66 தேக்கங் கன்றுகள்
தேக்கங் கன்றுகள்
1
வில்லி ஸ்டேதம் ஆக்ஸ்போர்டை விட்டு வெளியேறியவுடன் ‘இம்பீரியல் பாரஸ்ட் (forest) ஸர்வீஸி’ல் இரண்டு வருஷங்கள் தன்னை இந்தியக் காடுகளுக்காகத் தயாரித்துக்கொண்டது வரை, நமக்கு அவ்வளவு கவலையில்லை. இங்கிலாந்தின் மூடுபனிகளுக்கும் தனது உள்ளத்தைக் கவர்ந்த அந்த டைப்பிஸ்ட் நங்கைக்கும் விடைபெற்றுக்கொண்டு, ‘ஜிஹாங்கரி’ல் கால் வைக்கும்பொழுது சிறு பையனின் களை சற்றாவது மாறவில்லை.
சிரித்த கண்களும், நகைச்சுவை ஒளிந்த உதடுகளும், யாரையும் விரைவில் நண்பனாக்கிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. பம்பாய் துறைமுகத்தில் கால் வைத்த ஐந்தாவது மாதத்திலேயே D.F.O. ஆனதில் ஒரு ரகஸியம். இவர் தகப்பனாரின் நண்பர் கர்னல் ரௌபாதத்தின் – மூத்த ஸ்டேதமும், இவரும் போயர் யுத்தத்தில் தோளோடு தோள் நின்ற வீரர்கள் – உதவி கொஞ்சம் உண்டு. தனது ஆக்ஸ்போர்ட் நடை நொடி பாவனைகளை, விஷக் காய்ச்சல் பிடித்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஊளையிடும் நரிகளுக்கும், புஸ்தகத்தை ஒப்பிப்பதுபோல் பேசும் இந்திய ரேஞ்சர்களிடத்தும் காண்பிக்க வேண்டும் என்று நினைக்கவேயில்லை.
முதன்முதலில் அவருக்கு மரங்களைச் சுற்றிப்பார்ப்பதும், வெட்டப்பட்ட மரங்களையும் ரேஞ்சர்களையும் தணிக்கை செய்வதும், அங்கு கிடைக்கும் பெரிய வேட்டைகளை ஆடுவதும் வெகு உத்ஸாகத்தைத் தந்தபோதிலும், கொஞ்ச நாட்களில் புளித்துப் போய்விட்டது. ஆனால் அங்கே தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண் – அவளில்லாவிட்டால் வில்லியின் ராஜினாமா முந்தியே கவர்மெண்டுக்குக் கிடைத்திருக்கும்.
இரண்டு வருஷங்கள் சிட்டாகப் பறந்தன. வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் ‘ஹோமிற்கு’ப் போக வேண்டும். வரும்பொழுது அந்த டைப்பிஸ்ட் தன் பெயரை மாற்றிக்கொள்வாள். பிறகு கேட்பானேன்! குதூகலந்தான்.
2
உலாந்தி ரேஞ்ச், மலேரியா, யானை, தேக்கு மரம், இத்யாதிப் பொருள்கள் அபரிமிதமாகக் கிடைக்கும் ஸ்தலம் என்பது காட்டு இலாக்கா மான்யுவலின் கொள்கை. மலேரியாவிற்கு மட்டும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். போக்குவதற்குத்தான் அதன் உதவி தேவை.
ரேஞ்ச் ஆபீஸ் என்ற தகரக்கொட்டகை, ரேஞ்சர் பங்களா என்ற மூங்கில் வேய்ந்த மரக்குடிசை, தேக்கங்கட்டைகள் அடுக்கும் பெரிய கொட்டகை, மரங்களை இழுக்கும் யானைகளின் கொட்டாரம், பத்துப் பதினைந்து காடக் குடிசைகள், வெற்றிலை, சுருட்டு முதல் ஸென்ட் சீப்பு வரை தேவைக்குரிய பண்டங்களைத் தன்னுள் அடக்கும் ‘ஷாப்’ – இதுதான் உலாந்தி ரேஞ்சின் கரு.
