பாட்டு
வாயிலைக் காக்கும் வல்லாள வீரனே!
மன்னனுக்குச் சொல்லி வாராய்!
வந்தவர்க் கடையாத வாயில்காப் போனே!
வள்ளலுக்குச் சொல்லி வாராய்!
அதியமான் தன்தரம் அறியாது போனாள்
அன்னதை நீ கூறி வாராய்!
அடைந்தவள் என்தரம் அறியா திருந்தான்
அச்செயலும் செப்பி வாராய்!
மன்னவர் வேறிங்கு இல்லாமல் இல்லை
மற்றவர்கள் காப்பர் கூறாய்!
இன்னருள் மன்னரை நாடியே செல்வேன்
இச்செய்தி அவற்குச் சொல்வாய்!
கற்றவர் செல்லிடம் காப்பவர்கள் உண்டு
காத்திருந்தேன் வீணே இங்கு
உற்றவர் சீரை உணராத மன்னர்
உலகிருந்தால் பயனும் என்னே!
வசனம்என்று சொல்லி வழிநடந்தார். ஒளவையாரின் கோப மொழிகளை வாயிற்காவலன் ஓடோடிச் சென்று. அதியமானிடம் அறிவித்தான். அதுகேட்ட அதியமான் ஆசனம் விட்டெழுந்தான். அரண்மனையின் வெளியே வந்து ஒளவையாரை வழிமறித்து, மீண்டும் அரண்மனைக்கு அழைத்தான். அறியாது செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டினான். தனது கொடைமன்றத்துக்கு வந்தருளும் படி பணிந்து வேண்டினான். அதியமானுடைய அன்பு நிறைந்த, பணிந்த மொழிகளால் ஒளவையார் சினந்தணிந்து அவனுடன் வந்தார். அவனது கொடை மன்றத்தை யடைந்தார். அவருக்கு அதியமான் பொன்னும் மணியும் பூம்பட்டாடைகளும் வேண்டுமட்டும் பரிசாக வழங்கினான்.