பாட்டு
“முத்தெறியும் பெண்ணை முதுநீர் அதுதவிர்ந்து
தத்திவரு நெய்பால் தலைப்பெய்து—குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவிற் கொண்டோடி வா.”
வசனம்என்று பாடியருளினார். அவ்வாறே ஒளவையாரின் விருப்பப்படி, அவ் ஆறு பெருகி வந்த மக்களுக்கு ஆராத இன்பத்தை அளித்தது. பின்னர் ஒளவையார் அத் திருமணத்திற்கு வந்திருந்த வறியவர் அனைவர்க்கும் பொன்னும் பொருளும் வழங்க எண்ணினார். உடனே வருணனை நோக்கி,
பாட்டு
“கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனை மாமலையன் கோவல்—பெருமணத்தில்
நன்மாரி தான்கொண்ட நன்னீர் அதுதவிர்த்துப்
பொன்மாரி யாகப் பொழி.”
வசனம்என்று பாடியருளினார். அவ்வளவுதான். திருக்கோவலூர் முழுதும் பொற்காசு மழை பெய்தது. மணத் திற்கு வந்திருந்த ஏழை எளியவரெல்லாம் தாம் வேண்டு மட்டும் பொன்னை வாரிக்கொண்டு, “வறுமை நீக்கிய வனிதையர் வாழ்க! வாழ்க!” என்று வாயார வாழ்த்திய, வண்ணம் தத்தம் ஊரை அடைந்தனர். பின்னர் ஒளவையார் தம்முடைய வேண்டுகோட்கு இணங்கிப் பாரிமகளிரை மணம்புரிந்து மகிழ்ந்தேற்ற மன்னன் தெய்வீகனையும், அவனது திருநகரத்தையும் வாயார மனமார வாழ்த்தியருளினார்.
பாட்டு
“பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி ஆடையாம்
அந்நாள் வயலரிசி ஆகுமூர்—எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஒங்கு திருக்கோவ லூர்.”
வசனம்என்பது ஒளவையார் அன்போடு வாழ்த்திய அமுத வாழ்த்து. ஒளவையாரின் அரிய வாழ்த்தைப்பெற்ற அரசனாகிய தெய்வீகன், தான் மணம் முடித்த தமிழ்ச்செல்வியராகிய பாரிமகளிருடன் பல்லாண்டு நல்லாண்டு இனிது வாழ்ந்தான்.
தெய்வப் பேராற்றல் படைத்த தீந்தமிழ் மூதாட்டியாகிய ஒளவையார் அவ்வப்போது தாம் செல்லும் இடமெல்லாம் மன்னவர்க்கும் மற்றவர்க்கும் மாபெரும் அறிவுரைகள் சொல்லியுள்ளார். அவையெல்லாம் அறிவுச் சுடர்மணிகள் ஒளிவீசும் ஞானச் சுரங்கம் ஆகும்.