="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

9 8. வீரக் குடும்பம்

8. வீரக் குடும்பம்

“அதோ அந்தப் பெண்ணைப் பார்த்தீர்களா?” ஒக்கூர் மாசாத்தியார் தம்மிடமிருந்த மற்றோர் புலவருக்குச் சுட்டிக் காட்டினார்.

“அந்தக் குடிசை வாயிலில் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாளே, அந்தப் பெண்ணைத்தானே சொல்லுகிறீர்கள்?”

“ஆமாம் அவளேதான்!”

“அவளுக்கு என்ன?” “சொல்லுகிறேன்! அந்தப் பெண்ணின் வீரத்தையும், துணிவையும் இப்போது நினைத்தாலும் அந்நினைவைத் தாங்க முடியாது என் நெஞ்சு அழிந்துவிடும் போலிருக்கிறது.”

“வெள்ளை உடையும் திலகமில்லாத நெற்றியும், பூவில்லாத கூந்தலுமாகத் தோன்றுகிறாளே! அப்படியானால்.”

“ஆம், அவள் கணவனை இழந்தவள்தான்.”

“ஐயோ! பாவம். இந்தச் சிறு வயதிலேயா?”

“கணவனை மட்டும் என்ன? குடும்பம் முழுவதையும் இழந்தாள் என்று கேட்டிர்களானால் இன்னும் வியப்பு அடைவீர்கள்.”

“சொல்லுங்கள்! புனிதவதியாகத் தோன்றுகிற இவள் வரலாறு முழுவதையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.”

“வீரத்தையே கடவுளாக வணங்குகின்ற பழங்குடியில் தோன்றியவள் இவள், உயிரையும் உடலையும்விடமானத்தையும் ஆண்மையையும் பெரிதாகக் கருதுகின்ற குடும்பம் அது மூன்றாம் நாள் வேற்றரசன் நம் நாட்டின் மேல் படையெடுத்து வந்தான் அல்லவா? அன்று இவளுடைய தமையன் போர்க்களத்திற்குச் சென்றான். இவளும் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் மகிழ்ச்சியோடு வழியனுப்பினர். வெற்றி வாகைசூடித் திரும்பி வருமாறு அவனை வாழ்த்தினர். அவன் யானைகளை எதிர்த்துப் போர்புரிவதில் வல்லவன். போரில் பகைவர்களின் யானைப் படைகளைச் சின்னாபின்னாமாக்கினான். எல்லோரும் வியக்குமாறு போர் செய்து இறுதியில் போர்க்களத்திலேயே இறந்து போனான் அவன். வீட்டுக்கு வர வேண்டியவன் விண்ணகம் சென்றுவிட்டான். வெற்றிமாலை சுமக்க வேண்டிய தோள்கள் போர்க்களத்து இரத்தத்தில் மிதந்தன. செய்தி யறிந்தது வீரக்குடும்பம். வருத்தமும் திகைப்பும் வாட்டமும் ஒருங்கே அடைந்தது. ஆனால் அவையெல்லாம் ஒரே ஒரு கணம்தான். மறுகணம் இவள் தன் ஆருயிர்க் கணவனை அழைத்தாள்.”

“நம் குடும்பத்தைப் பெயர் விளங்குமாறு செய்ய வேண்டும். நம்முடைய வகையில் யாராவது ஒருவர் போர்க்களத்தில் இருந்தால்தான் அது முடியும்”

“ஆகா! நீ இதைச் சொல்லவும் வேண்டுமா? இதோ, இப்போதே, நான் புறப்படுகிறேன். இந்தக் குடும்பத்தின், வீரப் பெருமையைக் காப்பதில் உன் கணவனாகிய எனக்கும் பெருமை உண்டு”

“நல்லது சென்று வெற்றி வாகை சூடி வாருங்கள்!” கண்களில் நீர் மல்க அவள் விடை கொடுத்தாள். கடமை அவனைப் போருக்கு அனுப்பியது! காதல் ‘ஏன் அனுப்புகின்றாய்?’ என்று கேட்டது. காதலின் கேள்விதான் அந்தக் கண்ணீர்.

