78 நல்ல நாடு
“அரசே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுவாயா?” என்றாள் ஒளவை.
“கேள், பார்க்கலாம்” என்றான் அதிகமான்.”
“நல்ல நாடு எது?”
“ப்பூ இதுதானா கேள்வி. அழகான ஊர்கள், நகரங்கள் இருக்கவேண்டும். வானளாவிய மாளிகைகள் இருக்க வேண்டும்.”
“இல்லை” இல்லை”
“பெரிய காடுகள் நிறைந்திருக்க வேண்டும். காடுகள் நாட்டிற்கு நல்ல அரணாக விளங்கும்”.
“அதுவும் இல்லை”
“இப்பொழுது சொல்லி விடுகிறேன். நாடு, மேட்டு நிலமாக இருக்க வேண்டும். அப்படியானால் மழையாலோ வெள்ளத்தாலோ பாதிக்கப்படாது”
“மழை பெய்யா விட்டால்”
“உண்மை விளங்கி விட்டது. நாட்டில் பள்ளத்தாக்குகள் நிறைய இருக்கவேண்டும். எங்கும் வளம் கொழிக்கும்”
“அரசே கேள். ஊர் நிறைந்திருந்தாலும் நாடல்ல. காடு மிகுந்திருந்தாலும் நாடாகாது. மேடோ பள்ளமோ நாடாகி விடாது. நல்ல ஆடவர் நிறைந்திருக்கும் நாடே நல்ல நாடு.”
அதிகமான் அதிசயத்தில் ஆழ்ந்தான்.