1 மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு. தமிழர் வாழ்க்கைக் கணக்குப் பொறிக்கப் பெற்றுள்ள பேரேடு, பாடல்கள் நானுறே. படிக்கத் தொடங்கி விட்டாலோ, பெறும் அனுபவங்கள் பலகோடி. மனக் கோணலை நிமிர்க்கும் ஒரு பாடல். வளைந்த முதுகை நேராக்கும் மற்றொரு பாடல். சிந்தனை வளர்க்கும் புறப் பாடல். செயலனாக்கும் அப்பாடல். அறம் வளர்க்கும். அறிவைப் பெருக்கும். வீரம் ஊட்டும். அன்பை விளைவிக்கும். ஊக்கம் நிரப்பும். உணர்ச்சியூட்டும். கடமை உணர்த்தும். வீறு பெற்றெழச் செய்யும் வரலாறுகள், கண்ணில் கனல் எழுப்பும் காட்சிகள், மார்பை விம்மச் செய்யும் வீரச் செய்திகள்; இப்படி எத்தனையோ வியத்தகு
செய்திகளைப் புறப் பாடல்களில் பார்க்கலாம்.
இதுவரை, புலவர்களே இப் பேரேட்டிற்குத் தனி உரிமை பாராட்டி வந்தனர். இந்நிலை மாற வேண்டும். புற நானூறு பொது உடைமை – பொதுச் சொத்தாக வேண்டும். எழுத்துக் கூட்டிப் படிப்பவருங்கூடப் புறநானூற்றைப்படித்துப்பயன் துய்க்கவேண்டும். இதற்காக எழுந்த சிறு முயற்சியின் விளைவே இந்நூல். புறநானூற்றுப்பாடல்கள் 400 உள்ளது. அதில் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் 113 பாடல்கள் கதை வடிவில் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
முல்லை பிஎல். முத்தையா