42 41. அன்பின் அறியாமை
அப்போது கார்காலம். மலை நங்கை தன் பசுமை கொழிக்கும் உடலில் நீலநிறப் பட்டாடை அணிந்தாற்போல முகில்கள் மலைச் சிகரங்களில் கவிந்திருந்தன. பொதினி மலையின் வளத்தைக் காண்பதற்குச் சென்றிருந்தான் பேகன். அவன் ஆவியர் குடிக்குத் தலைவன். பொதினி மலை அவன் ஆட்சிக்கு உட்பட்டது.
மலைமேல் மேக மூட்டமும் குளிர்ச்சியும் மிகுந்திருந் ததனால் சிலுசிலுவென்று குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. உடலில் குளிர் உறைத்ததனால் தோளில் தொங்கிய பட்டா டையை மார்பிலே போர்த்துக்கொண்டான் பேகன்.விலைமதிக்க முடியாத அந்தப் பட்டாடை குளிர் வேதனையிலிருந்து அவனைக் காப்பாற்றியது. குளிரினால் பறவைகள் கூட்டைவிட்டு வெளியே புறப்படவில்லை. வேடர்களும் மலையில் வாழும் பளிஞர்களும் அங்கங்கே நெருப்பு மூட்டிக்குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள். வானிலிருந்து பூந்தாதுக்களாகிய மாவை அள்ளித் தெளிப்பதுபோலச் சாரல் வேறு மெல்லிதாக வீழ்ந்து கொண்டிருந்தது.
அருவிகளையும் மலர்ச்செடிகளையும் உயரிய மரக்கூட்டங் களையும் கண் குளிரப் பார்த்தவாறே சென்று கொண்டிருந்தான் பேகன் வழியில் ஒரு சிறு பாறையின்மேல் அந்தக் காட்சியை அவன் கண்கள் கண்டன. பேகன் மனத்தில் இரக்கம் சுரந்தது. இயற்கையில் எந்த உயிரும் துன்பத்தை அனுபவிக்குமாறு விட்டுவிடக்கூடாது என்ற நல்ல உள்ளம் கொண்டவன் அவன். அதனால்தான் பாறைமேல் கண்ட காட்சி அவன் உள்ளத்தை உருக்கியது.
அங்கே ஒரு மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் உயரமான இடத்திலிருந்து ‘சோ’வென்று வீழ்ந்து கொண்டிருந்த அருவியின் சின்னஞ்சிறு நீர்த் திவலைகள் தெறித்துக் கொண்டிருந்தன. மயிலின் தலைக் கொண்டையும் தோகையும் தோகையிலுள்ள வட்டக்கண்களும் நடுங்கி உதறுவதுபோல மெல்ல ஆடிக் கொண்டிருந்தன. அந்த மயிலின் மெல்லிய உடல் முழுவதும் ‘வெடவெட’ வென்று நடுங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது பேகனுக்கு.
“ஐயோ! பாவம். இவ்வளவு அழகான பிராணி குளிர் தாங்க முடியாமல் நடுங்கிப் போய் ஆடுகிறதே? இதை இப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டால் குளிரில் விறைத்துப் போகுமே? நான் மனிதன். எனக்குக் குளிர் உறைத்தவுடன் போர்வையை எடுத்துப் போர்த்துக் கொண்டு விட்டேன். மலையில் யாராலும் பாதுகாக்கப்படாமல் வாழும் இந்த மயிலுக்குக் குளிர்ந்தால் இது என்னசெய்யும்? யாரிடம்போய் முறையிடும்? பாவம் வாயில்லாத உயிர்.”
அவன் மனம் எண்ணியது. அந்தக் காட்சியைக் காண விரும்பாமல் மேலே போய்விட எண்ணினான். ஆனால் அவன் அன்பு உள்ளம் அப்படிச் செய்யவிடவில்லை.
“கூடாது கூடவே கூடாது உலகத்தில் அழகு எங்கே எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை நாம் காப்பாற்ற வேண்டும். துன்பப்பட்டு வருந்தி அழியும்படியாக விட்டுவிடக் கூடாது.”
பேகன் அந்த மயிலுக்கு அருகில் சென்றான். தன் உடலைப் போர்த்திக் கொண்டிருந்த பட்டாடையை எடுத்தான். தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த மயிலின்மேல் அப்படியே அதை போர்த்தினான்.
