74 நியாயந்தான்
நியாயந்தான்
1
வடலூர் குமாரு பிள்ளை கொழும்புக்குப் போவதென்று ரெயிலேறிய பொழுது ஐ.பி. கொடுத்துவிட்டு மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டுதான் புறப்பட்டார். தகப்பனாரது திடீர் மரணத்தால் மேல் விழுந்து அமுக்கிய கடன்காரர்களுக்குப் புகல் சொல்ல அந்த ஒரு வழிதான் தெரிந்தது. மேலும் அவர் மற்றவர்களைப்போல் ‘ஒதுக்கிவைத்து’க் கொண்டு கைகளை விரிக்கவில்லை. அப்பொழுது அவருக்கு அநுபவம் போதாது. பள்ளிக்கூடம் என்ற சொப்பன உலகத்தின் வாசகங்களை உண்மையாகவே நம்பி மோசம் போனார். உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுக்கவும், பெரியவர்கள் பிரசங்க மேடையில் வாசாமகோசரமாகப் பேசவும் முன்னோர்கள் எழுதி வைத்துப் போனதை உபயோகித்துப் பார்த்தார். கை சுட்டது. தூத்துக்குடி போகும் வண்டியின் மூன்றாவது வகுப்பில் உட்கார்ந்த பின்புதான் சுமையை இறக்கி வைத்த ஆசுவாசம் ஏற்பட்டது.
கொழும்பிலும் அவரது லக்ஷ்யம் பிரமாதப்பட்டுப் போகவில்லை. வர்த்தக உலகைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை ஒன்றும் அவருக்கு இல்லை. ஏதாவது வெங்காயக் கிட்டங்கியில், சொன்னதைச் செய்துவிட்டு நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்பதே நோக்கம். தாமோ தனிக்கட்டை! ஊரில் உள்ள தாய்க்கு மாசம் மூன்று ரூபாய் அனுப்ப வழி கிடைத்தால் போதும் என்பதே அவரது பரிபூரணமான ஆசை.
கொழும்புக்குப் போவதென்றால் மேல்துண்டுடன், அதையே துணையாக நம்பிச் செல்கிறவர்களுக்கு உபவாச மகிமைதான் ஸ்டேஷனில் காத்திருக்கும். அது பிள்ளையவர்களுக்குத் தெரியாது. டிக்கட்டுக்குப் பணம்; அதற்கு மேல் ஒருவேளைச் சாப்பாட்டுக்குச் சில்லறை; இதுதான் அவரது ஆஸ்தி. வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கொழும்புக்கு வருகிறவர்கள், மேல்துண்டையே மூலதனமாகவும் ஜாமீன் பேர்வழியாகவும் கொண்டு வருகிறவர்களிடம் வசூல் பட்டியலையோ, ஸ்டோ ர் அறையின் சாவியையோ ஒப்படைத்து விடுவார்களா? அவ்வளவு வேண்டாம் – நட்ட நடுப் பகலில் கடைக்குள் ஏறி அவர்கள் கண் முன்பே நடமாட விடுவார்களா?
வெள்ளைக்காரர் ‘ஸ்லேவ் ஐலண்ட்’ என்ற யதார்த்தமான பெயரைக் கொடுத்திருக்கும் சரகத்தில் வசிக்கும் கிட்டங்கிப் பிள்ளைமார்களும் முதலாளிமார்களும் பிள்ளையவர்களை நம்பாததில் அதிசயமில்லை. அவர் அந்தப் பக்கத்தில் ஏறியிறங்காத கடை பாக்கியில்லை; ஜனசங்கியைக் கணக்கு உத்தியோகஸ்தரின் நுணுக்கத்துடன் கடை க்ஷேத்திர யாத்திரை நடைபெற்றது. இதற்குள் மூன்று நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. அன்னிய நாட்டான் பிச்சை எடுக்க ஆரம்பித்தால் இங்கிலாந்து முதலிய இடங்களில் தாய்நாடு திரும்புவதற்காவது வழியுண்டு. பிடித்துக் கப்பலேற்றி விடுவார்கள். கொழும்புச் சட்டங்கள் எப்படியோ? வடலூர் குமாரு பிள்ளையின் மனம் பிச்சை எடுக்க ஒப்பவில்லை. அதனால்தான் அப்படிப்பட்ட சட்டம் அங்கிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வழியில்லாமல் போய்விட்டது.
