="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

105 விபரீத ஆசை

விபரீத ஆசை

1

தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு, மோளம் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுபத்தி, எருமுட்டை கலந்த வாசனை தூரத்துப் படை எல்லாம் மெட்ராஸ் பிண ‘வாசனை நாற்றம்’ கலந்த காட்சியை என் புலனறிவில் இடித்துச் சிந்தனையையும் தாக்கியது.

நான் இப்பொழுது நிற்பது என் வீட்டு மொட்டை மாடி.

மனிதனுக்குப் பிணத்தைப் பார்க்கும் ஆசை, எல்லா ஆசைகளையும் விடப் பெரிது. பயத்தில் பிறந்த ஆசையோ என்னவோ!

அது ஒரு பணக்கார பிணம். அதாவது மாஜி பணக்காரனாக இருந்த பிணம்.

உடன் வருகிறவர்கள் ஜாஸ்தி, கொள்ளி வைப்பவனுக்குக் கைத்தாங்கல் சம்பிரமம் எல்லாம்.

பிணம், பட்டு அணிந்திருந்தாலும் வாயைத் திறந்திருந்தது. திறந்த வாயைச் சந்தனம் அப்பி மூடியிருந்தார்கள். அப்பொழுதுதான் குளித்து எழுந்தவர் மாதிரி வாரிவிடாத நரைத்த கிராப்புத் தலை.

என் கண்கள் இந்த நுணுக்கமான விவரங்களை உயரவிருந்து இரண்டொரு நிமிஷ காலத்தில் கவனித்த தென்றாலும் என் மனம் வேறெங்கோ சென்றுவிட்டது.

நேரத்தையும் தூரத்தையும் தாண்டிச் செல்லும் யந்திரவிசை சிந்தனையிடந்தானே இருக்கிறது?

2

“புனரபி மரணம், புனரபி ஜனனம்… …”

“இதிலென்ன புதுசு… சவத்தை விட்டுத் தள்ளு” என்றது விவகார அறிவு. ஆனால் பற்றுதல் விட்டால் தானே?

“புனரபி மரணம்”… இத்யாதி… இத்யாதி.

இதைக் கங்கைக்கரையில் உட்கார்ந்துகொண்டு நிர்விசாரமாகச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

கலியாணமாகாத வயதுவந்த கன்னிப்பெண்ணை வைத்துக்கொண்டு, காக்க முயலும் மாஜி சுமங்கலி அவ்வாறு நிர்விசாரமாக இருப்பாளா? அதுதான் போகட்டும்; நாளைக்கு அடுப்புமூட்ட வேண்டுமே!

வாழ்வென்ற குளத்தில் நிரந்தரக் கடன் என்ற பாசியை ஏதோ இரண்டொரு நாளாவது விலக்கும் முப்பது ரூபாயை இனி யார் வந்து போடுவார்கள். ஜட்கா வண்டிக் குதிரை மாதிரி ஓடி ஓடி உழைத்தவருக்கு நாலு பேர் சவாரி சௌகரியமாக இருக்கும். ஆனால் அவரை விட்டால் கதியில்லை என்பவருக்கு…

அந்தக் காலத்தில் ரங்கசாமி நண்பன் தான், ரொம்ப நல்லவன்; சாது. அத்தோடு அவன் மனைவியும் ரொம்ப நல்லவள், சாது. அதுமட்டுமா? விவரம் தெரியாத அழகி.

நான் அப்பொழுது அவர்கள் வீட்டுக்குப் போவேன்… அடிக்கடி.

என் குழந்தையின் வியாஜமாக நான் அங்குச் செல்லுவேன்… என் குழந்தைக்கு அவர்கள் பேரில் ரொம்பப் பிரியம். அவர்களுக்கும் அப்படித்தான்.

3

நான் என் நண்பனைப் பார்க்கப் போவேன். என் எண்ணம் அத்துடன் நின்றுவிடவில்லை. அது அவர்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. என் மனமும் விழுந்துவிட ஆரம்பித்தது. இப்பொழுது எனக்கு அவள் பேர்கூட ஞாபகமில்லை. அவ்வளவு காலமாகி விட்டது…?

ரங்கசாமி வாழ வேண்டிய இடம் சர்க்கார் ஆஸ்பத்திரி. என்னமோ தவறிப் போய் மேடைத்தெரு 9-ஆம் நம்பர் வீட்டில் குடித்தனம் நடத்தினான். அவனும் நானும் ஒரே ஆபீஸில்தான் வேலைபார்த்து வந்தோம்; அவனுக்கு முப்பது ரூபாய் சம்பளம்; எனக்கு ஐம்பது ரூபாய் சம்பளம்; எனக்குக் கால் தடுக்கினால் எங்கப்பா வைத்துவிட்டுப்போன வயல் வரப்பின் மேலாவது விழலாம்; அவன் கடன்காரன் காலடியில்தான் விழவேண்டும்; எத்தனையோ தடவை கடன்காரன் காலடியில் விழுந்திருக்கிறான்; கடன்காரனுக்குப் பின்னால் டாக்டர் எப்பொழுதும் நிற்பார்.

