="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

13 12. எளிமையும் வலிமையும்

12. எளிமையும் வலிமையும்

மாலை நேரம். குதிரை மலையின் நீலச் சிகரங்களுக்கு அப்பால் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். தகடுர் வீதிகள் ஆரவாரமும் கோலாகலமும் நிறைந்து விளங்கிக்கொண்டிருந்தன. அந்த இனிய நேரத்தில் அதியமானும் ஒளவையாரும் புறநகரில் இருந்த பெரிய ஏரி ஒன்றின் கரை ஓரமாக உலாவிக் கொண்டிருந்தனர். தமிழ்த் தாயாகிய ஒளவையாரிடம் அரும் பெரும் பாடல்களையும் அறிவுரைகளையும் கேட்டுக் கொண்டே இயற்கை அழகு மிகுந்த இடங்களில் அவரோடு உலாவுவது அவனுக்கு எப்போதுமே மிகவும் விருப்பமான ஒரு காரியம்.

உலாவிக் கொண்டே வந்தவர்கள் ஏரியின் மிகப் பெரிய இறங்கு துறை ஒன்றின் அருகிலிருந்த மருதமரத்தின் அடியில் உட்கார்ந்தனர். அப்போது அந்தத் துறையில் அரண்மனையைச் சேர்ந்த பட்டத்து யானையைப் பாகர்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். ஊர்ச் சிறுவர்கள் யானையைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் ஒரு சிறிய கருங்கல் மலை கிடப்பதைப் போல கிடந்த யானையைக் காண்பதில் இளம் உள்ளங்களுக்கு ஒரு. தனி ஆர்வம்.
ஒளவையாரும் அதியமானும்கூடச் சிறிது நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு நீர் துறையின் புறமாகப் பார்வையை இலயிக்க விட்டனர்.

பாகர்கள் இரண்டு மூன்றுபேர் யானையின் உடம்பைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தனர். ஒரு பாகன் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்களில் சிலரைக் கூப்பிட்டான். அவனால் கூப்பிடப்பட்ட சிறுவர்கள் அவனுக்குப் பக்கத்தில் போய் நின்று “என்ன?” என்று கேட்டார்கள்.

“தம்பிகளா! உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன். செய்வீர்களோ?”

“என்ன வேலை? சொல்லுங்கள். முடிந்தால் செய்கிறோம்” சிறுவர்கள் மறுமொழி கூறினர்.”இதோ, இந்த யானையின் தந்தம் இருக்கிறது பாருங்கள்! நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து இதைத் தேய்த்துக் கழுவிவிட வேண்டும்.”

“ஐயய்யோ யானை கொம்பை அசைத்துக் குத்திவிடுமே” ஏககாலத்தில் எல்லாச் சிறுவர்களும் மிரண்டு அலறினர்.

“அதெல்லாம் உங்களை ஒன்றும் செய்யாது! நான் பார்த்5ಕ கொள்கிறேன். தைரியமாக அருகில் வந்து இரண்டு கொம்பு களையும் கழுவுங்கள்” பாகன் உறுதிமொழி கூறினான்.

சிறுவர்கள் பாகனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி யானையை நெருங்கி அதன் நீண்ட பருமனான தந்தங்கள் இரண்டையும் தேய்த்துக் கழுவத் தொடங்கினார்கள். யானை அசையாது தண்ணிரில் முன்போலவே கிடந்தது. சிறுவர்களுக்கு நம்பிக்கையும் துணிவும் அதிகமாகிவிட்டது. “யானை நிச்சய மாகத் தங்களை ஒன்றும் செய்யாது” என்ற தைரியம் இப்போது ஏற்பட்டுவிட்டது.

ஒரு சிறுவன் மத்தகத்தின்மேல் ஏறிப் பிடரியில் உட்கார்ந்து கொண்டு அடிக் கொம்பைக் குனிந்து தேய்த்தான். இன்னொருவன் கொம்பின் அடி நுனியைக் கழுவுவதற்காக யானையின் கடைவாய்க்குள் தன் சிறுகையை நுழைத்தான்.
மற்றொருவன் துதிக்கையின்மேல் தனது வலது பாகத்தை ஒங்கி மிதித்துக் கொண்டு கொம்பைத் தேய்த்தான். கால்மேல் ஏறி நின்றுகொண்டு வேலை செய்தான் வேறொருவன். அது யானை! பயப்படத்தக்கது என்ற எண்ணமே அந்தப் பிள்ளைகளின் மனத்திலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றியது. ஏதோ சிறு குன்றின் மேல் ஏறி விளையாடுவதுபோல எண்ணிக்கொண்டு அவர்கள் வேலை செய்தனர்.

அவ்வளவிற்கும் இடமளித்துக் கொண்டு அமைதியாக நீரிற்கிடந்தது யானை.

“அதியா பார்த்தாயா வேடிக்கையை”

“தாயே! உரிமை பெருகப் பெருகப் பயம் குறைந்து நம்பிக்கை வளர்கிற விதத்தை இது காட்டுகிறது!”

“அதியா யானை ஒன்றும் செய்யாது என்ற எண்ணமே இந்த இளம்பிள்ளைகளை இவ்வளவு தைரியசாலிகளாக்கி விட்டிருக் கிறது. சற்றுமுன் பாகன் அழைத்தபோது மிரண்டவர்கள் வேறு யாருமில்லை இதே சிறுவர்கள்தாம்.”

“ஆமாம்! நானும் கவனித்தேன் தாயே…!”

