107 வேதாளம் சொன்ன கதை
வேதாளம் சொன்ன கதை
1
எனக்கு வேட்டையாடுவதில் அபார பிரேமை. எனக்கு இந்தப் பழக்கம் வருவதற்குக் காரணமே காசித் தேவர்தான். அவர் பொதுவாக நல்ல மனுஷ்யர்; கொஞ்சம் நிலபுலன்களும் உண்டு. வருகிற கலெக்டர்களுக்கு எல்லாம் ‘ஷிகாரி’ உத்தியோகம் பார்த்துப் பல மெடல்கள் பெற்றவர். சமயாசமயங்களில் சில கலெக்டர்களுக்குப் புலிகளைச் சுட்டுக்கொடுத்து, புகழும் புலித்தோலும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.
எனக்கு வேட்டையில் பிரியம் பழக்க வாசனையில் பிறந்ததென்றாலும் மிளா, மான், முயல் இவைகளின் எல்லையைத் தான் எட்டியிருந்தது. ஏனென்றால், நமக்கு நிச்சயமாக இந்த ரகத்தில் அபாயம் கிடையாது அல்லவா?
அன்று நான் காசித் தேவரை அழைத்த பொழுது தமக்குக் கோர்ட்டில் வேலையிருப்பதாகக் கூறிவிட்டார். அவருடைய துப்பாக்கியை வாங்கிக் கொண்டு பழைய பாபநாசத்தை அடைந்தேன். ஏன் கலியாண தீர்த்தம் வரை சென்று வரலாகாது என்று யோசனை தட்டியது.
முட்புதர் வழியாகவுள்ள குறுக்குப் பாதையாகச் சென்றேன். அப்பொழுது சித்திரை வெய்யில். குத்துச் செடிகளையும் முட்புதர்களையும் தாண்டி, உயர்ந்த மரங்கள் அடர்ந்த பாதைகள் வழியாக, சருகுகள் வழுக்கும் சமயம் துப்பாக்கிக் கட்டையை ஊன்றிக் கொண்டுசென்றேன். கீழே திரும்பிப் பார்த்தால் பாறைகளும் கண்கூசும் கானலும்! உயர, எங்கோ இடைவெளி மூலமாகத் தூரத்துப் பொதிய மலைச் சிகரம் தெரியும். பஞ்சு மேகங்கள் சிகரத்தைத் தழுவியும் தழுவாமலும் நீல வானில் மிதந்தன.
2
போகும் பாதையில் வழி நெடுக, சில்வண்டுகளின் காதைத் துளைக்கும் ரீங்கார சப்தம். சமயாசமயங்களில், திடீரென்று, பேசி வைத்தாற் போல் ஒலி நிற்கும். அந்த நிசப்தம் – மௌனம் – சிரமமற்று ஒன்றிலிருந்து ஒன்றில் தாவிச் செல்லும் சிந்தனை வண்டின் போக்கைச் ‘சக்’கென்று விசை வைத்ததுபோல் நிறுத்திவிடும். அந்த ஒற்றை வினாடி அமைதியின் பயங்கரத்தை விவரிக்க முடியாது. அப்பொழுதுதான், சப்த கன்னிகைகள், பிரம்ம ராக்ஷஸுகள் இவற்றின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை நம்மைப் பன்மடங்கு கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.
நான் ஏதோ நினைத்துக்கொண்டு சென்றேன். எவ்வளவு தூரம் சென்றேனோ! இந்தச் சில்வண்டு ரீங்கார அமைதிதான் என்னைச் சட்டென்று நிறுத்தியது. எந்த இடத்திலோ வழி தவறியிருக்க வேண்டும். நான் நின்ற இடத்திற்கு இதுவரை நான் வந்ததில்லை. இருந்தாலும் அவ்வளவு இலகுவில் பாபநாசம் காடுகளில் நான் வழி தவறிவிடக் கூடியவனல்லன்; சிறு பிராயம் முதலே இப்பகுதிகளில் அலைந்து பழக்கம்.
‘பார்ப்போம், குடி முழுகிவிடவில்லை!’ என்று கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பனிரெண்டு. உச்சி நேரம். கடிகாரம் பசியை எழுப்பியது. தண்ணீரையாவது குடித்துப் பசியாறலாம் என்று மேலும் கீழுமாகச் சுற்றிப் பார்த்தேன்.
நான் இருந்த இடத்திற்குக் கீழே, பாறைச் சரிவில் ஒரு சுனை; தூரத்துச் சூரியனின் பளபளப்பு அதில் ஒரு கணம் மின்னியது. அங்கு இறங்கித் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு, ஆகவேண்டிய காரியத்தைப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.
