="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

103 வாழ்க்கை

வாழ்க்கை

1

அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்கள் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை வாரி இறைத்துக் கொண்டு கோலாகலமான ஓட்டை இரும்புக் கோஷத்துடன் செல்லும். மலை விறகு வண்டிகள் லொடக்லொடக் என்று, அல்லது சக்கரத்தின் பக்கத்தில் வண்டி சரிவில் வேகமாக உருண்டுவிடாதபடி கட்டும் கட்டையை வண்டிக்காரன் அவிழ்க்க மறந்துவிட்டிருந்தால், ‘கிரீச்’ என்ற நாதத்துடன், தூங்கி வழிந்துகொண்டு சாரை சாரையாகச் செல்லும். வண்டிக்காரர்களும் வண்டி மாடுகளும் சமதளத்தில் இறங்கிவிட்டால் எதிரிலோ பின்னோ என்ன வருகிறது என்று கவனியாது, தூங்கி வழிந்து கொண்டு செல்ல இச்சாலையில் பூரண உரிமையுண்டு.

சாலையில் இரண்டு பக்கங்களில் இருக்கும் மரங்களின் சம்பிரமத்திற்குக் கேட்கவேண்டியதில்லை. எதிரே காணப்படும் மலைகளைக் கூடப் பார்க்க முடியாத குறுகிய பார்வையுடையவனானால், அடிமை நாட்டினர் மாதிரி பவ்வியமாக அடங்கி ஒடுங்கி வளர்ந்திருக்கும் மரங்களைப் பார்த்தால் போகும்வழி ஒரு நாளும் மலைப்பிரதேசத்தையடையாது என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யத் தயாராக இருப்பான். விக்கிரமசிங்கபுரம் தாண்டிய பிறகுதான், நாணிக் குழைந்து வளர்ந்த இந்த மரங்கள் தங்கள் குலப் பெருமைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.

அன்று அவ்வளவு மோசமான வெய்யில் இல்லை. மலைச்சிகரத்தின் இரு பக்கங்களிலும் கவிந்திருந்த கறுப்பு மேகங்களில் மறைந்து, அதற்குச் சிவப்பும், பொன்னுமான ஜரிகைக் கரையிட்ட சூரியன், கீழ்த்திசையில் மிதக்கும் பஞ்சுமேகங்களில் தனது பல வர்ணக் கனவுகளைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான். பொதியை, பெரிய ரிஷிக் கிழவர் மாதிரி கரு நீலமும் வெண்மையும் கலந்து கறையேற்றிய மஞ்சுத் தாடிகளை அடிக்கடி ரூபம் மாற்றிக்கொண்டு, பார்ப்பவனின் மனத்தில் சொல்ல முடியாத அமைதி, துன்பக் கலப்பில்லாத சோகம், இவற்றை எழுப்பியது. பக்கத்தில், அதாவது இரு சிகரங்களுக்கும் ஊடே தெரியும் வான வெளியில், அக்னிக் கரையிட்ட கறுப்பு மேகங்கள் அதற்குத் துணைபுரிந்தன என்று சொல்லலாம். சக்தி பூஜைக்காரனுக்கு, சிவனும் சக்தியும் மாதிரி, இக்காட்சி தோன்றியிருக்கும்.

விக்கிரமசிங்கபுரத்திற்கு இரண்டாவது மைலில், மலையை நோக்கி, அதாவது, பாபநாசத்தை நோக்கி ஒருவன் நடந்துகொண்டிருந்தான். நாற்பது வயது இருக்கும். இடையிடையே நரையோடிய, தூசி படிந்த, கறுப்புத்தாடி. அகன்ற நெற்றியின் மீது சிறிது வழுக்கையைவிட்டு, இரண்டு பக்கமும் கோதாமல் வளர்ந்து பின்னிய தலைமயிர் உச்சியில் சிறிது வழுக்கையைக் காண்பித்து, கழுத்தை நன்றாக மறைத்தது. மூக்கு நீண்டிருந்தாலும் வாலிபத்தின் பிடிப்பு விட்டதினால், சிறிது தொங்கி மீசையில் மறைந்தது.

