="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

10 யுத்த காண்டம்

வீடணன் அடைக்கலம்
பற்றி எரிந்த நகரை மயன் என்னும் தெய்வத் தச்சன் பொலிவுடைய மாநகராக ஆக்கிப் புதுப்பித் தான்; மாணிக்கத் துண்கள் அமைந்த மணிமண்டபத் தில் சிம்மாசனத்தில் இராவணன் கொலு வீற்றிருந்தான்.

வரம்பறு சுற்றமும், மந்திரத் தொழில் நிரம்பிய அமைச்சரும், சேனைத் தலைவரும் அவன் அவைக் கண் அமர்ந்தனர். அரம்பை மாதர் கவரி வீசி அவனைச் சுகப்படுத்தினர். அடுத்து நடக்க வேண்டியதைத் தொடுத்துச் சிந்திப்பதற்குச் சற்று அயலானவரை வெளிப்படுத்தி, நெருங்கிய சுற்றத்தினரையும், அமைச்சரையும், உடன் பிறந்த தம்பியரையும் மட்டுமே நிறுத்திக் கொண்டான்.

“சுட்டது குரங்கு, கெட்டது கடி நகர்; பட்டனர் சுற்றமும் நட்பும்; கிட்டியது இழிவும் பழியும்; அழிவு செய்த அனுமன், சென்றவழி தெரியாமல் தப்பி விட்டான். இனிச் செய்யத் தக்கது யாது; “” என்ற வினாவை எழுப்பினான் இராவணன்.

“கரன் சிரத்தை இழந்தான்; சூர்ப்பனகை செவியையும் மூக்கையும் இழந்தாள்; வீரர் மனைவியர் தாலியை இழந்தனர்; சித்திர நகர் எழிலை இழந்தது; நாம் மானத்தையும் புகழையும் இழந்தோம்” என்று இழப்புகளை அடுக்கிக் கூறினான்.

மகேந்திரன், துன்முகன், பிசாசன் முதலிய படைத் தலைவர் நாடக வசனம் பேசினர்: “படை எழுப்பி எதிரிகளைத் துடைப்பதுதான் செய்யத் தக்கது” என்ற கருத்தைச் சொல்லினர்.

உடன் பிறந்த தம்பியாகிய கும்பகருணன் மட்டும் அதற்கு உடன்படவில்லை; திடமுடன் தான் கருதியதை எடுத்து உரைத்தான்; அடிப்படைத் தவற்றை எடுத்துக் கூறினான்; ‘சீதையைச் சிறை பிடித்தது இராவணன் செய்த தவறு’ என்றான்; ‘இராமனை அடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் பெருமை’ என்றான்; தொட்ட இடத்தில் அவளைக் கொண்டு விடுவித்தால் அது தூய செயலாகும்; அன்றி, வீரம் பேசினால் அதனையும் திறம்படச் செய்ய வேண்டும்; படை எல்லாம் கூட்டி, ஒரு சேரச் சென்று தாக்குதலே நடைமுறைக்கு ஏற்றது” என்று கூறினான்.

வயதால் இளைஞன், வாலிபப் பருவத்தினன்; இராவணன் வீரமகன் இந்திரசித்து மூத்தோர் வார்த்தைகளை எதிர்த்துப் பேசினான்; “முள்ளைக் களை வதற்குக் கைநகம்போதும்; கோடரி தேவை இல்லை” என்றான்; “தான் ஒருவனே தக்க படை கொண்டு அவர்களைத் தாக்கிப் பாடம் கற்பிக்க முடியும்” என்றான்.

அறச் செல்வனாகிய வீடணன், அறிவு நிரம்பிய கருத்துகளைச் சொல்லினான்.
“சுட்டது கூன் உடைய குரங்கு அன்று; மிதிலை வந்த சனகன் மகள்” என்றான்; “சீதை கற்பு” எரிமலையாகும்; நெறி திறம்பியவரை அது சுட்டு எரிக்கவல்லது” என்று கூறினான்.

“ஆணவத்தால் அறிவு இழந்த இரணியன் எப்படி அழிந்தான்? யாரால் ஒழிந்தான்? பெற்ற மகனே அவனுக்குப் பெரும்பகைஞன் ஆனான்; “உன்னோடு உடன் பிறந்தவன் என்பதால் நீ செய்யும் கொடுமை களுக்கு எல்லாம் நான் துணைபோக வேண்டும், என்று எதிர் பார்த்தால் அது கற்பனை ஆகும்”.

“தவற்றைத் திருத்திக்கொள். பைந்தொடியாள் சீதை அவளை விட்டுவிடு; பெண்பாவம் பொல்லாதது; வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு நீ வேதனைப்படுவதில் பொருளே இல்லை”.

“இரணியனைக் கொன்றது யார் தெரியுமா? பாற்கடலில் துயிலும் பரமன்தான்; அவன் துயில் எழுந்து துரயோர் துயர்துடைக்கப் பிறந்துள்ளான்; பகை பெரிது; மானுடரால் நீ சாகப் போகிறாய்; நீ கேட்ட வரத்தில் செய்த பிழை இது; மனிதனை மறந்து விட்டாய்; மானுடத்தின் வெற்றியை நிலைநாட்டப் பிறந்தவன் அவன்” என்றான்.

வீடணன் கூறியது, வீண்உரை என்று கருதினான் இராவணன். அரக்கர் குலத்தில் பிறந்த அவன், பெண்ணுக்காக இரக்கம் காட்டுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “இனப்பற்று இல்லாத துரோகி நீ; தப்பிப் பிறந்து விட்டாய்; இனி நீ தப்பிச் சென்றால்தான் பிழைப்பாய்; பிரகலாதர் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். நீ விதி விலக்கில்லை” என்றான்.

வீடணன் திருத்த முயன்றான்; திருத்துதல் தீராதாயின் பொறுத்துற வேண்டும்; இவன் கும்ப கருணன் அல்லன்; கடமை என்பது எது? என்று முடிவு செய்வதில் வேறுபாடு இருந்தது; “உடன் பிறந்தவனுக் காக உயிர் விடுவது கடமை” என்று கருதினான் கும்பகருணன், உடன் பிறந்த கொள்கைக்காக எதையும் இழப்பது என்பது வீடணன் கொள்கையாய் இருந்தது; முன்னவன் கடமை வீரன்; இவனோ அறச் செல்வன்; “தனிமனிதனுக்காகத் தன்னை இழப்பதை விட உலகப் பொது அறத்திற்காகத் தான் பணி செய்வதே செய்யத் தக்கது” என்ற கொள்கை இவனிடம் நிலவியது.

அறம் என்பது ஒன்று; அதோடு அவன் ஞானநெறியில் நம்பிக்கை உள்ளவன்; பிறப்பு என்பது பந்த பாசங்களைக் கொண்டது; இறப்பு என்பது முடிந்த முடிவு அன்று; பிறப்பு இறப்பற்ற பேரின்ப வாழ்வு. அடைதலே பிறப்பின் அடிப்படை’ என்று கருதினான்; சமயக் கோட்பாடுகள் இவனைப் பண்படுத்தி இருந்தன.

“இராமனை அடைந்தால் பிறப்புக்கு விடுதலை கிடைக்கும்; பேரின்ப வீடு கிடைக்கும்” என்ற நம்பிக்கை யும் இவனுக்கு இருந்தது. இந்த இரண்டு காரணங்களால் இவன் இராவணனை விட்டு விலக முடிவு செய்தான். இவனுக்கு நெருங்கிய நேசமுடைய அமைச்சர்கள் நால்வரோடு கலந்து கட்சி மாறுதல் தேவை’” என்பதை உணர்ந்தான். பாசத்தை விட நேசம் இவனுக்குப் பெரிதாகப்பட்டது.

கடலைக் கடந்து கார் வண்ணன் இருக்குமிடம் சேர்ந்தான்; வீடணன் தமிழ்மண்ணில் கால்வைத்தான். அது இலங்கைவாசிக்குப் புகலிடம் தந்தது; ‘முன்பின் அறியாத முதல்வனாகிய இராமனை எப்படிச் சந்திப்பது? எப்படி அறிமுகம் செய்துகொள்வது? ஏற்புடைய கருத்துகளை எப்படி எடுத்துச் சொல்வது? பகைக் களத்திலிருந்து வந்தவனுக்குப் புகல் இடம் எப்படிக் கிடைக்கும்? அஞ்சி அஞ்சி அவனை அணுகினான்.

குரக்கினத் தலைவர் சிலர் வீடணனைக் கண்டனர்; ‘அவன் தீய எண்ணத்தோடுதான் வந்திருக்க வேண்டும்’ என்று எண்ணினர்; ‘அவனை இழுத்துப் பிடித்துக் கழுத்தை நெரித்துக் கொல்வதே ‘தக்கது’ என்று முடிவு செய்தனர்.

மயிந்தன், துமிந்தன் என்னும் பெயருடைய வானரத் தலைவர் வேறுவிதமாய் நினைத்தனர்; அங்க அழகு இலக்கணங்களை அவர்கள் அறிந்தவராய் விளங்கியதால், ‘அவன் அரக்ககுணம் அற்றவன்’ என்று முடிவு செய்தனர்; அறவாழ்க்கையும் நீதியின் பால் நெஞ்சமும் உடையவன்; ராவணன் வஞ்சகத்தை எதிர்த்து வந்திருக்கிறான்” என் இராமனிடம் உரைத்தனர்.