மலைச்சரிவில் நேரே செங்குத்தாக இறங்க வழியில்லை. சிறிது சுற்றி இரண்டு மைல் நடந்து அந்தச் சுனையருகில் வந்து சேர்ந்தேன். கோபுரம் போல் குவிந்து சரிந்த இருபாறைகளுக்கிடையில் உள்ள ஒரு குகையில் சுனை. அதில் பெருக்கெடுக்கும் நீர் வழிந்து ஒரு சிறிய தடாகமாக முன்பக்கத்தை நிறைத்தது. தரை தெரியும்படியாக அவ்வளவு தெளிவாக இருந்தாலும் குறைந்தது நாற்பதடி ஆழமாவது இருக்கும். உள்ளே சிறு மீன்களும் கறுப்புத் தவளைக் குஞ்சுகளும் பளிச் பளிச்சென்று மின்னி ஓடின.
3
பாறைச் சரிவில் நின்று இரு கைகளாலும் அள்ளி அள்ளித் தண்ணீரைக் குடித்தேன். அளவுக்கு மிஞ்சிக் குடித்ததினால் சிறிது சோர்வு. வலிக்கும் கால்களைத் தண்ணீரில் முழங்கால் அளவுக்கு விட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். அப்பா, என்ன சுகம்!
பழையபடி எந்த வழியாகத் திரும்புவது என்பது பெரிய பிரச்னையாயிற்று. உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே யோசித்தேன்.
சுனைக்குப் பக்கத்தில், பாறைச் சரிவில் ஓர் உயர்ந்த ஆலமரம். நான் அத்தனை நேரம் அதைக் கவனிக்கவில்லை. அதன் ஓர் உச்சி நான் சிறிது நேரத்திற்கு முன் நின்றிருந்த உயர்ந்த மேட்டை எட்டியது. ‘எத்தனை வயதிருக்கும்? பழங்கால விருட்சம்!’ என்று எண்ணமிட்டுக் கொண்டே அண்ணாந்து பார்த்தேன்.
அந்த ஓரத்து உச்சிக் கிளையில் என்ன தொங்கிக் கொண்டிருக்கிறது? பழந்தின்னி வௌவால்! நரித் தலையும், தோல் இறகுகளும் பிரம்மாண்டமாக இருக்கும். காசித் தேவர் இந்த ஜாதி வௌவால்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். கிடைப்பதே அருமையாம்! மேலும் அவருக்குப் பிரியமான மாமிசமாம்.
‘அதை ஒரு கை பார்ப்போமே!’ என்று பாறையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அதை நோக்கிக் குறி வைத்தேன்.
“அடடே! சுட்டுவிடாதே! நில், நில்!” என்று பயத்தில் பிளிறும் மனிதக் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.
“அடேடே! நில்! நான் வௌவாலில்லை! வேதாளம்! சுட்டு விடாதேயப்பா, தயவு செய்து!” என்று மறுபடியும் கூவியது அக்குரல்.
4
என் கையிலிருந்த துப்பாக்கி நழுவிச் சுனையுள் விழுந்துவிட்டது.
வேதாளம் என்றால் யாருக்குத்தான் பயமிருக்காது? அதிலும் எனக்கு!
வேதாளப் பயத்தில் துப்பாக்கியையும் சுனைக்கு அர்ப்பணம் பண்ணியாகிவிட்டது. காசித் தேவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தான் புரியவில்லை.
இச்சந்தர்ப்பத்தில், வேதாளம் ஒரு அந்தர் அடித்துச் சிறகை விரித்துப் பறந்து வந்து எனக்கெதிரில் உட்கார்ந்து கொண்டது. அதன் பல்லும் முகமும், என்ன கோரம்! முதுகின் மேல், முதுகோடு முதுகாய், அது சிறிது முன் பறந்துவர உதவிய தோல் சிறகு ஒட்டிக் கிடந்தது. தலை சுத்த வழுக்கை; கபால ஓரத்தில் இரண்டொரு நரைத்த சடைகள்; கை கால் விரல்களில் நாட்பட வளர்ந்து பழுப்பேறிய நகங்கள்.
அது பல்லைப் பல்லைக் காண்பித்துக் கொண்டு, என்னைப் பார்த்த வண்ணம் குரங்கு மாதிரிக் குந்தி உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் ஆழமான கண்களில் கிணற்று ஜலம் மின்னுவது மாதிரி அதன் கண்மணிகள் மின்னின.
