8 கிட்கிந்தா காண்டம்
கிட்கிந்தையில் இராமன்
வானத்தைப் போன்ற பரப்பும், நீல நிறமும் பம்பைப் பொய்கை பெற்றிருந்தது, அப்பொய்கையின் பூக்களும் அதில் படியும் அன்னப் பறவைகளும் சீதையின் நினைவை இராமனுக்கு மிகுதிப்படுத்தின, கயல் பிறழ்ச்சி சீதையின் கண்களை அவன் கண்முன் நிறுத்தியது; அன்னப் பறவை மின்னல் இடையாளான சீதையின் நடையைக் காட்டியது; குவளை விழித்துப் பார்த்தது; ஆம்பல் வாய் திறந்து பேசியது; களிறும், பிடியும் நீராடித் தழுவிக் கொண்டு அவர்கள் பழைய அன்பு வாழ்க்கையை நினைவுகளாகக் கொண்டு வந்து நிறுத்தின. பிடிக்கு முதலில் நீர் ஊட்டிப் பின் உண்ணும் களிற்றின் அன்புச் செயல் அவன் எதையோ இழந்துவிட்டதை எடுத்துக் காட்டியது. பிரிவுத் துயரில் அப்பொய்கைக் காட்சி அவனை ஆழ்த்திவிட்டது. நீடு நினைந்தான்; நீள்கனவுகளில் மிதந்தான். காரிகை தவிர வேறு எதுவும் அவன் கண்முன் நிற்க மறுத்துவிட்டது. தூரிகை கொண்டு எழுதாத அச்சித்திரம் அவனைச் சித்திரவதை செய்தது.
இலக்குவன் இராமனை நோக்கினான்; அவன் துன்பக் கனவுகளைக் கலைத்தான்; “பொழுதும் சாய்ந்தது. “நெடியோய்! நீராடி நிமலனை வழிபடு; நடந்ததை மறந்து, நடப்பதனை எண்ணிச் செயல்படுவோம்” என்று மென்மையாய்ச் சொல்லி, அவனைச் செயல்படுத்தினான்,அவனும் மாலை மயக்கம் தீர்ந்து, இறைவழிபாடு செய்தான். முனிவர்தங்கியிருந்த சோலையில் ஒரு புறத்தே அவர்கள் உறைவாராயினர். மாலைக் கதிரவனும் வானத்தை இருளில் ஆழ்த்திவிட்டு மேலைக் கடலுள் ஒளிந்து கொண்டான்.
இரவு இராமனுக்குத் தனிமையைத் தந்தது; வான் உறங்கியது; வையகம் உறங்கியது; பூ ஒடுங்கின; புள் ஒடுங்கின; உயிர்கள் அனைத்தும் அயர்ந்து உறங்கின; அரவுகளும் கரவு நீங்கி அடங்கி ஒடுங்கின; விலங்குகளும் ஒய்வு கொண்டன; இராமன்மட்டும் உறங்க வில்லை; வைகல் விடிவதை எதிர்நோக்கி இருவரும் விழித்தே இருந்தனர்; விடிந்ததும் சீதையைத் தேடி மலைப் பாதைகளையும், காட்டு வழிகளையும் கடந்து சென்றனர்.
சபரி காட்டிய வழியில் அவர்கள் கால்கள் சென்றன; ருசிய முகம் என்னும் மலையை அடைந்தனர்; குரங்குகளுக்கு அரசனாகிய சுக்கிரீவன் அவர்களைக் கண்டு அஞ்சினான். மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தென்பட்டன. பகைவர் எனக் கருதிக் குகைகளில் ஒளிய முற்பட்டன; அனுமனை அழைத்துத் தான் கொண்ட அனுமானத்தை உரைத்தான்; வாலியின் ஏவலை ஏற்று வரிவில் ஏந்தி வந்த வாலிபர்களாய் இவர்கள் தென்படுகிறார்கள், துறவுக் கோலத்தில் துயர் விளைவிக்க வந்திருக்கிறார்” என்று கூறி ‘நீ சென்று ஆராய்ந்து உண்மை தெரிந்து திரும்பிவா’ என்று ஆணையிட்டான்.
பாற்கடலில் எழுந்த நஞ்சைக் கண்ட அமரர்களைப் போல வானரர் அச்சம் கொண்டனர். அவர்கள் அச்சத்தைப் போக்கி அமைதியாக இருக்குமாறு அனுமன் கூறினான்; அஞ்சனை மகனாகிய அவன், அளுசன வண்ணனாகிய இராமனை மறைவில் இருந்து கவனித்தான்.
‘மூவர் கடவுளர்; இருவரே வந்துள்ளனர்; அதனால் இவர்கள் கடவுளர் அல்லர், வில்லேந்திய நிலையில் எதையோ தேடுபவராய் உள்ளனர்; சோகம் இவர்களை அணைந்திருக்கிறது; அன்பின் திருஉருவாய்க் காணப்படுகின்றனர்’, என்பதை அறிந்தான். பிரியம் கொள்ளத் தக்க மனிதராய்க் காணப்பட்டனர். அதனால் அஞ்சாமல் அவர்களை அணுகினான் அநுமன். அவர்கள் பார்வைக்கு அவன் விருந்தாயினான்.
“நீ யார்? எங்கிருந்து வந்தாய்? வந்தது ஏன்? என்ற வினாக்களைத் தொடுத்தனர்.
“காற்றின் வேந்தனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்” என்று விரிவாய்ச் சொன்னான் அநுமன்.
“இம் மலையில் இருந்து வாழும் வேந்தன் சுக்கிரீவன்; அவனுக்கு யான் ஏவல் செய்வேன்; தேவரீர்! நின்வரவு நல்வரவாகுக; நும்மை நோக்கி விரைவில் வந்தேன்;
“அனையவன் ஏவலினாலே உம்மை அறிய வந்தேன்” என்று மேலும் தொடர்ந்தான்.
“அனுமன் அறிவும், ஆற்றலும், கல்வியும், ஞானமும் நிரம்பியவன்” என்பதை அவன் சொல்லால் இராமன் தெரிந்துகொண்டான்.
“தான் கல்லாத கலையும் அறியாத வேதங்களும் இல்லை என்று கூறும்படி இவன் பேசுகின்றான்; யார் கொல் இச்சொல்லின் செல்வன்?” என்று வியந்தான்; “அவன் அந்தண வடிவத்தில் வந்தான் என்றாலும், சொந்த வடிவம் வேறு இருக்கவேண்டும்” என்பதை இராமன் உணர்ந்தான்.
“நீ கூறும் தலைவன் சுக்கிரீவனைத்தான் தேடி வந்தோம்; அவன் இருக்குமிடம் அறிவி” என்றான் இராமன்.
வாய்ப்பை எதிர்நோக்கி இருந்த அனுமன், அங்குச் சுக்கிரீவன் வந்த வரலாற்றை விளக்கினான்; ருசியமுகப் பருவதத்தில் உயிருக்கு அஞ்சி ஓடிவந்து ஒளிந்து கொண்டிருப்பதை உரைத்தான்; இந்திரன் மகனாகிய வாலி, கதிரவன் காவ்முளையாகிய சுக்கிரீவனைத் துரத்திக் கொண்டு வந்ததையும், சுக்கிரீவன் அங்கு வந்து ஒளிந்ததையும் கூறினான்; சுக்கிரீவன் வானரத் துணையோடு தங்கி இருக்கிறான்” என்று விளக்கினான். அவ்வாறே இராமனும்தான் அடைந்த துயரினை அனுமனுக்குச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.
அனுமன், தான் அந்தணன் அல்லன் என்றும், வானர இனத்தினன் என்றும் தெரிவித்துத் தன் சுயஉருவை அவர்களுக்குக் காட்ட, வானும் மண்ணு மாய் நின்ற அவன் நெடிய வடிவத்தைக் கண்டு, வியந்தான் இராமன்; அவனை ‘மாவீரன்’ என்று கூறிப் பாராட்டினான்!
அப்பொழுதே சுக்கிரீவனைத்தான் அழைத்து வருவதாய்க்கூறி விடைபெற்று நடை காட்டினான் அனுமன்.
சுக்கிரீவனோடு நட்பு
அனுமன் சுக்கிரீவனை அடைந்து இராம இலக்கு வரைப் பற்றிய செய்திகளை எல்லாம் விரிவாய்க் கூறினான்; “’இராமன் தன் மனைவி சீதையைப் பிடித்து துயருறுகிறான்; இராவணன் அவளைச் சிறைப் பிரித்து, மறைத்து வைத்து இருக்கிறான், சீதை சிறை வைக்கப் பட்டுள்ள இடம் தேட உன் இன்துணையை நாடி வந்துள்ளான்; உன் நட்பை விரும்புகிறான்; அவன் இங்கு வந்தது உனக்கும் நல்லது; துன்பம் விடிவுபெற அவன் உனக்கு உதவுவான்” என்று அனுமன் சுக்கிரீவனிடம் தெரிவித்தான்.
செய்தி கேட்டுத் தன் வாழ்வு உய்தி பெறும் என்ற நம்பிக்கையை அடைந்தான் சுக்கிரீவன். வானரத் தலைவனாகிய அவன் மானுடர் தலைவனாகிய இராமனை அடைந்து அடைக்கலம் பெற்றான். இருவரும் இன்னுரையாடி நல்லுறவு கொண்டு, நட்பு உடன்படிக்கை யும் செய்து கொண்டனர். குகனோடு ஐவராய் விளங்கிய தசரதன் மக்கள், சுக்கிரீவனோடு அறுவராயினர்.
“கடந்தது போகட்டும்; இனி நாம் நடப்பதைக் கவனிப்போம்; சுகதுக்கங்களில் இருவரும் பங்கு பெறுவோம்; உனக்கு வரும் கெடுதி எனக்கு உரியதாய் ஏற்பேன்; எனக்கு வரும் துன்பம் உனக்கு வந்தது ஆகும்; உன்னுடைய பகைவர் எனக்கும் பகைவர்; என் பகைவர் உன்பகைவர்; என் நண்பர் உனக்கு நண்பர்; உன்னுடைய நண்பர் எனக்கு நண்பர்” என்று இராமன் அறிவித்தான்.
