="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

20 என்ன வாழ்க்கை!

19. என்ன வாழ்க்கை!

வறுமையுற்ற பாணன் அவன். பாவம், உடல் மெலிந்திருந்தான்.

அவன் சுற்றத்தாரோ, தோலுரிக்கப் பட்ட உடும்பு போன்று, விலாப் புறந் தெரிய இளைத்துக் களைத்திருந்தனர். பாணன் வெறுப்புடன் கூறினான்:

என்ன வாழ்க்கை யாழை மீட்டிப் பாடினால், அதனைக் கேட்போர் பலராயினும், அதன் அருமையை அறிவோர் சிலரே.

அவர்கள் தரும் பரிசு, பலரைக் காப்பதற்குப் போதுமோ? மேலும், மேலும், அது பல நாட்களுக்குக் கானுமோ?

பிழைப்புக்கு யாழை முதலாய்க் கொண்ட பாண சாதி பிழையுடையது என்று வருந்தி நின்றான்.

சோழன் நலங்கிள்ளியிடம் பரிசு பெற்றுச் சென்ற கோவூர்கிழார், வருந்தும் அப்பாணனைக் கண்டார். அவர், உள்ளம் நைந்தது…பாண! நான் சொல்வதைக் கேள்! நேரே உறந்தைக்குச் செல்! சோழன் நலங்கிள்ளியைப் பார்! அவன் நாடு, உயிர்கட்குத் தாய்ப் பால் போன்று சுரந்துTட்டும் காவிரியால் வளம் பெற்றது!

கள் வழிந்தோடும் உறந்தையின் தெருக்களில் எச்சரிக்கையாய் நட! கால் வழுக்கி விழ நேரும்…வழியிலே யானைகள் தென்படும்! அவற்றைக் கண்டு அஞ்சி விடாதே. அவை, பகைமேற் செல்லும் விருப்புடையவை வீரர் அதட்டுவர். அதற்கும் அஞ்சாதே அவர்களும் போர்க்களம் போகும் விருப்புடையர்! நேரே அரசனைச் சென்று பார். அவனும் போர்க்களம் போகும் விருப்புடையவன்தான். எனினும், இரவலர்க்குக் கொடுத்த பின்னரே, அவன் கை வாளையேந்தும். அவன் கையால் நீ ஒரு முறை பரிசு பெற்றால் போதும்-பின்னர் செவிட்டுச் செவியினர் வாயில்களைத் தேடி செல்ல நேராது அத்தகைய பெரும் பொருள் அளிக்கும் அண்ணல் அவன் என்றார் கோவூர் கிழார், இருவரும் சற்று நேரம் பெருமூச்செறிந்து நின்றனர்.

பாணன் மனக்கண் முன் உறையூர் தோன்றியது. அவனது யாழினுக்கு மயங்கும் யானை தெரிந்தது. வீரர் தெரிந்தனர். அரண்மனை தெரிந்தது. அரசன் கை பாணனை நோக்கி நீண்டது. பாணன் கண்கள் பனித்தன. அவன், திடீரென்று தன் முன் நின்ற புலவரைத் தழுவியவாறு அழுதான்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to என்ன வாழ்க்கை!, except where otherwise noted.

Share This Book