வர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம். இந்த உண்மையைப் பிரிட்டிஷ்காரர் மட்டிலும் தெரிந்துகொண்டிருக்கவில்லை; கொழும்புப் பிள்ளைமாரும் தெரிந்து கொண்டிருந்தனர். ராணுவ பலத்தைப் பொறுத்தவரையில் யானைக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்பொழுது அதன்மீது ஊரும் எறும்புக்கும் அது கிடைக்கும் அல்லவா?
2
அதனால் வெள்ளைக்காரனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பில் தம் நம்பிக்கையைப் போட்டுவிட்டு, பக்தி விஷயத்திற்காக மட்டிலும் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலைக் கட்டி அதற்குப் பக்கத்தில் கிணறு ஒன்றையும் வெட்டிப் போட்டார்கள். பெரிய முதலாளிமார்கள் தர்பாராக வந்து, கடைச் சிப்பந்திகள் தண்ணீர் இறைத்து ஊற்ற, குளித்துவிட்டுப் பிள்ளையாரை அவரவர் உயர்வு ஏர்வைகளுக்குத் தக்கபடி வழிபட்டுவிட்டுச் செல்வார்கள். தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு, டைபாய்ட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஓட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகிவிடவில்லை. அதிகாலை ஏழு மணிக்கு அந்தப் பகுதியில் நோக்கும் திசை எல்லாம் ‘நடமாடும் கோயில்கள்’ தாம். பிள்ளையார் கோயிலின் நைவேத்திய விசேஷங்கள் சிறிய சிப்பந்திகளிடையே பக்திக் கவர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தது.
வடலூர்ப் பிள்ளையும் சித்தி விநாயகர் பக்கத்தில் கோயில் கொண்டருளினார். பிள்ளையார் மனநிலையைப் பற்றி அறிந்துகொள்ள, எனக்குத் தேவதையின் மனோதத்துவ சாஸ்திரம் தெரியாது. பிள்ளையவர்கள் மனசில் மட்டிலும் கசப்பு, கசப்பு, கசப்பு. கோயில் ஐயர் ஒரு நாளைக்கு மட்டிலும் ஏதோ கொடுத்தார். அதில் அவர் மனசு அபார மகிழ்ச்சி கொண்டுவிடவில்லை. மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல. அவர் மனசில் எரிமலைகள் சீறின; புதிய சமூக சாஸ்திரங்கள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தோன்றின; நியாயமானவை என்று அறிவை நம்பும்படி வற்புறுத்தின.
இப்படிப்பட்ட தத்துவ ஆசிரியனாகப் பரிணமிக்கும் சமயத்தில்தான் உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பக்திக் கண்கள் வடலூர்த் துயரத்தின் பிண்டத்தைக் கண்டன. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கண்கள் மூன்று தினங்கள் அவரை அதே இடத்தில் பார்த்தன. உமையாள்புரத்து ஆசாமி ஆற அமரச் சிந்திப்பதில் விசேஷத் தன்மை வாய்ந்தவர். அதனால்தான் மூன்றாம் முறையாக வடலூர்க் குமாரு பிள்ளையைக் கண்டபொழுது அவர் மூர்ச்சையுற்றிருக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் பிள்ளையவர்கள் காற்றைப் புசித்து வாழும் கரடிவித்தை கற்றவரல்ல. கற்றிருந்தால் இந்தக் கொழும்புப் பிரயாணமே சித்தித்திருக்காது. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதான் அவருக்கு மூர்ச்சை தெளிவித்து, “உனக்கு என்ன செய்கிறது?” என்றார். “பசிக்கிறது” என்றார் வடலூர்ப்பிள்ளை சுருக்கமாக. உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஓர் உயிர்ப்பிராணிக்கு உதவி செய்வது என்று உறுதி கொண்டுவிட்டார். காரணம், அன்று விடியற்காலந்தான் வேலைக்காரப் பையன் ஒருவன் முறைத்துக் கொண்டு வெளியேறி விட்டான். எண்ணெய் தேய்த்துவிடுவதிலும் கால் பிடிப்பதிலும் நிபுணன் அவன்.
உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கடையில் சிப்பந்தியாயிருப்பதில் அவருக்கு அவ்வளவு அபார மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. சேவகம் என்பதற்காக அதிருப்தியும் ஏற்படவில்லை. கடைசியாக விநாயகக் கடவுளின் அருள் என்ற நம்பிக்கை ஏற்படாததும் ஆச்சரியந்தான். ஏனென்றால் விருத்தாந்தத்தைக் கேட்ட ஐந்தாறு நாட்களுக்கு முன் தான் ‘வேலையில்லை போ’ என்று விரட்டிய உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, விநாயகக் கடவுளின் பரிபூரணமான அருள் அது என்று நினைத்தார். ஆனால் பிள்ளையவர்கள் தமது பிரக்ஞையிழப்பின் அருள் என்று நம்பினார்; அப்படி வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை.