நான் அப்பொழுது என் குடும்பத்தை வீட்டுக்கு, ஊருக்கு அனுப்பிவிட்டிருந்தேன். என் கைச்சமையல் கசந்தால், ரங்கசாமி வீட்டுச் சாப்பாடு. அல்லது அசட்டுப் பிடித்த ஐயன்கிளப் உண்ணாவிரதம்.

இந்தச் சமயத்தில்தான் நான் ரொம்ப நெருங்கி ரங்கசாமி வீட்டில் பழக நேர்ந்தது. டாக்டர் ஏதோ லத்தீன் பெயருள்ள காய்ச்சல் என்று சொன்னார். அவனது நோய் மறுநாள் என்று எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போயிற்று. கிடப்பில் விழுந்துவிட்டான். மனைவி பிரசவத்திற்காகத் தாடி வளர்க்கும் ஹோட்டல் ஐயன் மாதிரி, முகம், வரவரக் குழிந்து பிரேதக்களை காட்ட ஆரம்பித்துவிட்டது. மூன்றுமாதம் அவளும் ஓயாது ஒழியாது உழைத்தாள்.

உத்தியோகமோ தனிப்பட்ட ஸ்தாபனத்தில். எத்தனை நாளைக்குத்தான் ரங்கசாமிக்காகக் காத்துக் கொண்டிருப்பான் எஜமான்? வேலையும் போய் விட்டது. சுமை முழுவதும் என்மேல் விழுந்தது…!

4

அவள் முதலில் எனது உதவியை சங்கோஜத்துடன் ஏற்றாள். பிறகு ‘அண்ணா! அண்ணா!’ என்று கூப்பிட்டு மனதைத் திருப்தி செய்து கொண்டாள்.

டாக்டர் வருவார்; மருந்து எழுதிக் கொடுப்பார்; உணவு எழுதிக் கொடுப்பார்! உயிரை உடலுடன் ஒட்டவைக்க அவரும் என்னென்னவோ வித்தை எல்லாம் செய்துதான் பார்த்தார்.

ரங்கசாமியைத் தூக்குவது, கிடத்துவது, அவனுக்கு வேண்டிய சிசுருஷைகளைச் செய்வது எல்லாம் நானும் அவளும்தான். அந்தத் தனியான வீட்டில் நானும் அவளுந்தான்… இதே நினைப்புத்தான், எப்பொழுதும் என்மனசில். உதவி செய்யும்பொழுது எங்கள் உடலும் தொட்டுக் கொள்ளும். எனக்குச் சுரீர் என்று விஷமேறும். அவளுக்கு எப்படியோ?

ராத்திரியில் வெந்நீர் ஏதாவது போடவேண்டுமென்றால், நான் அடுக்களை செல்லுவேன்; அவள் உடனிருந்து பார்த்துக்கொள்வாள்.

“அண்ணா என்னவோ போல் பார்க்கிறாரே!” என்ற ஓலம் கேட்கும். அடுப்பில் போட்டது போட்டபடி அங்கு ஓடுவேன். அவள் கணப்புச் சட்டியில் தவிட்டை வறுப்பாள். நான் வாங்கி ஒத்தடம் இடுவேன். நான் அவளையே பார்த்துக் கொண்டு பின்புறம் கை நீட்டும் பொழுது சில சமயம் என் கை அவள் கைவளையலில் படும்; அல்லது ஸ்தன்யங்களில் பட்டு விடும். அந்த ஒரு நிமிஷம் எனக்கு நரக வேதனைதான். அவளுடைய இளமையில் என் மனம் லயித்து நிற்குமே ஒழிய, அவளது சங்கடமோ, அவளது ஊசலோ எனக்குப் படாது. அச்சமயங்களில் நான் அவளைத் திரும்பிப் பார்த்ததில்லை.

அவள் அதில் படபடப்பைக் காட்டிக் கலவரத்தை உண்டு பண்ணிவிடவில்லை. பின் பலமுறை வேண்டுமென்றே தனியாக நாங்கள் நிற்கும்பொழுது அவள் மீது நான் பரீட்சை நடத்தியதுண்டு. ஆனால் பிரதிபலன் எதிர்ப் பிரதிபலிப்பற்ற பார்வைதான்.

5

நாலைந்து நாள் கழித்து நான் ஆபீசுக்குப் போகப் புறப்படும்பொழுது ரங்கசாமியைப் பார்க்க அவன்வீட்டுக்குள் போனேன். விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்துதான் என் ரூமுக்குத் திரும்பியிருந்தேன்.