இருவரும் உள்ளம் கலந்து, இனிய நண்பர் ஆயினர்; வானரர் ஆரவாரம் செய்து வாழ்த்துக் கூறினர் அனுமன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். சுக்கிரீவன் இராமன் இலக்குவரை விருந்துண்ண அழைத்தான்; காயும் கனியும் கிழங்கும் கொண்டு வந்து வைத்தான்; அவற்றை உண்டு அளவளாவினர்.
“நீயும் நின் மனையும் சுகமா?” என்று கேட்டான் இராமன்.
மூடியிருந்த கதவுகள் திறந்தன. அடக்கி வைத்த வேதனை வெளிப்பட்டது; கடந்த காலச் செய்திகளை நடந்தவாறு உரைத்தான்.
“வாலியும் யானும் உடன் பிறந்தவர்; அண்ணனிடம் அளவில்லாத பாசமும் மதிப்பும் காட்டினேன்; இராவணனும் அவன் வலிமைக்கு அஞ்சி அடங்கி இருந்தான். போரில் மாற்றான் வலிமையும் அவனை வந்துசேரும்; அத்தகைய வரவலிமையும் உரமும் பெற்றிருந்தான்; சிவபக்தனாய் இருந்தான்; சீலம் மிக்க வனாயும் விளங்கினான்.
“மாயாவி என்ற அசுரன், இவனிடம் வலியப் போருக்கு வந்தான்; வாலிக்கு அஞ்சிய அவன், ஒடி ஒரு பிலத்துள் நுழைந்து ஒளிந்தான்; அவனைத் தேடி வாலி பின்தொடர்ந்தான்; வாலி என்னைப் பார்த்து, “அவன் தப்பி ஓடிவிடக் கூடும்; உன்னை நம்பி நான் உள்ளே செல்கிறேன்; நீ அவனைத் தடுத்து நிறுத்தக் காவல் செய்; இத என் ஏவல்” என்று கூறி அப்பிலத்துள் நுழைந்தான்.
“திங்கள் இருபதும் எட்டும் சென்றன; வாலி குகையை விட்டு வெளியேறிய பாடில்லை; “மாயாவி அவனைக் கொன்று தின்று முடித்து இருப்பான்” என்ற முடிவுக்கு வந்தோம்; என்னுடைய அமைச்சர் என்னை நாட்டாட்சியை ஏற்குமாறு வேண்டினர்; எனினும் நான் அதற்கு இசையவில்லை; பிலத்துள் யானும் நுழைந்து அசுரனை அழித்து வருவதாய்க் கூறிச் செயல்பட்டேன்; அமைச்சர் என்னைத் தடுத்து நிறுத்தினர்; “கடமையை விட்டு மடமையாய் நடப்பது தகாது” என்று அறிவித்தனர்; நாட்டுக்கு நல்லரசு தேவை என்பதை வற்புறுத்தினர்; வாலி வரமாட்டான்; வந்தாலும், விவரம் சொல்லி அவன் மன்னிப்பைப் பெறமுடியும்” என்று அறிவுரை கூறினர். வேறு வழியில்லாமல் கோல்ஏந்தும் வேந்தனாய் மாறினேன்; ஆட்சி பீடத்தில் அமர்ந்தேன்; மாயாவி வெளியே வாராதபடி அப்பிலத்துள் வழியைக் கற்கள் கொண்டு கதவிட்டேன்; எதிர் பார்க்கவில்லை; வாலி மாயாவியைக் கொன்று, பிலத்துக் கற்களை விலக்கி வெளியே வந்தான்; “யான் அவனை அடைத்து வைத்து ஆட்சியைப்பற்றினேன்” என்று தவறாய் நினைத்தான்.
“என் தமையன் கால்களில் விழுந்து, தவறு செய்யவில்லை” என்று கூறி மன்னிப்பை வேண்டி னேன்; அவன் அதை நம்புவதாய் இல்லை; சினம் அடங்கவில்லை; சீறிப்பாய்ந்தான்; என்னைப் பிடித்து உடலைப் பிளக்க முற்பட்டான்; பிடியினின்று விடுபட்டு உயிருக்கு அஞ்சி ஒடினேன்; ஒடினேன்; ஒடினேன்; வாழ்க்கையின் கரை ஒரத்துக்கே ஒடினேன்; ருசியமுக பருவத்திற்கு ஓடி வந்து, அங்கு அடைக்கலம் பெற்றேன்;
வாலி அந்த மலைக்கு வந்தால் அவன் தலை சுக்கு நூறாகச் சிதையும் என்ற சாபம் இருந்தது; அதை அறிந்திருந்ததால் நான் இங்குச் சேர்ந்தேன்; சாபம் எனக்குப் பாதுகாப்புத் தந்தது; எனக்குத் துணையாக அனுமனும் வானரத் துணைவரும் வந்துசேர்ந்தனர்” என்ற தன் கதையை எடுத்துச் சொன்னான் சுக்கிரீவன்.
“சுக்கிரீவன் மனைவி உருமை என்பவள் உருவ அழகி, அவளையும் வாலி தன் சுகத்துக்குத் துணையாக்கிக் கொண்டான்; சுக்கிரீவன் நாட்டையும் துறந்தான்; மனைவி யையும் இழந்தான்; அக வாழ்வும், ஆட்சியும் அவனை விட்டு நீங்கின; பாதுகாவல் தேடி அவன் இங்கு வந்து சேர்ந்தான்.” என்று இக்கதை அங்குப் பேசப்பட்டது.
தம்பிக்கு ஆட்சி தந்து, பாசத்தால் உயர்ந்த இராமனால் இந்த நாசத்தை ஏற்க இயலவில்லை; ம்ற்றும் தம்பியின் தாரத்தைக் கவர்ந்து அவளை ஆரத் தழுவிச் செய்த கொடுமையை அவனால் மன்னிக்க இயலவில்லை; தம்பியைக் கொல்ல முயன்றதும் பின் தாரத்தைக் கவ்வியதும் இரக்கமற்ற செயல்கள் என்பதை அறிந்து, அவன் சினம் இருமடங்கு ஆகியது.
சுக்கிரீவனிடம் “அஞ்சற்க; வாலியைக் கொன்று, உன் மனைவியை உன்னிடம் சேர்ப்பேன்; ஆட்சியும் உன் கைக்கு வரும் மாட்சியைப் பெறுவாய்” என்று உறுதி கூறினான் இராமன். அனுமன் இதைக்கேட்டு அகம் மிக மகிழ்ந்தான்.
எனினும், சுக்கிரீவனுக்கு ஒர் ஐயம் எழுந்தது; அடி பட்ட நாகம் அவன்; பிடிபட்டுத் தப்பியவன்; இடியொத்த அண்ணன் வலியை நன்கு அறிந்தவன்; “மேரு மலையை எதிர்க்கும் ஆற்றல் பெருங்காற்றுக்கு ஏது?” என்று ஐயப்பட்டான்; பாற்கடலைக் கடைந்த பராக்கிரமம் நிறைந்தவன் வாலி, அண்டத்தை அளாவும் வேகம் கொண்டவன்; அத்தகையவனை இராமன் எதிர்க்க முடியும் என்பதில் அவனுக்கு உறுதி ஏற்படவில்லை; அனுமனைத் தனியே அழைத்து, இராமன் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டுக் கேட்டான்.
அனுமன் அவன் ஐயத்தை அறிந்து, தெளிவு படுத்தினான்; “வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனிடம் உண்டு” என்று கூறினான்; வேண்டு மனால் அவன் ஆற்றலை அறிய வாய்ப்பினைப் பெறலாம் என்றும் அறிவித்தான்; மராமரங்கள் ஏழையும் ஒரே அம்பால் துளைக்கும் வல்லமை அவனிடம் உண்டு என்பதைக் கூறித் தெளிவுபடுத்தினான்.
சுக்கிரீவனும் “அதுவே தக்கவழி என்று சிந்தித்த வனாய் மகிழ்ச்சி கொண்டான்; இராமனை அணுகித் தன் கருத்தை அடக்கமாய் அறிவித்தான்.
“உன்னுடைய வில்லின் ஆற்றலையும் அம்பின் வேகத்தையும் உன் விரத்தையும் எம் வானரர் காண விழைகின்றனர்; இந்த மராமரம் ஏழனுள் ஒன்றைத் துளைத்துக் காட்டினால் எங்களுக்கு ஊக்கமாக இருக்கும்” என்று தெரிவித்தான்.
இராமன் அவன் ஏக்கத்தை அறிந்து செயல்பட்டான்; “ஒரு மரம் என்ன ஏழு மரமும் என் ஒரே அம்பால் துளைபடும்” என்று கூறினான்.
மராமரங்கள் ஏழும் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய் நின்று கொண்டிருந்தன. இராமன் வில்லை வளைத்து, நாண் ஏற்றி அம்பு தொடுத்தான் அவ் ஒலி ஏழ் உலகும் கேட்டது; அனைவரும் நடுங்கினர்; அவ் அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்து முடித்து அவனிடம் வந்து சேர்ந்தது; ‘ஏழு’ என்ற எண்ணிக்கை உடைய பொருள்களும் உயிர்களும் “அது தம்மையும் தாக்குமோ?” என்று அஞ்சின.
இராமன் வில்லாற்றலைக் கண்டு சுக்கிரீவன் சொல்லொணா மகிழ்வும் நம்பிக்கையும் கொண்டான்; அதற்குமேல் அவர்கள் சிறிதும் தூரம் நடந்து சென்றனர்; வழியில் துந்துபி என்ற அசுரனது எலும்புக் கூடு மலை போல் படிந்து கிடந்தது; அதனைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
வற்றி உலர்ந்த அந்த எலும்புக்கூடு வழிமறித்தது. இராமன் தன் தம்பியிடம் அதை அகற்றுமாறு குறிப்புக் காட்டினான். இலக்குவன் தன் கால் நகத்தால் அதை உதைத்துத் துக்கி எறிந்தான். அது சென்ற இடம் தெரியாமல் நெடுந்தொலைவில் விழுந்து மறைந்தது. இலக்குவன் ஆற்றலை அறிய, இது சுக்கிரீவனுக்கு ஒரு வாய்ப்பாய் அமைந்தது.
