11 இலக்கிய மம்ம நாயனார் புராணம்
இலக்கிய மம்ம நாயனார் புராணம்
திரு அவதாரப் படலம்
குனா – சுனா என்ற குகலூர் சுபலெக்ஷண சாஸ்திரிகள் என்ற, காண்டமிருகம் என்ற, ஞானப்பிரியன் என்ற, கட்டத் தொடப்பம் என்ற, கருவாடு என்ற, காரிய ஆசான் என்ற, கருவூரார் என்ற, சாளிக்கிராமம் என்ற, சம்புரோக்ஷணம் என்ற, சீமந்தம் என்ற, சீதாலெஷ்மி என்ற, சுகர் என்ற, சூறாவளி என்ற, டப்பி என்ற, டமாரம் என்ற, டுமீல் என்ற, நாபி என்ற, ஞாபகம் என்ற, ஞி என்ற, ஙப்போல் என்ற, நரி விருத்திரையார் என்ற, நீலி வசீகரம் என்ற* இலக்கிய மம்மா, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழைய பண்பாடும், பிறர் பர்ஸ் எமதே என்ற பெருநோக்கும் நம் சொல் என்றும் பொய்யே என்ற இலட்சியமும் பெற்ற கருவிலே திருவுடைய பெரியார்.
(* மெய் பதினெட்டுடன் மேலேறிய உயிர் அத்தனையும் சேர்ந்து எத்தனை எழுத்துக்கள் தமிழில் உண்டோ அத்தனையும் ஒன்றேனும் தன்னை விட்டுவிட்டாரே என மனக்குறைபடாமல் சந்தோஷிக்கச் செய்யும் புனைப்பெயர் சாகரமாய் விளங்கும் நமது இலக்கிய மம்மாவின் புனைபெயர் பட்டியல் அனைத்தும் அறிய விரும்புகிறவர்கள் அரையணா ஸ்டாம்பு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். சொற்பப் பிரதிகளே கைவசம் என்பதை வாசகர்கள் உய்த்துணர்க.)
அவர் பிறந்த ஊர் அனாமத்துப்பட்டி என்பது. அந்தப் பட்டியிலே ஓர் ஆயிரக்கால் மண்டபம் உண்டு. அந்த ஆயிரக்கால் மண்டபத்தில் ஆயிரம் வௌவால்களும் இலக்கிய மம்மாவின் இகலோக பெற்றோர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாற்பதாட்டைப் பிராயத்தைக் கடந்துவிட்டார்கள். அதாவது அந்த அம்மாவுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது. அப்பனார் கவலைக்கிடமாயினர். இவர் செயலால் அல்லாமல், இறைவன் திருவருளால் ஒரு வௌவாலானது ஓர் இரவு திவ்ய கலியாண குணங்கள் சகலமும் பொருந்திய ஒரு யௌவனனாக சொப்பனத்தில் தோன்றி, “யாம் நும் திருவுதரத்திலே குடிபுகுந்து, உலகத்தை உய்விப்பான் வேண்டி இலக்கிய மம்மாவாக உதிக்கப் போகிறோம்” என்று அருளி மறைந்தார்.
பனித்துளிகள் மறைவதுபோலப் பத்து மாதங்கள் கழிந்தன; ஒரு நாள் சகல ராசிகளும் சகல கிரக மண்டலங்களும் ஒழுங்காக முறை பிசகாமல் நிலைநின்ற காலத்திலே இரவோ பகலோ என்று மயங்கு கருக்கலிலே ஆயிரக்கால் மண்டபத்து ஆயிரம் வௌவால்கள் இன்னிசையோடு இலக்கிய மம்ம நாயனார் இப்பூவுலகிலே திரு அவதாரம் செய்தார். ஊரார் உவப்பைத் தாங்க முடியாத உத்தமியும் உயர்குலத்துக் கணவனாரும் அனாமத்துப்பட்டியைவிட்டு அகலச் சென்றனர்.
தில்லை ஏகிய படலம்
புவிப்பொறை நீங்குவான் பொருட்டு புன்முறுவல் பூத்துக் குறுநடை பயின்று எளிர்க்கரம் தூக்கி மயிர்க்கூச்செறிய, பேசறிய பெரும் பேச்சுக்கள் பயின்று வளர்ந்து படித்து மேம்பாடுற்று, அறிவுக்கறிவாய்ப் பொய்யில் புலஸ்தியென மெய்யறியா மெய்யப்பனாகிப் பெற்றோர் தொடர சேர சோழ பாண்டிய முன்னாடுடைய முப்பதிகளையும் தரிசித்து திரை மறைவில் தன் பொய்யின் புலமையை விளக்கும், அருட்கடவுள் அமர்ந்த தில்லைநகர் நோக்கினர் இலக்கிய மம்ம நாயனார்.
