="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

44 43. ஓர் அறிவுரை

43. ஓர் அறிவுரை

“அறிவுடை நம்பீ! இந்தச் செயல் உனக்கே நன்றாக இருக்கின்றதா?”

“நீங்கள் எந்தச் செயலைக் குறிப்பிடுகிறீர்கள் பிசிராந்தையாரே?” “அரசாட்சியில் உள்ளவர்களுக்கு மக்களை அடக்கி ஆளவும் அதிகாரம் செய்யவும் தெரிந்தால் மட்டும் போதாது மக்களின் கஷ்டநஷ்டங்களை உணர்ந்து கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.”

“திரும்ப திரும்பப் பூடகமாகப் பேசுகிறீர்களே ஒழிய, விஷயத்தைத் தெளிவாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்களே”

“தெளிவாகச் சொல்லவேண்டிய விஷயம்தான் நம்பீர்”

“நீங்கள் சொல்லி, நான் கேட்க மறுத்தது உண்டா புலவரே! சொல்லுங்கள்; தவறு என்புறம் இருக்குமாயின் உடனே திருத்திக் கொள்ள முயல்கிறேன்.”

“ஒரு மா அளவுள்ள சிறிய நிலமானாலும் அல்லது அதற்கும் குறைந்த நிலமாகவே இருந்தாலும், அந்நிலத்தில் முற்றி விளைந்த பயிரை அறுவடை செய்து தானியத்தைச் சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரித்ததானியத்தைச்சோறாகக் சமைத்து ஒரு பெரிய யானைக்குப் பசித்தபோதெல்லாம் கவளம் கவளமாக வாரிக் கொடுத்தாலும் அது பலநாள் காணும்..”

“நீங்கள் விஷயத்தைச் சொல்கிறீர்களா? அல்லது சிறு குழந்தைகளுக்குப் பொழுது போவதற்காகச் சொல்வார்களே, அந்த மாதிரி ஏதாவது யானைக் கதை, குதிரைக் கதை சொல்கிறீர்களா?”

“முழுவதும் கேள் நம்பி! அதற்குள் பொறுமை இழந்து விடுகின்றாயே..?”

“நூறு செறு (நிலத்தின் ஓரளவு) அளவுடைய பெரிய நிலமாக இருந்தாலும் அதில் விளைந்த பயிரை அறுவடை செய்யாமலே இந்தப் பெரிய யானையை அவிழ்த்துவிட்டு விடலாம்! அப்பொழுது என்ன ஆகும்? இந்த யானை வயலுக்குள் புகுந்து நெற்கதிர்களை உண்ணும். அப்படி உண்ணும்போது அது உண்ணக்கூடிய தானியத்தைக் காட்டிலும் அதன் பெரிய கால்களால் மிதிபட்டு உதிர்ந்து வீணாகிற தானியமே அதிகமாக இருக்கும்!” “சிறிய நிலமானாலும் பயிரைமுறையாக அறுவடைசெய்து கவளம் கவளமாக யானை வாயில் தள்ளினாலும் அது யானைக்குப் பலநாள் காணும். பெரிய நிலமானாலும் அறுவடை செய்யாமலே யானையை நிலத்திற்குள்ளேயே நுழைய விட்டு விட்டால் அது ஒருமுறை உண்பதற்குள் நிலம் முழுவதும் மிதிபட்டுப் பயிர் அழிந்து போகும்…!”

“உம்ம். சரி! அப்புறம் மேலே சொல்லுங்கள்…”

“கதை சொல்லவில்லை நான்! அரசன் யானையைப் போன்றவன். குடிமக்கள் விளைந்த பயிருடனே கூடிய விளை நிலங்களைப் போன்றவர்கள்…!”

“உங்கள் உவமை மிகவும் அழகாக இருக்கிறது.”

“அழகாக மட்டுமிருக்காது! கொஞ்சம் ஆழமாகவும் இருக்கும். மேலே கேள்; அறிவுணர்வு மிக்க அரசன் மக்களிடம் முறைகேடற்ற விதத்தில் வரிப்பணத்தைப் பெற்றுக் கொண்டால் அவன் செல்வம் கோடி கோடியாகப் பெருகும். நாடும் வளர்ச்சியடையும். ஆக்கம் பெறும்.அறிவுணர்வு குறைந்த அரசன் நாள்தோறும் தரமறியாமல் வீண் ஆரவாரங்களைச் செய்கிற சுற்றத்தினரோடு கூடி மக்களின் அன்பு கெட்டுப்போகுமாறு அவர்களிடம் வற்புறுத்தி அதிக வரியும் தண்டமும் பறிக்க முயன்றால் யானை நுழைந்த நிலம்போலத் தானும் உண்ணமுடியாமல் பிறருக்கும் எஞ்சாமல் வீண் அழிவே ஏற்படும்.”

இதைக் கேட்டு அறிவுடை நம்பி திகைத்தான்.

“என் நாட்டில் இந்த முறைகேடு எங்காவது நிகழக் கண்டீர்களா புலவரே?” அவன் குரலில் பரபரப்பும் ஆத்திரமும் மிகுந்திருந்தன.

“கண்டதனால்தான் இந்த யானைக் கதையையும் இதை ஒட்டிய அறிவுரையையும் கூற நேர்ந்தது.”

“எங்கே கண்டீர்கள்?”
“ஏன்? உன்னுடைய கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொண்டு உன்னைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் மக்களுக்கு இந்தக் கொடுமையைத் தயங்காமல் செய்து வருகிறார்கள்”.

“உடனே இந்த விஷயத்தைக் கவனிக்கிறேன் பிசிராந் தையாரே! சிறிதும் அஞ்சாமல் என்னை அணுகி இதைக் கூறியதற்கு என் நன்றி. உங்கள் துணிவு போற்றற்குரியது!”

“போற்றுதலை எதிர்பார்த்து உன்னிடம் இதைக் கூற வரவில்லை. உங்களைப் போன்றவர்கள் வழிதவறிவிட்டால், இது வழியல்ல, அதோ அதுதான் வழி என்று சுட்டிக் காட்டுவதற்காகத்தானே புலமையைத் தொழிலாகக் கொண்டு நாங்கள் வாழ்கிறோம்.”

“போற்றுதலை எதிர்பாராத நிலை இந்த உலகாளும் தொழிலைவிட உயர்ந்தது புலவரே! ஏன் தெரியுமா? உலகாள் பவர்களை யார் ஆள முடியும்? புலவர்கள்தாம் மன்னர்களையும் ஆளுபவர்கள்.அவர்கள் வெறும் மனிதர்களில்லை. தெய்வங்கள்.”

“நிறையப் புகழ்ந்து விடாதே நம்பீர்” இருவரும் தமக்குள் சிரித்துக்கொண்டனர். யானைக் கதையை நினைத்துச் சிரித்த சிரிப்புத்தானோ அது?

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும். (புறநானூறு – 184)

காய்நெல் = முதிர்ந்த நெல்கதிர், கவளம் = சோற்று உருண்டை, மா=சிறுநிலப்பரப்பு, செறு = பெரிய நிலப்பரப்பு, தமித்து = தனியே.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 43. ஓர் அறிவுரை, except where otherwise noted.

Share This Book