29 28. பசுமை நினைவுகள்
பளிங்குபோலத் தெளிந்த நீரின் வெண்பட்டு மடிப்பு போன்ற சின்னஞ்சிறு அலைகள் அந்தப் பொய்கைக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தன. இடையிடையே அல்லி, குவளை, தாமரை, முதலிய மலர்களும், அவற்றின் நீலங் கலந்த பசுமைநிற இலைகளுமாக அந்த எழிலை எடுத்துக் காட்டி விளக்க முயன்று கொண்டிருந்தன. பொய்கையைச் சுற்றிலும் கப்பும் கவருமாகக் கிளைத்து வளர்ந்துள்ள பெரிய பெரிய மரங்கள் வேலி எடுத்ததுபோல அடர்ந்து வளர்ந்திருந்தன.
பொய்கையின் நான்கு பக்கத்திலும் வசதியான படித் துறைகள் இருந்தன. அவற்றில் இறங்கி ஆண்களும் பெண்களுமாகப்ப்லர் நீராடிக் கொண்டிருந்தார்கள். ஆண்களில் தைரியசாலிகளாக இளைஞர்கள் சிலர் மரங்களின் கிளைகளில் ஏறி அங்கிருந்து துணிச்சலோடு பொய்கையில் திடும்திடும் என்று குதித்து நீந்தி விளையாடினார்கள். பொய்கைக் கரையிலிருந்து ஈரமணற் பரப்பில் கன்னிப் பெண்கள் மணலைக் கூட்டிப் பிடித்துப்பொம்மை போலச்செய்து, அப்படிச்செய்த பொம்மைகளுக்குப் பூக்களைக் கொய்து அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.
இந்தக் காட்சிகளை எல்லாம் மருத மரம் ஒன்றின் கீழ் சோர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த முதுபெருங் கிழவர் ஒருவர் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். இரண்டு பக்க நுனிகளிலும் இரும்புக் பூண்பிடித்த ஊன்றுகோல் ஒன்று அவர் கையில் இருந்தது. அடிக்கடி இருமிக் கொண்டும் கோழையைக் காரித் துப்பிக் கொண்டுமிருந்தார் அவர். ‘முகபாவம்’ ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருப்பதுபோலத் தோன்றியது. குழிவிழுந்து ஒளியற்று விளங்கிய அந்தக் கிழவரின் விழிகளிலிருந்து கண்ணிர்த் துளிகள் வடிந்து கொண்டிருப்பது இன்னும் சற்று அருகே நெருங்கிப் பார்த்தால் நமக்கு நன்றாகத் தெரியும். அவருடைய இந்தத் துயரத்துக்கும் உருக்கத்துக்கும் காரணம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா?.ஆம் அவசியம் அதை நாம் தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும்!
தம்மைச் சுற்றிலும் அந்தப் பொய்கைக் கரையில் நிகழும் ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போது அவருடைய உள்ளம். அவரை இன்பகரமான பசுமை நினைவுகளுக்கு இழுத்துக் கொண்டு சென்றது. நினைக்க நினைக்க இரம்மியமான அந்த இளமை எண்ணங்களை எண்ணி எண்ணிக் கழிவிரக்கம் என்னும் மனமுருக்குகிற உணர்ச்சியில் சிக்கிப் போயிருந்தார் அவர். கழிந்துபோன நாட்களை – அவை இன்பம் நிறைந்த அனுபவங் களைத் தந்தவையாக இருந்தாலும் சரி, துன்பம்நிறைந்த அனுபவங்களைத் தந்தவையாக இருந்தாலும் சரி, அவற்றை எண்ணிப் பார்ப்பதில் ஆன்ம ரீதியான சுகம் ஒன்று இருக்கிறது என்பது உறுதி.அது வெறும் சுகம் மட்டுமில்லை. ஏக்கம் கலந்த சுகம். “ஆகா! இனிமேல் அந்த மனோரம்மியமான நாட்கள் வருமா? அத்தகைய அனுபவங்கள் மீண்டும் கிட்டுமா?” என்ற ஏக்கம் ஒவ்வொரு பகமை நினைவினிலும் தோன்றுவது இயல்பு. இப்படிப்பட்ட ஏக்கந்தான் அந்த முதுபெருங்கிழவனின் கண்களில் நீர் பெருகச் செய்திருந்தது.