“இது என்ன?” என்று இராமன் கேட்டான்.
“துந்துபி என்பவன் போர்த்தினவு கொண்டு வாலியொடு மோதினான்; வெற்றி தோல்வி இன்றி இருவரும் கட்டிப் புரண்டனர். இறுதியில் வாலி அவனைக்குத்திக் கொன்று தரையில் வீழ்த்தினான். அவன் தசைப் புண்களைக் கழுகும் நரிகளும் தின்று ஒழித்தன; அவன் எலும்பு மட்டும் அசையாமல் இங்குக் கிடந்தது” என்று கூறினான்.
“துந்துபியின் மாமிசப்பிண்டம் இந்த ருசியமுக பருவதத்தில் வாலியினால் தூக்கி எறியப்பட்டது; இங்கு மதங்க முனிவர் தங்கி இருந்தார். அவர் இதைக்கண்டு அருவெறுப்புக் கொண்டார். “இதை எறிந்தவன் இங்குவந்தால் அவன் தலை சுக்கு நூறாகுக” என்று சாபம் இட்டார்; அந்தச் சாபம்தான் எங்களுக்குப் புகலிடம் தந்தது” என்று விளக்கினான்.
சீதை சிந்திய கலன்கள்
அப்பொழுது வானரக்குலம், இடியும் அஞ்சும்படி வாய் திறந்து ஆரவாரித்தது. தூய நற்சோலையில் இராமனும் சுக்கிரீவனும் அமர்ந்து இன்னுரையாடினான்.
“நாயக! நான் உணர்த்துவது ஒன்று உண்டு” என்று சுக்கிரீவன் உரையாடினான்.
“இவ்வழி யாம் இருந்தபோது விண்வழியாய் இராவணன் கையகப்பட்ட அபலை ஒருத்தி, அழுத கண்ணிரோடு தான் முடித்து வைத்திருந்த அணிகலன் களைக் கீழே போட்டுச் சென்றாள்; அவற்றைப் பாதுகாத்து வைத்துள்ளோம்” என்று கூறி அவற்றை அவன்முன் வைத்தான்.
அணிகலன் அவனுக்கு உயிர் தரும் அமுதமாய்க் காட்சி அளித்தது; அணிகலன் கண்களினின்று மறைந்தது அதற்கு உரிய அணங்கின் தோற்றம் கண்முன்வந்து நின்றது; அணிகளைக் கண்டதால் மகிழ்ச்சியும், அணிக்கு உரியவள் அருகில் இல்லாததால், அயர்ச்சியும் அடைந்தான். இராமன் தன்னிலை கெட்டுச் சோர்ந்து மயங்கி விழுந்தான்; தான் உயிரோடு இருக்கும்போதே அணிகளைக் களையும் அவலநிலை ஏற்பட்டதே! என்று வருந்தினான். அருகிலிருந்த சுக்கிரீவன் ஆறுதலாய் நல்லுரைகள் தந்து மீண்டும் உணர்வுபெறச் செய்தான். “’கண்டது சீதையின் அணி கலன்களை; கொண்டவன் அரக்கன் இராவணன்” என்பது முடிவு செய்யப்பட்டது; அவன் எங்கிருந் தாலும் அவனைக் கண்டு தெளிந்து, கொண்டுவருவது தன்கடமை என்று சுக்கிரீவன் கூறினான்.
வாலி வதை
“இனி முதலில் வாலியைக் கொன்று, பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்டு; அவன் அரசனாவான்; அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை யுள்ள வானரர் ஒன்று சேர்வர்; அவர்களை ஒவ்வொரு இடமாய் அனுப்பினா. காலம் நீட்டிக்கும். ஒரே இடத்துக்குப் பலரையும் அனுப்பி வைப்பது மிகைப்பட்ட முயற்சியாகும். அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைப்பதுதான் தக்கது; அவ்வாறே இனிச் செயல்பட வேண்டும்” என்று அனுமன் இராமனிடம் கூறினான்.
இராமனும் “அவன் சொல்வது சரி” என்று ஏற்றுக் கொண்டான். அனுமன் தன் துணை அமைச்சர்களான தாரன், நீலன், நளன் ஆகியவர்களோடு இராம இலக்குவருக்கு வழிகாட்டச் சுக்கிரீவன் வாலியின் இருப்பிடத்தை நாடிச் சென்றான்.
சுக்கிரீவனும் அவன் அமைச்சர் நால்வரும் இராம இலக்குவரைத் தொடர்ந்து மலைச்சாரல் இடையே சென்றனர். “தான் செய்யத் தக்கது யாது?” என்று சுக்கிரீவன் இராமனை நோக்கிக் கேட்டான்.
“நீ வாலியைப் போருக்கு அழை; நீங்கள் இருவரும் போர் செய்யும்போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன்” என்று வழி வகையைக் கூறினான் இராமன்.
சுக்கிரீவனுக்கு அச்சம் நீங்கியது; வாலியை அழிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது; ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான்; யானையின் பிளிறல் கேட்டு எழும் சிங்கம் போல வாலி, சுக்கிரீவனின் அறைகூவலைக் கேட்டு வியந்தான்; போருக்கு அஞ்சிப் புறமுதுகிட்டவன், வலியவந்து அழைத்தது அவனுக்கு வியப்பை அளித்தது. வாலியின் தாரமாகிய தாரை, அவன் போருக்குச் செல்வதைத் தடுத்தாள், “இதில் ஏதோ சூது இருக்கிறது; போக வேண்டா” என்று கூறினாள்; கண்ணிர் வடித்தாள்.
“அவனே வலிய வந்து வகையாய் மாட்டிக் கொள்ளும்போது நாம் என்ன செய்ய முடியும்? அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கூறி எழுந்தான் வாலி. “அவன் தன் வலிமையை நம்பி வந்தவன் அல்லன், இராமன் அவனுக்குத் துணையாய் வந்திருக்கிறான்; அதனால்தான் அவனுக்கு இவ்வளவு அஞ்சாமை’ என்று தாரை எடுத்து உரைத்தாள்.
வாலி கடுங்கோபம் கொண்டான்; இராமன் திருப்பெயருக்கு மாசு கற்பிப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “தம்பியரை நேசிப்பவன் இராமன் உடன்பிறந்த சகோதரர்களிடையே அவன் பகையை மூட்ட மாட்டான்; தன்னிகரற்ற வீரனான இராமன், ‘ஒருகுரங்கோடு நட்புக் கொண்டு அவனுக்காகப் பரிந்து துணைக்கு வருவான்’ என்று சொல்வது நம்பத்தக்கது அன்று” என்று கூறித் தாரை தடுத்தும் தயங்காது போருக்குச் சென்றான்.
இராமன், வாலியின் தோற்றத்தைக் கண்டு இலக்குவனிடம் அவனைப் பற்றிப் பெருமையாய்ப் பேசினான். இலக்குவன், ‘சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் அல்லன்’ என்று எடுத்து உரைத்தான். அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணை தேடுகிறான் என்றால், அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போலத் தான் ஆகும்” என்றான்.
“தம்பியர் எல்லாம் பரதன் ஆகமுடியுமா? ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும்; அதற்காக நாம் அவனை வெறுக்க முடியாது; அவன் எப்படிப் பட்டவன் என்ற ஆராய்ச்சியா நமக்கு முக்கியம்? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? என்பதை வைத்துத்தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.
“வாலி, சுக்கிரீவனுக்கு உரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான்; தவறு இல்லை; அவன் மனைவியை ஏன் அவன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை அவன் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு உடையவன்; அவனை அழிப்பதுதான் அறம்” என்று கூறித் தெளிவுபடுத்தினான் இராமன்.
போர் மும்முரமாய் நடந்தது; சுக்கிரீவனை வாலி பந்தாடுவது போலத் துக்கி எறிந்தான். அவன் தாக்குதலுக்கு ஆற்றாமல் சுக்கிரீவன் துவண்டுவிட்டான்; இராமன் மறைந்திருந்த பக்கம் வந்து மெல்லிய குரலில் தன்னைக் காக்குமாறு வேண்டினான் இராமன். “உங்கள் இருவருக்கும் வேறுபாடு காண முடியவில்லை; நீ கொடிப் பூ அணிந்து செல்; அடையாளம் தெரிந்து கொள்கிறேன்; என்று அவன் செவிவில் படுமாறு மெதுவாய் உரைத்தான்.
ஊக்கம் மிகுந்தவனாக வாலியோடு சுக்கிரீவன் போரில் இறங்கினான். அவனை விண்ணில் எறிய வாலி தயாராய் இருந்தான். அந்த நிலையில் இராமன் அம்பு அவன் மார்பில் தொளைக்க, அவன் பிடி நெகிழ்ந் தவனாய்க் கீழே சாய்ந்தான்; மார்பில் பாய்ந்த அம்பைப் பிடுங்கி, “அதனை யார் எய்தது” என்று அறிய விரும்பினான்; அவனால் இயலவில்லை, இறுதியில் தன் வலிமை முழுவதும் பயன்படுத்தி, அதை இழுத்துப் பறித்தான்; “இராம” என்னும் திருப்பெயரைக் கண்டான்; இராமன் தன்மீது அம்பு எய்தியமைக்காக வருந்தவில்லை; சான்றோன் ஒருவன், தன் சால்பு குன்றிய நிலையில் நடந்து கொண்டான் என்பதற்காக வருந்தினான்; “அறம் வளைந்து விட்டதே” எனக்குமுறினான்.
“பரதனுக்குத் தமையனாய் விளங்கியவன், சகோதர பாசத்துக்கு இடையூறு செய்யலாமா?” என்று கேட்டான்.
“ஒவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தாய்! காவிய நாயகனாகிய நீ நடுநிலைமை தடுமாறலாமா? சீதையைப் பிரிந்துவிட்டதால் மனம் தடுமாறி இந்தத் தவறைச் செய்துவிட்டாயா? உலகநெறி என்பது உயர்ந்தவர் செய்கையில் தானே அமைந்து கிடக்கிறது? தலைவன் நீ! தவறு செய்யலாமா? உலகமே உன் செயல், பேச்சு, இவற்றைக் கவனிக்கிறது; அம்பு எய்ய நினைத்திருக்கலாம் அது உன்சொந்த விருப்பு வெறுப்புப் பற்றியது; ஆனால், மறைந்திருந்து அம்பு எய்தியது உன்வீரத்துக்கு இழுக்கல்லவா?” என்று கேட்டான்.
அதற்கு இராமன் விடை தரவில்லை; இலக்குவன் இடைமறித்து.
“சுக்கிரீவன் முதலில் வந்து இராமனைச் சந்தித்தான்; தனக்கு உதவுமாறு வேண்டினான்; அவனுக்கு உதவுவதாகக் கூறிவிட்டு, உன் முன்னால் வந்தால் நீயும் ‘அடைக்கலம்’ என்று கேட்டால் என்ன செய்வது? அதைத் தவிர்ப்பதற்குத்தான் மறைந்து இருந்து அம்பு செலுத்த வேண்டி நேர்ந்தது” என்று பதில் கூறினான்.
“இராவணனைக் கொல்வதற்கு உறுதுணை தேடி இருக்கலாம்; சிங்கத்தைத் துணையாகக் கொள்வதை விடுத்துச் சிறுமுயலை நம்பிச் செயல்பட்டு இருக்கிறாய்; “உன்னிடம் அறமும் இல்லை; அறிவும் இல்லை” என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது” என்று இராமனிடம் கூறினான்.
“நீ சொல்வதுபோல் என் தேவைக்காக உன்னைக் கொன்றேன் என்று சொல்வதை ஏற்க முடியாது; தீமையைக் கண்டவிடத்து அதை ஒழிப்பது அரசு நீதியாகும்; நீ எந்தத் தவறும் செய்யாத உன் தம்பியை அலற வைத்தாய்; துரத்தித் துரத்தி அடித்தாய்; தீர விசாரித்து உண்மை காணாது அவனைக் கொல்வதிலேயே நாட்டம் கொண்டாய்; தம்பியை அழிக்க நினைத்திடும் நீ, எனக்குச் சகோதர பாசத்தைப்பற்றிய பாடம் கற்றுத் தருகிறாய்.
“தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ, அவளைத் துணைவியாக ஆக்கிக் கொண்டாய்; பிறர் மனைவியை விரும்பும் அற்பத் தனம் உன்னிடம் அமைந்துள்ளது; நீ உயிர் வாழத் தக்கவன் அல்லன், பற்களைக் குத்தித் துய்மைப் படுத்தச் சிறுதுரும்பு போதும்; உலக்கை தேவை இல்லை; இராவணனை அழிக்க எனக்கு உன் தம்பிபோதும்; நீ தேவை இல்லை” என்று கூறினான்.
“ஒழுக்கம் என்பது மானிடர்க்கு விதிக்கப்பட்ட வரையறை, நாங்கள் விலங்குகள்; விலங்குகளுக்குள் கணவன் மனைவி என்ற உரிமை கொண்டாட முடியாது. “கற்பு” என்ற கட்டுத்திட்டத்துக்கு இங்கே இடமே கிடையாது; மேல் மட்டத்தில் நீங்கள் வலிய அமைத்துக் கொண்ட கட்டுப்பாடு அது; எங்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு விரும்பியவாறு வாழலாம் என்பதே”.
“வல்லவன் எதையும் செய்யலாம்; வலிமைதான் நியாய ஒழுங்குக்கு வரையறை; இது எங்களிடை நிலவும் விதி; எங்களிடம் அறநெறியை எதிர்பார்க்க முடியாது; நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்ப வர்கள்; மனிதருக்குச் சொல்லப்பட்ட அளவுகோல்களை வைத்து, எங்களை அளப்பதில் நியாயம் இல்லை” என்று வாலி கூறினான்.
“மிருகம், மனிதன், என்பது உடலைப் பற்றியது அன்று; மனத்தைப் பற்றியது; மனிதனுக்குரிய அறிவும் ஆற்றலும் சிந்தனையும் உன்னிடம் உள்ளன; விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியாது” என்று இராமன் அவனைத் திருத்தினான்; வாலி மனம் மாறினான்.
அதற்குப் பின் “இராமன் தவறு செய்யமாட்டான்; நீரில் நெருப்புத் தோன்றாது; தவறு தன்னுடையதுதான் என்று உணர்ந்து அடங்கிவிட்டான் வாலி.
“தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு” என்று பெருமிதத்தோடு கூறினான்; “நான் கேட்கும் வரம் ஒன்று உள்ளது; அதைத் தரவேண்டும்” என்று கேட்டான்.
“என் தம்பி மது உண்டு, அம் மயக்கத்தில் கடமை செய்வதில் தவறக்கூடும்; அதைப் பெரிதாகக் கொள்ளாது அவனை மன்னித்துவிடு; என்மீது செலுத்திய அம்பை அவன்மீது செலுத்த வேண்டா, அதைத் தாங்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை” என்று தம்பியின் மீது கொண்ட பாசம் வெளிப்படும்படி இவ்வரத்தைக் கேட்டான். வாலி சிறியன சிந்தியாதான் என்பதை இராமன் இதனால் அறிய முடிந்தது.
“மற்றொரு வரம் வேண்டுகிறேன்; என் தம்பியை உன் தம்பிமார்களுள் யாராவது தமையனைக் கொன் றவன், என்று கூறி இகழ்வாராயின், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
வாலி இராமன் மதிப்பில் மிக உயர்ந்து நின்றான்.
“அனுமனை உன் வில்லைப்போல வலிமையுள்ள துணைவனாய் ஏற்றுக்கொள்; சுக்கிரீவனை உன் தம்பி இலக்குவனைப்போல ஏற்றுப் பாசமும் பரிவும் காட்டுக; இவர்கள் துணைகொண்டு சீதையைத் தேடி அடை வாயாக” என்று இறுதியில் கூறினான்.
தன் தம்பியைப் பார்த்து அவனுக்கு அறிவுரைகள் சில கூறினான்.
“இராமனுக்கு ஏவல் செய்யும் பேறு பெற்றிருக் கிறாய்; நீ உன் கடமைகளினின்று தவறக் கூடாது; பெரியவர்கள் சவகாசம் நெருப்புப் போன்றது; நீங்கினால் குளிர் காயமுடியாது; நெருங்கினால் சுட்டு எரித்துவிடும்; “மேல் மட்டத்து வாசிகள் அடிமைகள் செய்யும் தவறுகளை மன்னிப்பார், என்று நினையாதே; அவர்களுக்குப் பயன்படாவிட்டால் தூக்கி எறிந்துவிடுவர்; மன்னர்கள் அடிமைகளை மன்னிக்கமாட்டார்கள்; பெரிய இடத்து உறவு கத்தி முனையில் நடப்பது போன்றது; கவனமாய் நடந்துகொள்” என்பது அவன் அறிவுரை.
வாலி மைந்தனான அங்கதன், தன் தந்தை மரண மறிந்து விரைந்துவந்தான்; சாகும் தருவாயில் இருந்த வாலியைப் பார்த்துப் பலவாறு கூறிப் புலம்பினான்.
“என் தந்தையே! எமன் வருதற்கு அஞ்சும் உன்னை மரணம் எப்படித் தழுவியது? இனி இராவணன் உன்னைப் பற்றிய அச்சம் நீங்கி நிம்மதியாய் வாழப் போகிறான்; இதுஉறுதி, பாற்கடலைக் கடையத் தேவர்க்கு உன்னைத் தவிர உதவ யார் இருக்கிறார்கள்? அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்து, மரணத்தை நீ ஏற்கிறாய் என்றால், உன்னைவிடக் கொடையாளி யார் இருக்க முடியும்?”
அங்கதனைத் தழுவிக் கொண்டு “நீ இனி அயர வேண்டா; நாயகன் இராமன் செய்த நல்வினைப்பயன் இது” என்றான் வாலி.
இராமனிடம் அங்கதனை அடைக்கலமாய் ஏற்று ஆதரிக்குமாறு வேண்டிக்கொண்டான் வாலி; இராமனும் அங்கதனுக்குத் தன் உடைவாளைத் தந்து அவனைப் பெருமைப் படுத்தினான்.
வாலி தன் மார்பில் பதிந்திருந்த அம்பினைப் பிடுங்கி வெளியே எடுத்தவுடன் இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது; அவன் உயிரும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றது; தாரை உயிரற்ற அவன் உடல்மீது விழுந்தாள்; புரண்டாள்; அழுதாள்; அரற்றினாள்.
“உன் தோளில் துயிலும் நான் இன்று, தரையில் விழுந்து துடிக்கிறேன்; உயிரும் உடம்புமாக இருந்த நாம் இனி எப்படித் தனித்துச் சாக முடியும்?’இந்த வெறும் உடம்பு, நீ இல்லாமல் எப்படி வாழும்? காலையும் மாலையும் சென்று நீ முக்கண்ணனை வழிபடுவாயே! இப்பொழுது நீ என்ன செய்வாய்? எப்படி உன்னால் வாளா இருக்க முடிகிறது? என் மெல்லிய ஆடைமீது சாயும் நீ, எப்படி வன்மையான தரையில் கிடக்கிறாய்? பொய் புகலாத புண்ணியனே! நீ என் உயிர்” என்று புகழ்ந்து பேசுவாயே! உயிரைவிட்டு உயிர் எப்படிப் போக முடியும்? அது பொய்யுரையாகி விட்டதே; உன் உள்ளத்தில் நான் உறைந்தேன் என்பது உண்மையாய் இருந்தால் இந்த அம்பு என்னையும் தாக்கி, என் உயிரையும் போக்கி இருக்க வேண்டுமல்லவா? அமுதத்தைத் தந்த உனக்குத் தேவர், பாராட்டுரை வழங்க, எதிர்கொண்டு அழைத்து உபசரித்தார்களோ? “உன் தம்பிக்கு வாழ்வு தா” என்று இராமன் வாய் திறந்து கேட்டிருந்தால் வள்ளல் ஆகிய நீ, மறுத்துப் பேசி இருப்பாயா? போருக்குச் சென்றபோதே தடுத்தேனே, இராமன் சுக்கீரவனுக்குத் துணையாய் வந்திருக்கிறான் என்று சொன்னேனே, நீ கேட்கவில்லையே! சாவை விரும்பி ஏற்றுக் கொண்டாயே! “அம்பு ஒன்றால் உன் மார்பைப் பிளக்க முடியும்” என்று இதுவரை நான் நம்பிய தில்லை; இது புதுமையாய் இருக்கிறது” என்று புலம்பினாள்.
