39 38. எவனோ ஒரு வேடன்!
கொல்லி மலையின் அடிவாரம். அது வளம் நிறைந்த பகுதி. புலவர் வன்பரணரும் அவரோடு வந்திருந்த இன்னிசை வாணர்களாகிய பாணர்களும் வழிநடைக் களைப்புத் தீர அங்கே தங்கியிருந்தனர். அன்றைய, பகற்பொழுதை அங்கே கழித்தாக வேண்டும்.
கொல்லி மலையில் மிருகங்கள் அதிகம். அதனால், வேட்டுவர்கள் பலர் எப்போதும் வில்லும் கையுமாகத் திரிந்து கொண்டிருப்பதைக் காணலாம். அவ்வாறு பல வேட்டைக் காரர்கள் வேட்டையாடுவதை வன்பரணரும் அவரைச் சேர்ந்தவர்களும் பொழுதுபோக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடம் மேடாக இருக்கும் பகுதியிலுள்ள ஒரு மலைக் குகை யாகையினால் அங்கே மிருகங்களால் தொல்லை நேர வழியில்லை.
சரியாக உச்சிப்போது வந்தது. வேட்டைக்காரர்கள் எல்லோரும் போய்விட்டனர். அப்போது புது வேட்டைக்காரன் ஒருவன் பெரிய யானை ஒன்றை அம்பு எய்து துரத்திக்கொண்டு அங்கே வந்தான். கம்பீரமான உருவத்தையுடைய அந்த வேடன் மார்பில் விலை மதிக்க முடியாத மணியாரங்களை அணிந்து கொண்டிருந்தான். மார்பு நிறையச் சந்தனம் பூசிக் கொண்டிருந்தான். பரந்த மார்பின் அழகை அது எடுத்துக் காட்டியது.அவனைப் பார்த்தால் யாரோ ஒரு சிற்றரசன் என்றோ, செல்வச் சீமான் என்றோ மதிக்கலாமே தவிர, கேவலம் வேட்டையைத் தொழிலாகக் கொண்டவன் என்று சொல்ல முடியாது. வன்பரணர் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார். சற்றேனும் பயமின்றி யானையைப் பின்பற்றி விரட்டிக் கொண்டிருந்தான் அவன்.
ஆனால் அடுத்த நொடியில் வேறு ஒரு பயங்கரமும் அவனெதிரே வந்து வாய்த்தது. அவனால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த யானைக்கு முன் ஒரு பெரிய வேங்கைப் புலி மகா கோரமாக உறுமிக் கொண்டே பாய்ந்தது. அந்த வீரன் வில்லை வளைத்தான். கூரிய எஃகு அம்பு ஒன்று அவன் வில்லிலிருந்து. “கிர் ரென்று பாய்ந்தது. என்ன வேடிக்கை? அந்த அம்பு யானையை ஊடுருவிப் புலியையும் ஊடுருவி இரண்டையும் கீழே வீழ்த்திவிட்டுப் புதரில் பதுங்கியிருந்த ஒரு புள்ளி மானைக் கீழே உருட்டித்தள்ளி அருகே மயிரைச்சிலிர்த்துக் கொண்டுநின்ற ஒரு முள்ளம் பன்றியைக் கிழித்துவிட்டு மரத்தடியில் புற்றின்மேல் கிடந்த உடும்பின் மேல்போய்த் தைத்தது.
‘என்ன வினோதம்? ஒரே ஒர் அம்பு! ஐந்து உடல்களை ஊடுருவி விட்டதே! வில் பயிற்சியிலேயே இது ஒரு சாமர்த்தியமான அம்சம். இதற்குத்தான் வல்வில் என்று பெயர் சொல்லுகிறார்கள் போலும்!’ வன்பரணர் ஆச்சரியத்தோடு சிந்தித்தார்.