பல வருஷங்களுக்கு முன்னால் நிகழ்ந்து மறைந்துபோன சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவர் மனத்தில் உருவெளித் தோற்றமாகத் தோன்றி மறைந்துகொண்டிருந்தன.
வாலிபத்தின் வனப்பும் பலமும் தேகத்தின் ஒவ்வோர் அங்கத்தினிலும் நிறைந்து பரிணமித்துக் கொண்டிருந்த யெளவனப் பருவம். அப்போது அவர் இருபத்தைந்து வயதுக் கட்டிளங் காளை ஒடுகிற பாம்பின் வாலை எட்டிப் பிடித்துச் சுழற்றி அதன் கால்களை எண்ணுகிற வயது, துறுதுறுப்பு நிறைந்த உடலைப் போலவே எதையும் வேகமாகச் சிந்தித்து வேகமாக நிறைவேற்றுகின்ற மனமும் இளமைப் பருவத்திற்கே உரியவை அல்லவா?
“இதோ! இந்தப் பொய்கை அன்றைக் கிருந்தாற்போலத்தான் இன்றும் இருக்கிறது. இதன் கரைகள், படித்துறைகள், சூழ இருக்கும் மரங்கள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. ஆனால் நான் மட்டும் அன்றைக்கு இருந்தாற்போல இன்று இல்லை. இன்றைக்கு இருக்கிறாற்போல நாளை இருக்கப் போவதும் இல்லை. இந்த உலகம்தான் எவ்வளவு விந்தையானது!”
மனிதன் வெட்டியகுளமும் கட்டியகோவிலும் நட்டு வைத்த மரங்களும்கூட அவனைக் காட்டிலும் அதிக நாட்கள் வாழ் கின்றன. ஆனால் மனிதன் நெடுங்காலம் வாழ முடிவதில்லை. ஆச்சரியங்களிலெல்லாம் பெரிய ஆச்சரியம் என்னவென்று பார்த்தால், அது இந்த உலகமும் இதிலுள்ள மனிதர்களின் வாழ்க்கையுமாகத்தான் இருக்கும் போலிருக்கிறத!
நானும் ஒரு காலத்தில் இந்தப் பொய்கைக்கரையில் இளமை மதர்ப்போடு ஒடியாடித் திரிந்திருக்கிறேன். கன்னிப் பெண்கள் இங்கே மணலில் செய்யும் மண் பாவைகளுக்கு என் கைகளால் பூக்கள் பறித்துக் கொடுத்து அவர்கள் தயவைச் சம்பாதிப்பதற்கு முயன்றிருக்கிறேன். இப்போது நினைத்தால் வெட்கமாகக்கூட இருக்கிறது. அப்போது சில அழகான கன்னிப் பெண்களுடன் இதே மணற் பரப்பில் கை கோத்துக்கொண்டு தட்டாமாலை விளையாட்டு கூட விளையாடியிருக்கிறேன். அந்தப் பெண்களுக்கு என்மேல் தனி அன்பு எனக்கும் அவர்கள் மேல் அப்படித்தான். விளையாடவோ, மண் பாவைகளுக்கு அணிய மலர் பறிக்கவோ, தொடங்கிவிட்டால் அன்று எங்களுக்கு நேரம் போவதே தெரியாது.
நாங்கள் பத்து, இருபது விடலைப் பிள்ளைகளாகச் சேர்ந்து கொண்டு குளிப்பதற்கு வருவோம். மருதமரக் கிளைகள் தண்ணிர்ப் பரப்பின்மேல் மிக அருகில் படர்ந்திருக்கும். அந்தக் கிளைகளில் அஞ்சாமல் ஏறிக் கரையிலே இருப்பவர்கள் எல்லோரும் கண்டு வியக்கும்படி தண்ணிரில் குதித்து விளையாடுவோம். அவ்வாறு குதிக்கும்போது நீர்த்தரங்கங்கள் சலீர் சலீரென்று கரையிலுள்ளவர்கள்மேல் தெரித்துச் சிதறும்.
கரையி லுள்ளவர்களில் சிலர் எங்களை நோக்கி, “நீங்கள் மெய்யான திறமை உள்ளவர்களானால் இந்தப் பொய்கை எவ்வளவு ஆழம் இருக்கிறதோ அதுவரை மூழ்கி முக்குளித்து மணலை வெளியே எடுத்துக்கொண்டு வாருங்கள்! எங்கே? ஆண்பிள்ளைகளானால் அப்படிச் செய்து காட்டுங்கள் பார்க்கலாம்?” என்று எங்களோடு பந்தயம் போடுவார்கள்.
