="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

98 மாயவலை

மாயவலை

1

என்.பி. நாயகம் கலாசாலை மாணவன். கலாசாலை மாணவர்களுக்கு என்னென்ன தவறுகள், இலட்சியங்கள், உத்ஸாகங்கள் உண்டோ அவ்வளவும் அவனுக்கு இருந்தது. புதிய எண்ணங்களில் பிரேமை, புதிய அனுபவங்களில் ஆசை, தவறுகள் என்பவற்றைச் செய்வதில் ஒரு குதூஹலம் எல்லாம் இருந்தது. ஆனால் தைரியம் மட்டும் இல்லை.

அவன் ஒரு சந்தோஷப் பறவை. கவலை என்பது வகுப்பு எப்பொழுதும் முடியும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஆனால் இவ்வளவிற்குக் கீழும், ஆழமாகப் பொற்சரடுபோல் அவன் உள்ளத்தில் மனித இலட்சியங்களின் ஆவேசம் ஓடிக்கொண்டிருந்தது.

அவன் கனவில் அறிவு வளர்ச்சி அடைந்த பெண்கள்தான் இலட்சிய வடிவெடுத்தனர். உடன் படிக்கும் பெண்களின் நாகரிகச் சின்னங்கள்தான் காதல் தெய்வத்தின் உப கருவிகள். மன்மதவேள் தன் பாணங்களைத் தொடுக்குமுன் நாகரிக நாரீமணியை வைத்துக் கொண்டுதான் தனது தொழிலை ஆரம்பிப்பான் என்பது நாயகத்தின் சித்தாந்தம்.

கனவுகளும் இலட்சியங்களும் முட்டாள்தனங்களும் கலாசாலைக் காம்பவுண்டிற்குள்தான் தழைத்து ஓங்கக் கூடியவை. வெளியிலே வந்ததும் உலகத்தின் அதிர்ச்சி அவற்றை நசித்திவிடும். நாயகம் கலாசாலையை விட்டு வெளியேறும்பொழுது இலட்சியவாதியாகவே காலங்கழிப்பது என்ற பிரக்ஞையுடன் வெளியேறினார். இதுவரை தோல்வி என்றால் என்ன என்பதையே அறிந்திராதவர்.

முதல் அதிர்ச்சி அவருக்கு வேலை வடிவில் காத்திருந்தது. இரண்டாவது அதிர்ச்சி இத்தனை நாட்கள் கேட்டவுடன் பணம் கொடுத்துக் கொண்டிருந்த தந்தையே, வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னது. தகப்பனார் தன்னை வீட்டில் வைத்திருக்கப் பிரியப்படவில்லை என்று எண்ணிக் கொண்டார். உலகம், தான் உயிர் வாழ்வதில் பிரியப்படவில்லை என்று தெரிந்து கொண்டார். இதற்கு மேலாக தகப்பனாரும் தாயாரும் இவருக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆத்திரப்படுவது இவருக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் இவருடைய வெறுப்பை பொருட்படுத்தாமல் அவர்கள் தங்கள் இஷ்டப்படி பெண் பார்த்துக் கொண்டிருப்பது இவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

கலியாணமும் கட்டாயத்தின் பேரில் நடந்தது. அவனுடன் அவன் இஷ்டத்திற்கு விரோதமாகப் பிணிக்கப்பட்ட பெண் சாரதா, நல்ல அழகி. ஆனால் படிப்பு என்பது, அதாவது நாயகத்தின் அர்த்தத்தில் சிறிதாவது கிடையாது. பெயர் எழுதத் தெரியும். ஆனால் அந்த அழகில், அவள் குண சம்பத்தில் நாயகத்தால் ஈடுபட முடியவில்லை. தனது மணமே வாழ்க்கையின் தோல்வியாகக் கருதினான். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள், ஏறக்குறைய நெருங்கிப் பழகினார்கள். ஆனால் இருவரும் இரு தனி உலகங்களில் வசித்து வந்தார்கள். சாரதாவிற்கு நாயகத்தின்மீது கட்டுக்கடங்காத பாசம் இருந்தது. ஆனால் வெளிக்குக் காண்பிக்கப் பயம். தனது கணவர் எப்பொழுதும் ஒரு மாதிரியாக இருக்கும் பேர்வழி என்று நினைத்தாள். அதில் அவளுக்குப் பயம். அவன் இருக்கும் அறைக்குக் காரியமற்றுச் செல்வதற்குப் பயம். இருவர் வாழ்க்கையும் வீணையும் விரலும் விலகியிருப்பது போன்ற தனிப்பட்ட கூட்டு வாழ்க்கையாக இருந்தது.

