் புக்கான்
வெடித்த பாறையுள் வீசியகிளைமேல்
மென்கனி தன்னைக் கண்டான்
துடித்திடும் உள்ளம் தூண்டிடஉச்சித்
தொங்கிடும் கனியைப் பறித்தான்
அமுதக் கனியதைப் பெற்ற அதியமான்
அரண்மனை விரைந்த டைந்தான்
தமிழ்முனி யளித்த தண்ணருள் அமுதம்
தானுண்டு வாழ விரும்பான்
பன்னாள் உலகினில் யானும் வாழ்ந்தால்
பயனே தும் விளைவ துண்டோ?
மன்னிடும் நூல்பல மக்களுக்கீயும்
மாதவளாம் ஒளவைக் கீவோம்
இவ்விதம் எண்ணி அரசவையிருந்தான்
இந்நேரம் ஒளவையும் வந்தார்.
பிறநாட்டு மன்னர் பேரவைக்குத் தூதுவாய்ச் சென்று தொழிலாற்றப் பெண் ஒருத்தி பெருமையுடன் சென்றாள் என்ற சிறப்பை முதலில் பெற்ற நாடு, நம் பெருந்தமிழ்நாடே. ஒரு நாட்டு அரசியல் தூதுவர், பிற நாடுகளில் பணி செய்வதை இன்றும் நாம் காண்கின்றோம். என்றாலும் இன்று தூதுவர்களைப் பகைவர் நாட்டுக்கு அனுப்புவதில்லை. உறவுடைய நாடுகட்குமட்டுமே அனுப்புவார்கள். அந் நாடுகளோடு நட்புறவு நீங்கிப் பகைதோன்றி விட்டாலோ அங்கே அனுப்பப்பெற்ற தூதுவர் உடனே திருப்பி அழைக்கப்பட்டுவிடுவர். ஆகவே, பகை தோன்றாத வரை அது தோன்றாதிருக்குமாறு பார்த்துக்கொள்வதே இக்கால அரசியல் தூதர் ஆற்றும் பணி. உள்ள பகையைப் போக்க உழைப்பது அவர்கள் தொழிலன்று. ஆனால், பண்டைக்காலத்தில் தூதுவர் பகையரசர் அவைக்கு அனுப்பப்படுதலே மிகுதியாகும். உள்ள பகையை ஒழிக்க முயல்வதே அக்காலத் தூதுவர் ஆற்றவேண்டிய அரும் பணியாய் இருந்தது. ஆகவே, இக்காலத் தூதுவர் செய்யும் வேலையைக்காட்டிலும் அக்காலத் தூதுவர் செய்த வேலையே செய்தற்கரியது. அச்செயலை ஒரு பெண் செய்தாள் என்றால் எவ்வளவு வியத்தற்குரியது பார்த்தீர்களா! தொண்டைமானிடம் தாதுசெல்ல இசைந்த ஒளவையார் காஞ்சிமாநகரம் நோக்கிப் புறப்பட்டார்.