="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

31 30. இரண்டு பகைகள்

30. இரண்டு பகைகள்

அதியமானுக்கு ஒரு புதல்வன் இருந்தான். வாலிபப் பருவத்தினனாகிய அப்புதல்வனுக்குப் பொகுட்டெழினி என்று பெயர். நல்ல வளர்ச்சியும் உடற்கட்டும் பார்த்தவர்ளை உடனே கவரும் அழகான தோற்றமும் இவனுக்குப் பொருந்தியிருந்தன.

அந்தத் தோற்றத்தை வெறும் அழகான தோற்றம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொன்னால் சொல்லி யவர்களுக்கே திருப்தி ஏற்படாது. கொஞ்சம் வருணிக்கலாமே என்றுதான் தோன்றும்.

பரந்து விரிந்த மார்பு நீண்ட பெரிய கைகள் உருண்டு திரண்டு பருத்த புயங்கள். எடுப்பான கழுத்து, அதன் மேல் கம்பீரமான முகத்தோற்றம். நீண்டு வடிந்த நாசி மலர்ந்த விழிகள்.
பரந்த நெற்றி, புன்னகை நிலவும் உதடுகள். காதோரத்தில் சுருண்டு சுருண்டு படியும் சுருட்டை மயிர்.

பார்த்தவர்களை அப்படியே ஒருசில விநாடிகள் தடுத்து நிறுத்தித் தன்னை மறக்கச் செய்கின்ற மோகன சக்தி பொகுட்டெழினியின் அழகுக்கு இருந்தது.
இவன் வெறும் அழகன் மட்டும் இல்லை. தலை சிறந்த வீரனும்கூட, சில போர்களுக்குத் தான் ஒருவனாகவே படைத் தலைமை தாங்கிச் சென்று அமோகமான வெற்றிகளை அடைந்திருக்கிறான்.

‘புலிக்குப் பிறந்தது பூனையாகி விடுமா? தந்தையைப் போலவே இவனும் வீரத்தையே குலதனமாகப் பெற்றிருக்கிறான். ஆனால் வீரத்தைவிடச் சிறந்த வேறொரு சக்தியும் இவனிடம் இருக்கிறது. இவனுடைய மலர்ந்த முகமும் சிரிக்கும் உதடுகளும் எடுப்பான அழகுத் தோற்றமும் பகைவர்களைக்கூட வசீகரித்து விடுமே வில்லும் அம்பும் எடுத்து, வாளும் கேடயமும் தாங்கி இவன் போர் செய்யக்கூடவேண்டாம் எதிரிக்கு முன்னால் போய் நின்று ஒரு புன்முறுவல் செய்தால் போதுமே! தான் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து புன்சிரிப்போடு இவனைக் கட்டிக் கொண்டு விடுவான் இவனுடைய எதிரி. இது கந்தர்வர்களுக்கு உரிய தேவலோகத்து அழகு” என்று அரசவையைச் சேர்ந்த பெரியோர்கள் அவனைப் பற்றி அடிக்கடி வியந்து பேசிக்கொள்வது வழக்கம்.

இன்னும் ஒரு வேடிக்கை! எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் பொகுட்டெழினி தன்னுடைய தேரில் ஏறித் தகடூர் வீதிகளின் வழியே செலுத்திக்கொண்டு போவான். அப்படிப் போகும்போது வீதியின் இரு மருங்கிலும் உள்ள வீடுகளின் சாளரங்களிலும் ஒருக்கொளித்த கதவின் இடைவெளி களிலும் சில ஆச்சரியங்கள் நிகழும்!

சாளரங்களிலும் கதவின் இடைவெளிகளிலும் திடீர் திடீரென்று தாமரை மலர்கள் மலரும் முழு மதிகள் உதயமாகும்! ‘என்ன இது? சுத்தப் பிதற்றலாக இருக்கிறதே? தாமரைப் பூவும்
சந்திரனும் விட்டு வாசலிலும் பலகணியிலும் மலர்கிறதாவது?’ என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஆம் தாமரை மலரைப் போலவும் முழு மதியைப்போலவும் முகங்களை உடைய கன்னிப் பெண்கள் பலர் பொகுட் டெழினியைக் காண்பதற்காகத் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். எழினியின் அழகைப் பார்க்க அவ்வளவு ஆர்வம். அதை வெறும் ஆர்வமென்றுகூடச் சொல்வதற்கு இல்லை. ‘ஆர்வவெறி’ என்றே சொல்லலாம்.