மேலே போர்வை விழுந்ததனால் அஞ்சிக் கூசிய மயில் தோகையை ஒடுக்கிக் கொண்டு ஆடுவதை நிறுத்திவிட்டது.தான் போர்வையைப் போர்த்தியதால்தான் மயிலின் குளிர் நடுக்கம் நின்றுவிட்டது என்றெண்ணிக் கொண்டான் அவன். அந்த அழகிய பிராணிக்கு உதவி செய்து, அதன் துன்பத்தைத் தணிக்க முடிந்த பெருமிதம், திருப்தி, மகிழ்ச்சி எல்லாம் அவன் அகத்திலும் முகத்திலும் நிறைந்தன.தன் இன்பத்தை மற்றவர்களுக்கு அளித்து, மற்றவர்களுடைய துன்பத்தைத் தான் பெற்றுக் கொள்வதுதானே தியாகம்? அந்தத் தியாகத்தின் இன்பம் அப்போது அவனுக்குக் கிடைத்திருந்தது.
போர்வையற்ற அவன் உடலில் குளிர் ஊசியால் குத்துவது போல உறைத்தது. “அடடா! சற்று நேரத்திற்குமுன் இந்த மயிலுக்கும் இப்படித்தானே குளிர் உறைத்திருக்கும்? ஐயோ, பாவம்! அதனால்தான் அது அப்படிவெடவெட’வென்று நடுங்கி ஆடிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக அதன் துன்பத்தைத் தீர்த்துவிட்டோம். நாமாவது இந்தக் குளிரைப் பொறுத்துக் கொண்டே நடந்து போய்விடலாம்!”
நிறைந்த மனத்தோடும் திறந்த உடம்போடும் வந்த வழியே திரும்பி நடந்தான் அந்த வள்ளல். திடீரென்று பின்புறம் யாரோ கலகலவென்று சிரிக்கும் ஒலி கேட்டுத் திரும்பினான். பரணர் அருவிக்கரையிலுள்ள ஒரு மரத்தின் பின்புறமிருந்து வெளியே வந்தார்.பேகன் வியப்போடு அவரைப்பார்த்தான்.அவர் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டே வந்தார். பேகனுக்கு அதன் காரணம் விளங்கவில்லை.
“என்ன பரணரே! நீங்கள் இங்கே எப்பொழுது வந்தீர்கள்? எதற்காக இப்படி அடக்கமுடியாமல் சிரிக்கிறீர்கள்? எனக்கு: ஒன்றும் புரியவில்லை?”
“எப்படி அப்பா புரியும்? அன்பு நிறைந்த மனத்துக்கு அறிவு விரைவில் புலனாவது இல்லை. ஆனால், பேகா, நீ வாழ்க! உன் அறியாமையும் வாழ்க! அறியாமை ஒருவகையில் தடையற்ற அன்பிற்குக் காரணமாக இருக்கிறது, போலும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று. நீ செய்ததை எல்லாம் பாத்துக் கொண்டுதான் இருந்தேன்.”
“அறியாமை என்று நீங்கள் எதைக் கூறுகிறீர்கள் பரணரே! ஒரு அழகிய மயில் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து இரங்கி,அதற்குப்போர்வையை அளிப்பதா அறியாமை”
“பேகா! அந்த மயிலின் மேல் உனக்கு ஏற்பட்ட அன்பை நான் பாராட்டுகிறேன். ஆனால், நீ நினைத்ததுபோல அது குளிரால் நடுங்கவில்லை. மலைச் சிகரங்களில் தவழும் முகில் கூட்டங்களைக் கண்டு களிப்போடு தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. மேகத்தைக் கண்டால் ஆடுவது மயிலின் இயற்கை”
“அன்பின் மிகுதி அறிவை மறைத்துவிட்டது புலவரே!” பேகன் தலை குனிந்தான்.
“பரவாயில்லை பேகா வானிலிருந்து பெய்கின்ற மழை இது இன்ன இயல்புடைய நிலம்’ என்று தான் பெய்யக்கூடிய நிலங்களின் இயல்பை எல்லாம் அறிந்து கொண்டா பெய்கிறது? மழையைப் போலப் பரந்தது உன் அன்பு. அன்புக்கு அறியாமையும் வேண்டும். மற்றவற்றுக்குத்தான் அறியாமை கூடாது”
“அதோ, பார் அந்த மயிலை” பேகன் திரும்பிப் பார்த்தான். மயில் அவன் போர்த்திய போர்வையைக் கீழே உதறித் தள்ளிவிட்டுப் பாறையின் மற்றோர் மூலைக்குச் சென்று மறுபடியும் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது! அன்பு மிகுதியால் தான் செய்த தவறு அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது!
அறுகுளத் துகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறும்இடத் துதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்காற் பேகன்
கொடைமடம் படுத லல்லது
படைமடம் படான். (புறநானூறு -142)
அறுகுளம் = நீர் வற்றிய குளம், உவர்நிலர் = களர் நிலம், ஊட்டி = பெய்து, மாரி = மழை, மடம் = அறியாமை.