அவள் வழியனுப்ப அவன் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது வெளியே விளையாடச் சென்றிருந்த அவர்கள் புதல்வன், சிறுபையன் குடுகுடுவென்று எதிரே ஓடி வந்தான்.

“அப்பா! நீ எங்கேப்பா போறே? சீக்கிரமா, திரும்பி வந்துடுப்பா, வராம இருக்கமாட்டியே!”

அவன், அவள், இருவர் கண்களையுமே கலங்கச் செய்து விட்டது சிறுவனின் மழலை மொழிக் கேள்வி.

“ஆகட்டுண்டா! கண்ணு, சீக்கிரமாகத் திரும்பி வந்துவிடுகிறேன்.”

“நீ வல்லேன்னர நானும் ஒன்னெ மாதிரி கத்தி, வேலு எல்லாம் எடுத்திக்கிட்டுச் சண்டை நடக்கிற எடத்துக்குத்தேடி வந்துடுவேன்!”

பிரியும் வேதனையை மறந்து ஒரிரு விநாடிகள் அவர்களைச் சிரிப்பில் ஆழ்த்தியது குழந்தையின் அந்தப் பேச்சு.

அவன் சிறுவனிடமும் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு போர்க்களம் நோக்கிச் சென்றான். அமைதியை வாழ வைக்கும் பூமியிலிருந்து ஆத்திரத்தை வாழவைக்கும் பூமிக்கு
நடந்தான். அன்பை வணங்கும் பூமியிலிருந்து ஆண்மையை வணங்கும் பூமிக்குச் சென்றான். என்ன செய்யலாம்? அதுதானே கடமை!

போர்க்களத்தில் வரிசை வரிசையாக நின்ற பகைவர் படைகளின் இடையே ஆண்சிங்கத்தைப் போலப் புகுந்து போர் செய்தான் அவன். அதுவரை அந்தக் களத்தில் யாருமே கொன்றிருக்க முடியாத அத்தனை பகைவர்களைத் தான் ஒருவனாகவே நின்று அழித்தான். இறுதியில். இறுதியில் என்ன? முதல்நாள் அவள் தமையன் போய்ச்சேர்த்த இடத்துக்கு அவனும் போய்ச் சேர்ந்தான். வீரர்கள் வாழ வேண்டிய உலகம் இது இல்லையோ? என்னவோ?

கணவனின் மரணச் செய்தி அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சிறிதுநேரம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளுக்கு. உணர்வுகள் மரத்துப் போயின. உடலும் மரத்துப் போய்விட்டது. அழக்கூடத் தோன்றாமல் சிலையென நின்றாள். தன் நினைவு வந்தபோதுகூட அவள் அழவில்லை. கணவனை இழந்தவள் செய்யவேண்டிய காரியங்களை மட்டும் அமைதியாகச் செய்தாள்.

நெற்றியில் திலகம் அழிந்தது.கழுத்தில் மங்கலத்தின் சின்னம் நீங்கியது. கூந்தல் பூவைப் பிரிந்தது. குண்டலங்கள் செவியைப் பிரிந்தன. தண்டை பாதங்களைப் பிரிந்தன. வளைகள் கையைப் பிரிந்தன, அவளைப் பிரிந்த அவனைப் போல,

அவனை விதி பிரித்துவிட்டது. இவைகளை அவளாகவே பிரித்துவிட்டாள். இதுதான் இதில் ஒரு சிறு வேறுபாடு. சிறுவனை அழைத்தாள். அவன் ஓடி வந்தான். அவள் அவனை அனைத்து உச்சி மோந்தாள்.

“ஏம்மா! ஏதோ மாதிரி இருக்கே? கையிலே வளே எங்கேம்மா? காதுலே குண்டலம் எங்கேம்மா?”

“எல்லாம் இருக்குடா கண்ணு!”

“அப்பா ஏம்மா இன்னும் வரலே!”