கொஞ்சம் மரியாதையாகப் பேசி, தட்டிக் கழித்துவிட்டு அதை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை.
தட்டுக்கெட்டாற் போல, “நீர் ஏன் அப்படித் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தீர்?” என்று கொஞ்சம் மரியாதைப் பன்மையிலேயே விசாரித்தேன்.
“நான் வேதாளம்! நாங்கள் தலைகீழாகத்தான் தொங்க வேண்டும்!”
“வௌவால்களல்லவா அப்படித் தொங்கவேண்டும்?” என்றேன். நான் இதுவரையில் ஒரு வேதாளத்தையாவது நேரில் சந்தித்தது கிடையாதல்லவா!
5
“வௌவால்களும் அப்படித்தான் என்று சொல்லும். தலைகீழாகத் தொங்குவது எங்களது அசைக்க முடியாத உரிமை. எங்கள் ஜீவனுள்ள மட்டிலும் அதற்காகப் போராடுவோம்!” என்று கொஞ்சம் ஆவேசத்துடன் தலையை ஆட்டிப் பேசியது அந்த வேதாளம்.
அது தலையை ஆட்டிய வேகத்தில் அதன் கோரப்பற்கள் இரண்டும் கீழே விழுந்துவிட்டன. வேதாளம், அவற்றை உடனே எடுத்துச் சுனை தண்ணீரில் கழுவிவிட்டு மறுபடியும் ஈற்றில் ஒட்டவைத்துக் கொண்டது.
இதைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. களுக்கென்று சிரித்துவிட்டேன்.
“ஏதேது! என்னைக் கண்டால் உமக்குப் பயம் தட்டவில்லையா! ஜாக்கிரதை! மனிதர் எல்லாரும் என்னைக் கண்டால் பயப்பட வேண்டும் என்பது சம்பிரதாயம்! நீர் மனிதர்தானே!” என்று கேட்டது.
இந்த வேதாளத்தின் விசித்திர சந்தேகங்கள் அதன்மீது எனக்கு அனுதாபத்தை உண்டுபண்ணின.
“உமக்கு நான் மனிதனா அல்லவா என்று கூட ஏன் தெரியவில்லை? நான் மனிதன்தான்!” என்று சொன்னேன்.
”எனக்குப் பார்வை கொஞ்சம் மங்கல், அதனால் தான். பார்வை மங்கக் காரணம் என்ன தெரியுமா? நான் பிறந்ததே திரேதா யுகம்!” என்று தனது வயதை அறிவித்துவிட்டு, “அதெல்லாம் அந்தக் காலத்திலே! இந்தக் காலத்து மனுஷனுக்குத்தான் பயப்படக் கூடப் புத்தியும் இல்லை, திராணியும் இல்லையே!” என்று மனித வர்க்கத்தின் தற்போதைய பலவீனத்தைப் பற்றித் தன் அபிப்பிராயத்தை எடுத்துக் காட்டியது.
“அடபாவமே!” என்று நான் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.
6
“அந்தப் பாபத்தாலேதான், ஐயா, நான் சைவனானது! அந்தக் காலத்து மனுஷன் என்றால் எங்கள் ஜாதியைக் கண்டு பயப்படுவான், ரத்தத்தைக் கக்குவான்! இப்போதுதான் உங்களுக்குக் கக்குவதற்குக் கூட ரத்தம் இல்லையே! அதனாலேதான் அதோ இருக்கு பாரும், தேன் கூடு அதிலிருக்கும் தேனைச் சாப்பிட்டுக் கொண்டு, சென்ற ஒரு நூறு வருஷமாக ஜீவித்து வருகிறேன்!”
“தினை மாவும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளக் கூடாதோ? உடம்புக்கு நல்லதாச்சே!” என்றேன்.
“இந்தக் காலத்திலே அது எங்கய்யா கிடைக்கிறது? முந்திக் காலத்திலேன்னா எல்லாரும் பயப்பட்டா, நாங்க நினைக்கிறதே குடுத்தா. இந்தக் காலத்திலே, எதுக்கெடுத்தாலும் துட்டு இல்லாமல் காரியம் நடக்க மாட்டேன் என்கிறதே!” என்றது.
“நீர் பூர்வ ஜன்மத்தில்…”
“பூர்வாசிரமத்தில் என்று சொல்லுங்காணும்!” என்று இரைந்து என்னை அடிக்க வேகமாகக் கையை ஓங்கியது.
