="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

96 மனக்குகை ஓவியங்கள்

மனக்குகை ஓவியங்கள்

1

கர்த்தராகிய பிதா, பரமண்டலத்தின் சாளரங்களில் ஒன்றைத் திறந்து எட்டிப் பார்த்தார்.

கீழே, பல யோஜனைகளுக்கு அப்பால், அவர் கற்பித்த பூமண்டலமும் அதன்மீது ஊர்ந்து திரியும் சகல ஜீவராசிகளும் அவர் தமது சாயையில் சிருஷ்டித்து மகிழ்ச்சியுற்ற ஆதாம் ஏவாளின் வாரிசுகளும் தென்பட்டன.

ஒரு தாயின் பெருமிதத்துடன், ஒரு சிருஷ்டிகர்த்தரின் கம்பீர மகிழ்ச்சியுடன் அப் பூமண்டலத்தைக் கவனித்தார்.

அன்று ஏழாம் நாள். தொழிலை (விளையாட்டை?) முடித்துக் கை கழுவிவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த பொழுது எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் மனிதனைத் தவிர்த்துப் பூமண்டலத்தின் மற்றைய ஜீவராசிகளெல்லாம் அவருக்குத் தென்பட்டன.

மனிதன் மட்டிலும், ஏக்கத்தாற் குழிந்த கண்களோடு, விலாவெலும்பெடுத்த கூனல் உடலை வளைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்ட, எதையோ குகையொன்றில் வைத்து ஊதி ஊதி உருக்கிக் கொண்டிருந்தான்.

பிதாவின் களங்கமற்ற நெற்றியில், கண்ணாடியில் கலந்த ஆவி போல் சோர்வு போர்த்திய துயரக் களை தோன்றி மறைந்தது.

தம் இரத்தத்தின் இரத்தமான, கனவின் கனவான, லட்சியத்தின் லட்சியமான புதல்வனின் நினைவு தட்டியது போலும்!

இன்னுமா?

“ஹே! மானுடா, ஏனப்பா உன் பார்வை குனிந்தே போய் விட்டது?” என்ற குரல் பல யோஜனைகளுக்கு அப்பால் உள்ள மனிதனுடைய உள்ளத்தில் ஒலித்தது.

மனிதன் தன்னுடைய நம்பிக்கை வறண்ட கண்களைக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

“நீர் எப்பொழுதும் அங்கேயே இருக்கிறீரே?” என்று பதில் கேள்வி கேட்டான்.

“நான் என்ன செய்யட்டும்! உன்னை மாசுபடுத்தும் அந்தப் புழுதி தோய்ந்த கரங்களுடன், மார்புடன் என்னைக் கட்டித் தழுவ முயலுகிறாயே?”

“என்னைச் சிருஷ்டிக்க நீர் உபயோகித்த புழுதியைவிட்டு நான் எப்படி விலக முடியும்? அதை விட்டு விலகி நான் உம்மை எப்படி வரவேற்க முடியும்? நான் நிமிர்ந்து நேராக நிற்பதற்கே இந்தப் புழுதிதானே ஆதாரம்? புழுதியைக் கண்டு அஞ்சும் உமக்கு அதன் மீது நிற்கும் என்னை அறிந்து கொள்ளச் சக்தி உண்டா? நீர் அந்தச் சக்தி பெற்றுக் கீழே வரும் வரை நான் இந்தப் புழுதியில் கண்டெடுத்த – அதில் என்னோடு பிறந்த, என் சகோதரனான – இந்த இரும்புத் துண்டை வைத்து, என்னைப் பாதுகாத்துக் கொள்ளுகிறேன்!” என்று குனிந்து நெருப்பை ஊதலானான். குகையுள் பளபளவென்று மின்ன ஆரம்பித்தது.

2

உத்தானபாதனது குழந்தை தெய்வத்திடம் வரம் கேட்பதற்காகத் தபஸ் செய்யக் கானகத்திற்கு ஓடிற்று. மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவியும் ஆகாய மார்க்கமாகச் செல்லும் பொழுது இக்குழந்தையைக் கண்டுவிட்டார்கள்.