இதற்குள் யானையை நீராட்டி முடித்துவிட்டதால் பாகர்கள் சிறுவர்களை விலகிக்கொள்ளச் சொல்லிவிட்டு நன்றாகக் கழுவினர். பின்பு அதை எழுப்பிக்கொண்டு அரண்மனைக்கு இட்டுச் சென்றனர்.

இருட்டிவிட்டதால் அதியமானும் ஒளவையாரும்கூட அரண்மனைக்குத் திரும்பினர்.யானையையும் அதைச் சிறுவர்கள் பயப்படாமல் தந்தம் கழுவிய நிகழ்ச்சியையும் இருவருமே மறக்கவில்லை.

ஏழெட்டு நாட்களுக்குப் பின்பு ஒரு நாள் நண்பகல் வெயில் அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது. அதியமானும் ஒளவை யாரும் அரண்மனை மேல்மாடத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று தெருவில் மக்கள் பயங்கரமாக அலறிக் கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் ஒடுகிறாப்போல ஒலிகள் கேட்டன. இடி முழக்கம்போல யானை பயங்கரமாகப் பிளறிக்கொண்டு வீதியதிரப் பாய்ந்தோடி வரும் ஒசையும் அதை யடுத்துக் கேட்டது.

அதியமான் துணுக்குற்று எழுந்திருந்தான். ஒளவையார் ஒன்றும் புரியாமல் அவனைப் போலவே பதறி எழுந்திருந்தார்.

ஒரு காவலன் பதறிய நிலையில் அங்கு ஓடிவந்தான்.

“அரசே பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அது பாகர்களுக்கு அடங்காமல் தெருவில் பாய்ந்து தறிகெட்டு ஒடுகிறது. என்னசெய்வதென்றே தெரியவில்லை.நகர் எங்கும் ஒரே குழப்பமும் பீதியும் மலிந்துவிட்டன.”

காவலன் கூறியதைக் கேட்ட அரசன் விரைந்தோடி மேல் மாடத்தின் வழியே தெருவில் பார்த்தான். ஒளவையாரும் பார்த்தார். பிரளய காலம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று வந்துவிட்டாற்போலத் தெருவை அதம் செய்து சீரழித்துக் கொண்டிருந்தது மதங்கொண்ட பட்டத்து யானை, அதன் கூரிய பெரிய வெள்ளைக் கொம்புகளில் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. எத்தனை மக்களைக் குத்திக் கொன்றதன் விளைவோ அது? கண்கள் நெருப்பு வட்டங்களாய்ச் சிவந்து மதநீரை வடித்துக் கொண்டிருந்தன. மலை வேகமாக உருண்டு வருவதுபோல எதிர்ப்பட்டன எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளி ஒடிக் கொண்டிருந்தது யானை.

“என்ன செய்வது? எப்படி அடக்கச் சொல்வது” ஒன்றுமே தோன்றாமல் நின்றுகொண்டிருந்தான் அதியமான்.

“எல்லாப் பாகர்களையும் ஒன்றுகூடி முயற்சிசெய்து, எப்படியாவது யானையை அடக்குமாறு நான் கட்டளை யிட்டதாகப் போய்க் கூறு” அவன் காவலனை ஏவினான். காவலன் பாகர்களைத் தேடி ஓடினான்.

“அதியா பார்த்தாயா..?” ஒளவையார் சிரித்துக்கொண்டே அவனை நோக்கிக் கேட்டார்.

“எதைக் கேட்கிறீர்கள் தாயே? யானையின் மதத்தைத் தானே?”

“ஆமாம்! அதுதான். அன்று ஏரியில் சிறுபிள்ளைகள் கொம்புகளைக் கழுவும்போது சாதுவாகத் தண்ணிரில் கிடந்த இந்த யானையின் மதம் இன்று எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது பார்த்தாயா?”

“பயங்கரம் மட்டுமா? எத்தனை உயிர்களுக்குச் சேதம் விளைவித்ததோ?”

“அதியா! நீயும் இப்படி ஒரு மதயானை போன்றவன்தான்!” அதியமான் திடுக்கிட்டான். ஒன்றும் விளங்காமல் ஒளவையாரை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஊர்ச் சிறுவர்களிடம் கொம்பு கழுவப்படும்போது அமைதியாகக் கட்டுண்டு கிடந்த யானையைப்போல நீ புலவர்களாகிய எங்கள் அன்புக்கு மட்டும் கட்டுப்படுகிறாய். உன் பகைவர்களுக்கு முன்னாலோ, இதோ மதம் பிடித்து ஒடும் இந்த யானை மாதிரி ஆகிவிடுவாய்…”

புதிராகத் தொடங்கிய பேச்சு, புகழ்ச்சியாக மாறியதும் அதியமான் நாணத்தோடு தலை குனிந்தான். “அரசே பாகர்கள் யானையின் மதத்தை அடக்கிவிட்டார்கள்” என்று காவலன் வந்து கூறியபோதுதான் அவன் தலை நிமிர்ந்து நோக்கினான்.

எளிமை, வலிமையின் இயைபுக்கு இது ஒரு நல்ல சித்திரம்!

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே, மற்றதன்
துன்னருங்கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே! (புறநானூறு -94)

குறுமக்கள் = சிறுவர்கள், வெண்கோடு = தந்தம், கழாஅலின் = கழுவுதலால், களிறு = யானை, துன்னரும் = நெருங்க முடியாத, கடாஅம் = மதம்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 12. எளிமையும் வலிமையும், except where otherwise noted.

Share This Book