இராமன் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்ய விரும்ப வில்லை; அவன் அரசமகன்; மற்றவரைப் பேசவிட்டுத் தன் இருப்பிடத்தை ஒர் ஆலோசனை மண்டபம் ஆக்கினான்; சுருசுருப்பாய்ச் சுக்கிரீவன் தன் கருத்தை உரைத்தான்.

“வந்தவன் ஒரு சந்தர்ப்பவாதியாகத்தான் இருக்க வேண்டும்; அவனுக்கு அடிப்படையில் நாட்டுப்பற்று இல்லை; அவன் பற்று வேறு: “நாட்டை உம்மிடம் கேட்டுப் பெற்று ஆட்சி செய்ய வேண்டும்” என்று விரும்புகிறான். இராவணனோடு இதற்குமுன் மாறுபட்டவன் அல்லன்; இன்று அவன் வேறுபடுகிறான் என்றால், அவன் ஒரு துரோகியே” என்றான்.

சாம்பவான் வயதில் மூத்தவன்; அனுபவசாலி, ஆர அமர எதையும் சிந்தித்துப் பேசக் கூடியவன். அவன் பழமைவாதி, சாதிப்பற்று மிக்கவனாய்க் காணப்பட்டான்.

“வந்தவனோ, அரக்க சாதி, நீதியால் வேறுபட்டு, இவன், இங்கு வந்து சேர்கிறான்; ஒருமுறை இவனை ஏற்றுக் கொண்டால் பிறகு அவனை வெளியேற்ற முடியாது. தஞ்சம் அடைந்தவனை எக்காரணத்தைக் கொண்டும் வஞ்சகன் என்று தள்ள முடியாது; மாரீசன் பொன்மானாய் வந்து நம்மை மயக்கினான்; இவன் நன்மகனாக வந்து நயக்கிறான். இருவருக்கும் வேறுபாடு கிடையாது” என்றான் சாம்பவான்.

“தெருவிலே போகிற வம்பை யாரும் விலைக்கு வாங்கமாட்டார்கள். தொடக்கத்தில் இவன் நல்லவனாக நடிப்பான்; ஏமாறும்போது இவன், தன் பாடத்தைப் படிப்பான்; இவன் ஒரு ஒட்டைப்படகு இவனைக் கொண்டு நாம் கரையேற முடியாது; நட்டாற்றில் தள்ளி விட்டுத் தன் நாயகனிடம் போய்ச் சேர்ந்துவிடுவான்” என்று நீலன் ஒலமிட்டான்.

இராமன் மாருதியை அழைத்தான்; மாற்றுக் கருத்து இருந்தால் உரையாற்றலாம், என்றான்.

அரசியல் அறிந்த அனுமன், “இவனைத் தூயவன் என்றோ, தீயவன் என்றோ அவசரப்பட்டு முடிவு செய்ய இயலாது; இவனுக்கு ஏதோ ஒர் உட்கருத்து இருக்க வேண்டும்.”

“நாட்டிலே பரதனுக்கும், காட்டிலே என் தலைவனுக்கும் ஆட்சி தந்திருக்கிறாய்; இங்கே தக்க சமயத் தில் வந்து முந்திக் கொண்டான் இவன்; இலங்கை தனது ஆகும் என்ற ஆசையால் வந்திருக்கலாம். ஆட்சி காரணமாய் வந்திருக்கலாம்; ஆசை யாரை விட்டது?”

“இவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை அறிவது, அறிய விரும்புவது தேவை இல்லை; அது பள்ளியாசிரியர்தான் சான்றிதழில் எழுத வேண்டும்; இது பகைப்புலம்; அதனால், நமக்கு நன்மையா தீமையா? என்று முடிவு செய்வதுதான் நல்லது” என்றான்.

“நாமாக விரும்பி அவனை நயக்கவில்லை; அவனாக வந்தால் அவனை பயன்படுத்துவதில் தவறு இல்லை.”

“இவன் எந்தக் கட்சி? யாருக்கு இவன் எதிர்க் கட்சி? இவன் முன்சரித்திரம் என்ன? இவற்றை அறிந்து கூறுகிறேன்”.

“இவனை இலங்கையில் கண்டு இருக்கிறேன்; கள்ள அரக்கர் மத்தியில் வெள்ளை உள்ளம் படைத் தவன்; அரசநீதி அறிந்தவன்; தூதுவனாகச் சென்ற எனக்குத் துயர் விளைவிக்கவிடாமல் தடுத்தவன். அந்த நாட்டில் அச்சடித்த நீதி நூலில் ஊன் உண்ணாமையும், மது மறுத்தலும் தடை செய்யப்பட்டவை; இவனோ விதி விலக்கு: சைவ உணவு தவிர மற்றவற்றைச் சுவையாதவன்; கோயில் குருக்களாகப் பிறக்கவேண்டியவன்; அரக்க குலத்தில் பிறந்துவிட்டான்.”

“இவன்தான் இப்படி அவன் மகள் எப்படி? அந்தப் பெண் அங்கு இல்லாவிட்டால்; சிறை வாசத்தைச் சீதைக்கு சுகவாசமாய் மாற்றி இருக்க முடியாது. இராவணன் மருட்டியபோது எல்லாம், “அவன் கட்டுண்ட பட நாகம்; வெற்று வேட்டு; அவனால் சீதையைத் தொட முடியாது; தொட்டால் அவன்தலை சுக்கு நூறாகும்” என்ற சாபத்தை எடுத்துச் சொன்னவள் அவள்தான். சீதைக்காக நம்பிக்கைக் கனவுகளைக் கண்டு சொல்லியதும் அவள்தான்; அந்தக் குடும்பமே நமக்குத் துணையாக இருந்து வருகிறது; பகை நடுவே பண்புமிக்க நண்பர் அவர்கள்; இது அவர்கள் மனித இயல், அரசியல் வேறு”.

“இவன் பகை மண்ணில் பிறந்தவன்; போர் மறைகளை அறிந்தவன்; யார்? எது? என்பனவற்றை அறிந்து தெரிந்தவன். இராவணன் பெற்ற வரமோ, அவன் படையின் தரமோ நமக்குத் தெரியாது; ‘உடன் பிறந்தே கொல்லும் வியாதி’ என்பது பழமொழி; அவனை அழிப்பதற்கு இவன் தேவைப்படுவான்; இவனை நாம் சேர்த்துக் கொள்வது அரசியல்”.

அரசியலில் கட்சி மாறுவது இயற்கை; அதற்கு உரிமை உண்டு; அதற்குத் தக்க தடுப்புச் சட்டம் எதுவும் உருவாக வில்லை; இவன் சமையலுக்கு வேண்டிய கரிவேப்பிலைதான்; தேவை இல்லை என்றால் நம்மால் இவனைத் துக்கி எறிய முடியும்; அரக்கர் சேனையை அஞ்சாத நாம், இந்தக் கடுவ்ன் பூனையைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும். வெள்ளத்தில் இவன் ஒரு நீர்க்குமிழி; அதுதானே கரைந்து விடும்; வெடித்துவிடும். நம் ஆற்றலில் நமக்கு நம்பிக்கை உண்டு” என்று அனுமன் கூறினான்.

பகைவன் என்பதால் சுக்கிரீவன் அஞ்சினான்; சாம்பவான் சாதியைப் பற்றிப் பேசினான்; நீலன் ஒட்டைப் படகு என்றான்; அனுமன் ஒரு கரிவேப்பிலை என்றான்; எரிந்த கட்சி எரியாத கட்சியாய் வாதம் இட்டனர்.

பட்டிமன்றப் பேச்சு கேட்டு நடுநிலை வகித்துக் கருத்தைக் கூறும் தலைவர்களைப் போல, மாருதி சொன்ன கருத்தை, இராமன் ஏற்றுக் கொண்டான்; ஆனால், சிறிது வேறுபட்டுப் பேசி இரு கட்சியினரும் பேசியது சரியே” என்று ஒப்புக் கொண்டு மேலும் புதியது பேசினான்.

“நன்மையோ, தீமையோ அதைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவை இல்லை; அடைக்கலம் என்று வந்தவனுக்கு ஆதரவு தருவது அரிய பண்பாடு; அதை நாம் ஏற்க வேண்டும்”.

“அதுவே அறம்; ஆண்மையும், மேன்மையும் ஆகும்” என்றான்.

இராமன் தெளிவான உரைக்கு எதிர் சொல்ல முடியாமல் போய்விட்டது; அதனை ஆணையாக ஏற்றுச் செயல்பட்டனர். சுக்கீரீவன், தானே வீடணனைச் சார்ந்தான்; அவனை வாழவைக்க வரவேற்று அழைத்துச் சென்றான்.

இராமன் அவனை ஏற்றுக்கொண்டான்; “இலங்கைச் செல்வம் உனது; நீண்ட காலம் சிறப்புற ஆண்டு நிலைத்து வாழ்க” என்று வரமும், வாழ்த்தும் கூறினான். ஆட்சி கிடைத்ததற்கு வீடணன், அகம் மகிழ்ந்தான்; மாட்சிமை நிரம்பிய இராமன் திருவடி களில் விழுந்து தொழுது அவன் நல்லாசிகளைப் பெற்றான்.

“தசரதன் மக்கள் நால்வர் நாங்கள்; குகனோடும் சேர்ந்து ஐவரானோம்; சுக்கிரீவனோடு அறுவர் ஆனோம்; இப்பொழுது உன்னோடு சேர்ந்து எழுவராகிறோம்” என்று தன் உடன் பிறப்பாக அவனை இராமன் ஏற்றுக் கொண்டான்.