திருமணப் படலம்
கோளரியைப் போல் இருள் கோளகற்றும் சூரிய பகவான் வானரங்கிலே நடம்புரிய, பெற்றோர் பின் தொடர, தில்லைவாழ் அந்தணருக்கும் அடியார்க்கும் அடியேன் என்ற அக்கிரகாரத்தின் வழியே பவனி வருவாராயினர்.
தில்லை முதுகுடி அந்தணாளர் ஒருவரும் அறிவுச் சீலருமான பிரஜாபத்திய கோத்திரம், சும்பண்ண சூத்ர, அபான பிரணவசர்மன் புதல்வனாம் முஷ்ணமூர்த்தி, இலக்கிய மம்ம நாயனாரைக் கண்டவுடன் களிகூர்ந்து மெய்சிலிர்க்க, கண்ணீர் மல்கி இருகரம் கூப்பி தெரு அவதாரம் செய்து, அவசரத்தில் அப்பிரதக்ஷணமாய் வந்து அடி பணிந்து, “தேவரீர்! என் உயிருக்குயிராய் யானே பெற்றெடுத்த அத்தனை லக்ஷணமும் அங்கனே பொருந்திய அம்மி நாச்சியாரைத் திருமணம் செய்து எம்மை உய்விக்க வேண்டுவான் பணிகின்றேன்” என அஞ்சலி செய்து நிற்பாராயினர்.
இலக்கிய மம்ம நாயனார் திருக்கண்சாத்தி, “யாம் அவ்வாறே செய்வோம்” என்று திருவீதியைப் புறக்கணித்துத் திருத்திண்ணைக் குறட்டேறி ஆணியிட்ட அஞ்சறைப் பெட்டி மாதிரி அமர்வாராயினர். உடன் வந்த பெற்றோரும் உகப்பின் மிகுதியால் உடன் தொடர்ந்து உயர் திண்ணையேறி உட்கார்ந்திருந்தனர்.
இலக்கிய மம்ம நாயனாரின் திருமண மகோற்சவத்தை எம்போல்வர் எடுத்து ஓதுதல் எளிதோ எனினும் ‘ஆசையுற்று அறையலுற்றேன். காசில் கொற்றத்து* (* காசில்லாத அரசாட்சி) கவின்பலர் நாயனார் விழாவை.’ உதயாதி சூரியன் உச்சிப் போதை எட்டுதற்குச் சற்று முன்பாக உதயாதி நாழிகையிலே அருகில் நீத்து, அழுக்குடை ஆடை புனைந்து ஆயிஅம் வௌவால்கள் நறுமணம் கமழ பல்லின் சீதம் பத்துக் காதம் பரிமளிக்க சொல்லெடுக்கு முன்னே சுற்றியிருந்தோர் வெகுள, ஆகாச கங்கையை நினைத்து ஆறு தடவை வலம் வந்து உடல் தேய்த்து நீராடி புத்தாடை புனைந்த பலன் இதற்குள் அடங்கிற்றே உலகத்தீர் அறியீரோ என அருள் மொழி புகன்று மணப்பந்தல் நோக்கி மத்தகஜம் போலவும் சித்தசன் தானேயெனவும் இறுமாந்து இருவாரத் தாடியை இனிது கோதி கண்ணழுக்கை வலச் சுண்டுவிரலால் அப்படியே எடுத்து நெற்றியிலே ஜவ்வாதெனயிட்டு உலகத்தீரே எம்மைக் கண்டு உய்மின் உய்மின் என்று உபதேசித்தவண்ணம் மணவறையேறி மாதினியாள் பக்கம் மன்னவன் போல் அமர்ந்தார்.
அம்மி நாச்சியாரும் அருகிலிருந்த அழகனை நோக்கினாள். அவனும் நோக்கினான். இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார். இனித் திருமாங்கல்யம் என்ற திருபுச் சொல் எதற்கு என்ற உசா எழுப்பி உடனிருந்த மங்கையை இடம்பெயரச்செய்து கடிதகன்று கட்டிலேறி, “அடிப்பெண்ணே! என் மனதுக்கினிய கண்ணே! என்னிடம் நீ எதிர்பார்ப்பது இல்லை. உன்னிடம் ஊரார் (பொதுவாக) எதிர்பார்ப்பதுண்டோ ” யென அரும்பு புன்னகையை அருளி ஆவலாய் நின்றார்.