தன் மகனை விளித்து, “தம்பியும் தமையனும் உறவு கொண்டிருந்தபோது உயர்ந்திருந்தனர். பகை புகுந்தபோது எவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டுவிட்டது பார்த்தாயா? அறச் செல்வனாகிய இராமனும் அறம் திறம்ப முடியும் என்பதை நீ எண்ணிப் பார்த்ததுண்டா?” என்று கடுமையாய் விமரிசித்தாள்; அதற்குமேல் தொடரவிடாது. அனுமன் இடைநின்று தடுத்துச் தாரையை அந்தப் புரத்துக்கு அனுப்பி வைத்தான்; அங்கதனைக் கொண்டு ஈமக்கடன் செய்வித்தனர்; நடக்க வேண்டியதில் நாட்டம் கொண்டனர்.
முடிபுனை விழா
தம்பி இலக்குவனிடம் சுக்கிரீவனுக்கு அவன் கையால் முடி சூட்டும்படி கட்டளை இட்டான் இராமன்.
சுக்கிரீவனுக்கு முடி சூட்டப்பட்டது; இராமன் பின் வருமாறு அறிவுரை கூறினான்.
“நீயும் அங்கதனொடு ஒற்றுமையாய் இருந்து நல்லரசு நடத்துவாயாக; அமைச்சரையும், படைத் தலைவரையும் தக்க வகையில் பயன்படுத்திக் கடமை களைச் செய்துமுடிப்பது அறிவுடைமை ஆகும். நூல் அறிவோடு நல்லது கெட்டது அறியும் பகுத்தறிவு கொண்டு தெளிந்து, ஆட்சி செய்ய வேண்டும்; செல்வத்தைக் காத்து தக்க வழியில் செலவு செய்யச் சிந்தனை செலுத்துவாயாக! நண்பர் யார்? பகைவர் யார்? பொது நிலையில் உள்ளவர் யார்? என்று பகுத்தறிந்து செயல்பட வேண்டும்; யாரிடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ? அந்தப் பாங்கு அறிந்து, அவை அறிந்து பேச வேண்டும்; எளியர் என்று சொல்லி ஒருவரை இகழ்ந்தால், அதனாலும் தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கூனியால் யான் அடைந்த தீமைகள், எனக்கு ஒரு பாடமாய் அமைந்துவிட்டன; பெண்டிரால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு; வாலியின் இறப்ப்ைப் பார்த்தாய்: எங்களுடைய வாழ்வில் ஏற்பட்ட சரிவுகளும் பெண்களால் ஏற்பட்டவையே; நாட்டு மக்களிடத்துத் தாயினும் அன்பு செலுத்து; கண்ணோட்டம் வேண்டும். அதேசமயம் தீமை செய்பவர்களைக் களை நீக்குவதுபோலத் தண்டிப் பதற்குத் தயங்கக் கூடாது; பிறப்பும் இறப்பும் நல்வினை தீவினைகளை ஒட்டி அமைவன; எனினும், மாந்தர்க்குச் ‘சிறப்பு’ என்பது அவர்கள் சிந்தனையை ஒட்டி அமை வதாகும்; உலகைப் படைத்த பிரம்மாவாய் இருந்தாலும், அறன் அல்லதைச் செய்துவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது; செல்வமும் வறுமையும்கூட அவரவர் முயற்சிகளை ஒட்டியன ஆகும். முயற்சி திருவினை ஆக்கும்; முயற்சி இன்மை வுறுமைக்குக் காரணம் ஆகிவிடும். என் அறிவுரையினை ஏற்று ஆட்சியை இனிது நடத்து வாயாக; மழைக்காலம் கழிந்த பின்பு கடல் போன்ற நின் சேனையுடன் இங்கு வந்து சேர்வாயாக” என்று சொல்லி அனுப்பினான்.
சுக்கிரீவன் சில நாள்கள் தங்களோடு தங்கும்படி இராமனைக் கேட்டுக் கொண்டான்.
“தவ வாழ்க்கையை மேற்கொண்ட நாங்கள் அரண்மனையில் சுகவாசிகளாய் மாறக்கூடாது மேலும் நாங்கள் உங்களோடு இருந்தால், எங்களைக் கவனிப்பதிலேயே உங்கள் காலம் கழிந்துவிடும், உங்களால் கடமைகளைச் செய்யமுடியாது” என்று கூறினான் இராமன்.
மேலும் தன் மனக் கருத்தை விரித்துரைத்தான்.
“சீதை இன்றித் தனித்து நான் அடையும் இன்பம் எதுவாய் இருக்கும்? “பெண்டாட்டியைப் பறி கொடுத்து, அரண்மனையில் களித்து இருக்கிறான்” என்று உலகம் பேசாதா? யான் துறவிகளைப்போல நோன்பு நோற்றுத் தனித்து வாழ்வதுதான் தக்கது” என்று கூறினான்.
சுக்கிரீவன் இராமன் திருவடிகளை வணங்கிக் கண்ணிர் மல்க விடைபெற்றுக் கிட்கிந்தை நோக்கிச் சென்றான். அங்கதனை அழைத்துச் சுக்கரீவனைச் சிறிய தந்தை’ என்று நினைக்காது, பெற்ற தந்தையாய் மதித்து, அவன் ஏவலை ஏற்று, நன்மகனாய் நடந்துகொள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தான் இராமன்.
சேனைகளைத் திரட்டுதல்
கார்காலம் கடந்தது, எனினும், குறிப்பட்டபடி குரங்கினத் தலைவனாகிய சுக்கிரீவன் படைகளோடு வந்து சேரவில்லை. அதனால், வெகுண்டு எழுந்த இராமன் இலக்குவனிடம், “சுக்கிரீவன் காலம் தாழ்த்து வது ஏன்? கடமையை மறந்து கள்ளுண்டு மயங்கிக் கிடக்கின்றான் போலும் சொன்ன சொல் தவறியவனைத் தவறாமல் தண்டிப்பது கடமையும் ஆகும்”.
“பெறுவதற்கு அரிய அரச செல்வம் பெற்றபின் அரசபோகத்தில் ஆழ்ந்து, செய்நன்றி மறந்துவிட்டான், போகட்டும்; நம் வீரம் அவனுக்கு நினைவில் இருக்க வேண்டுமே! சத்தியம் தவறியவனைக் கொன்று அழிப்பது தவறு அன்று, எதற்கும் நீ சென்று அவன் கருத்தினை அறிந்துவா” என்றான்.
“அறத்தை நிறுவக் கையில் வில்லுண்டு; வில்லில் தொடுப்பதற்கு விறல்மிக்க அம்பு உண்டு; அவன் உயிரைக் கவர, நம்பால் வீரம் உண்டு என்பதைச் சொல்லிவிட்டுவா; அவன் சாவை விரும்பி ஏற்கிறான் என்பது தெரிகிறது”.
“சீதையைத் தேடுவதற்காக உடனே புறப்பட்டு வரட்டும்; இல்லை என்றால், அவனும் அவ் வானரக்குடியும் அழியும் என்பதை அறிவித்துவிட்டு வா”.
“அவசரப்பட்டு உன் ஆவேசத்தைக் காட்டாமல் அவன் சொல்லும் பதிலைத் தெரிந்துவா” என்ற சொல்லி அனுப்பினான் இராமன்.
இராமன் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு கிட்கிந்தை நோக்கிப் புறப்பட்டான் இலக்குவன்; மலைகளையும் குன்றுகளையும் கடந்து, குறுக்கு வழியில் கிட்கிந்தையை அடைந்தான்; இலக்குவன் சீற்றத்தோடு வருவதைக் கண்ட அங்கதன், அதிர்ச்சி அடைந்தான்; நேரே சுக்கிரீவன் தங்கியிருந்த அரண்மனையை அடைந்தான்.
தன் சிற்றப்பன் அற்பத்தனமாய்க் குடித்து மயங்கி ஆழ்ந்த துயிலில் கிடப்பதைப் பார்த்தான். தாழ்ந்த கூந்தலும் மேலாடை நெகிழ்ந்த நிலையும் உடைய இளம் பெண்கள், அவன் கால்களை வருடிக்கொண்டு இருக்க, மென்மையான சுகத்தோடு அவன் மோகத்தில் ஆழ்ந் திருப்பதை அறிந்தான்.
உள்ளே நுழைந்து, உரத்த குரலில் இலக்ககுவன் வருகையை அறிவித்தான் இடி இடித்தாலும் அசையாத வனாய் அவன் மயக்கத்தில் கிடந்தான். இவன் சொல்வதை அவன் வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இல்லை; குடி போதையில எந்த போதமும் ஏற வில்லை; “கடமையைப் பற்றிப் பேசினால் கடலை ஒருபடி விலை என்ன?” என்று கேட்பதுபோல அவன் முணுமுணுப்பு இருந்தது.
அங்கதன் அனுமனை அடைந்து, அடுத்து நடப்பது குறித்து ஆலோசனை செய்தான். அன்னை தாரையை அணுகி, நிலைமையைத் தெரிவியுங்கள் என்று அனுமன் அறிவுரை கூறினான்.
வெள்ளம் பெருக்கெடுத்து வந்துவிட்டது; அணை போடவேண்டிய பொறுப்புத் தாரைக்கே உரியது; அனுமன் அறிவுரையின்படி தாரை, தாரகை போன்ற அழகிகள் சூழ்ந்துவர, இலக்குவன் வரும் வழியில் குறுக்கே எதிர்நோக்கிச் சென்றாள்; அவன் வழியை மறித்தாள்; இலக்குவன் தன்னைப் பெரிய சேனை ஒன்று எதிர்க்கும் என்று எண்ணினானே தவிர, பெண்கள் புடைசூழ வந்து தன்னை மறிப்பர் என்று எதிர்பார்க்கவில்லை.