தமையனை விட்டுப் பிரிந்தவனுக்குத் தங்க மடம் கிடைத்தது; மாற்றுத் தமையன் கிடைத்தான்; தோட்டத்துச் செடிகளைப் பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் சில செடிகள் பிழைத்துக் கொள்ளும்; கொடியாய் இருந்தால் அதுவும் கொழுகொம்பு தேடிப் படரும்; இதுவும் ஒரு மாற்றுச் சிகிச்சையாய் அமைந்தது அவனுக்கு; உறவை முறித்துக் கொண்ட அவனுக்குப் புது உறவு கிட்டியது; இழப்பு ஈடு செய்யப்பட்டது.

படைத் தலைமைக்கு ஏற்கனவே இருந்த சுக்கிரீவனோடு வீடணனையும் சேர்த்தான் இராமன், இராம இலக்குவராய் அவர்களை மாற்றிவிட்டான்; அவர்கள் இரட்டையர் ஆயினர்; வீடணன் படைத் தலைமை ஏற்று அவர்களை ஊக்குவித்தான், உற்சாகப்படுத்தினான்.

வாழ்த்தும் தொழிலையுடைய வானவர் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்; “வீடணன் பெற்ற வெற்றியும் பெருவாழ்வும் உலகில் யாரும் பெற்றிலர்” என்று அவனைப் பாராட்டி வாழ்த்தினர்.

கட்சிமாறும் அரசியல்வாதிகளுக்கு அவன் முன்னோடியாய் விளங்கினான்; சரித்திரப் புகழ்பெற்ற சாதனை மனிதனாய்க் காணப்பட்டான்; உறவு கொண்டவனை விட்டுக் கொள்கை கண்டவனிடம் அரண் தேடிச் சரண் அடைந்துள்ளான். “இது சரியா தவறா” என்பதற்கு இதுவரை முன்னுரை கூறினார் களே தவிர முடிவுரை கூறியதாய்த் தெரியவில்லை.

கடலைக் கடக்கும் வழிவகை
நெருப்பிடையே நிழலைக் காண்பது போலப் பகைவரிடையே ஒரு நண்பனை, வீடணனை இராமன் கண்டான். அவனிடம் இலங்கையின் இயற்கையைப் பற்றியும் இறைமாட்சியைப்பற்றியும் கேட்டு அறிந்தான். அரண்களைப் பற்றியும் முரண்களைப் பற்றியும் பேசி அறிந்தான்; இராவணன் செயல்திறனை யும் ஆற்றலையும் அவன் நீக்குப் போக்குகளையும் கேட்டு அறிந்தான்; அவன் குறைகளையும் நிறைகளையும் அவன் உரைகளால் அறிந்தான்; இலங்கையைப் பற்றி அறிய அவன் எழுதாத வரைபடமாக விளங்கினான்.

வானரப் படைகளும் அங்கதன் முதலிய படைத்தலைவர்களும் அனுமனிடம் அளவிலா மதிப்பும் கணிப்பும் வைத்திருந்தனர்; அவன் ஆற்றலிலும் செயல் திறனிலும் முழுநம்பிக்கை கொண்டிருந்தனர்; “கடலைக் கடப்பதற்கு அவன் தான் தக்க விடை சொல்ல வேண்டும்” என்று எதிர் பார்த்தனர்.

“கடலைக் கடப்பது எப்படி? வழிவகைகள் யாவை?” இவை பற்றிச் சீதை மணாளன் சிந்தித்தான்; முல்லை நிலத்துக்குக் கண்ணனும், மலைக்கு முருகனும், மருதத்துக்கு இந்திரனும், பாலைக்குக் காளியும் வழிபடு தெய்வங்களாய் இருப்பது போல, நெய்தல் நிலத்துக்கும், நீலக் கடலுக்கும் தெய்வம் வருணன் என்பது நினைவுக்கு வந்தது. அவன் பெயரால் மந்திரம் சொல்லிச் சென்று ‘கடலில் வழிதருக’ என்று விளம்பினான்; அலை ஒசையில் அவன் காதில் இராமன் சொல்லோசை விழவில்லை.

வாய்ச் சொல்லுக்குச் செவிசாய்க்காத செவிடலை! வழிக்குக் கொண்டு வரக் கைவில்லுக்கு ஆணை பிறப்பித்தான்; இராமன் நாண் ஏற்றினான்; பிரம்ம அத்திர நேத்திரத்தைத் திறந்தான்; ஏவியகணை அவன் ஆவியை வாங்க அவனை அணைந்தது. அலறி அடித்துக் கொண்டு அடக்க ஒடுக்கமாய் அண்ணல் இராமன்முன் வந்து நின்றான் வருணன். அலை அடலுக்கு அப்பால் தன் ஆணையைச் செலுத்தியதால், இப்பால் என்ன நடக்கிறது? என்பதை அவனால் கவனிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தான்; தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

கடல்நீரை அம்புகொண்டு வற்றச் செய்து விட்டால், காடுகள் இல்லாமல் போய்விடும்; மழை தன் இருப்பைச் சேர்த்து வைத்திருக்கும் வங்கிதான் கடல், வங்கி பொய்த்து விட்டால், மேகங்கள் முடமாகிவிடும்; வான்மழை பொய்த்தால் தருமம் ஏது? நீரில் வாழ் உயிர் அழியும்; நிலத்தில் பயிர் ஒழியும்; “நீரின்று அமையாது உலக வாழ்க்கை” என்ற பழந்தமிழ்ப் பாட்டைச் சொல்லி இராமன் விட்ட அம்பை அடக்கிக் கொள்ள வேண்டினான் வருணன்.

“கடல் பிழைத்தது; அதன்மேல் அணை அமைத்தால்தான் பாதையை அமைக்க முடியும்” என்றான்.

“இரகுராமனாய் விளங்கும் அவன், சேதுராமனாய் மாற வேண்டும்” என்றான்; ‘சிங்களத் தீவுக்கும் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் சேது அமைப்பது உறுதியாகியது. மற்றும் குரங்குகளைக் கொண்டே “கல்லையும், செடிகளையும், பட்ட மரங்களையும், பாழ்பட்ட முள்களையும் போட்டுப் பாதை அமைக்கலாம்” என்றும் கூறினான்.

குரங்குப்படை அதற்குப் பிறகு உறங்கவே இல்லை; அவை கொண்டுவந்து குவித்த கற்குப்பைகளையும், மரம் செடி கொடி வகைகளையும் நளன் என்னும் தெய்வத் தச்சன், களன் இறங்கி வலிவு மிக்க பாலம் ஒன்று கட்டுவித்தான்; சேதுவின் செய்வினை அவன் கைவினையாய் அமைந்தது. ‘அகலத்தில் பத்து யோசனை நீளத்தில் நூறு யோசனை தூரம்’ என்று அதற்குக் கல்நாட்டு விழாவில் சொல்நாட்டி வைத்தனர்; கட்டி முடிந்தது; இராமன் வந்து பார்வை இட்டான்.

போரின் முழக்கம்
இலங்கைக்குப் படை சென்றது; சென்றது நேசக் கரங்கள் அல்ல; விநாசக் குரங்குகள்; அது அணி வகுத்துத் தொடர்ந்தது; இராமனும் இலக்குவனும் முன்னோடிகளாய் நடந்தனர்; வீடணன், சுக்கிரீவன், மற்றுமுள்ள படைவீரர் அவர்களுக்குத் துணை ஆயினர்.

வெட்ட வெளியை அவர்கள் தங்குமிடமாய்க் கொண்டனர்; சுற்றிலும் மாளிகைகள்; நடுவில் ஒரு பெரிய குன்று; அதில் நின்று எதையும் பார்க்க முடியும்; நளன் என்னும் பெயருடைய தச்சன் அந்தக் குன்றில் தங்க ஒரு பாடி வீடு அமைத்துக் கொடுத்தான்; இராமனுக்கு என ஒர் உயரமான பர்னசாலை அமைத்துத் தரப்பட்டது; அங்கு அவன் தம்பியோடு தங்கினான்.

போர்க் கதை தொடக்கமாயிற்று; இராவணன் ஒற்றர் இருவர் குரங்கு வடிவத்தில் அங்கு இறக்குமதி செய்யப் பட்டனர்; சுகன், சாரன் என்ற பெயருடைய அவ்வொற்றர் தாம் கற்ற மாயையால் தம்மை மறைத்துக் கொண்டு திரிந்தனர்; தம்மைக் குரங்குகள் என்றே கருதச் செய்தனர்.

“தேவரே அனையவர் கயவர்; இருவருக்கும் வடிவத்தால் வேறுபாடு இல்லை” என்பார் வள்ளுவர்; அக் குறள்பாட்டைக் காட்டவில்லை; வீடணன் மட்டும் அவர்கள் பால் ஐயம் கொண்டான். பாம்பின்காலைப் பாம்பு அறிந்தது; அனைவர் பார்வையும் அவர்கள்மீது மையம் கொண்டது.

அவர்கள் மந்திரதந்திரம் கற்றவர்; அவற்றை அறிந்து, வீடணன் வல்லவனுக்கு வல்லவனாய் விளங்கி, அவர்கள் வேடத்தைக் கலைத்தான்; பூசி இருந்த வண்ணக் கலவை நீங்கியது: மை நிறத்து அரக்கராய் வெளிச்சத்தில் வைக்கப்பட்டனர்; அவர்கள் மெய்யைக் காட்டிய பிறகு, ‘தாம் யார்?’ என்ற மெய்யை உரைத்துவிட்டனர்; தாம் அரக்கர் என்பதை இராமனிடம் கூறி, இரக்கம் காட்டும்படி வேண்டினர்.