காதற் கடவுளாகிய மன்மதனே தேரில் ஏறி வீதியில் செல்வதாகத் தோன்றும் அவர்களுக்கு. ஒரே நாளில், ஒரே சமயத்தில், ஒரே பார்வையில் கண்டு, கண்களையும் மனத்தையும் திருப்திபடுத்திக்கொண்டுவிடக்கூடிய அழகு அன்று அது. இவன் தேரேறி வீதியில் போகின்றபோதெல்லாம் வீதியில் இவனைப் பார்த்தாலும் இவன் புதிய அழகனாகவே தெரிகிறான். இரஸத் தேர்ச்சியும் காவிய ஞானமும் உள்ள மகாகவி ஒருவன் சிருஷ்டித்த காவியம் எத்தனை தடவை படித்தாலும் புதிய அழகும் புதிய நயமும் உடையதாகவே தோன்றுகிறது பாருங்கள்!

பொகுட்டெழினியின் இளமை அழகும் அவ்வூர்க் கன்னிப் பெண்களுக்கு இப்படி ஒரு காவியமாகத்தான் இருந்தது. எனவே அழகைக் காண்பதில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குன்றவில்லை.

தெருவில் இவன் செல்லுகிற போதுகளிலே வழக்கமாக நடக்கும் இந்த மறைமுகமான ‘தரிசன நாடகத்’தை ஒளவையார் ஒருநாள் பார்த்துவிட்டார். ‘பொகுட்டெழினியின் அழகு இளம் பெண்களை என்ன பாடுபடுத்துகிறது?’ என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘தன் ஆருயிர் நண்பனாகிய அதியமானின் புதல்வன்தான் இந்த அழகன்’ என்ற எண்ணத்தினால் அவருக்குப்பெருமிதம் ஏற்பட்டாலும்,மற்றோர் பக்கம் இது பெரிய ஆச்சரியமாகவே தோன்றியது.

‘மனித நியதிக்கு மேற்பட்ட அழகு ஆணுக்கோ, பெண்ணுக்கோ இருந்தால் அதன் விளைவு மகா விரலமாக இருக்கும் என்பதை அறிந்தவர் அவர்.
பொகுட்டெழினிக்கு விரைவில் திருமணம் செய்யுமாறு அதியமானிடம் சொல்லிவிட வேண்டுமென்று எண்ணினார் அவர். எழினி தனக்கு நிகரில்லாத அழகன் மட்டுமின்றிப் பகைவர்கள் தன் பெயரை எண்ணிய மாத்திரத்திலேயே அஞ்சி நடுக்கம் கொள்ளும்படியான நிகரற்ற வீரனும் ஆவான் என்பதை ஒளவையார் நன்கு அறிவாராகையினால் அவனைப்பற்றி அதியமானிடம் கூறும்போது சாமர்த்தியமாகக் கூறவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த அன்றைக்கு மாலையிலேயே ஒளவையார் அதியமானைச் சந்திக்க நேர்ந்தது. அவனைக் கண்டதுமே தலைகால் இல்லாமல் மொட்டையாக ஆரம்பித்தார் தம்முடைய பேச்சை!

“அதியா! உன்னிடம் ஒன்று கூறப் போகிறேன். கேட்டால் நீ திடுக்கிட்டுப் போகமாட்டாயே!”

“அது என்னதாயே, அப்படி நீங்கள் கூறப்போகும் திடுக்கிட வைக்கும் செய்தி”

“உன் மகன் பொகுட்டெழினிக்கு இந்த உலகத்தில் இரண்டு பெரிய பகைகள் உண்டாகியிருக்கின்றன!”

“என்ன பகைகளா?. யாருக்கு?. என் மகனுக்கா? புதிராக அல்லவா இருக்கிறது!”

அதியமான் உண்மையிலேயே இந்தச் செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்விட்டான்.

“உண்மையாகத்தான் சொல்கின்றேன் அப்பா! உன் மகனுக்கு இரண்டு பகைகள் உண்டாகிவிட்டன.”

“தாயே! சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள். என் மனம் பதறுகிறது.”

“கேள், அதியா முதல் பகைவர்கள் இந்த ஊரில் இரத வீதிகளிலுள்ள கன்னிப் பெண்கள். இரண்டாவது பகைவர்கள்,
எழினி படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டபகைவர்களின்
ஊர் மக்கள்”

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

“ஒன்றும் உனக்குப்புரியாததாக நான் சொல்லவில்லை! இந்த ஊர்க் கன்னிப் பெண்களும் தோற்றுப்போன ஊர் மக்களும் எழினிக்குப் பகைவர்களாய் விட்டார்கள் என்கிறேன்.”

“கன்னிப் பெண்களுக்கும் இவனுக்குமா பகை? அது எதனால்?”

“அப்படிக் கேள் அதியா சொல்கிறேன். மலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட தும்பை மாலையை அழகிய தன் மார்பில் அணிந்துகொண்டு வீதி வழியே தேரேறிச்செல்கிறான் உன் மகன். இவனுடைய பருத்து நீண்ட புயங்களையும் மார்பையும் முகத்தையும் கன்னிப் பெண்கள் சாளரங்களிலும் கதவிடுக்கு. களிலும் நின்று பார்க்கிறார்கள். இவன் அழகைக் கண்டு ஏங்கிக் கண்கள் பசந்து தோள்கள் மெலிய வாடிவருந்துகிறார்கள்.ஏக்கம் நிறைந்த அவர்கள் நெஞ்சம் ஒரு பகை!”

