="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

82 பாட்டியின் தீபாவளி

பாட்டியின் தீபாவளி

1

‘குத்து விளக்கேற்றி கோலமிட்டு பாரேனோ.’

சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியின் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹுஷகன் நிலைமை மாதிரி. அவள் வாழ்க்கை சுகமான கவலையற்ற முடிவை எதிர்நோக்கித் தன் பிள்ளை, மாட்டுப்பெண், குழந்தை மீனு இவர்கள் இடையில் கழிந்து வந்தது. திடீரென்று சென்ற ஐப்பசியில், அந்தக் கண்ணற்ற விதி எல்லோரையும் ஒரேயடியாகக் கொண்டு போய்விட்டது. காலராவிற்குத் தராதரம் தெரிகிறதா? அந்தக் குழந்தை, குழந்தை மீனு, அவள் என்ன பாபம் செய்தாள். கிழக்கட்டையைத் தவிக்கவிட்டுத் திடீரென்று போய்விட்டாளே.

அதன் பிறகு…

அதன் பிறகென்ன? கிழவிக்கு நாட்கள் சென்றது தெரியாது. யோகிகள் காலம் கடந்துவிடுகிறார்கள். காலத்தின் மாறுபாடுகளை மீறி மோன நிலையில் இருந்துவிடுகிறார்களாம். அது எனக்குத் தெரியாது. சங்கரிப் பாட்டிக்கு நாட்கள் கழிந்தது தெரியாது. நடைப்பிணம்… நடையற்ற பிணமாக இருந்தாலும் தேவலை.

அன்று விடியற்காலம் தீபாவளி ஆரம்பிக்கிறது. சாயங்காலம் முதல் கிழவிக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. கிழக்கட்டைக்குத் தீபாவளி வேறு வேண்டியாக்கும். மடிசஞ்சி மூட்டையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள். இரவு பூராவாகவும் துக்கம்… தூக்கமாவது மண்ணாவது!

விளக்கையாவது ஏற்றி வைக்கலாமே. கிழவி குடுகுடுவென்று நடுங்கியவண்ணம் எழுந்திருக்கிறாள். என்ன நேரம் என்று தெரியாது. வெளி எல்லாம் இருள், உள் எல்லாம் இருள். உள்ளத்திலும் இருள். எங்கோ தூரத்திலே பேச்சுக் குரல்… அர்த்தமற்ற மனிதக் குரல் அவள் காதைக் குத்துகிறது.

2

நெருப்புக் குச்சியைக் கிழித்து குத்துவிளக்கை ஏற்றுகிறாள். குச்சிதான் சீக்கிரம் பிடிக்கிறதா? நனைந்த தீப்பெட்டி. அடுப்பண்டை போகிறாள். குவிந்த சாம்பலில் மங்கி மடியும் கங்கு. அதைக் கரண்டியில் கொண்டுவந்து அதன் உதவியால் நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து விளக்கை ஏற்றுகிறாள். விளக்கின் மங்கிய தீப ஒளி, குச்சிலில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களைப் பேய் சாயையாகக் காண்பிக்கின்றன. அசைந்தாடும் தீபவொளி பொருள்களை அசைக்கின்றன. மூலையிலும் மோட்டிலும் பம்முகின்ற இருளையும் அசைந்தாடச் செய்கின்றன.

பாட்டிக் கிழவிக்கு மீனுவின் நினைவு உள்ளத்தைக் கவ்வியது நெஞ்சையடைத்தது. போன தீபாவளிக்கு முந்திய தீபாவளியில் அவள் கைக்குழந்தையாக, தவழும் குழந்தையாக செல்லத்தின் மடியில் சிரித்துக்கொண்டிருக்கும்போது தைத்த சட்டை, பாட்டியின் மடிசஞ்சி மூட்டையிலே, பரிசுத்தமான விபூதிச் சம்புடத்துடனும், ருத்திராட்சத்துடனும் இருந்தது. அதை மெதுவாக எடுத்து (மங்கிய கண்களின் கண்ணீர் அதை நனைக்கிறது) மீனு என்று குழறிக்கொண்டு, குத்துவிளக்கின் பாதத்தில் சமர்ப்பித்து வணங்குகிறாள். கிழவியின் பொக்கை வாயில் ஒரு பரிதாபமான சிரிப்பு. பட்டுச் சட்டையில் இரண்டு துளிகள்.