தன்மனைவியைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்து அறியாதவன் அவன். சிரித்த முகமும், விரித்த கூந்தலும், இனித்த சொல்லும் கனிந்த பார்வையும் கொண்ட மகளிரைக் கண்டு இலக்குவன் நாணினான்.
அமைதியாய்த் தான் சொல்ல வந்த கருத்தை அடைக்கமாய்க் கூறினான்; “இராமன் சீதையைப் பிரிந்த துயரத்தில் ஆழ்ந்துகிடக்கிறான்; சுக்கிரீவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை; காலம் தாழ்த்திவிட்டான். அதற்குக் காரணம் அறிந்துவர இராமன் என்னை அனுப்பி இருக்கிறான்” என்று சொன்னான் இலக்குவன்.
“அவன் காலம் தாழ்த்தவில்லை; தக்க காலம் பார்த்துக்கொண்டு இருக்கிறான்; கடமையில் அவன், அதில் முழுக்கருத்தையும் செலுத்தி இருக்கிறான்; சீதை இருக்கும் இடம் தேட, இங்கு உள்ள வானரப்படைகள் போதா என்பதால் உலகின் எல்லாத் திக்குகளுக்கும் செய்தி அனுப்பி, வீரர்களைத் திரட்டிவர ஆள்களை அனுப்பி இருக்கிறான்; படைகள் வந்து குவியக் கால தாமதம் ஆகிறது. அதனால்தான் இன்னும் அவன் புறப் படவில்லை. சுக்கிரீவன் சொன்ன சொல் தவறமாட்டான்; செய்வதைத் திருந்தச் செய்யும் இயல்பினன்; இராமனுக்காக அவன், தன் உயிரையும் பணயம் வைப்பான்; ‘சீதையை முதலில் கண்டு செய்தி கொண்டு வந்து தருவதே தன் முதல் கடமை’ என்று எந்நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்துகிடக்கிறான்; அவனுக்கு உறக்கமே இல்லை; ‘கடமை கடமை கடமை’ என்று எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறான்” என்று நயம்படப் பேசி அவன் மனத்தை மாற்றினாள். அனுமனும் தாரை உடன் இருந்து தக்க சொற்களை எடுத்துக் கூறி அவன் சினத்தைத் தணிவித்தான்.
அங்கதன் இலக்குவனைக் கண்டு வணங்கி அடி பணிந்தான்; சினம் ஆறிய இலக்குவன், அங்கதனிடம் தன் வருகையைச் சுக்கிரீவனிடம் தெரிவிக்குமாறு சொல்லி அனுப்பினான்.
அங்கதன் சுக்கிரீவனை அடைந்து, இலக்குவன் கொண்ட சீற்றத்தையும் தாரையின் கூற்றினால் அவன் அடைந்த மாற்றத்தையும் எடுத்துக் கூறி இலக்குவனைப் போற்றி வரவேற்க அழைத்தான்.
“ஏன் இலக்குவன் வருகையைத் தன்னிடம் தெரிவிக்கவில்லை” என்று மயக்கம் நீங்கிய நிலையில் வினவினான். அங்கதன், நடந்த செய்தியைச் சொல்லி, இனிக் காலம் தாழ்த்தாமல் இலக்குவனை வந்து காண்க என்று வேண்டினான் சினம் தணிந்த நிலையில் இருந்த இலக்குவனைச் சுக்கிரீவன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான்; அவனைத் தக்க தவிசு ஒன்றில் அமருமாறு வேண்டினான்.
“புல்தரையில் இராமன் படுத்திருக்க, நான் இங்கே பொன் தவிசில் எப்படி அமர்வேன்; அவன் கீரை உணவு உண்ண நான் இங்கே சோறும் கறியும் எப்படி அருந்துவேன்? நான் போய்த்தான் அந்தக் கீரை உணவும் சமைக்கவேண்டும்; அதனால், விரைவில் புறப்படுக” என்றான்; அவன் உபசாரங்களை இலக்குவன் ஏற்றுக்கொள்ளவில்லை.
சுக்கிரீவன் அனுமனிடம் “எஞ்சிய படைகளைத் திட்டிக் கொண்டு உடன் வருக” என்று கூறிவிட்டு இலக்குவனோடு சென்று, உள்ள படைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
இராமனை அடைந்து, அவன் திருவடிகளை வணங்கிக் கால தாமதத்துக்கும், தான் இன்பத்துள் வைகிக் கடமையில் காலம் கடத்தியமைக்கும் சுக்கிரீவன் மன்னிப்பு வேண்டினான்; அவனைத் தன் தம்பி பரதனாகவே மதித்து அவனிடம் இன்னுரை பேசி, அனுமனைப் பற்றி விசாரித்தான்.
அனுமன் பெரும்படையுடன் பின் தொடர்ந்து வருவதாகக் கூறி அவனை மகிழ வைத்தான். இராமனும் அவனை அன்புடன் வரவேற்று ஒருநாள் ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் வந்து சேருமாறு சொல்லி அனுப்பினான்.
இராமன் அனைவரும் நீங்கியபின் தானும் தன் தம்பியுமாய்ப் பிரிந்த சீதையின் நினைவோடு கவலை நிரம்பியவனாய் அன்றைய பொழுதைக் கழித்தான்.
சேனைகள் வருகை
சேனைகள் வருகைக்காக இராமனும் இலக்கு வனும் காத்து இருந்தனர். சதவலி, சுசேடணன், தாரன், கேசரி, துமிரன், காவட்சன், பணசன், நீலன், தரீமுகன், கயன், சாம்பவன், துன்முகன், துமிந்தன், குமுதன், பதுமுகன், இடபன், தீர்க்கபாதன், வினதன், சரபன் முதலிய படைத் தலைவர் பல திசை களிலிருந்தும் வானர சேனைகளைக் கொண்டு வந்து குவித்தனர். அப் படைகளைச் சுக்கீரிவன் இராமனுக்குக் காட்டினான். “இனிச் சீதை இருக்கும் இடத்தைக் காண்பதற்குக் கால தாமதம் செய்யக் கூடாது” என்று இலக்குவன் கூறினான்.
நான்கு திசைகளுக்கும் தக்க தலைவர்களின்கீழ் சேனைகளை அனுப்பி வைத்தனர். சுக்கீரிவன் தென் திசை நோக்கிச் செல்லும் வீரர்களுக்குச் செல்ல வேண்டிய வழி வகைகளைக் கூறினான்; “’முதலில் விந்திய மலையை அடைதல் வேண்டும்; அதனைக் கடந்து சென்றால் நருமதை ஆறு வரும்; அதனைக் கடந்தால், ஏமகூடம் என்னும் மலை வரும்; அதனைக் கடந்து சென்றால், பெண்ணை ஆற்றங்கரை வரும்; விதர்ப்ப நாட்டைக் கடந்தால், தண்ட காரணியம் வந்து சேரும்; அங்கே முண்டகத்துறை என்ற ஒன்று உள்ளது. அதனைக் கடந்து சென்றால், பாண்டுமலை என்ற மலை ஒன்று உள்ளது; அங்கே கோதாவரி என்னும் நதி உள்ளது. அதனைக் கடந்து சுவணம் என்னும் ஆற்றைத் தாண்டிய பிறகு கொங்கண நாட்டையும் குலிந்த நாட்டையும் காணலாம்; அதன் பின் அருந்ததி மலையை அடையலாம்; ஆற்றை எல்லாம் கடந்து சென்றால் தமிழ் நாட்டின் வட எல்லை யாகிய திருவேங்கட மலையை அடையலாம். தமிழ் நாட்டில் காவிரி யாற்றினனக் கடந்தால், மலை நாடும் பாண்டிய நாடும் வரும்; அவற்றை எல்லாம் கடந்தால் ‘மயேந்திரம்’ என்னும் மலை தென்கருங்கடலை அடுத்து வரும்; அங்கிருந்து இலங்கைக்குச் சென்று விடலாம்” என்று வழி கூறினான்.
இராமன், சீதையின் அங்க அடையாளங்களைத் தக்க உவமைகள் கொண்டு அனுமனுக்கு விளக்கினான்; பாதாதி கேசம்வரை அவள் அழகினைப் விவரித்துக் கூறத் தொடங்கினான்.
“அவள் காலடிகள் தாமரையை ஒக்கும் என்றால், புறவழகு ஆமை போன்றது; கனைக்கால்களுக்கு வரால் மீனும், அம்பறாத் துணியும், சூல்கொண்ட நெற் பயிரும் உவமையாகும்; தொடைகள் வாழைகளைப் போன்றன; சீதையின் இடை வெளிப்படாதது; அதற்கு உவமை கூற இயலாது, வயிற்றுக்கு உவமை ஆலிலை; உந்திச்சுழி கங்கையாற்றின் நீர்ச்சுழி போன்றது; கைகள் காந்தள்மலர் போன்றன; தோளுக்கு மூங்கிலையும் கரும்பையும் கழுத்துக்குப் பாக்கு மரத்தினையும் உவமை கூறலாம்; சங்கும் உவமை யாகலாம்; பச்சோந்தி, எள் பூ, குமிழமலர் அவள் மூக்குக்குச் சரியான உவமைகள் ஆகும். செவிக்கு வள்ளைக் கொடி கண்களுக்குக் கடல்; புருவங்களுக்கு வாள்; நெற்றிற்குப் பிறைச்சந்திரன், ஒரளவு முகத்துக்குத் தாமரை, கூந்தலுக்கு மேகம்; நிறத்துக்குப் பொன் உவமை களாகும். இவ்வாறு அவள் அழகைப் புனைந்துரைத்து, எல்லா வகையிலும் அழகிற் சிறந்த நங்கை ஒருத்தி தென்பட்டால் அவளைச் சீதை என்று தீர்மானிக்கலாம் என்று தெரிவித்தான். மேலும் அடையாளத்துக்காக இந்தச் செய்திகளையும் சொல்லி அனுப்பினான்.