அப்பையா ரேஞ்சர், கவர்மெண்டாரால் தனக்கு அருளப்பட்ட இருபத்தெட்டு வருஷ வனவாசத்தில் ஏறக்குறைய பாதியைக் காய்ச்சலாகப் படுப்பதிலும், காடை, மான் முதலியவற்றை வேட்டையாடுவதிலும், தினம் இம்மாதிரித் தனக்குக் கிடைக்கும் வன போஜனத்துடன் இரண்டு கொய்னா மாத்திரை தின்பதுமாகக் காலந்தள்ளி வந்தார். ஆபீஸ் தபால்களுக்கு ‘பதில்’ – ரிப்போர்டுகள் முதலியன – அவருடைய இலாக்கா எதிர்பார்த்தபடி துரிதமாகப் போவதில்லை. D.F.O. காம்ப் போட்டிருக்கும் தகவல் கிடைத்தவுடன் அவர் ஆச்சரியப்படவேயில்லை. ஒரு வனபோஜனத்தில் எல்லாரையும் ‘தாஜா’ செய்யும் அப்பையாவிற்கு இந்தக் கத்துக்குட்டியான ஸ்டேதமா ஒரு பெரிய காரியம்?
உலாந்தியில் ஒரு பெரிய பரபரப்பு.
3
மூட்டை தூக்கும் யானைகளின் மேல் கூடாரம், பட்லர், துரையின் நாய் இத்யாதி, முதல்நாளே வந்து ஸ்டேதத்தின் வருகையை எதிர்பார்த்து நின்றன. உலாந்தியைச் சுற்றி பத்துமைல் வட்டாரத்திற்கு பெட்ரோல் நாகரிகத்தின் ஜம்பம் சாயாது.
இதனால் 10-வது மைலில் துரையின் மோட்டாருக்கு ஒரு ஷெட், காவல்காரன் வகையறா தயார் செய்துகொண்டு துரையவர்களின் வருகையை எதிர்பார்த்து வெகுகாலையில் நிற்க வேண்டும் என்ற உத்தரவு.
அப்பையா ரேஞ்சர் ராஜதந்திரியாகப் பிறந்திருக்க வேண்டியவர். களைத்து வந்தவர்களுக்கு வயிற்றை நிரப்பிவிடுவதைப்போல் எடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கு வேறு மோகனாஸ்திரம் கிடையாது என்று கண்டவர். துரையவர்களின் பாய் (Boy) – அறுபது வயதுக் கிழவனாகிலும், துரைகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் ‘பாய்’ தான்; மார்க்கண்டன் பிறந்த நாட்டு மண் விசேஷமாக இருக்கலாம் – அவனைக் கையில் போட்டுக் கொண்டார். காட்டில் கிடைக்கும் தீனி வகையறா, நாட்டிலிருந்து டின்களில் அடைத்த சீமைச் சரக்குகள், துரையவர்களின் கண்ணில் மண்ணைப்போட, அல்ல. புத்தியை மூடிவைக்க, சாம்பெயின், பிராந்தி, விஸ்கி, இத்யாதி, இத்யாதி.
அப்பையா ஒரு பாரஸ்டர் (forester) இரண்டு கார்டுகள், இரண்டு பெரிய ரோஜா ஹாரங்களுடன் (இது இங்கு செலவில்லாமல் கிடைப்பது; ஹாரம் கார்டு கோபால நாயகரின் கைவேலை) சேணமிட்ட குதிரை சகிதம் வெகுகாலையிலேயே வந்து குறிப்பிட்ட இடத்தில் எதிர்பார்த்து நின்றார்கள். பாய் துரைக்குத் தீனி கொண்டு வந்திருக்கிறான். 'ஸ்டேதம் மான்மியத்தை' எடுத்துச் சரடுவிட்டான்.
காலை எட்டு மணியிருக்கும். எங்கோ ஒரு மோட்டார் ஹார்ன் காற்றோடு கலந்தது.
4
“துரை வந்தாச்சுரா. பூச்சி மேட்டுப் பக்கம் கேக்குது. டேய் ராமராவ், நீ போய்ப்பார்” என்று கட்டளையிட்டார் அப்பையா.
கோபால நாயகர் கைவேலையில் தேர்ச்சி என்றால் ‘ராமராவ்’ கால விஷயத்தில் ‘எக்ஸ்பர்ட்’. ‘ராமராவ்’ ஜாதியில் காடன். அவனுக்குத் தந்தையிட்ட பெயர் தாடகன். காருண்ய கவர்மெண்டாரின் ரேஞ்சர்களாகத் திகழும் பிரதிநிதிகளின் வழியாக மலைக்கேறிய ஆரிய நாகரிக வாசனையைப் பெற்ற தாடகன், நாஸுக்காக ‘ராமராவ்’ என்ற பெயர்ப் பதிவிலேயே சம்பளம் பெற்றுவருகிறான். ராவ்ஜிகளுக்கு யக்ஞோபவீதம் உண்டு என்று தெரியாவிட்டால் அது அவன் குற்றமல்ல. அப்பையாவிற்கு முந்தியிருந்த ரேஞ்சர் இவனை எப்பொழுதும் “அடே காடப்பயலே” என்று கூப்பிட்டு வந்ததின் அர்த்தம் அவனுக்குத் தெரியாது.
