="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

48 சித்தம் போக்கு

சித்தம் போக்கு

1

அன்று ஆபீஸிலிருந்து வரும்பொழுது ரொம்பக் களைப்பு.

அச்சு யந்திரத்தின் கவந்த உபாசனைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

வெளியிலே வந்தேன்.

தெருவிலே கூட்டம்.

குப்பைத் தொட்டியில் ஒரு இறந்த குழந்தை.

எந்தத் தாயோ? அவள் யாராயிருந்தாலென்ன? சமூக ஒப்பந்தத்திற்குப் பயந்து செய்துவிட்டாள். அதற்கென்ன? கூடியிருந்த பெண்கள் அந்தக் குற்றவாளியை – அவள் அப்படித்தான்; சீர்திருத்தவாதிகள் என்ன கத்தினாலும் தானென்ன? – அடிவயிற்றிலிருந்துதான் திட்டினார்கள். அவர்கள் உணர்ச்சியும் சரிதான். அவர்களுக்குத்தான் தெரியும் அந்த சிருஷ்டியின் உத்ஸாகம், மேதை, துன்பத்தின் இன்பம்.

அவள் உணர்ச்சிகள்? அதற்கென்ன?

2

அங்கிருந்து திரும்பினேன். ஒரு பால்காரன் ஒரு வீட்டின் முன்பு கறந்து கொண்டிருக்கிறான். அவன் வழி வெகு சுருக்கமானது; லேசானது.

அவனுக்கு அந்தப் பசுவின் கன்றைப் பற்றிக் கவலையில்லை.

பசுவின் பாலைப் பெற்றுக்கொள்வதற்கு அந்தப் பசுவின் கன்று இறந்து போனாலென்ன? அதன் தோல் எங்கு ஓடிப்போய் விடுகிறது? அதைப் பசுவின் காலில் கட்டிவைத்துவிட்டால் பசு சாந்தியடைந்து விடுகிறது. பசுவும் உள்ளன்புடன் பால் கொடுக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்?

செத்த குழந்தை; தோல் கன்றுக்குட்டி!

போதும்! போதும்!

நாம் கெட்டிக்காரர்கள்தாம்.

எனக்குக் கடற்கரைக்குப் போகவேண்டும் என்ற ஆசை.

மனிதனின் வெற்றியைக் கவனித்தது போதாதா?

கடற்கரைக்குச் சென்றேன்.

லேசான தென்றல், டாக்கா மஸ்லினை உடுத்திய மாதிரி மேலே தவழ்ந்தது. நல்ல காலமாக ரேடியோ முடிந்துவிட்டது.

கடற்கரையில் சற்று தூரத்தில் ஒரு பெண்ணின் கீதம். சங்கரா பரணம்; இன்பந்தான். நின்று கேட்டால் குடி முழுகிப்போகுமாமே, ஹிந்து சமூகத்திற்கு.

3

எனக்குத் தகுந்தவள் அந்தக் கடல்தான்.

அவளைப் பார்த்தால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் – உற்றுப் பார்த்தாலும்.

வானத்திலே சந்திரன். அவனைப் பற்றி அக்கறையில்லை. அன்று அவன் ஆதிக்கம் அதிகமில்லை. சுற்றி மேகப்படலம்; மங்கிய ஒளி.

நீலக்கடல்; அதற்குப் பெயர் அன்றுதான் தெரிந்தது. நீலக்கடல்!

நீலமா? அதிலே உயிர் ததும்பிக்கொண்டல்லவா இருந்தது!

தூரத்திலே – அடிவானத்தில் அல்ல – அதுவும் கடலும் சந்திக்கும் இடத்தில் – அவள் குறுநகை.

அலைகள் மேலெழுந்து வெள்ளை வழிகாட்டி கண்சிமிட்டலுடன் விழுந்து மறைந்தன.

அதில் என்ன பொருள்? என் மனதில் ஒரு குதூகலம்; காரணமில்லாத துக்கத்தினால். அதன் பொருள் என்ன?

4

என்னடீ! ஏன் அகண்ட சிருஷ்டியின் மர்மமாக – மந்திரமாக – இருக்கிறாய்? உன்னுடைய குறுநகையின் மர்மமென்ன?

நீ யார்?

ஏன் என் மனதில் இந்த துக்கம்? எனது துயரம்…?

கண்சிமிட்டி மறைகிறாயே, யாருக்கு? அதன் பொருள் என்ன?

வரவா? அடியே! உன் மனந்தான் என்ன?

பொருள் விளங்கவில்லையே! நீ யார்?

ஆம்; அறிந்து கொண்டேன்.

நீதான் என் அரசி!

என் கா…த…லி! மனித ஹ்ருதயத்தின் துக்கத்திலே பிறக்கும் கவிதை என்னும் என் தேவி!

முற்றும்

மணிக்கொடி, 02-09-1934

License

சித்தம் போக்கு Copyright © by manarkeni. All Rights Reserved.