தூதுவர்க்கு உரிய மரியாதையை இராமன் அவர்களுக்குக் காட்ட விரும்பினான்; தீய சிந்தை யரைக் காட்டும் போது விழும் தரும அடிகள், அவர் களை அணுகவில்லை; “’மறைந்திருந்து மறைகளை அறிந்து சொல்ல வேண்டிய தேவையில்லை; நிறைந் திருந்து இங்குள்ள நிறை குறைகளை எண்ணிக்கை விடாமல் தெளிவாய் அறிவிக்கலாம்” என்றான் இராமன்.

“எங்கள் வீரத்தை எடுத்து விளம்ப எங்களுக்கு நீங்கள் தொடர்பேசியாய் இருப்பீர், என்று எதிர் பார்க்கிறேன்; அஞ்சாமல் சொல்லலாம்; நாங்கள் நேரில் சொன்னால் உம் தலைவன் நம்பமாட்டான்; அறிந்து வந்து அறிவித்தால் அதற்கு ஆதிக்கம் அதிகம்” என்று சொல்லி அனுப்பினான்.

“தப்பியது இராமபிரான் புண்ணியம்” என்று தலைகாட்டாமல் வந்தவழி நீட்டினர். செய்திகொண்டு சென்ற சேவகர் தாம் ஒற்றி அறிந்து கற்றுவந்ததை முற்றுமாக இராவணனுக்கு உரைத்தனர்; கடல் கடந்த அக்கரைச் சீமையில் போர்ப்பயிற்சி பெற்ற சேனை களைப் பற்றியும், இராமன் தோற்றத்தில் தாம் கண்ட ஏற்றத்தைப் பற்றியும், சரண் அடைந்து சாதியை மறந்து நீதிக்காகப் போராடும் வீடணன் அறப் பற்றையும், அவன் பகைவர்களின் உளவாளியாகச் செயலாற்றுவதையும், இராவணன் சந்திக்க வேண்டிய சாதனைகளைப் பற்றியும் கூட்டாமலும் கழிக்காமலும் உள்ளதை உள்ளவாறு உரைத்தனர் ஆயினர்.

ஆணவம் மிக்க இராவணன், உலகப் போர்களுக்குத் துணை போகும் சர்வாதிகளைப் போலச் சிந்தனையின்றி, கர்வம் கொண்டு ஆவேசம் காட்டினான்; தன் வரத்திலும் உரத்திலும் நம்பிக்கை வைத்திருந்தான், இடியேறு அஞ்சும் படி இராமனை எள்ளி நகையாடினான்; எதிரிகள் மடிவது என்ற உறுதியில் பிடிவாதம் காட்டினான். நாவினால் பேசுவதைவிட வாளினால் வீசுவதையே நம்பினான் சொல்லேர் உழவனாய் இருந்து விவாதிப்பதைவிட்டு வில்லேர் உழவனாகச் செயல்பட விரும்பினான்.

இராவணன் நிலை இவ்வாறு ஆக, இராமன் செயல் வேறு விதமாய் இருந்தது; இலங்கை மாநகரின் மலை உச்சியில் ஏறி நின்று. அந் நகரைக் கண்டு மலைந்தான்; பொன்னொளிர் மதில்களையும், மின் அமர் மாளிகை களையும் கண்டு வியந்தான்; நகரத்தின் எழிலையும், மக்களின் கலைத் திறனையும் இலக்குவனுக்குக் காட்டி னான்; சிற்பிகள் சிரத்தை எடுத்துச் செதுக்கிய கற்பனை களைக் கற்களில் காட்டினான்; அவன் அன்னை கைகேயி, அயோத்தியில் அடிவயிற்றில் ஊட்டிய தீ, அணையாமல் சுடர்விடுவது போல அனு மன் மூட்டிய தீ வானை முட்டிக்கொண்டு எரிந்தது.

எட்டாத கனிக்குக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த இராவணன், சீதையை அடைய முடியாத
ஏக்கத்தால் மெலிந்து விட்ட தோள்கள், போர்ச் செய்தி கேட்டுப் பூரித்து வீங்கின. அவனுக்கு இராமனை அடையாளம் காட்டத் தேவை இல்லாமல், அவன் எழில்நிறை தோற்றம், அவனை யார் என்பதை அறிவுறுத்தியது; காமனும், தானும் முறையே கரும்பு வில்லையும், இரும்பு வாளையும் எறிந்து விட்டுத் தலைகுனிய வேண்டும் என்பதை உணர்ந்தான்.

அவ்வாறே வீடணனைக் கொண்டு இலங்கைப் படை வீரர்களை இராமன் அடையாளம் கண்டான். சுக்கிரீவன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டான். சீதையின் முடிவில்லாத் துயருக்குக் காரணம் இராவணன், அவன்தான் என்பதை அவன் கண்டு கொண்டான். நாயைக் கண்டால் கல்லெடுத்து எறிய விரும்பும் சிறுவர் போல் அவசரப்பட்டு, அவன் இராவணன்மீது பாய்ந்தான். அது நாட்டுநாய் என்று நினைத்தான்; அது வேட்டை நாய் என்பதை அவன் அறியவில்லை; அது அவனைக் கடித்துக் குதறி விட்டது; தப்பித்தால் போதும் என்று அவன் தன் தவிப்பை வெளியிட்டான்; இராமன் தான் தன் இனிய துணைவனை இவ்வளவு விரைவில் இழப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை; நண்பனை இழந்தபின் அன்புடைய மனைவியை அடைவதில் அவன் மனம் ஈடுபடவில்லை.

வாணர வேந்தன் உயிர் பிழைத்து வர வேண்டுமே என்ற கவலை அவனை வாட்டியது; இராவணன் பேராற்றல் உடையவன்; முன்பின் யோசனை செய்யாமல் நெருப்பில் கைவிடும் சிறுகுழந்தைபோல் சுக்கிரீவன் செயல்பட்டுவிட்டான் என்று வருந்தினான். இருந்தாலும் அந்த நெருப்பில் உள்ள கரித்துண்டை எடுத்து வெளியே போடும் குழந்தையைப் போல் இராவணன் முடியில் பிடிபட்ட வைரக் கற்களைப் பறித்துக் கொண்டு இராமனிடம் வேகமாக வந்து சேர்ந்தான்; தலைதப்பியது; இராவணன் முடி தப்பவில்லை; மற்றவர் முடிகள் தாம் அவன் அடிகளில் பட்டுப் பழக்கம்; இதுவரை தன் மணிமுடியில் மாற்றான் கைபட்டது இல்லை; இதை அவமானமாகக் கருதினான் இராவணன்.

அனுமன் அசோக வனத்தை அழித்தான்; அவன் தலைவன், அவன் மணிமுடியைப் பறித்தான்; இச் செய்கை இராவணனுக்கு எரிச்சல் ஊட்டியது.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை முடிவு செய்ய, அமைச்சர் அவையை இராவணன் கூட்டினான்; போர் முயற்சிகளை மேற்கொண்டான்; போர்முரசு கொட்டச் செய்தான். வெற்றிதரும் சங்குகளை முழக்கினான்; அமைதி இலங்கையிடம் விடுமுறை பெற்று, ஒய்வு எடுத்துக் கொண்டது.

இராவணன் போருக்குப் பின்வாங்கவில்லை; இருதரத்தவரும் கைகலக்கக் காத்திருந்தனர்; எனினும், முடிந்தால் கைகுலுக்க இராமன் முயற்சி எடுத்துக் கொண்டான். இது தனிப்பட்ட ஒருவனோடு தொடுக்கும் போர் அன்று; ஒர் அரசன் மற்றொரு அரசன்மேல் எடுக்கும் படை எடுப்பு, “தூதுவன் ஒருவனை அனுப்பிச் சீதையை விடுவது பற்றிப் பேசி வெற்றி காண வேண்டும்” என்று விழைந்தான்.

முரசு அறைந்து உரசு போரைத் தொடரும் அறிவு அறை போகிய நெறி தவறிய காவலனுக்கு நீதி கூற விரும்பினான்; சொல்லின் செல்வன் அனுமன் வெல்லும் திறமை உடையவன் என்றாலும், அவனைத் துது அனுப்பாமல் அரசமகன் அங்கதனை அனுப்பிப் புதுமை தோற்று விக்க விரும்பினான்; “’அனுமனைத் தவிர வேறொரு ஆள் இல்லை; அவனே திரும்பி வருகிறான்; என்று பகைவர் குறைவாய் எடை போடக் கூடும்” என்பதால் ஆள்மாற்றத்தைச் செய்ய விரும்பினான்; வாலி மைந்தன் என்பதால் அவனுக்கு ஒரு தனி தகவு இருந்தது; அறிமுகமானவன் என்பதால் அதிகம் பேசத் தேவை இராது; இராவணனுடன் பேசுவதற்கும் தடைநேராது.

வருகை தந்த தூதுவனுக்கு வரவேற்புத் தரப் பட்டது; அங்கதன் தந்தையைக் கொன்றவனுக்கு வக்காலத்து வாங்க வந்திருப்பது இராவணனுக்கு வியப்பைத் தந்தது.

“தந்தையைக் கொன்றவனுக்கு ஆதரவு தேடவந்திருக்கிறாய்? இது விசித்திரமானது” என்றான்.

“வாலி ஆட்சிக்குச் சுக்கிரீவன் வேலிபோட்டுக் கொண்டான்; அதனை நீ கோலினால் உனக்கு வாங்கித் தருகிறேன்” என்றான். “சிங்கம், நாய் தரக் கொள்ளுமோ நல்லரசு? நீ தரும் ஆட்சியை நேர் என்று நான் கொள்ளேன்; நான் ஆட்சிக்கு வரவில்லை; இராமன் இல்லறமாட்சிக்கு வழிகோலவே வந்தேன்” என்றான்.

