="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

63 திறந்த ஜன்னல்

திறந்த ஜன்னல்

1

சாயங்காலம்.

சிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி செய்ய ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன்.

கூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனினும் என் அதிர்ஷ்டம் ஒரு மேஜை காலியாயிருந்தது.

போய் உட்கார்ந்தேன்.

“என்ன ஸார் வேண்டும்?”

ஏதோ வேண்டியதைச் சொல்லிவிட்டு, என்னத்தையோ பற்றி யோசித்துக்கொண்டு இருந்துவிட்டேன். அவன் வைத்துவிட்டுப் போனதையும் கவனிக்கவில்லை.

மறுபடியும், “என்ன ஸார் வேண்டும்?” என்று குரல் கேட்டது.

“முன்பே சொல்லியாகிவிட்டதே!” என்று நினைத்துத் திரும்பினேன்.

அவன் கேட்டது என்னையல்ல; என் எதிரிலிருந்த ஒருவரை. மெலிந்த தேகம்; கிழிந்த சட்டை, ஆனால் அழுக்கில்லை; கிழிசல் தைக்கப் பட்டிருந்தது. இரண்டு மூன்று வாரம் கத்திபடாத முகம்; சோர்வடைந்திருந்தாலும் கண்களில் ஒருவிதப் பிரகாசம் தென்பட்டது.

2

கீழே குனிந்து, மேஜைக்கு அடியிலிருந்த கைகளைக் கவனித்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் (அது வெகு மெதுவாக வந்தது) “அரை கப் காப்பி!” என்றார்.

முகத்தில் ‘பசி’ என்பது ஸ்பஷ்டமாக எழுதியிருந்தது. கையில் சில்லறையில்லை போலும்! இதனால்தான் கீழே கவனித்துப் பார்த்துக் கொண்டார். பார்ப்பானேன்? நினைவில் இல்லாமலா போய்விடும்? யாரோ என்னைப்போல் இலக்கிய உலகத்தில் வேலை செய்பவர் என்ற முடிவிற்கு வந்தேன். அவர்களுக்குத்தானே இந்தக் கதி வரும்! சகோதரத் தொழிலாளி என்ற பாசம் ஏற்பட்டது. உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை. தர்ம உணர்ச்சியாலல்ல, சகோதர பாசத்தால்.

எப்படி ஆரம்பிப்பது? கோபித்துக்கொள்வாரோ என்னவோ, பக்குவமாகச் சொல்லிப் பார்த்தால் என்ன குடிமுழுகிப் போகிறது?

“தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே!” என்று மனமறிந்து பொய் கூறினேன்.

“பார்த்திருக்க முடியாது!”

இது தடையுத்தரவு மாதிரி இருந்தது. இருந்தாலும் இன்னொரு தடவை.

3

“எனக்குப் பசி பிராணன் போகிறதே! தங்களுக்கு உடம்பிற்கு என்ன?” என்று காப்பிக் கோப்பையைக் கூர்ந்து நோக்கினேன்.

“பசியாமல் ஏன் ஓட்டலுக்கு வரவேண்டும்?” என்றார்.

“மறந்து போயிருக்கும்; அதனாலென்ன? நீங்கள் இன்று என்னுடைய விருந்தினராக இருக்க வேண்டும், இன்று என் பிறந்த நாள்!” என்றேன்.

“காசைக் கண்டபடி இறைக்காதேயும்!” என்றார்.

“பாதகமில்லை. தயவுசெய்து…”
“சரி, உமதிஷ்டம்” என்றார். இருவரும் குதூகலமாகச் சாப்பிட்டோ ம். குதூகலம் என்னுடையது. அவர் மௌனமாகத்தான் சாப்பிட்டார். இடையிலே இரண்டொரு வார்த்தை சிக்கனமாக இருப்பதைப் பற்றி. வெகு கூச்சமுள்ள பிராணி போலும்! இந்த ரகத்தை எனக்கு நன்றாகத் தெரியும். இலக்கியத்தில் இது எதிர்பார்க்கக் கூடிய விஷயமே. மிகவும் கஷ்டப்பட்டவர். அதனால்தான் சிக்கனத்தில் அதிகக் கருத்து!

ஒரு குழந்தையைப் போஷிப்பதைப் போல் மனம் கோணாமல் நாஸுக்காகச் செய்தேன். ‘பில்’ ஏறக்குறைய ஒரு ரூபாயை எட்டிவிட்டது.

4

எழுந்திருந்தோம். மௌனமாக அவர் முன் சென்றார்.

பணத்தைக் கொடுக்கச் சில நிமிஷம் தாமதித்தேன்.

நேராக வெளியே சென்று ஒரு பளபளப்பான ‘ஹில்மன்’ காரில் கூசாமல் ஏறி உட்கார்ந்தார் அந்த மனுஷர்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பைத்தியமோ என்ற சந்தேகம்.

மோட்டார் டிரைவர் இயற்கையான சாவதானத்துடன் காரை விட்டுக்கொண்டு போய்விட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

‘ஹோட்டல் காஷியர்’ என்னமோ தெரிந்தவர் போல் விழுந்து விழுந்து சிரித்தார்.

நான் விழித்தேன்.

“அவன் பெரிய லக்ஷாதிபதி, பெரிய கருமி, கஞ்சன். யார் தலையையும் தடவுவதில் – இந்தச் சாப்பாட்டு விஷயத்தில்தான் – ஒரு பைத்தியம். இன்று நீர் அகப்பட்டுக்கொண்டீர் போலிருக்கிறது!” என்றார்.

நானும் சிரித்தேன். எதற்கு என்று எனக்குத் தெரியாது.

“தர்மம் செய்வதில் எவ்வளவு கஷ்டம் உண்டு பார்த்தீரா?” என்றார்.

“நான் தர்மம் செய்யவில்லையே!” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

முற்றும்

மணிக்கொடி, 12-08-1934

License

திறந்த ஜன்னல் Copyright © by manarkeni. All Rights Reserved.