கடைசியாக இவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அதையும் வேலை என்று சொல்லிவிட முடியாது. தன் தெருவில் உள்ள செல்வேந்தர் சுந்தரேச பிள்ளையின் மைத்துனிப் பெண், பி.ஏ.யில் தவறிவிட்டாள். அவளுக்கு அரசியல் சாஸ்திரமும் பொருளாதார சாஸ்திரமும் படித்துக்கொடுக்கும் வேலை.

நாயகம் இந்தப் பொறுப்பைத் தன் முழு உள்ளத்துடனும் ஏற்றுக்கொண்டார். சம்பளம் ஏதோ ஐம்பது ரூபாய் என்ற பேச்சு. நாயகத்திற்குச் சம்பளம் பற்றிக்கூடக் கவலையில்லை.

சுந்தரேச பிள்ளையின் மைத்துனியைப் பார்க்குமுன்னரே என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்பதை சந்திக்குமுன்னமெ கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்.

2

அன்று சாயங்காலம் 6 மணியிருக்கும்.

நாயகம், சுந்தரேச பிள்ளையின் வீட்டையடைந்தார். நாயகத்திற்குக் கூச்சம். இவ்வளவு பெரிய மாளிகையில் தான் காணாத கனவுப் பெண் இருப்பதில் உள்ளூரப் பூரிப்பு. அவள் எப்படி இருக்கிறாளோ? அறிவில் தனக்கு ஒத்தவளாக, சம்பாஷணையில் இன்பம் ஊட்டுபவளாக இருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.

சுந்தரேச பிள்ளை நல்ல குஷிப் பேர்வழி. வக்கீல் தொழிலில் நல்ல வரும்படி வந்தால் ஏன் குஷியாக இருக்க முடியாது?

வெராந்தாவைக் கடப்பதற்கு முன் துடை நடுக்கம். அந்தப் பெண் எப்படி இருப்பாளோ?

வேலைக்காரன் நாயகத்தை உள்ளே அழைத்துச் செல்லுகிறான்.

நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரேச பிள்ளை, நாயகத்தைப் பார்த்ததும் ஏக ஆரவாரத்துடன், “வாத்தியார் ஸாரா? வாருங்கள் வாருங்கள்” என்று சிரித்தார்.

“டேய் நீ போய் சின்ன அம்மாளைக் கூப்பிட்டுக்கொண்டு வா” என்று அனுப்பிவிட்டு, “நளினா! நளினா!” என்று வேலைக்காரனுக்குக் கொடுத்த வேலையைத் தானே, நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் செய்யவாரம்பித்தார்.

உடனே உள் ஹாலில் இருந்து ஒரு கதவு திறந்தது. “என்ன அத்தான்” என்ற பெண் குரல்.

நாயகம் அந்தத் திசையை நோக்கினான். நாகரீக உடை, நாகரீக மூக்குக் கண்ணாடி, நெற்றியில் சுருண்டு தவழும் சிறு ரோமச் சுருள், கவலையற்ற மாதிரியாகக் கவலையுடன் உடையணிந்த கோலம், சிரித்த கண்கள், குறும்பு தவழும் அதரங்கள்… பொதுவாக திரு. நாயகம் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த பெண்களின் இலட்சியம் தோன்றியது.

அந்தத் திசையை நோக்கிய நாயகத்திற்கு உடல் முழுவதும் வியர்த்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. கால்கள் உட்கார வேண்டுவதுபோல் உடலைக் கீழே இழுக்கவாரம்பித்தது. நாயகம் கோழை அல்ல. ஆனால் அன்று அவருக்குப் பரவசத்தினால் ஏற்பட்ட பயம், அச்சுச் சட்டம் போல் அவருக்கு நிரந்தரமான வாய்ப்பூட்டு போட்டது.

“நளினா! இவர்தான் உனது வாத்தியார். மிஸ்டர் நாயகம் அவள்தான் எனது மைத்துனிப் பெண், ஹேமநளினி; இந்த விசையாவது பாஸ் பண்ண வழியைப் பாரு” என்று சிரித்தார் சுந்தரேச பிள்ளை.

திரு. நாயகத்திற்கு அந்தச் சந்தரப்பத்திற்குத் தக்க பதில் என்ன கூறுவது என்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. அந்தப் பிரச்சனை தீருவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.

“ஸார், வாருங்களேன்” என்றாள் நளினி.

நாயகம் பின்னே சென்றான்.

