="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

7

பாட்டு
பண்ணிசைத்து வாழ்ந்துவரும் பாணர்தம் பழங்குடியில்
எண்ணரிய கலைவல்ல யாளிதத்தன் என்பார்க்கு
வாழ்க்கைப் பெருந்துணையாய் வாய்த்தமனை யாளுடனே
வாழ்ந்த அறப்பயனுய் வந்ததொரு பெண்மகவு
பல்லாண்டு பிள்ளையின்றிப் பாரிலறம் செய்தவர்கள்
எல்லையிலா நல்லறங்கள் இயற்றிவரம் வேண்டியவர்
கலைகள் பல கற்றுணர்ந்த கற்றவராம் பெற்றியர்க்குக்
கலைமகளே நன்மகவாய்க் காசினியில் அவதரித்தாள்
குழந்தை பிறந்தவுடன் குளிர்ந்தமழை பெய்ததையா
பழங்கள் மரங்களெல்லாம் காய்த்தினிது பழுத்தவையா
செந்நெற் பயிர்களெல்லாம் செழிக்கோங்கி வளர்ந்தவையா
கன்னல் கதலியெல்லாம் விண்ணோங்கி வளர்ந்தவையா
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்நேர் பசுக்களெல்லாம்
பாங்கினர் வந்துகண்டார் ஒங்குவகை கொண்டுகின்றார்
தேவமகள் அவதரித்தாள் திருக்குழந்தை அருட்குழந்தை
ஆவியெனப் பேணிடுவீர் தேவியிவள் கலைவாணி
என்றினிது புகழ்ந்திட்டார் நன்றினிது மகிழ்ந்திட்டார்
அன்றுமுதல் பெற்றோர்கள் அகமகிழ்ந்து வாழ்ந்திட்டார்

வசனம்
யாளிதத்தனும் அவன் மனைவியும் தாம் பெற்றெடுத்த பெருந்தவக் குழந்தையைப் பேணி வளர்த்து வந்தார்கள். குழந்தையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மூன்றாண்டுப்பருவம் அடைந்தது. பெண்குழந்தையாக இருந்தாலும் அதன்பால் கண்ட தெய்வங்கலங்களால் அளவற்ற மகிழ்ச்சியுடன் கண்ணுங் கருத்துமாய்க் காத்து வளர்த்தார்கள். குழந்தையின் மழலை மொழிகேட்டு உள்ளம் குளிர்ந்தார்கள். ஆடியசைந்து வரும் இளநடைகண்டு இன்பம் கொண்டார்கள். இங்ஙனம் இன்புற்று அன்புற்று வாழ்ந்துவரும் நாளில், குழந்தையின் தாய் நோய்வாய்ப்பட்டு இறக்குந் தறுவாயில் இருந்தாள். ‘முந்தித் தவங்கிடந்து, முந்நூறுகாட்சுமந்து, அந்திபகலாச் சிவனே ஆதரித்துத், தொந்திசரிய நொந்து பெற்ற நந்தவக் குழந்தையை நன்கு பேணி வளர்ப்பாரில்லையே! யான் இறந்தால் தாயில்லாக் குழந்தையாகத் தவிக்குமே!’ என்று, அத் தாய் வருந்திப் புலம்பினாள். அவளது வருத்தத்தைக் கண்ணுற்ற குழந்தை, தாயின் பக்கத்திலே சென்று அவளது கண்ணிரைத்துடைத்து, அவளை நோக்கி,

“இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ-முட்டமுட்டப்
பஞ்சமே யானலும் பாரமவ னுக்கன்னாய் !
நெஞ்சமே அஞ்சாதே நீ”

என்ற பண்ணமைந்த பாட்டைப்பாடி, அவளைத் தேற்றியது. தன்னைத் தேற்றிய தனிப்பெருங் குழந்தையின் இனிப்பான ஆறுதல் மொழியைக்கேட்ட தாய் —அதிலும பாட்டாகப் பாடித் தேற்றிய குழந்தையின் ஆற்றலைக் கண்ட தாய் உண்மையாகவே கவலையொழிந்தாள். இது தெய்வக் குழந்தை இதைப்பற்றி நாம் கவலைகொள்ள வேண்டிய தில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்தாள். அன்றே ஆறுதலோடு உயிர்நீத்தாள். மனைவியை இழந்த யாளிதத்தனும் குழந்தையைத் தன் உறவினர் வீட்டில் வளர்க்கு மாறுகொடுத்துத் தான் வெளியூர் புறப்பட்டுவிட்டான்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, Creative Commons has waived all copyright and related or neighboring rights to , except where otherwise noted.