“சீதையைச் சிறைவிடு செய்; அக்கோதையை இராமனிடம் சேர்த்துவிடு; தையலை விட்டு அவன் சரணம் தாழ்க”.

“இராமன் தாரத்தை விடு; அன்றிப் போர்க் களத்தில் உன் வீரத்தைக் காட்டு; ஒரம் கட்டி ஒதுங்கி நில்லாதே” என்றான்.

ஒர்ந்து பார்த்து முடிவைத் தேர்ந்து சொல்வதற்கு மாறாய் “அவனைப் பற்றிக் கொணர்க” என்று ஆணை இட்டான்; அவன் வீரர் ஏவல் கேட்டுப் பாய்தற்கு முன், அவன் காவல் நீங்கிக் காற்றின் வந்து காகுத்தனை வணங்கி நின்றான்.

முதற்போர்
அணிவகுத்துறப் படைகள் தம் பணியைச் செய்யத் தொடங்கின; பார்வேத்தர் இருவரும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்; வெட்டி மடியும் போரிலும் ஓர் வியப்பினைக் காண முடிந்தது; இராமன் அம்பு இராவணன் மணிமுடியைத் தட்டிப் பறித்ததுத் துார எறிந்தது; அது கடலுள் சென்று விழுந்தது; தொடை நடுங்கிய பகைப் படை வீரர் இடம் தெரியாமல் மறைந்தனர்; சிதறி ஓடினர்; பக்கத் துணையின்றி, இராமகாளைமுன் தனித்துப் போராடிக் களைத்து இராவணன் தான் வாளும் இழந்தான்; வாழ்நாள் இழக்கும் நிலையையும் அடைந்தான். படைக் கருவிகள் பட்டொழிந்தன. குறைக் காற்றுமுன் அகப்பட்ட மெல்லிய பூளைமலர் போல் இராவணன் படைகள் கெட்டொழிந்தன.

நிராயுத பாணியைத் தொட இராமன் அம்புகள் கூசின. ஒய்வு எடுத்துக் கொண்டு விரும்பும்போது ஆயுதம் தாங்கி வர “இன்று போய்ப் போர்க்கு நாளைவா” என்று கூறினான் மறத்திலும் அறம் காட்டிய இராமன். அவனுக்கு வாய்ப்பு அளித்து இராமன் வாய்ச் சொல் பேசவில்லை; அவன் வீரம் பேசியது.

இராமன் அரக்கன் அல்லன், ஒரு மானுடன் எப்படி இருப்பான் என்பதை அறிய இராவணனுக்கு ஒர் வாய்ப்புக் கிடைத்தது.

“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு
இலங்கை புக்கான்”

இராமனை எள்ளி நகையாடியவன் இன்று அவன் வீரத்தையும் பெருமையையும் உணரத் தொடங்கினான்; தோல்வியையே காணாத அவன், மண்ணைக் கவ்வியது அவனுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்; உலகம் சிரிக்கும்; உண்மைதான். அதையும் அவன் பொருட் படுத்தவில்லை. தான் அடைய விரும்பிய சானகி நகுவாளே என்ற எண்ணம் தான் அவனைத் தலைகுனியச் செய்தது.

“வான் நகும் மண்ணும் எல்லாம் தாம் நகும்;
நெடுவயிரத் தோளான்
தான்நகும் பகைவர் எல்லாம் நகுவர்என்று
அதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்இயல்
மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றான்’

சோர்ந்தவன் சோர்ந்தவன்தான், அவன் பாட்டன் மாலியவான் அருகில் வந்தான்; அவனுக்கு ஆறுதல் கூறினான்.

அவனிடம் இராவணன் தன் குலத்துக்கும் தனக்கும் வந்த பழியும் இழிவும் பற்றி மனம் அழிந்து கூறினான்; களத்தில் சந்தித்த இராமன் வீரத்தை ஒரு புராணமாய்ப் பாடினான்; “சீதை இராமனது பேராற்றலை. நேரில் காணும் வாய்ப்பைச் சரியாகப் பெறவில்லை; அவள் மட்டும் இதைப் பார்த்திருந்தால், காமனையும் என்னையும் நாயினும் இழிந்தவராகத் தான் கருதுவாள்; இராமன் இராமன்தான்; அவனுக்கு, நிகர் யாரையும் கூறமுடியாது; நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்றான்; குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட்டது அவனுக்கு ஒரு பெருமை.

பாட்டன், எரிகிற கொள்ளியை ஏறவிடும் வகையில் அறிவுரை கூறினான்; பகைக்குத் ‘துபம் போட்டான்’ என்று கூறமுடியும்.

“சீதையை விட்டுவிடலாம்; அப்பொழுதும் இழந்த புகழ் திரும்பப் போவது இல்லை; வெற்றி தோல்வி மாறி வரும். தப்பித் தவறி இராமன் வெற்றி பெற்றால் சீதை உன் கையைவிட்டுப் போய்விடுவாள்; சீதையையும் விடாதே! போரையும் நிறுத்தாதே”.

“மேலும் சீதையை அனுப்பிவிட்டால் அவளை விட்டு விட்டு, உன்னால் உயிர்வாழ முடியாது; அதனால், சமாதானம் உனக்கு எந்த நன்மையும் தரப்போவது இல்லை; போரில் உயிர்விட்டாலும் உயர் புகழ் வந்து சேரும்; உன் வலிமை உனக்கே தெரியாமல் இருக்கிறாய்” என்றான்.

அடுத்து மகோதரன் என்ற படைத்தலைவன் அவனுக்குச் செயல்படும் வகை குறித்துக் கூறினான்.

“ஊனைத் தின்று உடம்பைப் பருக்க வைத்திருக்கிறான் நம் கும்பகருணன்; அவன் ஒருவன்போதுமே அத்தனை பேரையும் வானுக்கு அனுப்ப”.

“மலைபோன்ற அவன் உடலைக்கண்டு பகைவர் நிலைகுலைந்து ஒடிவிடுவர்” என்றான்; அலைபோல் வந்த புதிய கருத்தை இராவணன் மலைபோல் இறுகப் பற்றிக் கொண்டான்.

கிங்கரர் நால்வரைக் கூவிக் கும்பகருணனை அழைத்து வருமாறு ஏவினான்; அவர்களும் மல்லர்களும் இரும்புத் தடிகளை ஏந்தி.

“உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்கு கின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே
உறங்கு வாய் உறங்கு வாய்இ னிக் கிடந்து உறங்குவாய்”

என்று சொல்லி அவனை இடித்து எழுப்பினர்.

உறக்கம் நீங்கிய நிலையில் செறுக்குமொழி பேசும்இராவணன்முன் கும்பகருணன் வந்து நின்றான்; நின்றகுன்று, நடந்து வரும் மலையைத் தழுவுவது போல இருவரும் தழுவிக் கொண்டனர்; அன்பின் பிணைப்பு அவர்களை அணைத்தது.

சொற்கள் வேறு இடை புகாமல் கட்டளை மட்டும் கால் கொண்டது.

“வானரச் சேனையும் மானிடர் இருவரும் நகரைச் சுற்றினார்” என்றான் இராவணன்.

“ஏன்?” என்று அவன் கேள்வி எழுப்பவில்லை.

“கொற்றமும் உற்றனர்” என்று முடித்தான்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற வினாவை அவன் எழுப்பவில்லை; இராவணனும் காத்திருக்க வில்லை.

“அவர் இன்னுயிரை அழித்து அவர்களைப் போனகம் செய்” என்றான்.

தூக்கத்தின் இனிமையை அப்பொழுதுதான் பதின்மடங்காக உணர்ந்தான்; பார்க்கத் தகாதவற்றைப் பார்க்கத் தேவை இல்லை; கேட்கத் தகாவதற்றைக் கேட்கத் தேவை இல்லை.

“சீதை சிறைப்பட்டாள்; அவள் இன்னும் விடுதலை பெறவில்லையோ?” என்றான்.

“மூண்டதோ பெரும்போர்?” என்று அதிர்ச்சியோடு கூறினான்.

“சீதையை இன்னும் விடுதலை செய்யவில்லை” என்பது அவனுக்கு வருத்தத்தைக் தந்தது.

‘விளைவு புகழுக்கு இகழ்வு; நாட்டுக்கு அழிவு’ என்ற முடிவுக்கு வந்தான்; இரத்தினச் சுருக்கமாய்த் தன் உணர்வையும் சிந்தனையும் வெளிப்படுத்தினான்.

“சீதையை திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை இன்னுமா விடவில்லை? இது விதியின் செயல்; ஐயா, இந்த உலகத்தை அடியோடு பெயர்க்கலாம்; அதற்கு ஒரு எல்லையையும் அமைக்கலாம்; சீதையைப் புல்லலாம் என்பதும் இராமனை வெல்லலாம் என்பதும் நடவாத செயல்கள்” என்று கூறினான்.

“உன் மையலுக்குக் காரணமான தையலை விட்டுவிடு; இராமன் சரணம் தாழ்ந்து மன்னிப்புப் பெறுக; நின் தம்பியொடு அளவளாவுதல் பிழைக்கும் வழி; அவள் உன் உயிரோடு ஒன்றிவிட்டிருக்கலாம்; கற்பு, அறம் இவை அற்பம் என்று கருதுகிறாயா? அது உன் விருப்பம்; எதிலும் ஒரு செயல்திறன் வேண்டும்; அணி அணியாய்ப் படைகளை அனுப்பி, அவை அழிவைக் கண்டு அழுவது ஏன்? அது போர்த்திறனும் அன்று; நம் வலிமையை எல்லாம் ஒருங்குதிரட்டிப் போர் செய்வதே தழைக்கும் வழி”.