3
பிள்ளையவர்களுக்கு இருந்த ஒரே ஆசையெல்லாம் திருநெல்வேலிக் கடன்காரர்களைத் தம் காலடியில் வைத்து ஆட்டிப் பார்க்க வேண்டும் என்பதே. அது சாத்தியமில்லாததால், தம்முடன் நெருங்கி, தாம் வசிக்க நேர்ந்த சமுதாயத்தைக் காலடியில் கொண்டுவந்து வைத்து, ஒரு நாளைக்காவது கண்ணில் விரலைவிட்டு ஆட்ட வேண்டும் என்பதே! இந்த ஆசை, பசியின் சாயை மறைய மறையப் பிரம்மாண்டமாக வளர ஆரம்பித்தது. உமையாள்புரம் பிள்ளை, வடலூர்ப் பிள்ளையைப் பண வசூலுக்கும் சரக்குப் பிடிக்கவும் அனுப்ப ஆரம்பித்தார். பல முதலாளிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்.
கொழும்புக் கடையில் உதவித் தொழிலுக்குப் போகிறவர்களுக்கு எப்பொழுதாவது தனிக்கடை ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும்; அல்லது ஏற்படும். பிள்ளையவர்கள் விஷயத்திலும் இது ஏற்பட்டது.
வடக்கத்தி சேட் ஒருவன் இவரை நம்பிப் பணம் கொடுக்க உத்தேசித்தான். தவிரவும் உமையாள்புரம் பிள்ளையும் ஏதோ உதவினார். ஒரு நல்ல நாளில் வடலூர்ப் பிள்ளையின் சொந்தக் கடை திறக்கப்பட்டது. முதலாளி ஸ்தானத்தைப் பெற்றுவிட்டால் வியாபார அநுபவம் வந்துவிடுமா? அதனால்தான் ஆள்வைத்துக் கடை நடத்த வேண்டியதாயிற்று. வியாபார நுணுக்கம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் முதலாளியான பிறகு வைப்பாட்டி வைத்துக் கொள்ளாமல் இருப்பது கௌரவக் குறைவு. அதை உத்தேசித்தோ அல்லது இயற்கையின் தேவையாலோ மலிவான சிங்கள வைப்பாட்டியை வைத்துக்கொண்டார்.
பிள்ளையவர்கள் தொழிலை ஆரம்பித்த நேரத்தின் விபரீதமோ என்னவோ? வர்த்தக உலகத்தில் பணம் புரளுவது கஷ்டமாயிற்று. பெரிய பெரிய விலாசங்கள் இரண்டு மூன்று தொடர்ந்தாற்போல் முறிந்தன. கடன்காரரின் பிடுங்கல் அதிகமாயிற்று. பிள்ளையவர்களின் வியாபார ஓட்டமும் அவ்வளவு தெளிவில்லை. திருநெல்வேலிக் கதை மறுபடியும் கொழும்பிலும் ‘ஒன்ஸுமோர்’ அடித்துவிடுமோ என்ற பீதி அதிகமாயிற்று. ஆனால் மிரண்டுவிடவில்லை. பேச்சு வெளிவராமல் இருக்க, சரக்குகள் அதிகமாக வாங்க ஆரம்பித்தார். திடீரென்று மூன்று கிடங்குகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன.
அன்று சாயங்காலத்திற்குள்ளாகவே அவ்வளவிலும் லக்ஷ ரூபாய்க்குச் சரக்கு. சாயங்காலம் கடையடைக்கும்பொழுது சிப்பந்திகளைக் கூப்பிட்டுச் சம்பளமும், அதற்குமேல் ஐந்தும் பத்தும் கொடுத்து, கணக்குத் தீர்ப்பதுபோல் காட்டிக் கொள்ளாமல் கண்களில் மண்ணைத் தூவினார். கடை, கிடங்கு எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டி சீல் வைத்தார்; சிங்களத்தியின் வீட்டுக்குப் போய்விட்டார்.
4
மறுநாள் காலை மணி ஒன்பதாகியும் கடை திறக்கப்படவில்லை. வடலூர்ப் பிள்ளையும் முறிந்துபோனார் என்ற செய்தி காட்டுத் தீப்போலப் பரவியது. சேட்ஜிகளும், சிறிய கடைக்காரர்களும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளவில்லை; மனமார, வாயாரத் திட்டினார்கள்.