“விசுவாமித்திரரோடு மிதிலையை அடந்தபோது, கன்னிமாடத்தில் அன்னம் ஆடும் முற்றத்தில் அருகில் அவளைக் கண்டதையும், ‘வில்லை முறித்தவன் முனிவரோடு வந்த வீரனாக இல்லை என்றால் உயிரை விடுவேனே’ என்று அவள் தன்னைப் பார்த்த செய்தியையும், காட்டுக்குப் புறப்பட்டபோது ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்று அவள் கேட்டதையும், “யான் அலாதன எல்லாம் உனக்கு இனியவோ” என்று கேட்டதையும், அயோத்தியை விட்டு நீங்கு தற்கு முன், “காடு வந்துவிட்டதோ” என்று அவள் கேட்டதையும், மற்றைய செய்திகளையும் சொல்லி அனுப்பினான்.
சாம்பவான், அனுமன் முதலிய படைத்தலைவர் களோடு, பெரும்படையோடும் அங்கதன் தென்திசை நோக்கிச் சென்றான்.
பிலம்புகுந்து வெளிவந்த கதை
விந்தன் என்பவன் ஏனைய திசைகளை நோக்கிச் செல்லும் படைகளுக்குத் தலைமை தாங்கினான். வளமான தமிழ் பேசும் தென்திசை சென்றவர், முதன் முதலில் விந்தமலையை அடைந்தனர்; நருமதை ஆற்றையும், ஏமகூட மலையையும், கடந்து, ஒரு பாலைவனத்தைக் கண்டனர்; அப்பாலையின் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒருபிலத்தின் உள்ளே சென்றனர்; “பாலையில் நடந்தால் மடிவது உறுதி; அதனால், பிலத்து வழியே அது காட்டும் புதிய பாதையில் செல்லலாம்” என்று முடிவு செய்தனர்.
இருட்டு வழியில் அவர்கள் குருட்டு மனிதர் ஆகி விட்டனர். அனுமன் பேருருக் கொண்டான்; அவன் வாலைப் பிடித்துக்கொண்டு மற்றவர் பின் தொடர்ந்தனர். அனுமன் கையால் தடவிக்கொண்டு விரைந்து நடந்து சென்றான். அந்தப் பிலத்துள் அழகிய நகர் ஒன்றனைக் கண்டனர். அது ஒளி பெற்றுத் திகழ்ந்தது; கவர்ச்சி மிக்கதாய் இருந்தது; அங்கு உண்ண உணவும் தின்னப் பலவகைக் கனிகளும் இருந்தன; குயிலும் மயிலும் ஏனைய வண்ணப் பறவைகளும் இருந்தன; பெண்கள் அழகாய்த் தோற்றமளித்தனர். ஆனால் அவற்றிற்கு உயிர் ஒட்டம் என்பதே காணப் படவில்லை; அனைத்தும் ஒவிய வடிவங்களாய் இருந்தன.
அது மயன் என்னும் அசுரத் தச்சனால் நிருமணிக்கப் பட்ட இடம்; அதிலிருந்து தப்பி வெளி யேற முடியாமல் திகைத்தனர்; அனுமன் அவர்களுக்கு ஆறுதல் கூறி எப்படி யும் வெளியேற்றுவதாக உறுதி தந்தான். அப்பொழுது உயிர் ஒட்டம் உடைய அழகிய நங்கை ஒருத்தி, அழகிய சடையுடன் ஒளி பெற்ற உருவத்தோடு காணப்பட்டாள்; அவள் ஒரு மாபெரும் தவசியாய்த் திகழ்ந்தாள்; அவள் பெயர் சுயம்பிரபை என்று அறிந்தனர்.
அவள், விசித்திரமான கதை ஒன்றைச் சொன்னாள்.
“மயன் என்னும் அசுரத் தச்சனுக்கு இந்நகர் பிரமனால் அளிக்கப்பட்டது. அவன் தேவப் பெண் களுள் ஒருத்தியைக் காதலித்தான். அந்தப் பெண் இந்தச் சுயம்பிரபை என்பவளின் உயிர்த் தோழி யாவாள். அந்தத் தெய்வத் தச்சன் தன் காதலியொடு இந்நகருக்கு வந்தான்.
அன்றில் பறவை என இணைந்து இன்பம் அடைந்த காதலர் அங்கேயே நிலைத்து வாழ்ந்தனர். இவளும் அவர்களோடு தங்கிவிட்டாள். இந்திரன் அந்தத் தெய்வப் பெண் இருக்குமிடம் தேடி, அங்கு வந்து அந்த அசுரனைக் கொன்று அப்பெண்ணை மீட்டுச் சென்றான்.
அவர்களுக்குத் துணையாய் இருந்த சுயம்பிரபை என்பவளை அந்நகரத்துக்குக் காவலாய் இருக்கும்படி ஆணையிட்டு இந்திரன் அந்த இடத்தைவிட்டு நீங்கினான். விமோசனம் அறியாமல் வேதனையில் உழன்ற அவளுக்கு இராமன் தூதுவராய் அனுமன் முதலிய வானரர் வரும் போது வழிபிறக்கும் என்று இந்திரன் சாபவிமோசன் தந்தான்.
சுயம்பிரபை இராமன் துதுவனாய் அனுமன் வந்தான், என்பதனால் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தாள், எனினும், அவளும் அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறினான்.
அனைவரும் அனுமன் உதவியை நாடினர். ‘அஞ்சற்க’ என்று சொன்ன அஞ்சனை மைந்தன் அனுமன், விண்ணுயர வளர்ந்து பேருருவம் கொண்டான்; மேலே திறந்து வெளியே வந்தான்; திருமால் வராக அவதாரம் எடுத்ததுபோலப் பிலத்தைப் பிளந்து மேலே வந்தான். சுயம்பிரபை விடுதலை பெற்றவளாய் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தாள். வானவர், அனுமன் அளவற்ற ஆற்றலை வியந்து பாராட்டினார்.
வழிப் பயணம்
அங்கிருந்து தொலை தூரம் நடந்து சென்று, குளிர்ந்த பொய்கைக் கரை ஒன்றினை அடைந்தனர். சூரியன் அஸ்தமித்தான். அப்பொய்கையில் குளிர்ந்த நீரைக் கையால் வாரிப் பருகி நீர்வேட்கை தீர்ந்தனர். தேனும் பழமும் அவர்களுக்குத் தெவிட்டாத உணவுகளாயின. பொய்கைக் கரை ஓரம் குளிர்ந்த காற்று வீசியதும் அவர்கள் மெய் மறந்து உறக்கம் கொண்டனர்.
அந்தப் பொய்கையைக் காத்து வந்த அசுரன், அதற்கு உரிமை கொண்டாடினான்; நீரைக் குடித்த வானரரைத் தாக்க நினைத்தான்; அங்கதன் மார்பில் ஒரு குத்து விட்டான்; அங்கதன் விழித்து எழுந்து பதிலுக்குத் தாக்கி, அந்த அசுரன் உயிரைப் போக்கினான்.
‘அவன் யாராக இருக்கக்கூடும்?’ என்று யோசித் தனர். கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான், “வேற் படையைத் தாங்கிய அவ் அசுரன், துமிரன் என்பவன் ஆவான்; அவன் அப் பொய்கைக்கு உரிமை உடையவன்; இவனைப் போல அசுரர் பலர் ஆங்காங்கே இருப்பர்” என்று கூறினான்.
பிறகு அவர்கள் சீதையைத் தேடிச் சென்று பெண்ணை நதியை அடைந்தனர்; தசநவம், உசநவம் என்னும் பெயர்களை உடைய நாடுகளைக் கடந்து விதர்ப்ப நாட்டை அடைந்தனர்; அதற்குப் பிறகு தண்ட காரண்யம், முண்டகத்துறை. பாண்டுமலை, கோதாவரி நதி, சுவணகம் நதி, குலிங்க தேசம், அருந்ததி மலை, மரகத மலை ஆகியவற்றை எல்லாம் கடந்து வேங்கடமலையை அடைந்தனர்; அங்குத் தவம் செய்து கொண்டிருந்த அருந்தவ முனிவர் திருவடிகளை வணங்கிப் பின், சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டை அடைந்தனர். அதன்பின் செந்நெல்லும், பாக்குமரமும். கரும்பும் நிறைந்த காவிரி நாட்டை அடைந்தனர்; அதன்பின் முத்தமிழ் வளர்க்கும் தென் தமிழ் நாடாகிய பாண்டிய நாட்டை அடைந்தனர். அதனையும் கடந்து சுக்கிரீவன் குறிப்பிட்ட மகேந்திர மலையைச் சேர்ந்தனர்.
சம்பாதியைச் சந்தித்தல்
அங்கதன் தலைமையில் தென்திசை நோக்கி நாலாப்பக்கமும் அனுப்பிய சேனைகளும் அந்த மயேந்திர மலையை அடைந்தன. கால் கடுக்க நடந்தும் அவை கண்டது, கலக்கமே தவிரக் கொண்ட இலக்கு அன்று; சீதையைக் காண முடியாதவர்களாய் மனம் நொந்து, வேதனையால் வெந்து, வெதும்பி உள்ளம் சோர்ந்தனர்.
“’சீதையைத் தேடி மண்முழுவதும் சுற்றினோம். சுக்கிரீவன் விதித்த காலம் திங்கள் ஒன்றும் கடந்துவிட்டது திரும்பிச் சென்று, இயலாமையை இயம்பினால் சுக்கிரீவன் இறப்பான், இராமனும் உயிர் துறப்பான்; அதனால் அங்குத் திரும்பிப் போவதில் பயனில்லை; தோல்வியை ஏற்றுக் கொண்டு இங்கேயே தவம் செய்து காலத்தைக் கழிக்கலாம்; அதுவும் சுமை எனத் தோன்றினால் நஞ்சினை உண்டு உயிர் விடுவோம்” என்று கருத்துத் தெரிவித்தனர்.