அதியமான் சிரித்துவிட்டான். சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை.

“தாயே! என்ன இது? வேடிக்கையா…?”

“வேடிக்கைதான் பொறுமையாக இன்னும் கேள்”

“சொல்லுங்கள்! இன்னொரு பகை?”

“உன் மகன் எழினி படையெடுத்துச் சென்று தோல்விப் பட்டு அழிவுறச் செய்த ஊர்களில், ஆரவாரம் ஒடுங்கித் திருவிழாக்களெல்லாம் நின்று போகின்றன. எழினியின் படைகள் ஆட்டிறைச்சி முதலிய உணவுப் பொருள்களை உண்டு வெற்றியைக் கொண்டாடுகின்றன! அந்த ஊரிலுள்ள் குளங்களிலும் நீர்நிலைகளிலும் எழினியின் மதநீர் சொரியும் யானைப்படைகள் தண்ணிர் குடிக்கச் சென்று நீரைக் கலக்கிச் சேறாக்கி விடுகின்றன. மதநீரும் சேறும்கலந்து நீர்தூய்மை இழந்து
போகிறது. இதனால் அந்தத் தோற்றவூரின் மக்கள் அங்கு வாழ்வதற்கு அஞ்சி எழினியை வெறுக்கிறார்கள். இந்த வெறுப்பு இவனுக்கு ஏற்பட்ட இரண்டாவது பகை!”

“தாயே! என் மகனின் அழகையும் வீரத்தையும் எவ்வளவு சாமர்த்தியத்தோடு ஒரே இணைப்பாக இணைத்துவிட்டீர்கள்?”

அவன் குரலில் ஆச்சரியமும் நன்றியும் தொனித்தன.

“பாராட்டவில்லை அப்பா இந்தப் பகைகள் இரண்டையும் தீர்ப்பதற்கு நீ முயல வேண்டாமா?”

“எப்படித் தீர்க்க முயலலாம்? நீங்கள்தான் ஏதாவது வழி சொல்லி அருள வேண்டும்.”

“நானே சொல்லட்டுமா?”

“நீங்கள்தான் சொல்ல வேண்டும் – சொல்லத் தகுதி உடையவர் நீங்களே, வேறு யாரால் சொல்ல முடியும்?”

“முதல் பகை உள்ளுர்க் கன்னிப் பெண்களின் பகை அதைத் தீர்ப்பதற்கு ஒரே ஒருவழிதான் இருக்கிறது. அது அவ்வளவு கஷ்டமானதும் இல்லை”

“என்ன வழி தாயே!”

“சீக்கிரம் உன் மகனுக்கு ஒரு திருமணம் செய்துவிடு பயிர் வேலிக்குள் அடங்கிவிடும். பாதுகாப்பையும் பெற்றுவிடும்.”

“நல்லது இரண்டாவது பகை”

“உனக்குப் பின் உன் மகன் முடிசூடும்போது அது தீர்ந்து போகும் அரசாட்சியில் மக்களின் துன்பங்களை உணர அனுபவமேற்படும். அப்போது தன்னால் தோற்கடிக்கப்பட்ட ஊரானாலும் மக்களுக்கு வருத்தம் நேராது பாதுகாக்கும் கருணையும் தோன்றிவிடும்.”

“நன்றாகச் சொன்னீர்கள் வேடிக்கையாகவே இரண்டு பெரும் பிரச்சினைகளையும் தீர்ந்து விட்டீர்களே? சீக்கிரமே இவ்விரு பகைகளையும் தீர்த்துவிடுகிறேன்.”
அதியமான் சம்மதித்தான். ஒளவையார் மகிழ்ந்தார்.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
இரண்டெழுந்தனவாற் பகையே ஒன்றே
பூப்போல் உண்கண் பசந்துதோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
விழவின்று ஆயினும் படுபதம் பிழையாது
மையூன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளு மோவென
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே! (புறநானூறு – 96)

பட்டு = அழகிய, என்னை = என் தலைவனாகிய, அதியமான் இன்னயோன் = மகன், உண்கண் = மையுண்ட கண், நுணுகி : மெலிந்து, பிணித்தன்று = ஆசையால் கட்டுப்படுத்தியது. பதம் = சமைக்கும் உணவு மையூன் = ஆட்டிறைச்சி, மொசித்த = உண்ட, ஒக்கல் = சுற்றம், கைமான் = யானை, முனியும் = வெறுக்கும்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 30. இரண்டு பகைகள், except where otherwise noted.

Share This Book