“இரண்டில் ஒன்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்” என்றான்.

“அறம் ஆற்றல் உடையது; தனி ஒருவனால் உலக நெறியை மாற்றமுடியாது; உனக்காக நீதிகளைத் திருத்தம் செய்ய முடியாது; நீதான் திருந்தி வாழ வேண்டும்” என்றான்.

“நீ அறிவுடைய அமைச்சன் என்பதால் உன்னை அழைக்கவில்லை; நன்றியுடைய வீரன் என்பதால் அழைத்தேன்; ஆனால் நீ போருக்குப் போகப் புலம்புகிறாய்; நீ மட்டும் உறங்கவில்லை; உன் வீரமும் உறங்கி விட்டது போலும்!” என்று கூறினான் இராவணன்.

“இனி நீ போருக்குப் போகவேண்டா, பொறுமை யைக் கடைப்பிடி, குடி, ஊன், உறக்கம்; இவற்றுக்குத் தான் நீ தகுதி, போர் உனக்கு மிகுதி.”

“மானிடர் இருவரை வணங்கு, கூனுடைக் குரங்கைக் கும்பிட்டு வாழ்க; வீடணன் வழி காட்டுவான்; சோற்றுப் பிண்டங்கள் நீங்கள்” என்றான்.

“தருக என் தேர்; எழுக என்படைகள்; நிகழ்க போர்; கூற்றமும் வானும் மண்ணும் அந்தச் சிறுவர்க்குத் துணையாக நிற்கட்டும்” என்று தொடர்ந்தான்.

“அச்சம் தவிர்; ஆண்மை இகழேல்; இவை அமுத வாக்குகள்; சென்று வருகிறேன்” என்றான் இராவணன்.

“அண்ணா!” என்று அலறினாள்.

“மண்ணாகப் போகும் இந்த வாழ்க்கை எனக்குப் பெரிது இல்லை, என்று கூறிச் சூலத்தைக் கையில் ஏந்தினான்.

“என்னைப்பொறுப்பாய்” என்று வேண்டினான். “வென்று இங்கே வருவேன் என்று சொல்வதற்கு இல்லை; விதி என் பிடர் பிடித்து உந்துகிறது; நான் இறப்பது உறுதி; அதுதான் என் இறுதி; அப்படி இறந்தால் நீ சிறந்து கடமை ஒன்று ஆற்ற வேண்டும்; சீதையை விட்டுவிடு; என் இறப்பு உனக்கு ஒர் அபாய அறிவிப்பு; என்னை அழிப்பவர் உன்னை ஒழிப்பது உறுதி”.

“நான் இறக்கும் இழப்புக்கு அழவில்லை; அதற்காகக் கவலைப்படவில்லை; உயிரையும் இழக்கத் துணிந்தேன்; ஆனால், ஒன்றே ஒன்று; உன் முகத்தை நான் மறுபடியும் கானும் பேறு எனக்கு வாய்க்காது”.

“அற்றதால் முகத்தினில் விழித்தல்” என்று கூறிக் கும்பகருணன் விடை பெற்றுச் சென்றான்.

போர்க்களம் நோக்கிச் சென்ற அவனோடு பெரும்படை ஒன்றும் துணையாய்ச் சென்றது.

உருவத்தால் பெரிய கும்பகருணன் வடிவம் இராமனுக்குப் பெரு வியப்பைத் தந்தது.

“உடல் வளர்ப்புப் போட்டியில் யாரும் இவனை வெல்லமுடியாது” என்று முடிவு செய்தான்.

“மலையா? மாமிசப் பிண்டமா?” என்று கேட்டான்.

“எனக்கு முன்னவன், இராவணனுக்குப் பின்னவன்; அறச்சிந்தையன்; அறிவுச் செல்வன்; கடமை வீரன்”

“களம்நோக்கி இங்கு இவன் வந்தது உள் உவந்து மேற்கொண்ட செயல் அன்று; கடமை; அதன் உடைமையாகிவிட்டான்; பலிபீடம் தேடி வந்த வலியோன்” என்றான் வீடணன்.

அமைச்சனாய் இருந்து அறிவுரை கூறும் சுக்கிரீவன், “அவனை நல்லவன் என்கிறாய்; வல்லமை அவனைப் போருக்கு இழுத்து வந்து இருக்கிறது; தடுத்து நிறுத்து; முடிந்தால் நம்மோடு அவனைச் சேர்த்துக் கொள்ளலாம்” என்றான்.

“வீடணன் இவனை நேசிக்கிறான்; பாசம் காட்டுகிறான்; இவனை வாழவிட்டால் வீடணனும் மகிழ்வான்” என்று தொடர்ந்தான்.

“சென்று இவனை அழைத்துவரத் தானே செல்கை நன்று” என்று வீடணன் விளம்பினான்.

கடற்பெரும் வானர சேனையைக் கடந்து தன் அரக்கர் பெரும்படையை வீடணன் சார்ந்தான்; உடல் பெரும் தோற்றம் உடைய கும்பகருணன் கால்களில் விழுந்து வணங்சினான்.

அவனை எழுப்பி, உச்சிமோந்து, உயிர் மூழ்க அனைத்துக் கொண்டு, ‘நீ ஒருவனாவது உயிர், தப்பிப் பிழைத்தாய்’ என்று மகிழ்வு கொண்டிருந்தேன்”.

“நீ அபயம் பெற்றாய்; அபாயம் நீங்கினாய்; உபயலோகத்தில் உள்ள சிறப்புகளை எல்லாம் பெற்றாய்; நீ கவிஞன், கற்பனை மிக்கவன்; நிலைத்த வாழ்வினன்; யான் அற்ப ஆயுள் உடையவன்; அமுதம் உண்ணச் சென்ற நீ மீண்டும் கைப்பினை நாடியது ஏன்? நஞ்சினை நயந்து வந்தது ஏன்? வாழப் பிறந்த நீ, ஏன் சாக இங்கு வந்தாய்”?

“அரக்கர் குலம் அழிந்தாலும் நம் பெயர் சொல்ல நீ ஒருவன் இருக்கின்றாய், என்று மகிழ்ந்திருதேன்; உயிர் உனக்கு நறுந்தேன்; இராமனைத் தவிர இப் பிறப்பில் வேறு மருந்தேன்? இதனை அறிந்தும் நீ இங்கு வந்தது ஏன்?” என்று கேட்டான்.

“நீ உயிர் தப்பிப் பிழைக்க வில்லை என்றால், இப்போரில் இறக்கும் அரக்கர்க்கு எள்ளும் நீரும் தந்து ஈமக்கடன் செய்யும் வாரிசினர் யார் இருக்கின்றனர்? நீ இங்கு வருவது இன்று அன்று; இழிபிறப்பினராய அரக்கர் எல்லாரும் மேல் உலகம் அடைந்த பிறகே ஆட்சிக்கு ஆள் தேவைப்படும்; உன் மீட்சியை வைத்துக்கொள்” என்றான் கும்பகருணன்.

“சொல்ல எந்தச் செய்தி உள்ளது?” என்றான் கும்பகருணன்.

“வெல்ல வந்த போரில், சொல்ல வேண்டுவது யாது?””

“இகபரசுகங்கள் இரண்டும் உனக்குக் காத்து இருக்கின்றன; எனக்கு இராமன் தந்த ஆட்சியை உன்மலரடி களில் வைத்து, நான், நீ ஏவிய பணி செய்யக் காத்துக் கிடக்கின்றேன்; எனக்குத் தந்த ஆட்சிச் செல்வத்தை உனக்குத் தந்துவிட்டேன்; இது இகத்தில் கிடைக்கும்

“பரத்தில் அடையும் பதமும் உள்ளது; உருளுறு சகட வாழ்க்கை இதனை ஒழித்து, இராமன் வீடுபேறு அருளுவான்; இதைவிட வேறு பேறுகள் என்ன கூற முடியும்? வா வந்து இராமனுடன் சேர்ந்துவிடு” என்றான்; அதற்கு

“நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்;
தார்க்கோல மேனிமைந்த என் துயர்தவிர்த்தியாயின்
கார்க்கோல மேனியாயனைக் கூடுதி கடிதிள்”

என்றான்.

“எனக்கு என்று கடமைகள் சில இருக்கின்றன; உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய எனக்குத் தெரியாது; செஞ்சோற்றுக்கடன் செய்து முடிப்பதில் நான் நாட்டமுடையவன்”.

“தேவரும் பிறரும் போற்ற ஒருவனாய் உலகினை ஆண்ட நம் அண்ணன், இராவணன் சுற்றமும் படைகளும் தனக்காக உயிர்விட்டுத் தன்னுடன் விழுந்து கிடக்கத் தம்பியருள் ஒருவரும் இன்றி மடிந்து கிடக்கலாமோ? உலகம் என் சொல்லும்?”

“வாழ்வினில் பங்கு கொண்டேன்; சாவில் பங்குகொள்ளாது அங்கு வந்தால் அது மானம் கெட்ட வாழ்வு; அதை நிதானமாய் நினைத்துப்பார்”.

“இராவணன் தவறு செய்கிறான்; சொல்லிப் பார்த்தோம்; பயனில்லை; அவன் தலைமையை ஏற்ற, நாம் முன் அவனுக்காக அவனுக்கு மடிவதே அறம்: பகைவரோடுகூடி அவனை எதிர்த்துப் போரிடுவது அன்று” என்றான்.