திடீரென்று ஓங்கியதால் அதன் கை ‘மளுக்’ என்ற சப்தத்துடன் சுளுக்கிக்கொண்டது. இந்தக் கிழ வேதாளத்தின் மீது நிஜமாகவே எனக்கு அன்பு தோன்றவும், அதன் கையைப் பிடித்து உதறிச் சுளுக்கைத் தடவி விட்டுக்கொண்டே, “வயசு காலத்திலே இப்படி உடம்பை அலட்டிக் கொள்ளலாமா? நீர் பூர்வாசிரமத்தில் பிராமணன் தானே! அப்படியானால் தர்ப்பணம், சிரார்த்தம் செய்துவைத்துப் பிழைக்கலாமே!” என்று ஆலோசனை சொன்னேன்.
“நீர் சொல்லுகிறதும் நல்ல யோசனைதான்; ஆனால் எனக்கு வாதமாச்சே! குளிர்ந்த ஜலத்தில் குளித்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதே! என்ன செய்யலாம்?”
“அப்படியானால் உடம்புக்கு ஏதாவது டானிக் வாங்கிச் சாப்பிட வேண்டும். உங்கள் வேதாள உலகத்தில் வைத்தியர்கள் கிடையாதா?”
7
“எங்களுக்குத்தான் சாவே கிடையாது என்று பிரம்மா எழுதி வைத்துவிட்டானே! அதனாலேதான் வைத்திய சாஸ்திரத்தை நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை!”
“சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடும்; உடம்புக்கு நல்லது!”
“மறுபடியும் மறுபடியும் இப்படிச் சொல்லுகிறீரே! நான் சைவனாகித் தான் குடலே பலவீனமாகிவிட்டதே! வேறெ ஏதாவது மூலிகைச் சத்து இருந்தா சொல்லும்!”
“அப்படியானால் ஜஸ்டிஸ் ராமேசத்திடம் கேட்டுச் சொல்லுகிறேன். எனக்கு நேரமும் ஆகிறது; மேலும் இந்தக் காட்டிலே வழியும் தவறி விட்டது!” என்று சொல்லி எழுந்தேன்.
“நான் வேண்டுமானால் வழி காண்பிக்கிறேன் வாரும்!” என்று எழுந்தது வேதாளம்.
“துப்பாக்கியை எடுக்க வேண்டுமே?” என்றேன்.
“உமக்கு ஞாபகப் பிசகு அதிகமோ! தண்ணீரில் கால்பட்டாலே எனக்கு வாதஜுரம் கண்டுவிடுமே! இருந்தாலும் நீர் நல்லவராக இருக்கிறீர், உமக்காக…” என்று தண்ணீருக்குள் அந்தரடித்து, துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்தது.
கரையில் அதற்கு நிற்கக்கூடச் சக்தியில்லை. ஓட்டைப் பல்லும், கை கால்களும் வெடவெடவென்று ஆடின.
என் மேல் வேஷ்டியைக் கொடுத்துப் போர்த்திக் கொள்ளும்படி சொன்னேன்.
போகும் வழியில், “அந்தக் காலத்து வளமுறை எப்படி?” என்று பேச்சுக் கொடுத்தேன்.
8
முன்னே சென்ற வேதாளம், நின்று திரும்பி, “எனக்கு ராமன் கிருஷ்ணன் எல்லாரையும் தெரியும். அவாள் கூடப் பயந்துண்டுதான் இருந்தா. எனக்கு அவாளைச் சின்னப் பையனாக இருக்கும்போதே தெரியும். அவாள் எல்லாம் தைரியசாலிகள் தான். ராக்ஷஸன் என்றால் தொம்சம் பண்ணிடுவாள். ஆனால், எங்களைக் கண்டா எப்போதுமே நல்லதனமா பயப்படுவா.
அந்தக் காலத்து மனுஷாள்தான் என்னங்கிறீர்! தைரியத்திலே அசகாய சூரர்கள்தான். ஆனால் அவாளுக்கு மட்டுமரியாதை எல்லாம் தெரியும். முன்னோர்கள் சொன்னபடி, தெய்வம், பேய், பிசாசு, பூசாரி என்றால் ஒழுங்காகப் பயப்படுவாள். உங்கள் சுந்தரமூர்த்தி நாயனார்தான் என்ன? அவரைக் கூட எத்தனை தரம் பயங்காட்டியிருக்கேன் தெரியுமா? அந்தக் காலத்திலேதான் எங்களுக்கு முதல்லே பிடிச்சது வினை. எங்கையோ வடக்கே இருந்து சமணன் என்றும், புத்தன் என்றும் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அந்த முட்டாள் பயல்கள், ‘கொல்லப்படாது! பாவம் கீவம்’ என்று சொல்லி, ஆட்களைத் தங்கள் கட்சிக்குத் திருப்பிவிட்டார்கள். அந்தக் காலத்திலேயிருந்துதான் நம்ம பரமசிவன் முதற்கொண்டு எல்லாத் தேவாளும் சைவராகிவிட்டார்கள். காலம் அவாளை அப்படி ஆட்டி வைத்தது. முன்னே திரிபுரத்தை எரித்தாரே, இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக் கூட எரிக்க முடியாது!” என்றது.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு சிறு முயல், அதன் காலில் இடறிப் பாய்ந்து பக்கத்துப் புதரைப் பார்த்துத் தாவியது.