அம்மி நாச்சியாரும் அரும்கொங்கையை அரவணித்து, “ஆருயிர்த் துரையே! அவதார புருடா! ஆயிர வௌவால்களின் அநந்த நேத்ர தீக்ஷண்ய சுயம்புவே! நீவீர் இலக்கியம் தளிர்க்க இடக்கையில் புத்தகமும் வலக்கையில் பேனாவும் ஏந்தி சிருட்டித் தொழில் புரிக. யானோ அத்தினிப் பெண் ஆகையினாலே அடியாளுக்குத் தங்கள் இடர்ப்பாடு இன்னல் விளைவிப்பதன்று” என இனிது மொழிந்து இலக்கிய மம்ம நாயனாரை இனிது தேற்றினாள்.
கடைத்தேறு படலம்
இனிமேல் இலக்கிய சிருட்டிகள் புனைவான்வேண்டி இவ்வுலகில் அவதரித்த எம்மிறைவன் எம்போலியனாய், எம்மில் பெரியனாய், எம்மில் சிறியனாய், ஏகக் கலைஞனாய் ஏமகூட நகரத்தை வந்தடைந்தார்.
அங்காடிகளை வலம் வந்தார். அந்தணாளர்தம் தெருக் கண்டார். சீர்பெறு சிரேட்டிகள் மனை கண்டார். மனம் கொண்டார். இலக்கியம் பிறக்க யென அருள்மொழி புகன்றார். ஆயிர ஆயிரமாகப் பக்த கோடிகள் குழுமினர், கொண்டாடினர். மண்டலத்தில் இவனைப் போல் உண்டோ என்றனர். கண்டெடுத்த தவப்பயனே என்றனர். பொய்யடிமைப் புலவனே என்றனர். பூவுலகறியாப் பாடைகள் அறியும் புனிதனே என்றனர்.
ஏமகூடம் சேமகூடம் ஆகும் என்று செம்மாந்திருந்தார். இன்னோரன்ன பிறரும் இவருக்குத் திருமேனி திருநீழல் அடைவான் வேண்டி அவிசார சதுக்கத்திலே அமங்கல வீதியிலே காரையும் கூரையும் சேர்ந்த கவின்பெறும் மாளிகை ஒன்றை வரித்து வாடகை இருத்து வனிதையும் வார்த்தையின் மன்னவனும் வாழ்வு நடத்துமாறு சங்கல்பித்தனர்.
இலக்கிய சிருட்டியிலே இடையறா மோகம் கொண்ட இலக்கிய மம்ம நாயனார், “யான் பெறு இன்பம் பெறுக இவ்வையகம் என”க் கடைவாசல் திறந்து கருத்து அழுமுனையிலே இருத்தி நித்திய தரித்திரம் பண்ணுவாராயினர். அம்மி நாச்சியாரும் அருள்மொழி தேவன் மனமறிந்து மனம் கோணாது வையம் இன்புறுவான் வேண்டி இல்வாழ்க்கையெனும் இயல்புடையான் சகடத்தை வந்தார், சென்றார், வரவிருந்தார் அனைவரும் அழைத்து அடவு செய்து அனுப்பி வைத்தார்.
உலகம் இலக்கியம் பெற்றது இன்புற்றது என்னே! என்னே!!
அரையான் சீற்றப் படலம்
ஏமகூட நகரத்திலே இறுமாந்து வீற்றிருந்து இலக்கிய சேவை புரியும் மம்ம நாயனார் மாண்புகள் கண்டு மனம் பொறாது கொதித்துக் கோபங்கொண்டு குலோத்துங்க பாண்டிய சோழன் கிங்கிலியர் பலரைச் சங்கிலி எடுத்துச் சென்று மங்கிலியமணிந்த மனையாட்டியோடு இழுத்து வருமாறு கடாவினார்.
‘யாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’ என்ற பொன் மொழியின் அவத்தன்மை உலகம் அறிந்து உய்யுமாறு மம்ம நாயனார் இடியேறுபட்ட பிடிசோறு போலவும், வடிவாய் மழுங்கி நடமாடி நின்று, திடமாகு மங்கை குடமாகு கொங்கை மடிசஞ்சி போலத் தூங்கும் நிலையறிந்து, அரையனே போற்றி; அமலனே போற்றி, அவனி முழுவதும் ஆண்ட அருள் வள்ளலே போற்றியென பா இசைத்து அஞ்சலி செய்து கஞ்சுகம் கட்டிய காவலர் நெஞ்சம் தெளிவுற ஆடிப்பா அஞ்சலி செய்து நின்றார்.