இதற்கு மேலும் அவனை வற்புறுத்திப் பயன் இல்லை என்பதை வீடணன் அறிந்தான். இறுதியில் கும்பகருணன், “நடப்பது நடந்துதான் தீரும். விதியைக் கடப்பது அரிது” என்று ஒரு தத்துவக் கோட்பாட்டினை உரைத்தான்.

“ஆகுவது ஆகும் காலத்து; அழிவதும் அழிந்து சீந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்;
சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார்உளர்? வருத்தம் செய்யாது,
ஏகுதி, எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்”

என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.

‘என்றும் உள்ளாய்’ என்பது வாழ்த்தாகவும் எள்ளும் நகையாகவும் அமையக் கூறினான் கும்ப கருணன்.

உடன்பிறப்பு என்னும் பாசத்துக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, இராமனை அடைந்தான் வீடணன்.

“என்ன ஆயிற்று” என்று கேட்ட வினாவுக்கு வீடணன் “’உய்திறன் உடையார்க்கு அன்றோ அறவழி ஒழுகும் உள்ளம்? அவன் குட்டையில் ஊறிய மட்டை” என்று அவனைப் பற்றி விமரிசித்து முடித்தான் வீடணன்.

படுகளத்தில் ஒப்பாரி ஏது? சேனைகள் மோதின; அங்கதன், அனுமன், இலக்குவன் எனப் பலரும் கும்ப கருணனோடு சொற்போரும், மற்போரும், விற்போரும் செய்தனர். சுக்கிரீவனுக்கும் கும்ப கருணனுக்கும் கடும்போர் நடந்தது. கும்பகருணன் சுக்கிரீவனை வான்வழியே தூக்கிச் செல்ல முனைந்தான். அவனைத் தடுக்க இராமன் அம்புகள் விட்டுச் சரகூடம் அமைத்தான்; இராமன் விட்ட அம்பு கும்ப கருணன் நெற்றியில் பாய்ந்தது; குருதி கொட்டியது; அவன் கைப்பிடி தளர்ந்தது; குருதி சுக்கிரீவன் முகத்தில் பட்டதால், அவன் மயக்கம் தீர்ந்து, கும்பகருணனின் மூக்கையும் செவியையும் கடித்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.

தொடர்ந்து நடந்த போரில், இராமன் விட்ட அம்புகளால் கும்பகருணன் கைகளும் கால்களும் இழந்து அரை மனிதன் ஆனான். இராமன் அம்புபட்ட வேதனை யால் அவனோடு எந்த வம்பும் யாரும் வைத்துக் கொள்ள முடியாது, என்ற முடிவுக்கு வந்தான் கும்பகருணன்.

“இராமன் வில்தொழிலுக்கு ஆயிரம் இராவணர் வந்து எதிர்த்தாலும் சமம் ஆகார்; இனி இராவணன் உயிர் பிழைக்க மாட்டான்” என்ற முடிவுக்கு வந்தான்.

காலனும் அஞ்சும் கும்பகருணனுக்கு முடிவு காலம் நெருங்கியது; உயிர்விடுமுன் தம்பிக்கு அருள் செய்யுமாறு இராமனை வேண்டி நின்றான்.

“நீதியால் வந்த நெறி அல்லால் சாதியால் வந்த நெறி அவன் அறியான் என் தம்பி; அவன் உன்னை அடைக்கலமாய் அடைந்திருக்கிறான்; படைக்கலம் உடைய இராவணன் கையில் இவன் அகப்பட்டால்; “உயிர்வேறு உடல் வேறு” என்று ஆக்கிவிடுவான்; அவனைக் காப்பது உன் கடமை; இந்த வரத்தை யான் வேண்டுகிறேன்”.

“மூக்கிலா முகம்” என்று என்னை நோக்கி முனிவர்களும் தேவர்களும் இகழ்வர்; அதனால் என் தலையை உன் அம்பால் அறுத்துக் கடலில் போக்குவாய்” என்று கேட்டுக் கொண்டான்.

இராமன் அம்பு தொடுத்தான்; அவன் தலைமட்டும் தனியே அறுந்து அலை நிரம்பிய கடலுள் ஆழ்ந்து மறைந்தது; அதுவே அவனுக்குச் செய்த ஈமக் கடனும் ஆனது.

ராவணன் தீரா ஆசை
போர்க்களத்துக்குத் தம்பி கும்பகருணனை அனுப்பிய இராவணன் முடிவுக்குக் காத்திராமல் தன்காதல் நோய்க்கு விடிவு காண விழைந்தான்; போரில் இராமனை வெல்வது என்பதைவிடக் காதலில் சீதையை அடைவது தான் அவனுக்கு முக்கியமாய்ப் பட்டது. அதற்கு வழிதேடி மகோதரனை அறிவுரை கேட்டான்.

அரக்கருள் ஒருவனாகிய மருத்துவன் என்பவனை சனகனாய் உருவெடுத்து வரும்படி பணித்தான்; அவனை அடுத்து வரும்படி இராவணன் கூறிவிட்டு, அமுதின் அனைய அழகியை நாடிச் சென்றான்.

“குமுதம் போன்ற இதழ்களை உடையவளே! நீ தான் எனக்கு உயிர் தர வேண்டும்; உன் அடைக்கலம் நான்” என்று சொல்லிப் பழைய பாட்டைப் பாடினான்; தனக்கு இணங்குமாறு வேண்டினான்; அவள் துவண்டு, அவனை வெகுண்டு வெறுத்து ஒதுக்கினாள்.

நாடகம் தொடங்கியது; சனகன் வடிவில் வந்த அரக்கன் தன் உரையாடலைத் தொடங்கினான்.
“அன்பு மகளே! அவன் ஆசைக்கு இணங்கு; பிணங்கினால் நம் குலத்தையும் நம்மையும் அழித்து விடுவான்; நீ மனம் வைத்தால், நான் உயர் பதவிகள் பெறுவேன்; நீயும் அவனுக்குத் தேவியாவாய்; இருவர் ஆவியும் நிற்கும்; நீ சிறையிடைத் தேம்பி என்ன பயன்?” என்று அறிவுரை கூறினான்.

“மானத்தை விட்டு என்தந்தை உயிர் வாழான் ஈனச் செயலுக்கு அவன் ஒருகாலும் சம்மதியான்; முறை கெட்டு வாழும்படி உரை செய்யமாட்டான்” என்றாள் சீதை.

வாள்உருவி சனகனாய் வந்தவனைக் கொல்லக் கையோங்கினான்.

நகைத்தாள் சீதை, “நாடகம் நன்று” என்று நவின்றாள்.

“நீ என்னையும் கொல்ல மாட்டாய்; இவனையும் கொல்லப்போவது இல்லை; யாரையும் கொல்லப் போவ தில்லை; அது மட்டுமன்று; போரில் நீ வெல்லப்போவதும் இல்லை.”

“உனக்கு அழிவு நெருங்கிவிட்டது; இராமன் அம்பு நீ வரும் வழியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது; புகழ் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது” என்றாள்.

மகோதரன் இடைநின்று, இராவணனைத் தடுத்தான்.

“அவசரப்பட்டு இவனைக் கொல்லாதே; நாளை நீ வெற்றிபெற்றால், சீதை உம்வசமாவாள்; அப்பொழுது தன் தந்தை எங்கே என்று அவள் கேட்பாள், அங்கை விரிக்க வேண்டி வரும்” என்று கூறினான்.

அந்நேரத்தில் கும்பகருணன் போரில் மடிந்த செய்தி இராவணனுக்கு எட்டியது; ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தான்; ‘தம்பியை இழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்பதை உணர்ந்தான்; போர்க்களத்தை நோக்கி அவன் சிந்தனை சுழன்றது.

அங்கிருந்த திரிசடை சீதைக்கு ஆறுதல் கூறினாள்; வந்தவன் சனகன் அல்லன்; நடிப்பு, என்று கூறி அவளைத் தெளிவுபடுத்தினாள்; ‘அலைகள் ஒய்வதில்லை’ என்பதை அறிந்து அவள் தெளிவு பெற்றாள்.

இந்திரசித்துடன் போர்
தம்பியைக் களப்பலி யாக்கியபின் ‘அடுத்த தளபதி யார்?’ என்று நாடினான். இராவணன் இளைய மகன் துடிப்பு மிக்கவன், துயர் அறியாதவன்; கொட்டிலில் கட்டி வைத்த இளங்கன்று; அது துள்ளிக் குதித்தது. ஆம் அவன்தான் அதிகாயன்! அடுத்து அவன் அனுப்பட் பட்டான், இராமனுக்கு இளயவனைச் சந்தித்தான். அவனோடு தன்வீரத்தைக் காட்டி விளையாடினான் படுகளத்தில் உயிர் விட்டான்.

செய்தி அறிந்து இராவணன் செயலற்றான் அரக்கியர் இராவணன் அருமைமகன், இறந்தது கேட்டு அழுகையால் அதனை அம்பலப்படுத்தினர்; “முத்தவன் இருக்க இளையவன் மடிந்தது ஏன்? முறைமாறி நடந்து கொண்ட தந்தையிடம் சொல் மாரிபெய்து, “என்னை அனுப்பி வைக்காமல் தம்பியை அனுப்பி வைத்தது முறையா?” என்று கேட்டான் இந்திரசித்து.

