="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

41 40. கால் கட்டு

40. கால் கட்டு

வைகறை கருக்கிருட்டின் மங்கலான ஒளியில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியையும் குழந்தைகளையும் கண்களில் நீர்மல்க ஒருமுறை பார்த்தார் ஒரேருழவர். பந்தத்தை அறுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவது என்பது எவ்வளவு கடினமான செயல் என்பதை இப்போதுதான் அவரால் உணர முடிந்தது.

வீடு நிறைய மக்களையும் மனைவியையும் வைத்துக் கொண்டு, அவர்கள் வயிறு நிறைய வழி சொல்லத் தெரியாமல் திண்டாடுகிற கையாலாகாத் தனத்தைவிட எங்கேயாவது ஒடிப் போய்விட்டால் நல்லதென்று தோன்றியது அவருக்கு பலநாள் எண்ணி எண்ணி இந்த முடிவிற்கு வந்திருந்தார்! இன்று அதைச் செயலாக்கும் அளவுக்கு, விரக்தி மனத்தைக் கல்லாக்கியிருந்தது.

விடிந்தால் மனைவியும் குழந்தைகளும் எழுந்திருந்து விடுவார்கள். அவர்களைப் பார்த்தால் ஒட மனம்வராது. சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட இந்தக் கருக்கிருட்டு நேரத்தைப்போல வசதியானது எதுவுமில்லை. ஏழையின் வாழ்வில், புதிதாக ஒருநாள் பிறக்கிறது என்றால் அது பெரிய வேதனையின் வடிவம். தன் வயிறும் நிரம்பாமல், மனைவி மக்களையும் பட்டினிக் கோலத்திலே கண்டு, நெஞ்சு குமுறி அணுஅனுவாகச் செத்துக் கொண்டிருப்பதைவிட ஒரேயடியாக எங்கேனும் ஒடிப்போய்ச் செத்துத் தொலைப்பது எவ்வளவோ மேல்!

மேல் ஆடையைத் தோளில் உதறிப்போட்டுக் கொண்டு, வாசல் கதவைத் திறந்து வெளியேறினார் அவர். மனத்தை நெகிழவிடாமல் உறுதி செய்துகொண்டு திரும்பிப் பாராமல் நடையை எட்டிப் போட்டு நடந்தார்.

முதலில் மனைவி மக்களின் முகம் மறைந்தது. பின் வீடு மறைந்தது. அடுத்து ஊர் மறைந்தது. ஆண்டுக் கணக்கில் பழகிய எல்லாம் சில நாழிகைகளில் கண்களைக் கடந்து வெகுதுரத்துக் கப்பால் மங்கி மறைந்துவிட்டன. ஒரேருழவரின் கால்களை இறுக்கியிருந்த குடும்பக் கால் கட்டு அறுந்து விட்டது. அவர்தனியே நடந்து சென்று கொண்டிருந்தார். காட்டுவழியாகப் போகுமிடம் எது? என்ற குறிப்பே இல்லாமல் நடந்து போய்க் கொண்டிருந்தார். தளைகளை அறுத்துக்கொண்டு தனிவழியில் ஒடுகிறதாக மகிழவேண்டிய மனம் செய்யத் தகாததைச் செய்து விட்டு, போகத் தகாத வழியில் போய்க் கொண்டிருப்பதாகக் குத்திக் காட்டியது.

பொழுது பலபலவென்று விடிகின்ற நேரத்திற்கு ஒருகாட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார் அவர் நடக்க நடக்க மனம் ஒருவிதமான பிரமையில் ஆழ்ந்தது. ஏதோ உடைமைகளை எல்லாம் பறிகொடுத்துவிட்டு எங்கோ, கண்காணாத இடத்துக்கு ஒடுவது போன்ற எண்ணம் இதயத்தை அழுத்தியது.

மேற்குப் பக்கம் அடர்த்தியான காடு. கிழக்குப் பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரே உவர்மண் பூமி. அந்தக் களர்நிலச் சமவெளி பதனிடப்படாத தோலைப் பரப்பி வைத்த மாதிரி மேடும் பள்ளமுமாக உப்புப் பரிந்து தென்பட்டது. இவை இரண்டிற்கும் நடுவே உள்ள வழியில்தான் அவர்சென்று கொண்டிருந்தார்.