அங்கதன், சாம்பவன், அனுமன் மூவரும் ‘அடுத்துச் செய்வது யாது?’ என்று யோசித்தனர். உயிர் விடுவதே மேல் என்ற கருத்தை மற்றவர் சொல்ல, அனுமன் அதற்கு இசையவில்லை. “சடாயுவைப் போலப் போராடி. உயிர் துறப்பதுதான் ஆண்மைக்கு அழகு; செயலற்றுத் தற்கொலை செய்து கொள்வது கோழமைச் செயலாகும்; வீரச் செயலை வேண்டி நின்றவர் வேறு ஒன்றையும் எண்ணிப்பார்ப்பரோ? எலி தவளைகள் தான் குழிகளின் பதுங்கிக் கொள்ளும்; புலிகளும் யானைகளும் போன்ற நாம், போரிட்டு வீரமரணம் அடைதல்தான் புகழ் மிக்க செயலாகும்” என்று கூறினான்.
இராவணனை எதிர்த்துக் கழுகின் வேந்தனான சடாயு உயிர் விட்டான் என்ற செய்தி அவர்கள் பேச்சில் அடிபட்டது. அதைக் கேட்ட சம்பாதி என்னும் கழுகுக்கு அரசன், அவர்களை அடைந்து, சடாயுவின் மரணத்தைக் குறித்து விரித்து உரைக்குமாறு கேட்டுக் கொண்டான்.
இராவணன், தன்வாள் கொண்டு சடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்திய செய்தியை விவரமாக அனுமன் எடுத்துக் கூறினான். சம்பாதி சடாயுவின் தமை யனாவான். இச்செய்தி அவனைச் சோகத்தில் ஆழ்த்தியது.
தான் சடாயுவின் தமையன் என்பதை வானரர்களுக்குத் தெளிவுபடுத்தினான். ‘இராமனுக் காகச் சடாயு உயிர் விட்டான்’ என்ற செய்தி அவனுக்குப் பெருமையைத் தந்தது. பேருவகை அடைந்தான்; சம்பாதி இறக்கைகள் தீய்ந்து கருகிப் பறப்பதற்கு இயலாமல் மெதுவாய் நடந்து வந்தான். அவன் தன் இறகுகளை இழந்த சிறுமையை அவர்களுக்கு எடுத்து உரைத்தான்; தானும் தன் தம்பியும் விண்ணவர் நாடு அடைய, விண்ணுயரப் பறப்பதில் போட்டி போட்டுக் கொண்டு சென்றதாகவும், சூரியனின் வெப்பம் தாங்காமல் சடாயு இறக்கைகள் தீய உடல் காய வேதனைப்பட்டதாக வும், அவனைக் காப்பதற்காக அவனுக்கு மேலே தான் பறந்து, தன் சிறகுகளை விரித்து, அவனுக்கு நிழல் உண்டாக்கி யதாகவும் தெரிவித்தான். கதிரவன் வெம்மையால் சிறகுகள் தீய்ந்து தரையில் விழுந்தான் என்பதையும் “இராமன் தூதுவனான அனுமனொடு வானரப் படைகள் இராமன் திருப்பெயரைச் சொல்லும் அப்பொழுது சிறகுகள் தளிர்க்கும்” என்று சூரியன் சொல்லி இருந்தான் என்பதை யும் தெரிவித்தான். அதன்படி வானரரை இராமன் திருப் பெயரைக் கூட்டமாகக்கூடி விளிக்குமாறு சம்பாதி வேண்டினான். அவ்வாறே அவர்கள் வாயினிக்க, இராமன் திருப்பெயரைச் சொல்லச் சம்பாதியின் சிறகுகள் தழைத்து வளர்ந்தன. சம்பாதி இழந்த வலிமையை மீண்டும் பெற்றான்; கழுகுகளுக்குத் தலைவனாய் மீண்டும் அவனால் செயல்பட முடிந்தது.
“எதற்காக அவர்கள் அங்கே வந்தனர்?” என்ற செய்தியைக் கேட்டறிந்தான். அவர்கள் சீதையைத் தேடித் தென்திசை வந்ததாகத் தெரிவித்தனர்.
சீதையை இராவணன்தான் எடுத்துச் சென்றான், என்பதையும், தென்னிலங்கையில் அசோக வனத்தில் அவனைச் சிறை வைத்திருக்கிறான் என்பதையும் சம்பாதி உறுதியாய்ச் சொன்னான். தான் அதை உயரே இருந்து காண முடிகிறது என்பதையும் கூறினான்.
“இலங்கைக்கு அனைவரும் செல்வது இயலாது” என்றும், ‘அவர்களுள் ஆற்றல் மிக்க ஒருவன் மட்டும் சென்று சீதையிடம் பேசி ஆறுதல் கூறி அவள் தரும் செய்திகளைக் கேட்டறிந்து வரலாம் என்றும், அதுவும் முடியாவிட்டாலும் யாருமே போகாவிட்டாலும் தான் சொன்ன செய்தியை மட்டும் உறுதியாகக் கொண்டு இராமனிடம் அறிவித்தால் போதும் என்றும் கூறினான். காவல் மிக்கது இலங்கை; அதன் மதிலைக் கடந்து உள்ளே போவது எளிய செயலன்று; நான் சொன்னதைப் போலச் செய்யுங்கள்’ என்று கூறினான்.
“சடாயு தான் அரசனாய் இருந்து கழுகுகளை வழி நடத்தி வந்தான். அவன் மறைந்ததும் சிறகு இழந்து நான் செயலற்றுக் கிடந்தேன்; இப்பொழுது சிறகுகள் முளைத்து விட்டன; பழைய ஆற்றல் என்னிடம் வந்துவிட்டது; நான் அப்பறவைகளை வழிநடத்திச் செல்லுகிறேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றான் சம்பாதி.
மகேந்திர மலையில் அனுமன்
“புள்ளரசன் சம்பாதி பொய்யுரை பேசான்; உள்ளங்கை நெல்லிக் கணிபோலத் தெள்ளத் தெளிய உள்ளதை எடுத்து உரைத்தான். இனி, நாம் உயிர்விடத் தேவை இல்லை; செய்ய வேண்டுவனவற்றைத் திறம்படச் செய்வதே தக்கது” என்று வானரர் தம் கருத்தைத் தெரிவித்தனர்.
“சூரியன் மகனாகிய சுக்கிரீவனையும் சுடர் விற்கை இராமனையும் தொழுது, உற்றது அறைந்தால் நம் கடமை முற்றுப்பெறும்; எனினும், நாமே ஆராய்தல் தெளிவான செயலாகும் என்ற முடிவிற்கு வந்து “நம்மால் கடலைக் கடக்க முடியுமா?” என்று ஆராய்ந்தனர். அவரவர் தம் ஆற்றலையும் திறமையையும் விரித்துரைக்க முயன்றனர்.
நீலன், “என்னால் கடலைக் கடக்க இயலாது” என்று தெளிவுபடக் கூறினான். அங்கதன் “அக் கரைக்குச் செல்லும் ஆற்றல் எனக்கு உண்டு; திரும்ப இக்கரைக்கு வர முடியும் என்று கூற என்னால் முடியாது” என்றான்.
சாம்பவானும் தனக்கு ஆற்றல் இன்மையை வெளிப்படுத்தினான்; மேருமலை இடறத் தன்கால் முடம் பட்டுவிட்டது; அனுமனே ஆற்றல் மிக்கவன், செல்லத் தக்கவன் அவனே என அவன் விரித்துக் கூறினான்.
“அனுமனுக்கு நீண்ட வாழ் நாள் வரம் உள்ளது; அதனால், அவனை யாரும் அழிக்க இயலாது; சாத்திர நூல்களின் நுட்பங்களை அவன் அறிந்தவன்; திறமை யாய்ப் பேசும் சொல்வன்மை உடையவன்; எமனும் அஞ்சும் சினமும், உடல் வலிமையும், சிவனைப் போலக் கடும்போர் செய்யும் திறமும் படைத்தவன்; கடல் கடந்து திரும்பும் ஆற்றலும் அனுமனுக்குத்தான் உண்டு, இராமனும் அனுமனிடமே மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறான்;
“எண்ணிச் செயல்படும் நுண்ணறிவும், எதையும் சாதிக்கும் திண்மையும் அனுமனிடமே உள்ளன வயதாலும் சாம்பவானை விட மிகவும் இளஞன் பேருருவம் எடுத்து மண்ணும் விண்ணும் வியாபிக்குப் பேராற்றல் அவனிடமே உள்ளது; அமைச்சனுக்கு உரிய அறிவும், படைத் தலைவனுக்கு உரிய வீரமும், அறிஞர்க்கு உரிய சிந்தனையும், சிங்கம் போன்ற சீற்றமும், அஞ்சாமையும் உள்ளமையால் செல்லத் தக்கவன் அனுமனே” என்று சாம்பவான் கூறினான்.
இவ்வாறு சாம்பவான் புகழ்ந்து கூறி முடித்ததும் அறிவிற் சிறந்த அனுமன் சம்மதித்தான்; உறுதியான நெஞ்சோடு தன் உள்ளக் கருத்தை உரைத்தான்.
“இலங்கையைத் தோண்டி எடுத்து வேரோடு இவ்விடம் கொண்டு வருக என்றாலும், அரக்கரை அழித்து அணங்கனைய சீதையைக் கொண்டு வருக என்றாலும் செய்து முடிப்பேன்; கலங்க வேண்டா; இது உறுதி” என்று கூறினான்.
“கடலை மிக எளிதில் கடப்பேன்” என்று சொல்லி அனுமன் பேருருவில் நின்றான். திருமாலின் திருவடி உலகளக்கத் தாவியது போல, அநுமன் கடலைக் கடக்கத்தானேயாகி நின்றான்; மகேந்திரமலை மேல் நின்ற அனுமன், கூர்மமாகிய ஆமைமேல் நின்றமந்திரமலை போல் காட்சி அளித்தான்.
அனுமன் விண்ணளாவ நின்றான்; மின்னலை உடைய மேகங்கள் அவன் காலில் படிந்து, அவன் காலுக்குக் கட்டிய வீரக் கழல்களைப் போல ஒளி செய்தன. அவன் ஏறி நின்ற மகேந்திரமலை அண்டங்களைத் தாங்கும் பொன்மயமான துணின் அடியில் இட்ட கல்லைப் போலக் காணப்பட்டது.