33 32. நினைவின் வழியே
வீடு வெறிச்சோடிக் கிடந்தது. கீரத்தனாருடைய மனமும் அப்படித்தான். சூனியமாய்ப் பாழ்வெளியாய்ச் சிந்தனை இயக்கமிழந்து கிடந்தது. ஒல்லையூருடன் அவருக்கு இருந்த கடைசி உறவும் அறுந்துவிட்டது. அவருக்கு மட்டும் என்ன? தமிழ்க் கலைஞர்களின் உறவே அந்த ஊரிலிருந்து இனி அறுந்து போன மாதிரிதான். திண்ணையில் முடங்கிக் கிடந்த கீரத்தனார் படர்ந்து பூத்திருந்த அந்த முல்லைக் கொடியைப் பார்த்தார். சற்றேனும் வாட்டம் காணாத அதன் வனப்பு மிக்க நிலையையும் பார்த்தார். மங்கிப் போயிருந்த நினைவின் வழியே அந்தப் பழைய சம்பவம் அவருடைய மனக்கண்ணில் மெல்ல தோன்றியது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒல்லையூர் வள்ளல் பெருஞ் சாத்தன் வீட்டில் நடத்த நிகழ்ச்சி. அன்று வள்ளல் தம்முடைய வீட்டு வாசலில் புதிதாக ஒரு முல்லைக்கொடியின் பதியனைக் கொண்டுவந்து நட்டிருந்தார். முல்லைக்கொடி நடப்படும்போது குடவாயிலிலிருந்து வந்திருந்த புலவர் கீரத்தனாரும் அருகில் இருந்தார்.
“வள்ளலே அழகிய இந்த வீட்டு முன்றிலில் புதிதாக இன்று முல்லைக்கொடி நடுகிறீர்கள்! இதன் நோக்கம் என்ன?”
“பூத்துச் சொரிந்து இந்த வீட்டின் முன்புறத்தை அழகு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்! இந்தக் கொடி படர்ந்து
சரம் சரமாகப் பூத்தால் இந்த வீடே வாய் திறந்து புன்னகை செய்கிற மாதிரி இருக்குமல்லவா?”
“கண்டவுடன் புன்னகையும் கனிந்த சொற்களும்அளித்துக் கேட்குமுன்னே கொடை கொடுக்கும் நீங்கள் அல்லவா இந்த வீட்டின் அழகு? உங்களைவிடப் பெரிய அழகும் இந்த வீட்டிற்கு வேண்டுமோ?”
“நீங்கள் புலவர். அப்படித்தான் சொல்வீர்கள். என்னை மறப்பதற்கு இடையிடையே எனக்கு ஏதாவது ஒரு பொழுது போக்கு வேண்டுமே? இந்த முல்லைக்கொடி அதற்குப் பயன்படும் என்று நினைக்கிறேன்.”
“வள்ளலே இந்த முல்லையைமட்டுமா நட்டுப்பயிர் செய்து வளர்க்கிறீர்கள்? எத்தனை எத்தனையோ பாணர், புலவர், குடிகளையும் நீங்கள்தானே நட்டுப் பயிர் செய்கிறீர்கள்?”
“புலவரே! என்னுடைய இந்தப் புன்னகை இருக்கிறதே இதற்கு ஒரு நாள் மறைவு உண்டு. இந்த முல்லை ஒவ்வொரு பருவகாலத்திலும் இந்த வீடே சிரிப்பதுபோலச் சிரிக்கப் போகிறது”
“விந்தைதான்! ஆனாலும் உங்கள் புன்னகை பெறுகிற மதிப்பை இது பெற்றுவிட முடியுமா?”
“மதிப்பு என்பதுதான் எதில் இருக்கிறது? என் புன்னகையைக் காலம் மறைக்கிறபோது நீரே ஒரு நாள் இந்த முல்லைக் கொடியின் பூவைப் பார்த்து ஏங்க நேரலாம்!”
“ஒரு நாளும் அப்படி நேராது!”
“நீர் எண்ணுவது தவறு! அப்படி ஒரு நாள் நேரத்தான் போகிறது!”
“பார்க்கலாமே?”
“நன்றாகப் பாரும்! அப்போது நான்தான் உம்முடைய பரிதாபத்தைப் பார்க்க இருக்கமாட்டேன்”
“வள்ளலே இதென்ன பிதற்றல்? என் மனம் புண்படும்படி எதையெதையோ சொல்கிறீர்களே”
“நான் சொல்லவில்லை. காலம் சொல்லும்”
***
நேற்று நடந்ததுபோல்தான் இருக்கிறது. இதயத்தின் உருவெளியில் தோன்றிய அந்த நிகழ்ச்சியைக் கண்ணிர் வடிய ஒருமுறை எண்ணிப்பார்த்துக்கொண்டார் கீரத்தனார். காலத்தின் ஊட்டம் பெற்றுப் பூத்துச் சொரிந்திருந்த அந்த வளமான முல்லைக் கொடி அவரைப்பார்த்து வாய்விட்டுச் சிரிப்பதுபோல் இருந்தது. முல்லையைத் தோற்கும் கருணைப் புன்னகை புரிந்து கொண்டு அந்த வீட்டில் வாழ்ந்த வள்ளல் காலமாகிவிட்டார். முல்லையின் காலம் நீண்டு கொண்டிருந்தது. புலவர் திண்ணையி லிருந்தபடியே மீண்டும் அதை வெறித்துப் பார்த்தார்.
“ஏ! பாழாய்ப்போன முல்லையே! நீ ஏன் இன்னும் பூத்துத் தொலைக்கிறாய்? யாருக்காகப் பூக்கிறாய் நீ? நீ பூக்க உன்னை அழகு பார்த்தவன் போய்விட்டான். இனி இளையவர்கள் உன்னைச் சூடப் போவதில்லை. வளையணிந்த முன் கைகளால் பெண்கள் பறிக்கப் போவதில்லை. தன் யாழுக்காகப் பாணன் கொய்யமாட்டான். பாடினி அணியமாட்டாள். வள்ளல் பெருஞ்சாத்தன் மாய்ந்தபின் நீ ஏன்தான் பூக்கிறாய்?”
முல்லை புலவருக்குப் பதில் சொல்லவில்லை. புலவரும் முல்லையின் பதிலை எதிர்பார்க்கவில்லை. மேலாடையை உதறிப் போட்டுக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். ஆம்! ஒல்லையூரில் இனி அவருக்கு என்ன வேலை அவரை வரவேற்கும் வள்ளலின் புன்னகை முல்லை இனி அங்கே மலரப் போவதில்லை. வேறு எந்த முல்லை பூத்தால் என்ன? பூக்காவிட்டால் என்ன? அதைப்பற்றி இனி அவருக்குக் கவலை ஏதுமில்லை?
புலவருடைய கேள்விக்காக முல்லை பூக்காமலிருந்து விடவில்லை. நன்றாகப் பூத்தது. சரம் சரமாக, கொத்துக்
கொத்தாகப் பூத்தது! ஆனால் யாருக்காக? அதுதான் தெரியவில்லை!
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேல்சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே (புறநானூறு- 242)
இளையோர் = ஏவலர்கள், வளையோர் = பெண்கள், பாணன் = பாடுபவன், பாடினி = பாடுபவள் மாய்ந்த = இறந்த பூத்தியோ = பூக்கிறாயோ.