அப்படியே அவனருகில்போய் அவனைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது அவருக்கு அங்கிருந்த பாணர் களையும் விறலியர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார். அவன் வேட்டையாடி வீழ்த்திய மிருகங்களைப் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான்.ஒரே அம்பினால் ஊடுருவிக் கொல்லப்பட்ட யானை, புலி, மான், பன்றி, உடும்பு எல்லாம் அடுத்து அடுத்து வரிசையாக இரத்தம் ஒழுகிட வீழ்ந்து கிடந்தன.
வன்பரணர் அவனருகில் போய் நின்று வணங்கினார்.அவன் பதிலுக்கு வணங்கினான். அவர் தாம் புலவரென்றும் தம்மோடு இருப்பவர்கள் இசைவாணர்கள் என்றும் கூறி அவனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பாணர் யாழ் வாசித்தார். விறலி மத்தளம் கொட்டினாள். மற்றொருவர் புல்லாங்குழலில் இசையைப் பெருக்கினார். வன்பரணர் அந்த இனிய வாத்தியங்களின் ஒசையோடு இயையும் படி அவனைப் பாராட்டி ஒரு பாடல் பாடினார்.
அவன் சிரித்துக் கொண்டே கழுத்திலிருந்த அழகான மணி மாலையையும் பொன் மாலையையும் கழற்றி அவரிடம் அளித்தான்.
“புலவர் பெருமானே! இதை என் அன்புப் பரிசிலாக ஏற்றுக்கொள்ளுங்கள். இதோ இந்த மான் இறைச்சியை நெருப்பில் வாட்டி உங்களுக்கு விருந்திடுவேன். என் விருந்தையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
வன்பரணர் பரிசிலைவாங்கிக் கொண்டார்.அவன் நெருப்பு மூட்டி வாட்டிக்கொடுத்தமான் இறைச்சியையும் தனியே அளித்த மலைத் தேனையும் மறுக்க மனமின்றி உண்டு மகிழ்ந்தார்கள் அவர்கள்.
“அப்பா, உன்னைப் பார்த்தால் சாதாரண வேட்டுவனாகத் தெரியவில்லையே? நீ யார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமோ?” வன்பரணர் நன்றிப் பெருக்கோடு அவனை நோக்கிக் கேட்டார்.
அவன் பதில் கூறாமல் அவரைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தான். புன்னகையா அது? மனிதப் பண்பின் ஒரு மின்னலாகத் தோன்றியது வன்பரணருக்கு.
“நீ யார் என்பதைச் சொல்லமாட்டாயா?”
“எவனோ ஒரு வேடன் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.”
“இல்லை! நீ வெறும் வேடனில்லை. வேடன் என்பதிலும் பெரிய தகுதி ஒன்று உனக்குள் அடங்கிக் கிடக்கிறது. நீ அதை என்னிடம் மறைக்கிறாய்…”
“புலவரே! அன்பும் ஆதரவும் நல்குவதற்குத் தகுதியா முக்கியம்.நல்ல மனம் ஒன்று போதாதா? அது என்னிடம் உண்டு.”
“பரவாயில்லை சொல்லிவிடு. நீ யார்?”
“புலவரே என்னை வல்வில் ஓரி’ என்பார்கள். இந்த மலைக்குத் தலைவன். வணக்கம். நான் வருகிறேன்” சொல்லிக் கொண்டே நகர்ந்தான். அவன். வியப்போடு நடந்து செல்லும் அவன் உருவத்தைப் பார்த்தார் அவர் ‘அவனா எவனோ ஒரு வேடன்? மனிதப் பண்பின் வீரசிகர மல்லவா அவன்?’ புலவர் தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
வேட்டுவரில்லை நின்னொப் போர்என
வேட்டது மொழியவும் விடா அன் வேட்டத்திற்
றான்.உயிர் செகுத்த மான்நிணப்புழுக்கோடு
ஆனுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பொருநன்
ஓம்பர் ஈகை விறல்வெய்யோனே! (புறநானூறு -152)
வேட்டது = விரும்பியது, செகுத்த- போக்கிய, புழுக்கு = வாட்டல், வேரி = தேன். தாவில் = குற்றமற்ற, மணிக்குவை = மணியாரம், விரைஇ= கலந்து, பொருநன் = வல்விலோரி.