பாட்டி குத்துவிளக்கின் பாதத்தில், பட்டுச் சட்டையில் முகம் வைத்து, வணங்குகிறாள். உள்ளம் ‘மீனு, மீனு’ என்று ஒலி செய்கிறது.

ஏன் அப்படியே சிலையாக, குத்துவிளக்காக இருந்துவிட்டாள். உயிர்தான்…

“பாட்டி!”

குழந்தைக் குரல்… குழந்தை மீனுவின்…

3

கிழவி திரும்புகிறாள்.

“வாடியம்மா! கோந்தே… வாடியம்மா!”

ஆவலுடன் கையை நீட்டுகிறாள்.

“மாத்தேன் போ!” குழந்தை சிரிக்கிறது. ஆனால் கைகளைப் போட்டுத் தாவுகிறது. குழந்தை அவள் வற்றிய நெஞ்சில் தாவுகிறது. அப்பா! பால் வார்த்த மாதிரி… என்ன சுகம்!

“பாட்டி! பாட்டி!” என்று நெஞ்சில் குழைகிறது. நெஞ்சிடையே நெளிந்து, வளைந்து குமைகிறது.

“பாட்டி, பாப்பா வெச்சு விளையாடலாமா?”

“வாடியம்மா? மரப்பாச்சி எடுத்துண்டு வரட்டா?”

குழந்தையுடன் ஒரு மூலைப் பக்கம் திரும்புகிறாள். குழந்தை எட்டி ஒரு பொம்மையை எடுக்கிறது. கையொடிந்த மரப்பாச்சி.

“பாட்டி! நீதான் அம்பி மாமாவாம். நான் தான் பொண்ணாம். வச்சு விளையாடலாமா!”

குழந்தைக்குச் சட்டைப்போட்டுக் குத்துவிளக்கின் முன்பு மரப்பாச்சியுடன் உட்கார வைத்தாகிவிட்டது. கிழவி சோபனப் பாட்டு தனது நாதமிழந்து நடுங்கும் குரலில் பாடுகிறாள்.

4

“பாட்டி, கதை சொல்லு பாட்டி… அன்னிக்குச் சொன்னையே, அந்தக் கதை சொல்லு பாட்டி… நன்னா… நாந்தான் இப்படி மடிலே உக்காந்துப்பேனாம்…” மறுபடியும் குழந்தை மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஆடி ஆடி அசைந்து கொண்டு கேட்கிறது.

“நரகாசுரன்னு ஒத்தனாம். அவன் பொல்லாதவனாம். அக்ரமம் செய்தானாம். எல்லாரையும் அடிச்சு, குத்தி, பாடுபடுத்தினானாம்…”

“நான் படுத்துவேன்பியே அது மாதிரியா?”

“அடி கண்ணே உம்மாதிரி யார் சமத்தாட்டம் படுத்துவா?” குழந்தையைத் தழுவி முத்தம் கொஞ்சுகிறாள். “அவன் பொல்லாதவன்… அவனை கிருஷ்ணன் வந்து அம்பாலே – வில்லாலே…”

“அம்புன்னா என்ன பாட்டீ!”

“அம்புன்னா…”

“பாட்டீ ஒரு பாட்டு சொல்லு பாட்டீ!”

கிழவி பாடுகிறாள்.

“பார்க்குமிடத்திலெல்லாம் நந்தலாலா – நின்றன்
ஆசை முகம் தோன்றுதடா நந்தலாலா”

“பாட்டீ நான் ஓடறேன் பிடிப்பையோ?”

“சமத்தாட்டம் ஓடு! பிடிக்கிறேன்.”

5

குழந்தை குதித்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடுகிறது. வெளியில் இருக்கும் இருள் திரையை நோக்கி ஓடுகிறது. கிழவியும் தள்ளாடிக் கொண்டு பின் தொடர்கிறாள்.

குழந்தை வாசலை நெருங்கிவிட்டது.

வெளியிலே ‘டபார்’ என்று ஓர் யானை வெடிச் சப்தம்.

அவ்வளவுதான்.

உலகத்திற்கு தீபாவளி ஆரம்பித்தது.

பாட்டிக்கு…?

(முற்றும்)

ஊழியன், 09-11-1934

License

பாட்டியின் தீபாவளி Copyright © by manarkeni. All Rights Reserved.