அப்பையா கோஷ்டி அரைமணி சாவகாசம் காத்துக்கொண்டிருந்த பிறகு ஒரு சிறிய இரண்டு பேர் இருக்கும் மோட்டார் வந்து நின்றது.
அப்பையா தன்னை யார் என்று தெரிவித்துக்கொண்டு மாலையைப் போட்டார்.
“ஓஹோ, நீர் தான் ரேஞ்சரோ! அதிக நேரம் காத்திருந்தீரோ? கையிலிருக்கும் பெரிய புஸ்தகம்? அதற்கென்ன ஆபீஸில் பார்த்துக் கொள்ளலாம்” என்று சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கிப் புஷ்ப மாலையை முகர்ந்துகொண்டிருந்தார்.
5
‘பாய்’ உடனே காரில் துரையின் உணவை வைக்க, அவர் சாப்பிட்டுக்கொண்டே ரேஞ்சைப் பற்றிப் பேசி அப்பையா மனதில் கத்துக்குட்டி என்ற எண்ணம் படும்படி செய்துவிட்டார்.
“காட்டைப் பார்த்துவிட்டே போகலாம்” என்று துரை குதிரைமேல் ஏறிக்கொண்டார்.
ராமராவையும் கூட வரும்படி அழைக்க, “நாம் இருவரும் மட்டும் போகலாம்” என்று துரை தடுத்தால் அப்பையா என்ன செய்ய முடியும்?
எட்டு மணிக்குப் புறப்பட்டவர்கள் சாயங்காலம் நாலு மணி வரை என்னதான் செய்தார்களோ? வரும்பொழுது துரையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“இரவில் நான் கணக்கைச் ‘செக்’ செய்துகொள்வேன். நீர் அனுப்பிவைத்தால் போதும். இம்மாதிரிக் கணக்குப் புத்தகம் இருந்தால் என்னிடம் அதிக நாள் வேலை பார்க்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே கூடாரத்திற்குள் சென்றுவிட்டார்.
இந்த ஸ்டேதம் ‘அப்பாவி’ அல்ல என்று தெரிவித்துக்கொண்டாலும் தன் கையில் துருப்பு இருக்கும்வரையில் – ‘பிளான்’ போட்ட விருந்து – கடைப்பிடி தனக்குத்தான் என்று நம்பினார்.
“பாத் ரெடி ஸார்” என்றான் பாய்.
6
ஸ்டேதம் குளித்துவிட்டு அதிகக் களைப்பாக இருந்ததினால் ஒரு ‘பெக்’ (peg) பிராந்தி சாப்பிட்டுவிட்டு, தனக்குக் கடைசியாக வந்த காதல் கடிதத்தை எடுத்துக்கொண்டு, ஒரு பெரிய சுருட்டைப் பற்ற வைத்த வண்ணம், அவருடைய நாய் முன்பு ஓட, உலாவப் புறப்பட்டார். இது அவருடைய பழக்கம்.
நினைவுகள் பலப் பலவாக ஓடின. வெகு தூரம் நடந்துவிட்டால் வெளி. அதில் ஒரு சண்பக மரம் கீழ்த்திசையில் இருக்கும் பள்ளத்தாக்கை நோக்கி இருந்தது.
மேட்டில் ஏறி, ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டு, கடிதத்தை மறுபடியும் படித்து உள்ளத்தில் பொங்கும் நினைவுகளில் திளைத்துக் கொண்டிருந்தார்.
சற்று இருட்டவாரம்பித்தது. எழுத்துக்கள் தெரியவில்லை.
அதோ அந்தக் கீழ்த்திசையில் பூரண சந்திரன். அப்படியே கவனித்து மெய்மறந்தார்.
நாய் மெதுவாக, பரிதாபமாக, ஊளையிட்டுக்கொண்டு அவர் பக்கத்தில் ஒண்டியது. நேரமாகிவிட்டது. எழுந்தார். அந்தச் சண்பக மரத்தடியிலே என்ன? காதலி லில்லி கார்ட்டர்! எப்படி வரமுடியும்?
அவள்தான் விஷமக் குட்டியாச்சே!
7
வெள்ளுடை தரித்துச் சிரித்துக்கொண்டே கைகளை அசைக்கிறாள். முகம் மட்டும் சற்று வெளிறி இருக்கிறது.
கைகளை விரித்தவண்ணம். ‘டார்லிங் லில்லி’ என்று சொல்லிக்கொண்டு அவளை ஆரத்தழுவப் பாய்ந்து ஓடினார்.