ஸ்ரீதேவிக்குப் பசலைக் குழந்தையின் உறுதியைக் கண்டு பரிவு ஏற்பட்டுவிட்டது. தன் கணவருக்கு இருக்கும் அந்தக் ‘காத்து அளிக்கும்’ சக்தியை விவரம் தெரியாத குழந்தைகள் கூட அறிந்திருக்கின்றனவே என்பதில் ஒரு பூரிப்பு! கணவரைப் பார்த்துக் கொண்டாள்.

ஸ்ரீதேவியின் கடைக்கண் வீச்சுக்கிணங்கி வரங்களை வாரிச் சொரியக் குழந்தையை அணுகினார் மகாவிஷ்ணு.

குழந்தை ஓடிக்கொண்டிருந்தது.

பகற் கனவை ரஸித்துப் பல முறை ஏமாந்த குழந்தை அது. அதற்கு எதிலும் சர்வ சந்தேகம். மனத்தின் பேரில் அதற்கு அசைக்க முடியாத, நிரந்தரமான சந்தேகம்.

உத்தானபாதனது மடியில் உட்கார்ந்து விளையாடுவதாக, கொஞ்சுவதாக நம்பி எத்தனையோ முறை முன் ஏமாந்திருக்கிறதல்லவா?

மகாவிஷ்ணு சங்கு சக்கராயுதராக அதனை வழிமறித்து நின்று “குழந்தாய்!” என்று அழைத்தார்.

“நீ யார்?” என்று கேட்டது குழந்தை.

“குழந்தாய், என்னைத் தெரியாதா? நான் தான் மகாவிஷ்ணு!” என்று புன்சிரிப்புடன் தம்மை அறிவித்துக் கொண்டார்.

“பொய்! நான் என்ன கனவு காண்கிறேனா?” என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டது குழந்தை.

“நிஜந்தான். இந்தா, இந்த வரத்தைக் கொடுக்கிறேன்! இதிலிருந்து தெரிந்து கொள்!”

“ஓஹோ, செப்பிடுவித்தைக்காரனா?”

“நான் தான் மகாவிஷ்ணு; என் பக்கத்திலிருக்கும் ஸ்ரீதேவியைப் பார்!”

“பகல்வேஷக்காரனும் கூடவா? எங்கப்பா கிட்டப்போ! சம்மானம் குடுப்பார். என்னை ஏமாத்த முடியாது!” என்று சிரித்துக் கொண்டே, “நேரமாகிறது; தபஸ் பண்ணப்போறேன்!” என்று காட்டிற்குள் ஓடிவிட்டது அக்குழந்தை.

கொடுக்க விரும்பிய வரத்தை ஒரு நட்சத்திரத்தின் மீது வீசி எறிந்துவிட்டு ஆகாச கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார் பகவான்.

பசியால் தவிக்கும் ‘கல்லினுள் சிறு தேரை’ தென்பட்டது. அதை நோக்கி விரைந்து சென்றார்.

3

யமபுரி.

மார்க்கண்டச் சிறுவனுக்காகப் பரிந்துகொண்டு வந்த சிவபிரான் கையில் தோல்வியுற்று தர்மராஜன் அப்பொழுதுதான் திரும்பி வந்திருக்கிறான்.

தனது தர்மாசனத்தில் உட்காரவும் அவனுக்கு அச்சம் – தயங்குகிறான்.

ஆசனத்தடியில் விடாப்பிடியாக உட்கார்ந்து கொண்டு முரண்டு செய்துகொண்டிருந்த நசிகேதக் குழந்தை, “மரணம் என்றால் என்ன?” என்று மறுபடியும் தன் மழலை வாயால் கேட்டது.

எத்தனையோ தத்துவங்களைச் சொல்லிப் பார்த்தான்.

குழந்தையை ஏமாற்ற முடியவில்லை. தன் ஒற்றைக் கேள்வியை வைத்துக் கொண்டு அவனை யுகம் யுகமாக மிரட்டி வருகிறது அக்குழந்தை.

தோல்வியின் சுபாவமோ என்னவோ!

