77 நினைவுப் பாதை
நினைவுப் பாதை
1
மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள். தம்பதிகள் இருவரும், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேல், வாழ்க்கையின் மேடு பள்ளங்களையெல்லாம் ஒன்றாகவே கடந்து வந்திருக்கின்றனர். வள்ளியம்மையாச்சி இறந்து போனாள். ஏதோ தெய்வ சங்கற்பம் அப்படி. இன்று காடேற்று (இரண்டாம் நாள் கிரியை). நீண்ட நாள் வியாதி ஒன்றும் இல்லை. போன சனிக்கிழமை புழக்கடையில் கால் வழுக்கி விழுந்தாள். இடுப்பிலும் விலாவிலும் ஊமையடி. அதில் படுத்தவள் தான் எழுந்திருக்கவில்லை.
வயதில் மூத்தவர் இறந்தால், அழுகைக்கும் ஓலத்திற்கும் குறைவில்லாவிட்டாலும், வருத்தமிருக்காது. பெண்கள் ரஸித்து அழுவார்கள் – வார்த்தைகள் முத்து முத்தாய்க் கோவையாக வந்து விழும். அத்துடன் ஓரிரண்டு துளி கண்ணீரும் கலந்திருக்கலாம். ஆனால் அது அழுகிறவர்களின் சொந்த அந்தரங்க வருத்தத்தைப் பற்றியதாகயிருக்கும்.
அன்று இன்னும் விடியவில்லை. விடிவெள்ளி எதிர்வீட்டுக் கூரைக்கு ஒரு முழ உயரத்தில் தொங்குவது போல் தெரிகிறது. வாசல் தெளிக்கும் சப்தங்கூடக் காலையின் வரவை எதிரேற்கவில்லை. ஏன், ‘துஷ்டிக்காக’ (இழவுக்காக) அழுகிறவர்கள் கூட எழுந்திருக்கவில்லை என்றால்…
வைரவன் பிள்ளை வளைவின் வெளிக் குறட்டில், கோரைப் பாயின் மீது முழங்காலைக் கட்டிக் கொண்டு ஓர் உருவம் உட்கார்ந்திருக்கிறது. வேறு யாருமில்லை, அவர்தான். அன்று அவ்வீட்டில் தூங்காதவர் அவர் ஒருவர்தான். முழங்காலைக் கட்டியபடி, மேலே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். குறிப்பாக எதன் மீதும் பார்வையை உபயோகிக்கவில்லை. வெளியே, வாசலில், வீசிப் பலகையின் மேல் முழுதும் போர்த்த உடலங்கள், சமயா சமயங்களில் குறட்டை விட்டு, உயிர் இருப்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றன.
வைரவன் பிள்ளை மனது, அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு, மறுபடியும் மறுபடியும் வள்ளியம்மையாச்சியின் கிடத்தப்பட்ட கற்பனைப் பிரேதத்தின் மீது வந்து கவிகிறது.
2
ஏறக்குறைய இந்த ஐம்பது வருஷ காலத்திலும் அவர் வள்ளியம்மையாச்சியைப் பற்றி அவ்வளவாக – முதல் பிரசவத்தில் தவிர – பிரமாதமாக நினைத்தது கிடையாது… மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகிவிட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்து விரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டா இருக்கிறார்கள்?… விரல் ஒன்று போனால் ஐந்தென்ற நினைப்பு பிறக்கும்… அப்பொழுது அவர் மனக்கண் முன் வள்ளியம்மையாச்சி புதுப்பெண் கோலத்தில் தம் கைபிடித்து வந்த காட்சி தோன்றியது.
வைரவன் பிள்ளை தூங்குவதற்காக உட்கார்ந்த இடத்தருகில் ஒரு சிறு ஜன்னல் – பனங் கம்பு ‘அழி’ வைத்தது. உள்ளிருந்து குசுகுசு என்ற சப்தம்.
“ஏட்டி, அஞ்சு கொத்துச் சவடி (சங்கிலி) உனக்குன்னு தானேட்டி சொன்னா, பேச்சியம்மை கேக்கதுக்கு மின்னே நீ போய் உங்க தாத்தாக்கிட்டே கேட்டு வாங்கிக்க!”
“ஆமாம் எனக்குத் தூக்கம் வருதுங்கே – என்னைப் போட்டுப் படுத்தாதே!…” என்று வெடுக் கென்னும் ஓர் இளம் பெண் குரல்.