யாராவது வெறும் வெளியை, நிலாக் கற்றையைத் தழுவ முடியுமா?
வேர்தான் தடுக்கிற்று.
‘என்ன முட்டாள்தனம், அந்த பிராந்திதான்’ என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்.
நாய் கிளைகளின் ஊடே பாய்ந்த நிலவொளியைப் பார்த்துக் குரைத்தது.
காற்று எங்கிருந்தோ அசைந்தது. சண்பகம் தனது கனவுகளைச் சொரிந்தது.
ஸ்டேதம் கூடாரத்திற்கு வந்தபொழுது மணி எட்டிருக்கும்.
“டின்னர் ரெடி சார்” என்றான் பாய்.
8
மேஜையில் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிளேட்டில் ஒரு ‘கேபிள்’ (Cable).
நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சாவகாசமாய், அதை எடுத்துப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார்.
“ஐயோ!”
நெஞ்சில் இரும்புச் சம்மட்டியைக் கொண்டு அடித்ததுபோல் மேஜை, கூடாரம் எல்லாம் சுழலுகின்றன.
நிஜமா?
நடுங்கிக்கொண்டே திரும்ப வாசிக்கிறார்.
மிஸ்.லில்லி கார்ட்டர் நேற்று சாயங்காலம், பிக்காடில்லி மூலையில் மோட்டாரால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டு, இன்று காலை உயிர்துறந்தாள். அவள் வேண்டுகோளின்படி தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எங்கள் மனமார்ந்த அனுதாபம்.
டாக்டர் பர்ன்!
“கண்ணா! லில்லி! உனக்கு யாருமில்லையே! அனாதையாகவா? ஐயோ!”
“டார்லிங்! டார்லிங்!”
கையிலிருந்த தந்தி, பிடித்த பிடியில் கசங்குகிறது.
9
“பாய், போ! நான் பார்த்துக்கொள்ளுகிறேன்.”
ஏக்கமும் பரிதாபமும் நிறைந்த உள்ளத்தின் துயரம் அந்தக் காட்டில் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தது.
அன்று இரவு முழுவதும் இருவர் தூங்கவில்லை.
பாட்டில்கள் கீழே உருண்டன. துயரம், அழியாத சோகம் கலந்த சிரிப்புகள்.
விடியற்காலத்திலேயே துரை கீழே இறங்கிவிட்டார்.
அப்பையாவுக்கு நோட்டுப்புத்தகத்தைப் பார்த்ததும், என்னை மிரட்டினாலும் ஸ்டேதம் கத்துக்குட்டிதான் என்பது உறுதியாயிற்று.
10
வில்லி ஸ்டேதத்தின் ராஜிநாமா இலாகாவில் சிறிது பரபரப்பு உண்டாக்கிற்று. அது வெகு சிறிது. உடனே ஓய்ந்தது. என்னென்னமோ வதந்திகள் உலவின. கர்னல் ரௌபாதத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
சாதாரண வில்லி ஸ்டேதம் மறுபடியும் உலாந்திக்கு வரும்பொழுது ஒரு பரபரப்புமில்லை. கூட அந்த பாய் வில்லியின் தாயின் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டான்.
சண்பகமேட்டில், அதே இடந்தான். ஒரு சிறு மரக்கட்டிடம். அதில் இருவர். ஒன்று – துயரத்தின் உருவான நடைப்பித்து, மற்றொன்று அதன் தாய், பணியாள்.
சண்பக மரத்தைச் சுற்றி தேக்கங்கன்றுகள் நடுவதில் வில்லிக்கு என்ன ஆசை!
சண்பகந்தான் லில்லியாம்; தேக்கங்கன்றுகள்தான் அவர்களின் காதலின் இலக்ஷியங்களாம்.
ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர். குவென்டலின், லில்லி, ஆலிவ் – என்னென்ன அழகான பெயர்கள்.
கொஞ்சம் காற்று வலுத்தால் ஸ்டேதத்திற்கு உயிர் புழுவாகத் துடிக்கும்.
11
எந்த நேரத்திலும் அதனுடன் கொஞ்சித் தழுவிப் பேசிக் கொண்டிருப்பதில் என்ன இன்பமோ?
அன்று வாயு சண்டனாகத் தலைவிரித்தாடுகிறான். மேகம் கவிந்த இடைவிடாத பெருந்தாரை – ஊழிக்கூத்து.
ஸ்டேதம் அந்த இருளில் சண்பக மரத்தின் இடையைக் கையில் பிடித்துக்கொண்டு தன் தேக்கங் குழந்தைகளுக்கு அங்கலாய்க்கிறார்.
