36 35. வீரப் புலியும் வெறும் புலியும்
இருங்கோவேள் பெரிய வேட்டைக்காரன். வில்லும் கையுமாகக் காட்டுக்குள் நுழைந்துவிட்டான் என்றால் மிருகங்கள்
அவனுக்குப் பயந்து ஓடவேண்டுமே ஒழிய அவன் எந்த மிருகத்துக்கும் பயப்படமாட்டான். அவன் ஒரு சிற்றரசன்தான். ஆனால், அவனுடைய வேட்டையாடும் திறமை பேரரசர்களிடமெல்லாம் பரவியிருந்தது.
வழக்கம்போல அன்றும் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குப்போயிருந்தான் அவன்.முதன் முதலாகப் பார்வையில் சிக்கியது ஒரு முள்ளம் பன்றி. இருங்கோவேள் வில்லும் கையுமாகத் தன்னை நெருங்குவதை அது பார்த்துவிட்டது. உடனே உடலெங்கும் ஈட்டி முளைத்தாற்போலக் கூரிய மயிர்களைச் சிலிர்த்துக்கொண்டு ஒடத் தொடங்கிவிட்டது. இருங்கோவேள் அதை அப்படியே விட்டுவிட வில்லை. துரத்தினான். பன்றி மனம் போன போக்கில் காற்றினும் கடுகிச் சென்றது. மேடு, பள்ளம், புதர், நீரோடை, எல்லாம் கடந்து ஒடியது. அவனும் விடாமல் துரத்திக் கொண்டு ஓடினான்.
பன்றி ஓடுவதற்கு அலுக்கவில்லை. இளைக்காமல், சளைக் காமல் ஒடிக் கொண்டிருந்தது. இருங்கோவேள் துரத்துவதற்கே அலுக்கவில்லை. இளைக்காமல், சளைக்காமல் துரத்திக் கொண்டிருந்தான்.
ஒடிக் கொண்டிருந்த பன்றி ஒரு முனிவருடைய ஆசிரமத்துக்குப் பக்கத்திலிருந்த புதரில் போய்ப் பதுங்கியது. பன்றியைப் புதரிலிருந்து கலைத்து வெளியேற்றி வேட்டை யாடுவதற்கு முன்னால் வேறொரு பயங்கரக் காட்சியைத் தன் கண்களுக்கு முன்னால் அவன் கண்டான். மிக அருகில் தெரிந்த அந்தக் கோரமான காட்சி அவன் உடலிலுள்ள மயிர்க்கால்களை எல்லாம் குத்திட்டு நிற்கச் செய்தது, வில்லைத் தோளிலிருந்து எடுத்து எய்யலாம் என்றால் கை எழவே மாட்டேனென்றது.
ஆசிரம வாயிலில் மரத்தடியில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். மோனத்தில் ஆழ்ந்து தியானம் செய்து கொண்டிருந்த அவர்மேல் பெரிய புலி ஒன்று பதுங்கிப்பதுங்கிப் பாயத் தயாராகிக் கொண்டிருந்தது. முனிவரோ கண்களைத் திறக்கவே இல்லை. தன்னை மறந்த இலயிப்பில் புலன்
உணர்வுகளை ஒடுக்கி அமர்ந்திருக்கும் அவருக்குப் புலி தம் மேல் பாயத் தயாராகிக் கொண்டிருப்பது எங்கே தெரியப் போகிறது?
இருங்கோவேள் இன்னும் சில விநாடிகள் தாமதித்தால் ஒரு பாவமுமறியாத முனிவர் அந்தப் புலிக்கு இரையாகிச் சாக நேரிடும். புலி நிச்சயமாக அவரை உயிரோடு விடப்போவதில்லை.
அவன் மனத்தில் இரக்கம் சுரந்தது. அவ்வளவு நேரம் அரும்பாடு பட்டுத் தான் துரத்தி வந்த முள்ளம் பன்றியை அவன் மறந்தான். தன்னிடம் வில்லையும் அம்பையும் தவிரப் புலியைத் தாக்குவதற்கு வேறு ஆயுதங்கள் இல்லை என்பதையும் மறந்தான். புலியின் கவனத்தை முனிவரிடமிருந்து நீக்கித் தன் பக்கம் திருப்பக் கருதி வில்லை வளைத்து அதன்மேல் ஒரு அம்பைத் தொடுத்தான்.