3

“ஸார் இண்டியன் ஹிஸ்டரியில்தான் போய்விட்டது” என்று சிரித்தாள் நளினி.

“அதற்கென்ன கொஞ்சம் ஸ்பெஷலாகப் பார்த்துக் கொண்டால் போகிறது” என்றார் நாயகம். இந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருவதற்குள் பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது.

“ஸார் கூச்சப்படாதீர்கள். உங்கள் வீடு மாதிரி பாவித்துக் கொள்ளுங்கள்” என்றாள் நளினி.

திரு. நாயகத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. தன்னை அவள் கோழை என்று நினைத்துச் சிரிக்கிறாள் என்று அவருக்கு அவமானம், கோபம். சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை.

குரலை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, “நான் கோழை அல்ல” என்று தமது வெற்றிக்கொடி நாட்டினார்.

“உங்களை யார் அப்படிச் சொன்னார்கள்? குரல் ஏன் அப்படிக் கம்மிக் கிடக்கிறதே, காச சம்ஹாரி மாத்திரை இருக்கிறது எடுத்துத் தரட்டுமா?” என்றபடியே அலமாரியைத் திறந்து தேடினாள்.

நாயகத்திற்கு தமது ஜயக்கொடி பறிக்கப்பட்டு தரையில் புரள்வதைக் கண்டார். இத்தனைக்கும் ஒரு சிறு பெண். ஒரு அறை கொடுத்தால்… அலமாரியைப் பார்ப்பதுபோல் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும்? இவனது மானத தத்துவ ஆராய்ச்சியில் ஒரே பொருள்தான் பட்டது. இந்த மதனைக் கண்டதும்…

“இன்று என்ன ஆரம்பிக்கலாம்” என்றார் நாயகம்.

“நான் எல்லாம் படித்திருக்கிறேன். நீங்கள் ஒன்று செய்தால் நன்றாக இருக்கும் சார்” என்றாள் நளினி.

“என்ன?”

“போன பரீட்சைக் கேள்விகள் தவிர நல்ல முக்கியமான கேள்விகள் ஐந்திற்கு விடை எழுதித் தந்தால் சீக்கிரம் பாடங்களைத் திருப்பிப் படித்துவிடலாம். வேலையும் குறைவாக இருக்கும்” என்றாள்.

“அப்பொழுது நான் கேள்வி கொடுக்கிறேன், நீ எழுதி வை.”

“எனக்கு மற்றதைப் படிக்க வேண்டியிருக்கிறதே. தயவுசெய்து நீங்கள் எழுதித் தாருங்கள் ஸார்” என்று சிரித்தாள் நளினி.

அவள் புன்சிரிப்பு அவருக்குக் கட்டளை மாதிரி இருந்தது.

“புஸ்தகம் காகிதங்களை எடு” என்று வாங்கி உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.

4

இத்தனை நாள் புரொபஸர்களுக்கு டிமிக்கிக் கொடுத்த நாயகத்திற்கு முதலில் உத்ஸாகமாக இருந்தாலும் நான்காவது பக்கம் போவதற்குள் புளித்துப் போய்விட்டது.

“நான் சொல்லிக்கொண்டு வருகிறேன், நீ எழுது” என்று நோட்டை அவள் கையில் கொடுத்தார். இருவர் கண்களும் சந்தித்தன. திரு. நாயகத்திற்குப் புளகாங்கிதமாக இருந்தது. ஆனால் நளினியின் மீது ஒரு மாற்றமும் கிடையாது.

“சொல்லுங்கள்” என்றாள். சொல்லிக்கொண்டு போக ஆரம்பித்தார்.

“நீங்கள் இப்படி வேகமாகச் சொன்னால் எப்படி எழுதுவது?”

இப்படி இவர் சொல்லுவதும் அவள் தடைசெய்வதுமாக ஒரு பக்கம் கூடச் செல்லவில்லை. மேலும் அவளுக்கு சாதாரண ஆங்கிலப் பதங்களுக்கு எழுத்துக் கூட்டக் கூடத் தெரியவில்லை என்பதிலிருந்தும், சிற்சில விஷயங்களில் பயங்கர அசட்டுத்தனங்களைக் காண்பிப்பதிலிருந்தும், இவள் உண்மையில் அந்த வகுப்பில் படிக்கிறாளா? என்ற சந்தேகம் தோன்றவாரம்பித்தது. ஆனால் அவன் பேசுவதற்கெல்லாம் ‘கிண்டலாக’ பதில் சொல்லுவது வாயைத் திறப்பதற்கே பயப்படும்படி செய்துவிட்டது.

