="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

99 மோட்சம்

மோட்சம்

1

ராமுவுக்கு எட்டு வயசுதான். ஆனால் வயசிற்குத் தகுந்த வளர்ச்சி இல்லை. கூழை, ஒல்லி, அடிக்கடி வியாதி. வீட்டுக்குச் செல்லப்பிள்ளை; அங்கே போகாதே, இங்கே போகாதே என்று கேட்டுக் கேட்டுக் கோழைப்பட்ட மனசு. ‘அதைச் செய்யாதே’ என்றால் கொன்றாலும் செய்யமாட்டான். அவ்வளவு மோசம்.

அம்மா வீட்டிற்கு விலக்கமாகிவிட்டால் அந்த ஐந்து நாளும் பள்ளிக்கூடத்தில் உதைதான். வீட்டில் கடைக்குப் போக வேண்டும்; அதை இதைச் செய்ய வேண்டும்; அப்பா சமையலுக்கு உட்கார்ந்து விட்டால், அவர் ஆபீஸுக்குப் போக வேண்டாமா? படிக்க, வீட்டுப் பாடம் எழுத நேரம் எங்கே இருக்கிறது? அப்பாவைப் பள்ளிக்கூடத்திற்கு வந்து சொல்லச் சொன்னால் நேரமாகிவிடுமாம். அவருக்கு எந்த வாத்தியார் இருக்கார்?

இன்றைக்கும் அப்படித்தான். பயம், போக வேண்டாம் என்று சொல்லுகிறது; அவனால் ஒளிந்து கொள்ள முடியவில்லையே!

‘ஸார்’ புஸ்தகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது மெதுவாகப் போய் உட்காருகிறான். அதற்குள் அந்தக் கழுகு தெரிந்து கொண்டுவிட்டது.

“டேய்! ராமசாமி, எத்தனை நாள் சொல்லுகிறது, லேட்டா வந்தா வெளியிலே நிற்க வேண்டும் என்று? என்னடா இன்னம் உட்கார்ந்திருக்கே? ஏறு பெஞ்சி மேலே. ‘ஹோம் ஒர்க்’ போட்டிருக்கையா?”

பதில் இல்லை.

“திருட்டு நாயே! அதுதான் ஒளியற ஜம்பமோ? வா இங்கே.”

தயங்கித் தயங்கி நிற்கிறான்.

“வாடா என்றால்… திண்ணக்கத்தைப் பார்.”

கையை எட்டிப் பிடித்துத் தரதரவென்று மேஜைப் பக்கம் இழுக்கிறார்.

“நீட்டு, கையை.”

“நாளைக்கு கொண்டு வந்து விடுகிறேன், ஸார்.”

“நாளைக்கு அடிக்கலை ஸார். நீட்டு கையை. உம்!”

“ஐயோ; ஐயோ! வலிக்குமே ஸார். இல்லை ஸார்.”

“வலிக்கத்தான் ஸார் அடிக்கிறது.”

பளீல்! பளீல்! பளீல்…

ரணகளம்.

“ஏறு பெஞ்சி மேலே!”

இன்னும் எத்தனை பாடங்கள்! அத்தனை ‘ஸார்’களும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டிவிட்டே சென்றார்கள். மறுபடியும் அந்த ‘ஸார்’ வருகிறாரே பூகோளத்திற்கு!

மணியடிச்சாச்சு; அவரும் வந்தாச்சு.

கண்ணாடியைப் போட்டாச்சு. தலைப்பாகையும் கழற்றி வைத்தாச்சு. ஐயோ அந்தப் பிரம்பு!

“கிருஷ்ணா, இந்தியாவின் வடக்கெல்லை?”

“இமயமலை ஸார்.”

“நீதாண்டா பிச்சா, எழுந்திரு. தெற்கே?”

“வங்காளக் குடாக் கடல் ஸார்.”

“என்ன?”

“இல்லை ஸார்… அரபிக் கடல் ஸார்… ஸார், ஸார், இந்து மகா சமுத்திரம் ஸார்.”

“டேய் ராமசாமி, படித்திருக்கையா? இந்தியாவின் தலைநகரம்?”

2

மெதுவாக ‘டெல்லி’ என்று முனகுகிறான்.

“என்ன?”

“இல்லை ஸார், இல்லை ஸார்!”

“ஏண்டா முழிக்கிறே! படிச்சாத்தானே? வா இப்படி ‘மாப்’ (Map)கிட்டே. எங்கே காமி பார்ப்போம்?”

இந்தியா படத்தின்மேல் ஒரு சிறு விரல் ஊர்கிறது; கண், பிரம்பின் மேல்.

“எங்கே காமி! படிச்சாத்தானே!”

‘பளீல்’ என்று பிரம்பு இறங்குகிறது. தறிகெட்டு வேட்டையாடும் பிரம்பு, தடுக்க முயலும் சிறு கைகள், “ஐயோ, அம்மா, அப்பா, ஹோ உம் ங்… ங்… அம்மாடி!…”

“அம்மாடி! போ கழுதை. வெளியே இருந்து படித்து ஒப்பித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போக வேணும். என்னிடமா?”

வெளியே நெட்டித் தள்ளுகிறார். புஸ்தகத்தோடு போய் விழுகிறான் அப்படியே.

ராமு பெரிய மனிதனாக நாற்காலியிலே! கையில் உலக்கை போல தடிக்கம்பு. அது அவனால்தான் தூக்க முடியும். தலையில் தலைப்பாகை, கண்ணாடி… என்ன சந்தோஷம்!

‘பூகோள ஸார்’ புஸ்தகம் சிலேட்டுடன் சின்னப் பையன் மாதிரி மெதுவாக வருகிறார்.

“நாயே ஏன் ‘லேட்’? இங்கே வா, இப்படி.”

“போடு தடியாலே! ராஸ்கல், உனக்கு என்னமா இருக்கு? நீ பிரம்பு, நான் கம்பு. என்னாலேதான் தூக்க முடியும்.”

பூகோள ஸார் அழறார்!

“போய் தலைகீழே நின்று படித்து ஒப்பித்துவிட்டு வீட்டிற்குப் போ…” ராமுக்கு என்ன சிரிப்பு!…

3

… பெரிய ‘கிளாஸ்’. நல்ல வாத்தியார். பெரிய நாற்காலியில். நரைத்த தலை; சிரித்த முகம். ராமு அவர் மடியில் உட்கார்ந்திருக்கிறான். அவர் முதுகைத் தடவிக் கொண்டே, “இன்றைக்கு ஏன் லேட்? இப்படி வரலாமா? கெட்ட வழக்கம். இந்தா லட்டு. இந்தியாவின் தலைநகர்?”

“டில்லி.”

“அதுதான், ஏன் பயப்படறே. நீ நல்ல பையனாச்சே. அந்தப் பூகோள ஸார் அந்தக் குழியிலே உதைபட்டுக் கொண்டு கிடக்கிறார் பார். பயப்படாதே. நான் இருக்கிறேனே…”

‘பளீல்!’

“படிக்கச் சொன்னா, நாயே தூங்கறயா? எழுந்திரு.”

‘பளீல்!’

“ஐயோ இல்லை ஸார்! டில்லி மாநகர் ஸார்! ஐயோ! ஹும்ங்… ஹுங்…”

(முற்றும்)

சுதந்திரச் சங்கு, 25-5-1934

License

மோட்சம் Copyright © by manarkeni. All Rights Reserved.