கீழுதடு மட்டிலும் மீசைக்கு வெளியே தெரிந்தது. வாயின் இருபுறத்திலும் மூக்கிலிருந்து ஆரம்பித்து தாடியில் மறையும் கோடுகள் அடிக்கடி நினைத்து நினைத்து நெஞ்சையலட்டிக் கொள்வதனால் சுருங்கல் விழுந்து கண்ணின் மீது தொங்கும் புருவங்கள். உடல் திடகாத்திரமானதன்று; ஆனால் நாடோடியாக அலைந்து மரத்துப்போன தேகம். கிழிந்த சட்டையும் ஓரங்களில் முழங்கால் தடுக்கியதால் கரைகள் கிழிந்த வேஷ்டியும் உடுத்தியிருந்தான். கைகளும் கண்களும் அவன் வயிற்றிற்காகத் திரியும் நாடோடியல்ல என்பதைக் காண்பித்தன. கையிலே xU jo. தோள்பட்டையில் ஒரு மூட்டை – அதில் ஒரு செம்பும் புஸ்தகமும் துருத்திக் கொண்டிருந்தன – அதன் மேல் ஒரு கம்பளி.

2

கண்களில், அடிக்கடி ஏதோ ஒரு பெரிய ஏமாற்றத்தை ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிப்பவன் போல் ஒரு பிரகாசம்; அதனுடன் கலந்து, ஒரு பரிதாபகரமான, தோற்றவனின் சிரிப்பு. கண்கள், அவன் செல்லும் திக்கை நோக்காது வானிலும் மலையிலும் ஒன்றையும் பற்றாது சலித்துக் கொண்டிருந்தன. கால்கள் நெடுந்தூரம் நடந்தாற்போல் ஒவ்வொரு நிமிஷமும் குழலாடின.

மூட்டையை எடுத்து மரத்தடியில் வைத்து, பக்கத்தில் தடியைச் சாத்திவிட்டு உட்கார்ந்து, முழங்காலையும் குதிரைச் சதையையும் தடவிக் கொண்டு, ‘அப்பாடா!’ என்று சாய்ந்துகொண்டான். இனி அந்த இடந்தான் வீடு. மூட்டையைப் பரப்பினால் தட்டு முட்டு சாமான்கள், இரவைக் கழிப்பதற்கு வேண்டிய சாப்பாட்டு வகைகள்! அங்கேயே உட்கார்ந்து கொண்டால் தண்ணீருக்கு எங்கே போவது? நாடோடிக்கு ஒன்றும் புரியவில்லை. கால் சொல்வதைக் கேட்டால் அன்றிரவு பட்டினி இருக்க வேண்டியதுதான். சீ, என்ன கஷ்டம்!

ஏதாவது அற்புதம் ஒன்று நடந்து, தான் நினைத்த இடத்திற்குப் போய்விடக்கூடாதா என்று அவன் மனக்குரங்கிற்குச் சிறிது ஆசை எழுந்தது. உதட்டில் ஒரு சிரிப்புடன் காலைத் தடவிக்கொண்டு வேஷ்டியில் ஒட்டியிருந்த ஒரு சிறு வண்டைத் தட்டினான்.

அப்பொழுது, அவன் வந்த திக்கிலிருந்து ‘ஜல்! ஜல்!’ என்று சலங்கைகள் ஒலிக்க, தடதடவென்று ஓர் இரட்டை மாட்டுவண்டி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரன் மாடுகளை ‘தை! தை!’ என்று விரட்டி, ‘தங்கம் தில்லாலே’ என்று பாடிக்கொண்டு வாலை முறுக்கினான். வண்டி காலி. இல்லாவிட்டால் பாடிக்கொண்டு போக அவனுக்கு அவ்வளவு தைரியமா?

3

“ஓய், வண்டிக்காரரே! எவ்வளவு தூரம்? நானும் ஏறிக்கொள்ளட்டுமா?” என்றான் சாலையில் உட்கார்ந்திருந்த நாடோடி.

“வண்டியா! பாவநாசத்திற்கு, வேணுமானா பெறத்தாலே ஏறிக்கிரும்!” என்றான் வண்டிக்காரன்.