அன்று பாடம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும்பொழுது திரு.நாயகத்தின் கையில் ஒரு ஹிந்து தேச சரிதம், ஒரு கத்தைக் காகிதம், எப்பொழுது வெளிவருவோம் என்ற மனப்பான்மை, இத்துடன் வெளியேறினார்.

வீட்டிற்குள் செல்லும்பொழுது மனைவி சாரதாவைப் பற்றி மனம் அடிக்கடி காரணமில்லாமல் எண்ணிக்கொண்டிருந்தது. எவ்வளவு சாதுவாகத் தொந்திரவு கொடுக்காமல் இருக்கிறாள். வேலையை ராஜினாமா செய்து தப்பிக்கொண்டால் என்னவென்று பட்டது. 50 ரூபா சும்மாவா?

நாயகத்தின் நினைவுகள் குமைந்தன. அதில் சாரதா முக்கியமாக இருந்தது அவருக்கே விளங்கவில்லை.

5

நாயகம் வீட்டிற்கு வந்தவுடன் மிகுந்த களைப்பு. பள்ளிக் கூடத்திலும் உபாத்தியாயர்களுக்கு டிமிக்கிக் கொடுத்தவர், வெகு காலமாக உழைப்பென்பதே இல்லாதவர், இன்று உட்கார்ந்து கொண்டு சாரமற்ற பரிட்சை பதில்கள் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமென்றால், வீட்டில் வந்ததும் தனதறையில் சென்று உட்கார்ந்து இந்து தேச சரித்திரத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் எழுதவாரம்பித்தார். மனம் அதில் படியவில்லை. சரித்திரம் படித்து வெகு நாட்களாகிவிட்டது. புத்தகத்தைப் படித்துக் கொண்டு எழுதவேண்டியிருந்தது.

“சாரதா தண்ணீர் கொண்டுவா” என்று அந்தச் சாக்கில் நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.

சாரதா பயந்து நடுங்கிக்கொண்டு அவசர அவசரமாகத் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து மேஜையின் மீது வைத்துவிட்டுத் திரும்பினாள்.

“ஏன் ஓடுகிறாய், உட்காரு. கொஞ்ச நேரம் பேசலாம்” என்றார் நாயகம்.

தனது கணவன் இதுவரைத் தன்னிடம் இப்படிப் பேசியதைக் கேட்காத சாரதா, ஏதோ கோபிக்கத்தான் போகிறார் என்ற பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்றாள்.

“உட்காரு.”

சாரதா பயந்துகொண்டு உட்கார்ந்தாள்.

“ஏன் சாரதா? என்னைக் கண்டால் ஏன் இப்படி ஒளிகிறாய்?” என்றார். காரணம் அவர்தான் என்பதை மறந்துவிட்டார் போலும்.

சாரதாவிற்குத் தன்மீது கோபம் இல்லை என்று தெரிந்தது. ஆனால் என்ன பதில் சொல்வது என்ற பிரச்னை.

“ஒளியலே” என்றாள்.

“பிறகு…”

பதில் இல்லை.

“இதை எழுதித் தொலைக்கிறேன். கொஞ்சம் உட்காரு. பிறகு பேசுவோம்.”

திரு. நாயகம் என்னமோ எழுதிப் பார்த்தார். முடியவில்லை.

அதற்குள் சாரதா அந்தப் பெரிய புஸ்தகத்தில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தையின் உள்ளம்.

“இவ்வளவும் படிக்கணுமா? எவ்வளவு பெரிசு!” என்றாள்.

அதிலே ஒரு ஆச்சரியம், அவளை அறியாது அதில் ஒரு பரிதாபம் கலந்தது.

“இவ்வளவும் படிக்கணும்.”

“இவ்வளவுமா?” என்றாள்.

அவள் கையிலிருந்த புஸ்தகத்தை அவர் வாங்கும்பொழுது புஸ்தகம் விழுந்தது. சாரதாவின் தலை அவர் மார்பில் இருந்தது. அந்த நிமிஷம், தமது காதல் கோட்டை இருக்கும் இடத்தையறியாது போனாலும், களங்கமற்ற பாசத்தின் இருப்பிடத்தை அறிந்தார்.

ஹேமநளினிக்கு வாத்தியாரை ஏமாற்ற முடியவில்லை. ஜம்பம் சாயாது என்று கண்டுகொண்டாள். காரணம் தெரியாது. அவளுக்கும் கவலை இல்லை.

(முற்றும்)

ஊழியன், 28-12-1934

License

மாயவலை Copyright © by manarkeni. All Rights Reserved.