="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

4


தமிழ் ஓங்குக.
ஒளவையார் கதை
கடவுள் வணக்கம்
பாட்டு
செந்தமிழ்ச் சொக்கநாதா! செய்யகயற் கண்ணித்தாயே! தொந்தி விநாயகனே! கந்தவேள் என்னும்மைந்தா! இந்தநல் வேளையிலே எங்களுக்கு அருளவேண்டும் வந்தடி வணங்கி நின்றோம் வாக்கருள் பண்ணவேண்டும் தென்கடல் குமரியம்மா திருவருள் செய்யவேண்டும்! பொன்னடி போற்றிகின்றோம் இன்னருளைப் பண்ணவேண்டும் கன்னல்தேன் அன்னமொழி கன்னித்தமிழ் அமுதமொழி மன்னவர் காத்தமொழி மாநிலமே ஏத்தும்மொழி அரியசெந் தமிழினிலே அழகுறப் பாடவேண்டும். பெரியோர்கள் நீங்களெல்லாம் பேணியே கேட்கவேண்டும் உரியபேர் ஒளவையென்னும் உயர்செல்வி கல்விவல்லாள் பிரியமாய் இளைஞரெல்லாம் பேசுமொரு பெண்புலவர் நாமகளின் அவதாரம் கங்கையர்க்குள் அவள்சாரம் பாமகள் ஒளவையாவார் பாருக்குப காரமாவார் பூமியாள் அரசரெல்லாம் போற்றியே வணங்கப்பெற்றார் நாமமிது தெரியார்கள் நாட்டிலேதும் அறியார்கள் தன்னலம் எண்ணாதவர் தமிழரசி ஒளவையாவார் மன்னுயிர் நன்மையெண்ணி மாநிலத்தின் இன்பம்விட்டார். அன்னையாய் உலகினுக்கே அறவுரைகள் பேசிகின்றார் இன்னவர் ஒளவையாரின் இனியகதை கேட்பிரையா !

வசனம்
கல்வியின் தெய்வமாகிய கலைவாணி – சரசுவதி தேவியின் திருஅவதாரம் என்று கற்றவரெல்லாம் கொண்டாடும் கண்டமிழ் மூதாட்டியராகிய ஒளவையாரின் அரிய பெரிய கதையை அறிவில் சிறியவர்களாகிய நாங்கள், இந்த வில்லிசையில் அமைத்துச் சொல்லப்போகிறோம். ஒளவையாரைப்பற்றி அறியாதவர் எவருமே இந்த நாட்டில் இருக்கமாட்டார்கள். எல்லோரும் தெரிந்திருப்பார்கள். முதல்வகுப்புப் படிக்கும் சிறுபிள்ளைகளும் ‘ஒளவை தமிழ்க்கிழவி’ என்று படித்திருப்பார்கள். இங்ஙனம் சிறுவர்முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் அறிந்த ஒளவையாரைப்பற்றி, “நாங்கள் என்ன சொல்லப்போகிறோம்? நீங்கள் எங்களிடமிருந்து என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?” என்பவற்றையெல்லாம் அன்போடும் அமைதியோடும் இருந்து இந்தக் கதையைக் கேட்ட பின்புதான் சொல்லமுடியும். ஆதலினாலே, கதையைத் தொடங்குகிறோம். காதைக்கொடுத்துக் கேளுங்கள் ஐயா!

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, Creative Commons has waived all copyright and related or neighboring rights to , except where otherwise noted.