புலியின் கவனம் அவன் பக்கம் திரும்பியது. உடலில் வலி பொறுக்க முடியாமல் காடு கிடுகிடுக்கும்படி ஒர் உறுமல் உறுமிக் கொண்டு அந்தப் புதிய எதிரியின்மேல் பாய்ந்தது புவி! பயங்கரமான அந்த ஒலியில் முனிவருடைய தியானம் கலைந்து அவர் விழித்துக் கொண்டார் எதிரே நிகழ்வதைக் கண்டார். நிகழ்ந்ததை அனுமானித்துக் கொண்டார்.
புலி பாய்ந்து முன் கால்களின் கூரிய நகங்களால் அடித்து மோதிய வேகத்தில் அவன் கையிலிருந்த வில்லும் தோளிலிருந்த அம்புக் கூடும் மூலைக்கு ஒன்றாகச் சிதறி விழுந்தன.
நிராயுதபாணியான அவன் மார்பை நோக்கிப் புவியின் கூரிய நகங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. கோரமான கடைவாய்ப் பற்கள் தெரிய ஆ என்று வாயைப் பிளந்துகொண்டு உறுமியது அது.
இருங்கோவேள் பயப்படவில்லை. அது பாய்ந்த வேகத்தில் அதன்பின்னங்கால்கள் இரண்டையும், இருகைகளாலும் குனிந்து இறுக்கிப்பிடித்துக் கொண்டான்.தன் உடலிலிருந்த வலிமையை எல்லாம் ஒன்றுகூட்டிஅப்படியே அதன் உடலைத் தலைக்குமேல் அந்தரத்தில் தூக்கினான். வேகமாகச் சுழற்றித் தரையில் ஓங்கி ஒர் அடி அடித்தான். அடிபட்ட புலி மீண்டும் சீறிக்கொண்டு
பாய்ந்தது.அம்புக் கூட்டிலிருந்து சிதறிய அம்புகளில் இரண்டைக் கையில் எடுத்துக்கொண்டு அது தன்மேல் பாய்ந்த வேகத்தில் அதன் நெஞ்சில் ஊடுருவும்படியாகக் குத்தினான். மறுபடியும் தரையில் ஓங்கி ஒர் அடி புலி ஈனஸ்வரத்தில் அலறிக்கொண்டே தரையில் விழுந்தது. சிறிதுநேரத்தில் துடிதுடித்துச் செத்தும் போயிற்று.
முனிவர் ஆவலோடு எழுந்திருந்து ஓடிவந்து அவனைத் தழுவிக் கொண்டார். பாராட்டி நன்றி செலுத்தினார். அவன் வீரத்தை வாய் ஓயாமல் புகழ்ந்தார்.அவர் பெயர் தபங்க முனிவர்” என்பதென்றும் அந்த வனத்தில் வெகு நாட்களாகத் தவம் செய்து கொண்டு வருகிறாரென்றும் இருங்கோவேள் அறிந்து கொண்டான். தன்னைப் பற்றியும் அவருக்குக் கூறினான்.
“இருங்கோவேள்! இந்த வீரச் செயலின் நினைவுச் சின்னமாக உனக்கு ஒரு சிறப்புப் பெயர் தருகிறேன். அன்புடன் மறுக்காமல் ஏற்றுக்கொள்…”
“தங்கள் திருவாயால் சிறப்புப் பெயர் பெற என் நல்வினை இடங்கொடுத்தால் அது எனக்குப் பெரும்பாக்கியம் முனிவரே”
“புலிகடிமால் – என்ற சிறப்புப் பெயரை என் நன்றிக்கு அறிகுறியாக உனக்குச் சூட்டுகிறேன்.”
“முனிவரே! என் வீரத்தைப் பாராட்டுகிறீர்களே ஒழிய, என்னோடு சாமர்த்தியமாகப் போரிட்ட புலியின் வீரத்தைப் பாராட்ட மாட்டேன் என்கிறீர்களே”
“அப்பா இருங்கோவேள்! அது வெறும் புலிதான். நீயோ வீரப் புலி”.
இருங்கோவேள் முனிவரை வணங்கினான். முனிவர் அவனுக்கு ஆசி கூறி விடைகொடுத்தார்.
வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போரண்ணல்!’ (புறநானூறு – 201)
தடவு=யாக, குண்டம், புரிசை = மதில், துவரை = துவராபதி, வேளிர் = சிற்றரசர்.
இவ்வரிகளின் உரையால் இக்கதை தெரிகிறது.