“மனிதர்கள் என்னைக் கண்டு ஏன் மிரளுகிறார்கள்? அஞ்சுகிறார்கள்? நான் உதவி செய்யத்தானே செல்லுகிறேன்? எனக்குப் பயந்து என்னையும் விடப் பெரிய எமனான சங்கரனிடம் சரண் புகுந்தாவது என்னை விரட்டப் பார்க்கிறார்களே! இது என்ன புதிர்? என்னைக் கண்டு பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று அவனது ஏக்கப் படுதாவில் நினைவு – அலைகள் தோன்றி விரிந்தன.

அன்றுதான் அவன் தன் தனிமையை முழுதும் அறிந்தான்.

அப்பொழுதுதான் கிங்கரர் இருவர் தன்முன் கொண்டு வந்து நிறுத்திய மனித உயிரைப் பார்த்துத் தன் அந்தரங்கக் கேள்வியை வாய் குழறிக் கேட்டுவிட்டான்.

“அதோ கிடக்கிறது பார், நான் போட்டுவிட்டு வந்த உடல்; அதில் போய் உட்கார்ந்து கொள். அப்புறம் உன் கிங்கரர்களை ஏவி, உன்னை அழைத்து வரும்படி உத்தரவு செய். அப்பொழுது தெரியும் உனக்கு!” என்று சொல்லிச் சிரித்தது அந்த மனித உயிர்.

பர வெளியிலே, பேரம்பலத்திலே நின்று, தன்னையே மறந்த லயத்தில், ஆனந்தக் கூத்திட்டுப் பிரபஞ்சத்தை நடத்துகிறான் சிவபிரான்.

ஒரு கால் தூக்கி உலகுய்ய நின்று ஆடுகிறான்.

பக்கத்தில் வந்து நின்றார் நாரதர்.

“அம்மையப்பா! எட்ட உருளும் மண்ணுலகத்தைப் பார்த்தருள்க!…அதோ கூனிக் குறுகி மண்ணில் உட்கார்ந்து ரசவாதம் செய்கிறானே! சிற்றம்பலமான அவனது உள்ளத்திலே தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது தெரியுமா?… துன்பம், நம்பிக்கை – வறட்சி, முடிவற்ற சோகம்…”

தன்னை மறந்த வெறியில் கூத்தாடும் பித்தனுக்கா இவ்வார்த்தைகள் செவியில் விழப்போகின்றன!

வீணையை மீட்டிக்கொண்டு வேறு திசை பார்த்து நடந்தார் நாரதர்.

4

கைலயங்கிரியிலே கண்ணைப் பறிக்கும் தூய வெண்பனி மலையடுக்குகள் சிவந்த தீ நாக்குகளைக் கக்குகின்றன.

திசையும் திசைத் தேவர்களும், யாவரும் யாவையும் எரிந்து மடிந்து ஒன்றுமற்ற பாழாக, சூன்யமாகப் போகும்படி பிரான், கோரச்சுடரான் நெற்றிக்கண்ணைத் திறந்து, தன் தொழில் திறமையில் பெருமிதம் கொண்டு புன்னகை செய்கிறான்! கண்ணில் வெறியின் பார்வை!

பார்த்த இடங்களில் எல்லாம் தீ நாக்கு நக்கி நிமிர்கிறது!

இடியும் மின்னலும், இருளும் ஒளியும் குழம்பித் தறிகெட்டு நசிக்கின்றன.

இக்குழப்பங்களையும் மீறி ஒரு சிறு குழந்தை அவனது காலடியை நோக்கி ஓடி வருகிறது.

தோலாடையைத் தன் தளிர் விரல்களால் பற்றி இழுக்கிறது.

பிரான் குனிந்து பார்க்கிறான், புன்சிரிப்போடு.

“அழிப்பதற்குச் சர்வ வல்லமை இருக்கிற தெம்பில் வந்த பூரிப்போ இது?” என்கிறது குழந்தை.

“சந்தேகமா! நீதான் பார்க்கிறாயே!” என்கிறான் பரமன்.

“உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியும். உம்மை அழித்துக் கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக் கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்றுவந்த பின்பு நெஞ்சைத் தட்டிப் பார்த்துக்கொள்ளும்!” என்று சொல்லிக் கொண்டே கருகி நசித்தது அக்குழந்தை.

(முற்றும்)

கலைமகள், மே 1938

License

மனக்குகை ஓவியங்கள் Copyright © by manarkeni. All Rights Reserved.