உடனே ‘வீல்’ என்று தொட்டிலில் அழும் குழந்தைக் குரல்…
“சவமெ, நீயும் ஆரம்பிச்சிட்டியா?… ஒன் வாய் ஓயாதா?… செத்த ஒரு நிமிட்டு சும்மா இரியாதா? எனக்குன்னு தான் வந்திட்டுதம்மா…!” என்ற அங்கலாய்ப்பு…
“அதாரது பாப்பாத்தியா…?” என்று நினைத்தார் வைரவன் பிள்ளை. அவள்தான் பிள்ளையின் நாற்பது வயதான முதல் புத்திரி பாப்பாத்தியம்மாள். அவளுக்கு, வயது வந்த ஒரு பெண்ணும், நான்கு வயதுச் சிறுவனும், பத்து மாதக் கைக்குழந்தையும் உண்டு…
3
இதைக் கேட்ட வைரவன் பிள்ளைக்குக் கைக்குழந்தை பாப்பாத்தி, சமைந்து (பருவமெய்தி) சடங்கு நடக்கும் போது அவள் நின்ற கோலம்… அப்புறம் மணப் பந்தலில் அவள் நின்ற காட்சி… எல்லாம் அவர் மனக்கண் முன் சலனப்படமாக விரிந்தது. பாப்பாத்தி எப்பொழுதும் அப்படித்தான்… அவள் பிறக்கும்போதுதானே கடை முறிந்து நாலு பக்கமும் பணமுடை… கஷ்டத்தில் வளர்ந்த பெண் – காசில் இருந்த கருத்து அளவுக்கு மீறி வளர்ந்துவிட்டது… அவள் மகளுக்கென்று சொல்லியிருந்தால், அவள் மகளுக்குத்தானே. அதற்குள் எதற்கு இந்தச் சின்னப் புத்தி… “ஏட்டி, இந்த வெத்திலையைத் தட்டு” என்று எடுத்த வாய் – அதிகாலையில் எழுந்திருந்ததும் அவர் போட்டுக்கொள்வதற்காகத் தயாராக வெற்றிலையை இடித்து வைத்தல் அவரது பல் போனதிலிருந்து தட்டாது நடந்துவரும் பழக்கம் – சடக்கென்று நின்றது… உள்ளத்தின் குழப்பம் புதிய மாறுபாட்டில் மேலும் குழம்பியது.
வீட்டில் பக்கத்தில் நின்று குடிமகன் சுடலை ஊதிய இரட்டைச் சங்கின் அலறல் மறுநாள் வந்ததைப் பிள்ளையவர்கள் பிரக்ஞைக்குக் கொணர்ந்தது… அதே சமயத்தில் உள்ளிருந்து பெண்களின் அழுகைக் குரல், சங்கத்தின் ஏக்க அலைகளுடன் தொடர்ந்து மனப் பாரத்தை அதிகப் படுத்தியது… வைரவன் பிள்ளையின் பார்வை விடிவெள்ளியை நாடியது… அது அவர் கண்ணில் தென்படவில்லை. எதிர்வீட்டுக் கூரை, முன்பே அதை விழுங்கிவிட்டது. கூரையின் உச்சிக்கோடுதான் வானத்திற்கு ஓர் எல்லை காட்டியது.
தெருக்கோடி முனையில் ‘ஜல் ஜல்’ என்ற மாட்டுச் சலங்கையின் சப்தம்… சிறிது நின்றது. யாரோ இறங்கினர்… தெருக் கோடியிலிருந்தே… “என்னைப் பெத்த தாயாரே!” என்ற பிலாக்கணம்… பார்வதியும் வந்து சேர்ந்துவிட்டாள் என்ற திருப்தி வைரவன் பிள்ளைக்கு… பார்வதி கடைக்குட்டிப் பெண்… தூரத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள்…
அப்பொழுது விசிப்பலகை ஒன்றிலிருந்த உருவம் எழுந்து, சடசடவென்று சோம்பல் முறித்த வண்ணம், “சம்போ மகாதேவா!” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே, “பாட்டையா, நல்லாத் தூங்கினியளா? அதாரது?” என்று சொல்லிக்கொண்டே, வண்டி வந்த திசையை நோக்கியது…
அதற்குள் வண்டி மெதுவாக வாசற்படியில் நின்றது… முன்னால் பார்வதி நெஞ்சிலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்… உள்ளே அழுகைக் குரல் பலமாயிற்று…
“கரிசங்கொளத்து மாப்பிள்ளை வாராஹ!” என்று சொல்லிக்கொண்டே பக்கத்து வீட்டுக் கள்ளர் பிரான் பிள்ளை – அவர்தான் மற்றொரு பலகையில் படுத்திருந்தவர் – எழுந்திருந்தார்.
4
மாப்பிள்ளை மௌனமாக வந்து பிள்ளை யவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தார்… தலை குனிந்த வண்ணம் கேட்டார்: “அத்தைக்கு என்ன செஞ்சது? லெட்டர்லெகூட ஒண்ணையும் குறிப்பிடலியே…!” வைரவன் பிள்ளை பதில் பேசவில்லை.