நாடோடியின் வாழ்க்கையில் முதல்முதலாக அவன் எதிர்பார்த்தபடி சம்பவிக்கும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

“நீர் எங்கே போராப்பிலே! பாவநாசத்துக்கா?” என்றான் வண்டிக்காரன்.

“ஆமாம்! யாரு வண்டி!”

“இந்தக் காட்டுலே பண்ணையெ எசமான் வண்டி தெரியாத ஆளுவளும் உண்டுமா! கல்லடக்குறிச்சி பெரிய அய்யரு வண்டி. பளைய பாவநாசத்துலே, பட்டணத்திலேயிருந்து அய்யமாரும் அம்மா மாரும் ஊரு பாக்க வந்திருக்காங்க! கூட சாமியாரும் வந்திருக்காரு. அவுங்க எல்லாம் சீசப் புள்ளெங்க. அவரைப் பாத்தால் சாமியாரு மாதிரியே காங்கலே. பட்டும் சரிகையுமாத்தான் கட்டராரு. கூட வந்திருக்காருவளே, கிளிங்கதான்!” என்று அடுக்கிக்கொண்டே போனான் வண்டிக்காரன்.

4

இதென்ன வேஷம் என்று ஆச்சரியப்பட்டான் நாடோடி. வண்டியின் ஒரு மூலையில் கிடந்த தியாசபி புஸ்தகங்கள் வந்திருப்பது யார் என்று விளக்கிவிட்டன. மனத்தின் குறுகுறுப்புச் சாந்தியானதும் வண்டிக்காரனின் பேச்சில் லயிக்கவில்லை.

‘ஊச்’சென்று கொண்டு மனத்தை வெளியில் பறக்கவிட்டான் நாடோடி. அது, கூடு திரும்பும் பட்சிபோல பழைய நினைவுக் குப்பைகளில் விழுந்தது.

இன்று இந்த வண்டியில் ஏறியதுதான், இந்த நாற்பது நாற்பத்தைந்து வருஷங்களில் முதல்முதலாக அவன் விரும்பி நிறைவேறிய ஆசை.

‘ஆசை! அதற்கும் மனிதன் சொல்லிக்கொள்ளும் இலட்சியம் என்பதற்கும் வெட்கமே கிடையாது. இலட்சியத்தால் நடக்கிறதாம். நீதியால் நடக்கிறதாம்; தர்மத்தால், காதலால் வாழ்க்கை நடக்கிறதாம்! உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? வாழ்க்கையில் ஒன்றுதான் நிஜமானது, அர்த்தமுள்ளது. அதுதான் மரணம். காதல், வெறும் மிருக இச்சை பூர்த்தியாகாத மனப்பிராந்தியில் ஏற்பட்ட போதை. நானும் சுகம் அனுபவிச்சாச்சு.

என்னதான் பேசினாலும் இதற்குமேல் ஒன்றும் கிடையாது. அதற்கப்புறம் சமூகம். அன்றைக்கு அந்தப் பயல் ஜட்ஜ்மென்ட் சொன்ன மாதிரிதான்… பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம். ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், ‘குற்றம் செய்கிறாய்!’ என்று தண்டிக்க வருகிறது. இதுதான் சமூகம்! இந்த அசட்டு மனிதக் கூட்டத்தின் பிச்சைக்காரத்தனம்… புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா? இந்தப் பால்காரன் விற்கிற பாலுக்கும் உலகத்தின் நன்மைக்கும் வித்தியாசமில்லை. நாமாக நினைத்துக்கொண்டால் நன்மைதான். பின் ஏன் இந்தப் பித்தலாட்டமான இலட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும்! அதனால்தானே இந்த ஏமாற்றம், தொந்தரவு. மிருகம் மாதிரி இருந்து தொலைத்தால் என்ன கெட்டுப் போகிறதோ? அசட்டுச் சமூகத்திற்கேற்ற அசட்டுப் பித்தலாட்டங்கள். இதில் ‘நான் சொல்வதுதான் சரி’ என்ற கட்சி. லோகத்தை மாற்றியமைக்கப் போறாளாம்… அதுவுந்தான் விடிய விடிய நடக்கிறதே…

5

“பெரியவரே, இங்கேயே எறங்கிகிடும்! அய்யரு கண்டா கட்டி வச்சு அடிப்பாரு… நீங்க எந்தூரு?” என்றான் வண்டிக்காரன்.