“குவென்டலீன், லில்லி” என்ற துயரக் குரல்கள் காற்றில் அமிழ்ந்து நசிந்தன.
“ஐயோ!” என்ற துயரத்தின் ஓலம்.
பாய் ஓடிவந்து பார்க்கிறான். துரைக்கு மூச்சுப் பேச்சில்லை.
உள்ளே தூக்கிச் சென்று கிடத்திவிட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து பிராந்தியைத் தடவி சூடு உண்டாக்கினான்.
ஒன்றுமில்லை.
12
சற்று நேரம் ஒரு நூலிழை போல் மூச்சு வருகிறது. பயமில்லை.
காடனுக்கு ஐந்து ரூபாய்; ரௌபாதத்திற்கு ஒரு தந்தி.
“வருவதற்கு எத்தனை நாள் சார்?”
வந்த ரௌபாதம் திடுக்கிட்டார். அறிந்த இளைஞனுக்குப் பதில் மெலிந்த துயரம் படுக்கையில் கிடந்தது; ஒருவாறு அறிந்து கொண்டார்.
மறுநாள் பிணியாளியுடன் உதகமண்டல ஆஸ்பத்திரிக்குப் பிரயாணம். ஒவ்வொரு பர்லாங்கும் மரணத்துடன் போராட்டம்.
13
ஆஸ்பத்திரியில்…
ஸ்டேதத்தின் சாயை; துயரத்தின் வடிவம்.
நியுமோனியா. பிழைப்புக் கிடையாது; இறப்பு வரமாட்டேன் என்கின்றது.
ஒரு மாத காலம்.
அன்று ராத்திரி.
ஸ்டேதம், கர்னல் ரௌபாதத்தைப் பார்க்க வேண்டுமாம்.
இரவில் கிழவர் வருகிறார்.
ஸ்டேதம் புன்சிரிப்புடன், “முடிந்துவிடும்” என்கிறார்.
கிழவர் பேசாமல் அவன் கையைப் பிடித்து – உயிரை நிறுத்த முயற்சிக்கிறாரோ? அப்பொழுது போயர் வீரனின் கண்களில் இரண்டு துளி.
14
“எனக்கு ஒரு ஆசை.”
“உம்!” கிழவருக்குப் பேச முடியவில்லை.
“என்னை உலாந்திச் சண்பக மரத்தடியில் புதைக்க வேண்டும். எனது சொத்துக்கள், அது கொஞ்சம்தான், அவை அந்த என்… தேக்கங் குழந்தைகளுக்கு…”
சற்று நேரம் ஒரு லிகிதம் எழுதும் சப்தம்… ஸ்டேதமின் உயில்.
நடுங்கும் கைகள் கடைசிக் கையெழுத்தை இட்டன.
“லில்லி!”
அவ்வளவுதான்.
15
உலாந்தியில் மறுபடியும் பரபரப்பு.
சண்பக மேட்டில், சண்பகத்தடியில் ஒரு குழி, தனது காதலனை வரவேற்கிறது.
சற்று நேரத்தில் இரண்டு மோட்டார்கள்.
ஒன்றில் ஸ்டேதத்தின், என்ன? அதுதான்.
மற்றது அவனது நண்பர்கள், பரலோகத்திற்கு அனுப்பும் குரு.
‘ஸர்வீஸ்’ முடிந்தது.
குழியும் தன் காதலனை வரவேற்றது. இனிமேல்?
ரௌபாதம் திரும்புகிறார். ரேஞ்சர் அப்பையா, “அன்று காம்பில் குடிக்க ஆரம்பித்தார். அதன் கோளாறு. மலையில் செய்யலாமா?” என்றார்.
“அவனுடைய கனவை இழந்தான். காதலி இறந்தாள். அதுதான்” என்று சடக்கென்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அப்பையாவிற்குத் தன் துருப்பின் வேலை அல்ல என்று தெரிந்தது.
கொஞ்ச நேரத்தில்… காற்றும், தனிமையும்.
16
இரவு.
நல்ல பௌர்ணமி.
சண்பகக் கிளைகளின் ஊடே நிலாக் கற்றை சவக்குழியின் பேரில் விழுகிறது.
தூரத்திலே அந்த நாயின் ஏக்கமான ஊளை.
சிறிய காற்று.
சண்பகம் தனது கனவுகளைச் சொரிகிறது.
இதனால்தான் அந்தப் பள்ளத்தாக்கிற்கு ஸ்டேதம் வாலி (பள்ளத்தாக்கு) என்று பெயர்.
முற்றும்
ஊழியன், 28-09-1934