சிங்களத்தியின் வீட்டில் இருப்பதாகத் துப்புத் தெரிந்தது. எல்லாரும் ஒருமிக்க வீட்டுக்குள் புகுந்தார்கள். “பேமானிப் பயலே!…” என்று ஆரம்பித்தார் சேட்ஜி. மற்றவர்களும் அவர்கள் குலாசாரப்படி திட்டினார்கள்.
பிள்ளையவர்கள் அமைதியாகக் கல்லைப்போல் இருந்தார்… சந்தடி ஓய்ந்ததும், “உங்களை ஏமாற்றுவது என் நோக்கம் அல்ல… கடன் எல்லாவற்றையும் பைசா விடாமல் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. பெரிய முதலாளிகளே தயங்குகிறார்கள். ஒரே சமயத்தில் எல்லாரும் கேட்டுவிட்டால் எல்லாருக்கும் நஷ்டமாகுமே என்பது என் வருத்தம். இப்பொழுது சொல்லுகிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் கடனைத் தவணையாகப் பெற்றுக் கொள்ளுகிறீர்களா? அப்படியானால் பாக்கியில்லாமல் செலுத்துகிறேன்.
இல்லாவிட்டால் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறதைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்” என்று கடைசியாகச் சொன்னார். வந்தவர்கள் பீதியடித்துப் போனார்கள். ‘இப்பொழுது வசூல் செய்தால் தம்படிகூடத் தேறுமோ என்னவோ? அவன் தவணை மூலம் பூர்த்தி செய்வான் என்பது எப்படி நிச்சயம்?’ – ஒரு வழியாக நிர்ணயிக்க முடியவில்லை. முடிவில் அவரைத் திட்டிவிட்டுச் சென்றார்கள்.
வடலூர்ப் பிள்ளை அதனுடன் தூங்கப் போய்விடவில்லை; அல்லது ஊருக்கும் கம்பி நீட்டவில்லை. ஒரு முரட்டு வக்கீலைப் பிடித்து அமர்த்தினார். அவன் கையில் தம் வழக்கையும் யோசனையையும் ஒப்படைத்தார். வக்கீல், கடன் கொடுத்திருந்தவர்களின் பட்டியல் தயாரித்து அவரவர்கள் தொகைக்குத் தக்கபடி விகிதாசாரம் போட்டு, முடிவு கூற ஒரு மாதம் நோட்டீஸ் கொடுத்து அனுப்பினான். சிறு கடன்காரர்கள் கிடைத்தது போதும் என்று ஒன்றுக்குக் காலாக வாங்கிக்கொண்டு ஓடினர். இப்படி மெஜாரிட்டித் தொல்லை ஒழிந்தது. மற்றும் பெரிய புள்ளிகள் வேறு விதியில்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர்.
5
கையில் மூலதனம் போடாமல் ஒரு லக்ஷ ரூபாய் சரக்கு; அது இருக்கும்பொழுது தவணை செலுத்துவதற்குமா வலிக்கிறது? மாதம் முதல் தேதியன்று ‘டணார்’ என்று ரொக்கம் நபருக்குப் போய்விடும். ஆனால், மார்க்கெட்டில் பிள்ளையவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார். நெடுங்காலம் வரையில் அந்தக் கறுப்புப் புள்ளி மாறவில்லை. தவணை குறியாகச் செலுத்தியது அவரிடம் நம்பிக்கையை கிழடு தட்டிய பின்பே வருவித்தது. அவருடைய தொழிலும் நன்றாக வளர்ந்தது. பத்து வருஷங்கள் கொழும்பு வியாபாரமே அவரது கைக்குள் என்ற நிலைமை உண்டாயிற்று.
மூலதனம் பெறுவதற்கு வடலூர்ப் பிள்ளை செய்தது சரியா, தப்பா? சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். அப்புறம் நாணயஸ்தனாக இருந்தாரே? முதலில் அவரது கை ஓய்ந்து கிடக்கும்பொழுது அவரை நசுக்கிப் போட வேண்டுமென்று, சமூகம் என்ற தனித்தன்மையற்ற ஒன்று நினைத்ததே! அவர் செய்தது தவறானால் முதலில் அவர் ஐ.பி. போட வேண்டிய நிலைமையை ஏற்பட வைத்தது மட்டும் சரியா? ஓய்ந்து சள்ளுச் சள்ளென்று இருமும் காலத்திலும் வடலூர்ப் பிள்ளைக்கு ஓயாத வேதாங்கமாகிவிட்டது இந்தமாதிரிப் பேச்சு.
(முற்றும்)
ஜோதி, மே – 1938