“இந்தா, பலகாரம் வாங்கிச் சாப்பிடு!” என்று ஓரணாவைக் கொடுத்துவிட்டு, இறங்கிக் கோவிலுக்குள் செல்லும் வழியில் பக்கத்திலிருந்த இட்டிலிக் கடையில் – அதற்கு ‘ஓட்டல்’ என்று பெயர் – நுழைந்து, கைகால் கழுவிவிட்டு முகத்தைத் துடைத்தான் நாடோடி.

அப்பொழுது நன்றாக அந்தி மயங்கி விளக்கேற்றப்பட்டுவிட்டது.

“கோவிலிலே கட்டி வாங்க நேரஞ் செல்லுமா?” என்றான் நாடோடி.

“ஆமாம், பூசையாயிருதானே! எட்டு மணி ஆகும்!”

“அப்போ ஒரு அணாவுக்கு இட்டிலி இலையில் கட்டிக் கொடு!” என்று வாங்கிக் கொண்டு, பழைய பாபநாசத்திற்குப் போகும் பாதையில் இருக்கும் மண்டபத்தை நோக்கி நடந்தான்.

மண்டபத்தில் அவன் எதிர்பார்த்தபடி நிம்மதியில்லை. பண்ணை அய்யர் ‘தியாசபி’ (பிரம்மஞான கோஷ்டிக்கு) விருந்து நடத்தும் பொழுது அங்கு அமைதி எப்படி இருக்கும்! சமயம், அரசியல் முதல் நேற்றுச் செய்த சமையல்வரை சம்பாஷணையில் அடிபடுகிறது.

6

“வாழ்க்கையின் இணைப்பையும், சமயத்தின் சாரத்தையும் அறிவிப்பது தான் தியாசபி, ஸார்!” என்றது ஒரு குரல்.

“நேற்று ஸ்நானம் செய்யறப்போ, மிஸ்டர் கிருஷ்ணன், இதைக் கேளுங்களேன்! ஒருமான்குட்டி முண்டந்துறையிலே துள்ளித்தே, நீங்க பாத்தியளா?” என்றது ஒரு பெண்குரல்.

ஆங்கிலத்தில், “நம் கூட்டத்தில் மான்களுக்குக் குறச்சல் இல்லை!” என்றது ஒரு கரடிக் குரல். உடனே கொல்லென்ற சிரிப்பு.

“பேசாமலிருங்கள், சுவாமிஜி பேசப் போகிறார்!”

நாடோடி, படித்துறையில் இட்டிலியை வைத்துவிட்டு கால் முகம் கழுவ ஜலத்தில் இறங்கினான். அப்பா, என்ன சுகம்! மெய் மறந்தபடி கல்லில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டுத் துழாவிக் கொண்டேயிருந்தான்.

“நமது வாழ்க்கையிலே, அசட்டுத்தனத்திற்காகப் போராடுவது, மிருகத்தனத்திற்காகச் சச்சரவு செய்வது இயற்கை…” என்ற சுவாமிஜியின் குரல் கம்பீரமாக எழுந்தது.

நாடோடி இலை முடிப்பை அவிழ்த்தான்.

7

“சாமி, பசியா இருக்குது! ஒரு இட்டிலி…” என்ற குழந்தைக் குரல் ஒன்று அவன் பக்கத்தில் கேட்டது.

இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. இருட்டோடு இருட்டாகப் பறையர் பக்கத்தில் நின்றது ஒரு சிறு குளுவ ஜாதிக் குழந்தை.

“எங்கே! இங்கையா நிக்கிறே! இந்தா! உங்கப்பன் எங்கே! இருட்டிலே எப்படி வந்தே…?”

அப்பொழுது சுவாமிஜி பிரசங்கம் நடக்கிறது.

“அப்பன் அதோ இக்குராரு…” என்றது சிசுக்குரல். பிறக்கும் போதே பிச்சையா!