“ஆச்சிக்கு என்ன? கெடப்பிலே கெடந்தாளா என்ன… அண்ணைக்கு என்ன, கால் கொஞ்சம் தவறிச்சு. நல்ல ஊமையடி… இப்படி வரும்னு யார் நெனச்சா… வயசாச்சில்லியா? எல்லாம் தெய்வ சங்கல்பம். அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்!… ஆச்சி திரேகம் கல்லுன்னா கல்லுத்தான்… எண்ணைக்காவது ஒரு நா மண்டையிடிண்ணு தலையெச் சாச்சிருக்காளா?… அந்தப் பெரிய டாக்டரு இருக்கானே – அவன் எமன் தான்! – அவனே அவ்வளவு தான்னுட்டான்!” என்று வாசாமகோசரமாக விஷயத்தைச் சொல்லி, தேறுதலும் சொல்ல ஆரம்பித்தார் முதலில் எழுந்தவர்…
அப்பொழுதுதான் எழுந்த சுந்தரம் பிள்ளை, நெற்றியில் விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டே, “போன மாசமேதான் சுப்பு பிள்ளை அண்ணாச்சி சொல்லலே, ஆச்சிக்கு ஒரு கண்டமிருக்குன்னு!… நானும் அண்ணைக்கு விளை (விளையுமிடம்)யைப் பார்த்துட்டு வரப்போ பேசிக்கிட்டுதானே வந்தேன்… எல்லாம் வெள்ளிக்கிழமை களிஞ்சாத்தானின்னார்… காலன் வாரத்துக்கு கணக்கிண்ணும், நேரமிண்ணும் உண்டுமா?” என்று சொன்னார்.
வைரவன் பிள்ளை யோசனையைச் சுடலையின் மற்றொரு சங்கொலி கலைத்துக் குழப்பி அதனுடன் ஒன்று பட்டது.
அதற்குள் நன்றாய் விடிந்துவிட்டது.
வீட்டினுள்ளிருந்த நான்கு வயதுப் பையனொருவன் இடை அரைஞாண் கயிற்றில் மூலை மட்டும் சொருகிய பட்டுக் கரைத்துண்டு ஒன்றைப் பிரம்மப் பிரயத்தனம் செய்து மேலே இழுத்துப் போட்டும் முக்கால்வாசிப் பாகம் புழுதியில் புரள, வெளியே வந்து குறட்டின் மேல் ஏறினான்.
5
வைரவன் பிள்ளை, உணர்வற்ற நிலையிலே, அவனை ஒரு கையால் அணைத்தார்.
அவர் பக்கம் ஒண்டிக்கொண்டு அவரை அண்ணாந்து ஏறிட்டுப் பார்த்த வண்ணம், “நாந்தான் ஆச்சிக்கு நெய்ப் பந்தம் பிடிச்சேனே!” என்று தன் திறமையை விளக்கிக் கொண்டான் சிறுவன்.
“பயலெப் பாருங்களேன்!… ஏலே, ஒங்க ஆச்சியே எங்கடா?” என்றார் சுந்தரம் பிள்ளை.
“செத்துப் போயிட்டா!” என்று அர்த்தமில்லாமல் சொன்னான் சிறுவன்.
“அது பசலெ, அதுக்கென்ன தெரியும்?” என்றார் வைரவன் பிள்ளை.
“அவனா? வலுப் பயல்லே, அவனுக்கா தெரியாது!… ஏலே, ஒங்க ஆச்சியை…” என்பதற்குள், உள்ளிருந்து தாம்பாளத்தில் இளநீர், பால் முதலிய கிரியைக்கு வேண்டியவற்றையும், குடம், சொம்பு முதலியவற்றையும் எடுத்து வந்து வைத்த கள்ளர்பிரான் பிள்ளை, “எல்லாம் காலா காலத்திலே போயிட்டு வந்திட்டா நல்லதுதானே! நீங்க மேல வீட்டு அண்ணாச்சியைச் சத்தங் காட்டுங்க!…” என்றார்.
சுடலை மறுபடியும் மெழுகு வைத்த இரட்டைச் சங்கை முழக்கினான். எல்லோரும் துண்டை உதறித் தோள் மேல் போட்டுக்கொண்டு எழுந்தனர். சுடலை முன்னால் முழக்கிக் கொண்டே நடந்தான்.
வைரவன் பிள்ளை கைத்தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடந்தார். அவருக்கு முன்னால், தலை முண்டிதமான அவருடைய ஒரே மகன் செல்லுகிறான்… மனசிலோ நடையிலோ கவலை தள்ளாடவில்லை.
வைரவன் பிள்ளை மனக்கண்முன், மணக் கோலத்தில் பதினாறு வயதில் பார்த்த வள்ளியம்மை யாச்சியின் உருவம் நின்றது…
சுடலை சங்கை முழக்கினான்…
இனிப் பார்க்கப் போவதை வைரவன் பிள்ளை மனது நினைக்க மறுத்தது…
“ஏலே நீயுமா? திரும்பலையா?” என்ற சுந்தரம் பிள்ளை குரல்… பேரன் தொடர்வதைத் திரும்பிப் பார்த்தார்.
மறுபடியும் சுடலை சங்கை முழக்கிக் கொண்டே சந்து திரும்பினான்.
(முற்றும்)
தினமணி, வருஷமலர் – 1937