பசுமை தவழும் காடும், பாளம் பாளமாக வெடித்த வெள்ளரிப் பழம் போன்ற உவர் மண் பரப்பும் அருகருகே நேர்மாறான இரு துருவங்களைப்போல விளங்கின.

புலவர் ஒரேருழவர் அந்த வழியாக நடந்து கொண்டிருக்கும் போதே காட்டையும் களர்நிலத்தையும் தொடர்புபடுத்தும் நிகழ்ச்சியொன்று நடந்தது.

காட்டிலிருந்து ஒரு மான் குடல் தெறிக்க ஓடிவந்து களர் நிலத்தில் இறங்கி, மீண்டும் ஓடியது. அதன் பின்னாலேயே ஒரு வேடன் வில்லும் கையுமாக அதைத் துரத்திக் கொண்டே ஓடிவந்தான். அவனும் அதை விடுவதாக இல்லை. வில்லை வளைத்துக் கொண்டு களர்நிலத்தில் இறங்கிவிட்டான்.

காட்டில் துரத்திய வேடன் கையில் அகப்படாமல் தப்ப வேண்டும் என்று மான் களர் நிலத்தில் இறங்கி ஓடியது. காட்டில் அகப்படாத மானைக் களர் நிலத்தில் எப்படியாவது அம்பு எய்து பிடித்துவிட வேண்டும் என்று வேடன் மானைப் பின்பற்றி ஓடினான். புலவர் வழிமேல் நின்று இந்தக் காட்சியை ஆர்வத்தோடு பார்க்கலானார்.

மான் களர் வெளியில் சுற்றிச் சுற்றி ஓடியது. வேடனும் விடாமல் அதைத் துரத்தினான். வேடனிடம் அகப்படாமல் பிழைத்துவிட வேண்டும் என்பது மானின் ஆசை. மானைப் பிடிக்காமல் போகக்கூடாது என்பது வேடனுடைய ஆசை. உயிராசையால் அந்த மிருகம்ஒட, வயிற்றாசையால் அதைத் துரத்தி மனிதன் ஒட, மனத்தின் நப்பாசையால் வழியோடு போக வேண்டிய புலவர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒடிக்கொண்டே இருந்த மான், களர் நிலத்தின் பெரிய வெடிப்பு ஒன்றில் முன்னங்கால்கள் இரண்டும் சிக்கி ஒருகணம் திணறி விழுந்தது.மறுகணம் வெடிப்பிலிருந்து கால்களை உதறிக் கொண்டு அது ஒட முயல்வதற்குள் வேடனுடைய அம்பு அதன் வயிற்றை ஊடுருவி விட்டது.

இரத்தம் ஒழுக அங்கேயே பொத்தென்று விழுந்தது அந்த மான் வேடன் ஆசையோடு அதன் உடலைத் தோளில் தூக்கிச் சுமந்துகொண்டுகாட்டுக்குள் நடந்தான். ஒரேருழவர் சிலைபோல இதைப் பார்த்துக் கொண்டே நின்றார் வெகுநேரமாக வேடன் போன பின்பும் நின்று கொண்டிருந்தார். வேடன் அந்த மானை மட்டுமா கொன்று எடுத்துக் கொண்டு போனான்? இல்லை! அவருடைய மனத்திலிருந்த ஒர் அசட்டுத்தனத்தையும் கொன்று எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.வந்த வழியே திரும்பி ஊரை நோக்கி, வீட்டை நோக்கி நடந்தார். வறுமையும் பசிக் கொடுமையும் எங்கும் உள்ளதுதான். வாழ்க்கை ஒரு வேட்டை மனைவி மக்களை விட்டு ஓடிப்போய்ப் பசியையும் வறுமையையும் அனுபவித்து அந்த வேட்டைக்கு ஆளாவதைவிட வீட்டிலேயே மனைவி மக்களோடு அதற்கு ஆளாகலாமே!
காட்டை விட்டுக் களர் நிலத்துக்கு ஒடி வந்ததே அந்த மான்! அப்படியும் வேட்டைக்காரன் அதை விடவா செய்தான்? கால் கட்டை அவிழ்த்துக் கொண்டு சறுக்கி விழுவதை விட சும்மா இருப்பது மேல்தானே?

அதள்ளறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஒடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே? (புறநானூறு -193)

அதள் = பதனிடாத்தோல், புல்வாய் = மான், தட்குமா = தளையாகுமா.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 40. கால் கட்டு, except where otherwise noted.

Share This Book