“இன்னமே ஒங்கப்பா வரவே மாட்டார்டா கண்ணு; வர முடியாத எடத்துக்குப் போயிட்டார்டா” அவள் குழந்தையைக் கட்டிக் கொண்டு கோவென்று கதறி யழுதாள். சிறுவனுக்கு எதுவும் விளங்கவில்லை. அவன் மிரள மிரள விழித்தான்.

“இரும்மா! வரேன்” குழந்தை வேகமாக வீட்டிற்குள் போனான்.

“எங்கேடா போறே?” சிறுவன் உள்ளேயிருந்து கையில் எதையோ எடுத்துக்கொண்டு திரும்பி வந்தான்.

அவள் பார்த்தாள். அவன் கையில் ஒரு நீண்ட வேல் இருந்தது.துக்க முடியாமல் தூக்கிக்கொண்டுவந்தான்.அவள் நீர் வடியும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“எதுக்குடா இது?”

“நான் போர்க்களத்துக்குப் போறேம்மா! அப்பாவெத் தேடப் போறேன்.”

அவள் உள்ளம் பூரித்தது. புலிக்குப் பிறந்தது பூனையாய் விடுமா? என்று எண்ணிக் கொண்டாள். தொலைவில் அன்றைய போர் தொடங்குவதற்கு அறிகுறியாகப் போர்ப்பறை முழங்கிக் கொண்டிருந்தது.

“கொஞ்சம் இருடா கண்ணு!” அவன் கையில் இருந்த வேலை வாங்கிக் கீழே வைத்தாள். உள்ளே போய் ஒரு வெள்ளை ஆடையை எடுத்துக்கொண்டு வந்தாள். போருக்குச் செல்கிறவர்கள் கட்டிக் கொள்கிற மாதிரி அதை அவனுக்குக் கட்டிவிட்டாள். கருகருவென்று சுருட்டைவிழுந்து எழும்பிநின்ற அவன் தலைமயிரை எண்ணெய் தடவி வாரினாள். அவனால் தூக்க முடிந்த வேறு ஒரு சிறு வேலை எடுத்துக் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்தாள்.

“நான் போயிட்டு வரட்டுமாம்மா?”

“போயிட்டு வாடா கண்ணு!”

வாயில் வழியே போருக்குச் சென்று கொண்டிருந்த வேறு சில வீரர்களுடன் அவனையும் சேர்த்து அனுப்பினாள். சிறுவன் தாயைத் திரும்பித் திரும்பித் தன் மிரளும் விழிகளால் பார்த்துக் கொண்டே சென்றான். கணவன் இறந்த செய்தியைச் சிறுவன் அறிந்துகொள்ளாமல் அவனையும் தன் குடும்பத்தின் இறுதி வீரக் காணிக்கையாக அனுப்பிவிட்ட பெருமிதம் அவள் மனத்தில் எழுந்தது.

அந்தப் பெருமிதத்தோடு அவள் வீட்டு வாயிலிலேயே இன்னும் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்!”ஒக்கூர் மாசாத்தியார் கூறிமுடித்தார். அதுவரை கேட்டுக் கொண்டிருந்த புலவரிட மிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.

ஒரு வீரக் குடும்பத்தின் புகழ் அந்தப் பெருமூச்சு வழியே காற்றுடன் பரவிக் கலந்தது!

கெடுக சிந்த கடிதிவன் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
யானை எறிந்து களத்தொழிந் தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே. (புறநானூறு -279)

மூதில் மகளிர் = பழங்குடி மகளிர், மேனாள் = மூன்றாம் நாள், செரு=போர், உற்ற=நடந்த தன்னை = தமையன், எறிந்து= கொன்று, நெருதல்=நேற்று, கொழுநன் = கணவன், பெருநிறை = பெரிய படை வரிசை வெளிது = வெள்ளையுடை உடீஇ = உடுத்து, பாறு = பறட்டை, நீவி = தடவி, செருமுகம்= போர்க்களம்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 8. வீரக் குடும்பம், except where otherwise noted.

Share This Book