“ஐயோ!” என்று கூவிக்கொண்டு, வேதாளம் வந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டது.
ஓடியது ஒரு முயல்தான் என்று சொல்லி அதன் பயத்தைத் தெளிவித்தேன்.
“நாங்கள் தலைகீழாகத் தொங்கித் தொங்கிக் கால்களெல்லாம் பிரயோஜனமில்லாமல் போய்விட்டன. இந்தத் தலைகீழ் ராஜ்யம் வந்ததும் அந்தச் சமணர்கள் காலத்தில்தான்!” என்றது.
“எப்படி?” என்றேன்.
“அவர்கள் எல்லாம் மரத்திலே உறியைக் கட்டி, அதிலே உட்கார்ந்து கொண்டார்கள். ஜனங்களெல்லாரும் அந்தப் பக்கம் திரும்ப ஆரம்பிச்சா! நான் தான் அப்போ அதற்கு இந்த வழி பண்ணி மறுபடியும் எங்களைப் பார்த்துப் பயப்படும்படி செஞ்சேன்!” என்று அது கொஞ்சம் பெருமையடித்துக் கொண்டது.
9
பேசி பேசி அதற்குள் பழைய பாபநாசத்திற்கு வந்துவிட்டோம்.
மண்டபத்தருகில் நின்று ஒரு முருங்கை மரத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தட்டியது.
“உமக்கு உச்சினிபுரத்து வேதாளத்தைத் தெரியுமா?” என்றேன்.
“அந்த விக்கிரமாதித்தப் பயலைத் தூக்கிக்கொண்டு அலைந்தாரே, அவரா! அவர் என் அண்ணா பிள்ளை!” என்றது.
“இதோ ஒரு முருங்கை மரம் இருக்கிறதே, இதில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்! நான் வேண்டுமானால் தினம் இங்கு வருகிறேன். உம்முடைய பழைய கதை எல்லாம் சொல்லுமே!” என்றேன்.
“ஓஹோ! அப்படியா சேதி? எங்க அண்ணா சுத்த அசடு. ஏமாந்து சொல்லிக்கொண்டு கிடந்தான்? நான் சொல்ல வேண்டுமானால், என்ன தெரியுமா? உமக்குக் கிடைக்கிற லாபத்தில் சரி பாதி எனக்குக் கொடுக்க வேண்டும். அப்படி ஸ்டாம்பு ஒட்டிப் பத்திரம் எழுதினால்தான் மேலே பேசலாம்!” என்றது.
“இப்பொ எல்லாம் புஸ்தக வியாபாரம் கொஞ்சம் மந்தம். நீர் அப்படியெல்லாம் கேட்கக் கூடாது!”
“அப்படியானால் ஒரு கோவிலாவது கட்டி வையும்” என்றது.
வேதாளப் பொருளாதார சாஸ்திரத்தில் கோவில் அவ்வளவு லேசாகக் கட்டிவிடலாம் என்றால் மனுஷ உலகத்தில் அப்படி இல்லையே! “பிறகு யோசித்துக் கொள்ளலாம்!” என்று நினைத்துக் கொண்டு எழுந்து, தவிடுள்ள அரிசி, ‘விட்டமின் டி’ எல்லாம் சேர்த்து சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொள்ளும்படி அதற்கு ஆலோசனை கூறிவிட்டு, காசித் தேவர் வீட்டை நோக்கி நடந்தேன். நான் எப்படிச் சத்தியம் செய்தாலும் அவர் என்னை நம்பப் போகிறாரா? எங்கோ படுத்துத் தூங்கினேன் என்றுதான் சொல்லுவார்.
நான் திரும்பிப் பார்க்கையில் அந்த வேதாளம் வௌவால் மாதிரிப் பறந்து சென்று ஓரத்து மலைச்சரிவில் மறைந்துவிட்டது.
முற்றும்
மணிக்கொடி, 15-02-1937