மங்கையொரு பாகன் திருவருளாலும், மானிலக் கிழத்தியின் தவப்பயனாலும் இலக்கியம் செய்த பேரறத்தாலும் மம்ம நாயனார் மண்டை கபாலமாகாமல் தப்பிற்று.
வைசும்ப நகரேகு படலம்
ஏம கூடத்திலே இனி ஒரு கணமும் தங்கோம் எனச் சூளுரை கூவி மங்கையை அழைத்துச் சங்கையை விடுத்து அங்கையை வீசி வைசும்ப நகர் என்ற பல்லவ ராஜ்யத்தின் தொல்லைத் தலைநகருக்கு வந்திருந்தார்.
கடாரத்திலும் சாவகத்திலும் பௌத்த பீடகம் ஒன்றைத் தேடிச் சென்ற மருள் ஒளி சிரேட்டி என்பார் தம் வாழ்நாள் முழுதும் காணாத பீடகத்தைக் கண்டு தெளிவதிலே கழிந்து போயிற்றே என்று அவலமுற்று உள்ளொழிந்து தெருவீதி உலாப் போந்த சமயத்தில் மம்ம நாயனாரின் திவ்ய தரிசனம் கண்டு அஞ்சலி செய்து “பீடகப் பெருமை பீடுற்றறிந்த பெம்மானே! பிறவிக் குகையில் உட்கார்ந்த சோதியே சுடரே! வைசும்ப நகரத்தின் வைகறையே நான் கடைத்தேறத்திருக்கண் சாத்த வேண்டும்” எனப் புகன்று நின்றார்.
“அப்படியே செய்வோம் அமுதுபடி நல்க” யென மம்ம நாயனார் ஆக்ஞாபிக்கச் சிரேட்டியும் அரிசி நீக்கி உமி அனுப்பி அருள்மொழி தேவன் பசியாற வேண்டுமென பணிந்து நின்றான்.
அன்னாரும் உமியை உடன்போன்ற மாட்டுக்காரனுக்கு விற்று அவன் இருந்த செல்லாச் சல்லி கொண்டு குழல் பந்தனம் செய்து கூறும் அருள் கொழிக்கும் கொக்கிற்கு பஸ்பத்தைக் குழலில் இட்டு உள்ளங்கை கொண்டு கவிழ்த்து பிரமனின் நெற்றியிலே பிறந்தவராதலாலே உள்ளங்கை அக்கினியிலே குழல் பஸ்பத்தைக் குளிர்வித்து புகை எழுப்பி வாசியைக் கட்டி முஷ்டியைத் தமது இல்லா இடத்தில் அமைத்து யோக நிஷ்டையில் அமர்ந்தார்.
சிரேட்டியும் நித்தம் ஒருமுறை உத்தமரை வலம் வந்து அபான பிரணவத்தின் அரிய மகிமையை உணர்ந்து உலகிலே பல கோடி காலம் வாழ்வானாயினன்.
வைசும்ப நகரமும் வகை வகையாம் திறந்தெளிக்கும் தேவாதி தேவன் திருக்கழல் வணங்கி தீட்சை பெற்று தேவியின் அருளும் பெற்று ஆனந்தம் பெற்று வாழ்வும் சீலமும் சிறக்க நிலைநின்று நீடு வாழ்வாராயினர்.
இது நாரதன் வைசம்பாயனருக்குச் சொல்ல, வைசம்பாயனர் வாமனுக்குச் சொல்ல, வாமனன் வேகவதிக் கரையிலே தவம் செய்கின்ற கொக்குக்குச் சொல்ல, கொக்கு வைசும்ப நகரத்திலே மம்ம நாயனார் மணிக்கழல் வணங்க, ஒரு கூறுகத்திக் கிளையிலே குற்றிருந்து குவலயம் கேட்க மம்ம நாயனாரின் மாண்புகள் விரித்து நிற்கையிலே அன்னாரின் அமிசங்களிலே ஒன்றான சூறாவளி நாயனான் என்ற நாயேன் கேட்டிருந்த நாட்டம் கோணாமல் வீட்டில் இவர்ந்து தீட்டி வைத்தேன். சுபமஸ்து.
இதை பாடியோர், கேட்டோர், கேட்டோரைக் கண்டோர், கண்டோரைப் பார்த்தோர் யாவரும் மம்ம நாயனார் அருள் பெற்று நீடூழி நிலவுலகம் சிரிக்க வாழ்வார்.
மங்களம்
சித்தி, தொகுப்பு – 1955