“… ஆனால் உயர்ந்த ஆதர்சங்களுக்காக மனித வர்க்கத்தின் இலட்சியங்களுக்காக, எத்தனை பேர்கள், எத்தனை சச்சரவுகள்! உண்மைக்குக் குணம் ஒன்றுதான்! அதையடையும் பாதைகள் பல… அதையறியாத மனித நாகரிகம் அதற்குப் பிரசாரத்தைத் தொடங்கியது. நாங்கள் கூறுவது ஒன்றுதான். பேதங்கள் தோல் ஆழமுள்ளவை; இன்பம் ஒன்றுதான். இதன் சோபையும் அழகுமே, கலியுக அவதார புருஷன் கிருஷ்ணாஜி.”

“இவன் கண்டான் பெரிசா!” என்று ஓர் இட்டிலியை விண்டு வாயினுள் போட்டான் நாடோடி.

8

மெதுவாக வீசிக்கொண்டிருந்த காற்று திடீரென்று அதிகப்பட்டு, பெரும் பெரும் தூற்றலுடன் வீச ஆரம்பித்தது.

நாடோடி மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஒரு மரத்தின் நிழலுக்கு ஓடினான். அதில்தான் குளுவக் குடும்பத்தின் வாசம். குளுவச்சி மழை அதிகரிக்கிறது என்று மண்டபத்தை நோக்கி ஓடினாள்.

“சீ, மூதேவி! எங்கே ஏறுதே! ஆள் இருக்கிறது தெரியலே! போ!” என்று ஒரு பெண் குரல் சீறியது.

மழை கொஞ்சம் பலந்தான். குளுவனுடைய சின்னக் குழந்தை மழை பெய்கிறது என்று கத்த ஆரம்பித்துவிட்டது.

“ஓய்! ஜக்கம்மா! மந்தரம் போடறேன் பார்! பாப்பா, மளை நிக்குது! ஏ! மளை நிக்கலே! எங்க பாப்பாத்தி அளுவுரா! ஜல்! மந்திரக்காளி! ஜு! மந்திரக்காளி!” என்று குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான் குளுவன். குழந்தை இவன் பேச்சில் லயித்துச் சிரித்தது.

விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டு ஓடிவரும் குளுவச்சியைப் பார்த்து “வேணுண்டி உனக்கு! ஒதைக்கிலே!” என்றான் குளுவன்.

“நம்ம எடத்தை அவங்க புடிச்சுக்கிட்டாங்க இன்னிக்கி! உனக்கென்னடா குளுவா, நீ சொரணை கெட்டவன்…”

9

இருவரும் மழையின் உற்சாகத்தில் சண்டைபோட ஆரம்பித்து விட்டார்கள்.

நாடோடிக்கு இது வினோதமாக இருந்தது. இருக்க இடமில்லை இந்த மழையில். இதில் என்ன உற்சாகம்! வாழ்க்கையே இந்த அசட்டுத் தனந்தான் அல்லது ஏமாற்றந்தான்.

மழை விட்டு மரங்களிலிருந்து மட்டும் ஜலம் சொட்டிக் கொண்டிருந்தது. மேற்புறத்திலிருந்து வெளிவந்த சந்திரன், புதிதாக ஸ்நானம் செய்து எழுந்த பிரகிருதி தேவியின் மீது காதற்பார்வை செலுத்தினான்.

“ஏய் குளுவா! அங்கென பாருடா!” என்று இரண்டு உருவத்தைச் சுட்டிக் காண்பித்து, குசுகுசுவென்று சொன்னாள் குளுவச்சி.

“அதுவுஞ் சரிதான்!” என்று குளுவன் அவளைத் தன் பக்கமாக இழுத்தான். குளுவச்சிக்கு என்ன பலமில்லையா!

ஆனால், அந்த நாடோடி ஒன்றிலும் லயிக்காது துயரந்தேங்கிய முகத்துடன் மலைப்பாதையில் நடந்து மறைந்தான். அவன் கண்கள் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கவில்லை. சாலையின் இருளும் அவன் உருவமும் ஒன்றாயின.

முற்றும்

மணிக்கொடி, 10-11-1935

License

வாழ்க்கை Copyright © by manarkeni. All Rights Reserved.