முந்திய நாள் ராத்திரி ஒரு கண்டம். நடுநிசியில் டாக்டர் வந்தார். மருந்து கொடுத்தார்; தூங்கினால் விழிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுச் சென்றிருந்தார். காலை வரையில் ரங்கசாமி தூங்கவேயில்லை.

பார்லிக் கஞ்சியைப் போட்டு வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு நான் ரூமுக்குச் சென்றிருந்தேன்.

திரும்பி வந்து பார்க்கும்பொழுது அவள் ரங்கசாமி பக்கத்தில் அலங்கோலமான உடையில் நின்று கொண்டிருந்தாள். தலையில் ஈரம் சொட்டுகிறது. இடையில் ஒரு துண்டுதான். மஞ்சள் இட்ட மாங்கல்யம் துல்யமாகப் பிரகாசித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. துண்டு அவளது ஈரம் காயாத அங்க லட்சணங்களை எடுத்துக் காண்பித்தது.

 என்னைக் கண்டவுடன் அவள் தன் உடை அலங்கோலத்தை நினைக்கவில்லை… தழுதழுத்த குரலில், “வந்து பாருங்களேன், என்னவோ மாதிரி இருக்கே” என்றாள்.

நான் அருகில் சென்று ரங்கசாமியைத் தொட்டுப் பார்த்தேன். அங்கிருந்தது மாஜி ரங்கசாமிதான்.

இவ்வளவும் என் புலனறிவுக்குத் தெரிந்ததே ஒழிய மனம், அவள் கட்டியிருந்த துண்டின் இடை வெளியிலேயே லயித்தது. மனசில் குமுறல்; பேய்க்கூத்து!

“ஒன்றுமில்லை, அயர்ந்த தூக்கம். இப்படிப் பயப்படலாமா? வாருங்கள் இந்தப் பக்கம்”… என்னமோ அன்று தைரியமாக அவள் கையைப் பிடித்தேன். எதிர்ப்பின்றி உடன் வந்தாள்.

6

“அந்த புடவையை உடுத்துங்கள்” என்று கொடியிலிருந்து அதை எடுத்தேன். அவளிடம் கொடுக்கவில்லை. அவள் துண்டு நெகிழ்ந்தது! நான் மிருகமானேன்! அவள் பிணமானாள்!

நான் அன்று ஆபீசுக்குப் போகவில்லை. ரங்கசாமியின் சடலத்தைப் பின்தொடர்ந்தவர்கள் நாங்கள் இருவர்தான். அவள் தீச்சட்டி எடுத்துக்கொண்டு நடந்தாள். திரும்பி வரும்பொழுது, அவளைப் பார்ப்பதற்கு எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவளை ஊருக்கு அனுப்பும்வரை நான் மீண்டும் அதைப் பற்றி நினைக்கவில்லை. அதனால் ஏற்பட்ட வெறுப்பையோ பாசத்தையோ அவள் காட்டிக் கொள்ளவில்லை.

அது எங்களுக்கு ஓர் மறந்த சம்பவமாகிறது. என் மனம் நிம்மதியடைந்தது.

இப்பொழுது என் மகள் லக்ஷ்மிக்கு, அவர்கள் இருவரும் பிரியம் வைத்த அவளுக்கு, வயது 14. பருவமடைந்து விட்டாள். எனக்கும் கொஞ்சம் கடன் இருக்கிறது; அதோடு பிராவிடன்ட் நிதியிலிருந்தும் இன்ஷுர் தொகை கொஞ்சமும் அவளுக்கும் அவள் தாயாருக்கும் கிடைக்கும் கவலையில்லை; ஆனாலும் பிணத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் மனசில், ரங்கசாமி வீட்டில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது, அதே மாதிரி மிருகஇச்சை தோன்றுகிறது.

பார்க்காமல் ஓட முயலுகிறேன். முடிய வில்லையே? கீழ்ப்பாக்கத்திற்கு என்னைக் கொண்டு போகுமுன் நாலு பேர் சவாரி கிடைத்தால் தேவலை என்று தோன்றுகிறது.

எல்லாம் ரங்கசாமியால் வந்த வினை. அவன் ஏன் இப்படி நோஞ்சானாகக் குடும்பம் நடத்த முயல வேண்டும்?

இந்த மாதிரியெல்லாம் எதுவும் நடக்கவில்லை தான். ஆனால் பிரேதத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் இந்தக்கற்பனை? ரங்கசாமியும் அவனது மனைவியும் வந்து ஏன் இந்த நாடகமாடிவிட்டுப் போக வேண்டும்?

“என-க்-குப் – பயமா – இ-ருக்-கே!”

முற்றும்

ஜோதி, ஏப்ரல் – 1939

License

விபரீத ஆசை Copyright © by manarkeni. All Rights Reserved.