உடனே நாங்கள் அத்தனை பேரும் ஒருவரோ டொருவர் போட்டி போட்டுக்கொண்டு பொய்கையில் முக்குளித்துக் கீழே ஆழத்திற்குச்செல்லுவோம்.எங்களோடு பந்தயம் போட்டவர்கள் நாணமுற்றுத்தலை குனியும்படியாக ஆழத்திலிருந்து எடுத்துவந்த மணலை வெற்றி மதர்ப்பில் கரையில் நின்று கொண்டிருக்கும் அவர்கள் மேலே வீசி எறிவோம். ஆகா! அப்படி வீசி எறிவதில்தான் எத்தனை இன்பம்! எவ்வளவு தற்பெருமை! அறியாமை நிறைந்த அந்த இளமை இன்பத்திற்கு ஈடான இன்பத்தை இனி என் வாழ்வில் நான் எப்போது காணப் போகிறேன்? அதற்கு இன்னும் ஒரு பிறவிதான் எடுக்க வேண்டும் போலிருக்கிறது!
அன்றைக்கு இருந்த அந்தத் திடகாத்திரமான சரீரம் எங்கே? அதில் பொங்கித் ததும்பிய இளமை என்னும் அமுதம் எங்கே? துறுதுறுப்பு நிறைந்த அந்த மனம் எங்கே? காலம் அவற்றை எல்லாம் எனக்குத் தெரியாமலே அழித்துவிட்டதா? இதோ! இரண்டு துனிகளிலும் பூண்பிடித்த இந்தக் கனத்த தடி இல்லாமல் இப்போது என்னால் நடக்கவே முடிவதில்லையே! வாயைத் திறந்து தொடர்பாக இரண்டு வார்த்தைகள் பேசி முடிப்பதற்குள்
இருமல் குத்திப் பிடுங்குகிறதே! இப்போது என்னிடம் எஞ்சியிருப்பதுதான் என்ன? பார்க்கப் போனால் இந்தப் பசுமை நினைவுகளால் உண்டாகின்ற ஏக்கத்தைத் தவிர வேறொன்றும் இல்லை…”
“என்ன ஐயா பெரியவரே! ஏதோ மயக்கம் வந்தவர்போலச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறீரே…?”
கிழவரின் சிந்தனை கலைந்தது. அவருக்கு முன் நின்று மேற்கொண்டு மேற்கூறியவாறு ஆறுதலாக வினவிய மனிதன் மேலும், “நான் வேண்டுமானால் கைத்தாங்கலாகத் தூக்கி விடுகிறேன்! ஐயோ, பாவம் தள்ளாத காலம்” என்று அவரருகில் நெருங்கினான்.
“சீ! தள்ளி நில் ஐயா! கையில் இந்தப் பூண் பிடித்த தடி இருக்கிறவரை எனக்குத்தளர்ச்சியும் இல்லை; மயக்கமும் இல்லை” என்று கூறிக்கொண்டே அந்த மனிதனைத் தன் அருகே வரவொட்டாமல் கைகளை மறித்துத் தடுத்தார் கிழவர்.
“வயதானாலும் திமிர் போகவில்லை கிழவனுக்கு!” ஆத்திரத்தோடு இரைந்துகூறிவிட்டு வேகமாக நடந்தான். உதவிக்கு வந்த மனிதன்.
அவன் அந்தப் பக்கம் சென்றதும் பூண்பிடித்த தடியை ஊன்றிக்கொண்டு எழுந்திருந்தார் கிழவனார். அவருடைய இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப் பட்டது. அந்தப் பெருமூச்சின் வெம்மையிலே அவரது பசுமை நினைவுகள் எல்லாம் வாடி வதங்கிப் பொசுங்கிப்போய்விட்டது போல் ஒரு பிரமை மறுகணம் டொக் டொக் என்று தடியை ஊன்றிக் கொண்டு நடந்தார் அவர்.
இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழிஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நனிப் படிகோடேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்டகல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டுன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே! (புறநானூறு- 243)
திணிமணல் = செறிந்தமண், பாவை = பொம்மை, தண்கயம் = குளிர்ந்த பொய்கை, தூங்கி = அசைந்து, சினை = கிளை, அளிதோ = இரங்கத்தக்கதே, தண்டு = கம்பு.