“தம்பியைக் கொன்ற கொடியவன் யார்?” என்று கேட்டு அறிந்தான்; இலக்குவனைத் தன் இலக்காகக் கொண்டு போர் தொடுத்தான் இளஞ்சிங்கங்கள் களத்தில் முழக்கம் செய்தன; இடிகள் மாறிமாறி இடித்தன; மழை பெய்யவில்லை; நேருக்கு நேர் சந்தித்தால் வேருடன்தான் அழிய வேண்டும் என்பதை இந்திரசித்து உணர்த்தான்; வீரம் வளைந்து கொடுத்தது; சூழ்ச்சி முன்னால் நின்றது; விண்ணில் பறந்து, கண்ணுக்குக் தெரியாமல் மறைந்தான்; “அவன் போர்க்களத்தை விட்டுப் புறமுதுகு இட்டான்” என்று இலக்குவன் தவறாய்க் கருதினான்; இந்திரசித்தின் தித் திட்டம் அறியாது வாளா இருந்துவிட்டான்.

இராவணன் இட்ட ஆணையின்படி இலக்கு வனையும் அனுமனையும் நாகபாசம் கொண்டு பிணிக்கத் திட்டமிட்டான்; அவர்கள் சோர்வாய் இருந்த நேரத்தில் அரவக்கயிறுகள் கொண்டு இருவரையும் பிணித்து வைத்தான்; கட்டுண்டவர்கள் தப்பவழி தெரியாமல் டுமாறினர்; கயிறுகள் இறுக்கின; கழுத்தைச் சுருக்கின; இலக்குவன் திக்குமுக்கு ஆடினான்; திசை தெரியாமல் கைத்தான்; செயலற்றுத் தளர்ச்சி அடைந்தான்.

செய்தி கேட்ட இராமன், களம் நோக்கி விரைந்தான்; தம்பி நிலைகண்டு, உளம் தளர்ந்தான்; “களத்தில் தம்பியைப் பறிகொடுத்து விட்டோமே என்று ரிதவித்தான். வழி காட்டும் விழியற்றான்; இருளில் உழன்றான்; யுகமுடிவில் கடல் பிரளயம் மண்ணை மூடிக் காள்வதுபோல வேதனை அவனை வயப்படுத்திக் காண்டது. தேவர் செய்வது அறியாது திகைத்தனர்.

எதிர்பாராத விதமாய் வானத்தில் கருடன் பறந்து கொண்டிருந்தது; நிதானமாய்க் கீழே நடப்பதைக் கண்டது; சிறகுகளைக் குவித்துக் கொண்டு கீழே இறங்கியது; தன் சிறகுகளை அவர்கள் மீது விரித்துக் காற்றை வீசியது. அவர்கள் மீது கருடன் காற்று பட்டது; திருடனைத் தேள் கொட்டியதைப் போல நாகங்கள் நடுங்கின; கட்டு அவிழ்ந்து நெகிழ்ந்தன; செத்தவர் உயிர் பெற்றது போல இருவரும் விடுதலை பெற்றனர்.

‘இலக்குவன் இறந்திருப்பான்’ என்ற நம்பிக்கை யில் இந்திரசித்து அரண்மனையில் தங்கிவிட்டான். நாகங்களின் பிணிப்பில் அவர்கள் அகப்படவில்லை என்ற செய்தி இராவணனுக்கு எட்டியது; மகனை அவன் அறிவீனத்துக்காகக் கடிந்து கொண்டான்.

மறுநாள் போரில் இந்திரசித்து, வேகமாய்ச் செயல் பட்டான்; இலக்குவனொடு நேருக்கு நேர் சந்தித்துப் போ செய்தான்; நாகபாசம் ஏவித் தன் ஆகத்தைக் கட்டியவனை அயன்படை கொண்டு அழிக்க இலக்குவன் விரும்பினான் இராமன் “அஃது அறமன்று” என்று கூறித் தடுத்து நிறுத்தினான்; ‘அதே அயன்படையை இலக்குவன் மீது எறிவது’ என்று தீர்மானித்து, இந்திரசித்துக் களம்விட்( வெளி யேறினான்; ‘அவன் அஞ்சி ஒடிவிட்டான்’ என்று கணக்கைத் தவறாய்ப் போட்டுவிட்டனர்; அவன் அரண் மனைக்குச் சென்று, தந்தையைச் சந்தித்துத் திட்டத்தை பற்றிக் கூறினான்.

அயன்படை, பெறுதற்கு வேள்வி செய்ய வேண் இருந்தது; அதுவரை மகோதரனைப் போருக்கு அனுப்பி இலக்குவனைக் களத்தில் மடக்கி வைத்தனர்.

மகோதரன் இலக்குவனுக்கு ஆற்றாமல் ஒடி விண்ணில் ஒளிந்தான்; அங்கிருந்து ஐராவதம் என்னும் யானை மீது அமர்ந்து இந்திரனைப் போல வேடம் புனைந்து, முனிவர்களையும் தேவர்களையும் வஞ்சித்து அழைத்துக் கொண்டு மண்ணுலகம் வந்து, இலக்கு வனோடு போர் தொடுத்தான்; வானவரோடு போர் செய்தலை வானரங்கள் விரும்பவில்லை; தேவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள்?’ என்பது இலக்குவனுக்குப் புரியாத புதிராய் இருந்தது.

செயவிழந்த இந்நேரத்தில் அயன்படையை இந்திரசித்து ஏவினான். அப்படையினின்று அளவு மிக்க அம்புகள் வெளிப்பட்டு, வானரர்மீதும் ஏனைய படைஞர் மீதும் பாய்ந்தன. அவ் அம்புகளுக்கு ஆற்றாமல் அவர்கள் அயர்ந்து விழுந்தனர்; இலக்குவனும் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தான்: மூச்சுபேச்சு அற்று விழுந்தவன் போல் காணப்பட்டான்; போர்க் களமே பிணக்களமாய்க் காட்சியளித்தது.

இந்திரசித்து தன் தந்தையிடம் சென்று, அயன் படையால் நேர்ந்த அழிவுகளைச் சொல்லி, ‘இராமன் ஒருவனைத் தவிர அனைவரும் துறக்கம் புக்கனர்’ என்றான்; இலங்கையர்கோன் உள்ளம் பூரித்தான்; ‘போர் முடிந்தது’ என்று உவந்தான்; ‘தனியனான இராமனை இனி எளிதில் சந்திக்க முடியும்’ என்று நினைத்தான்.

இராமன் போர்க்களம் சென்று களம்பட்ட வானரங் களையும், சுக்கிரீவனையும், அனுமன், சாம்பவான் முதலிய படைத்தலைவர்களையும், தம்பி இலக்குவனையும் கண்டான்; ‘அனைவரும் மடிந்துவிட்டனர்’ என்று நம்பிவிட்டான், புலம்பி, நைந்து, செயலிழந்து மயக்கம் உற்றான்; செத்தாருள் ஒருவனாய் மதிக்கப்பட்டான்.

செய்தி அறிந்து இராவணன் வெற்றிப் படை கொட்டச் செய்து, விழாக் கொண்டாடினான். அரக்கர் பிணம் அத்துணையையும் ஆழ்ந்த கடலில் போடச் செய்து அவர்கள் சுவடு தெரியாமல் மறைத்தான். அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பி, அஞ்சலி செய்தற்கு அடையாளம் மட்டும் அமைத்துக் கொடுத்தான்.

சீதைக்குச் செய்தி சொல்ல வைத்து அவள் மங்கல நாண் களைதற்காக மயக்கமுற்ற இராமன்முன் கொண்டு வந்து அவளை நிறுத்தினான்.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்?” என்ற கேள்விக் கணையை எழுப்பிவிட்டான்.

அப்பொழுதும் அவள், அதை முழுமையாய் நம்பவில்லை; உறுதிகொண்ட நெஞ்சினளாய் விளங்கினாள்; ‘வானரப்படைகள் படுவதும், இலக்குவன் விழுவதும், இராமன் கண்கலங்கி அழுவதும், உயிர் மாய்த்துக் கொள்வதும் நிகழாதன’ என்ற நம்பிக்கை இருந்தது. இராமன் உடம்பில் அடிபட்ட தழும்பு எதுவும் இல்லை, என்பதைத் திரிசடை காட்டினாள்; ‘கொண்டது மயக்கமே யன்றி மரணம் அன்று’ என்று தெளிவித்தாள்.

கைதிகளைப் பாதுகாப்பாய்ப் பார்வையிட அழைத்ததைப் போல அழைத்து வந்த சீதை மறுபடியும் சிறைக்காப்பாய் அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள்.

உணவுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வீடணன், காற்றின் போக்கில் செய்தி அறிந்து, களம் வந்து சேர்ந்தான். வடு நீங்கிய இராமன் மேனி கண்டு, அவன் இறப்பைப் பற்றிக் கடுகு அளவு ஐயமும் அவனுக்கு எழவில்லை; அரவுக் கயிற்றால் பிணிப்புண்ட நிலையில் கருடன் வந்து காத்தது போல, அயன் அம்பால் தாக்குண்டவர் மயக்கம் தீர சஞ்சீவி மருந்துச்செடி தேவை என்பதை, உணர்ந்தான்.

அனுமன் இருக்கும் இடம்தேடி, நீர் தெளித்து அவனை மயக்கம் தெளிவித்தான்; நெடுமரமாய் நின்ற அனுமன், படுகளம் பார்த்துத் திகைத்தான்; ‘சஞ்சலம் தீர்க்க அவன் சஞ்சீவிப் பருவதத்தை அடைய வேண்டும்’ என்று வீடணன் உரைத்தான்; சாம்பவான் எழுப்பப்பட்டான்; அவன் வயதில் மூத்தவன் ஆதலால் அச்செடிகள் இருக்கும் மலைக்கு வழி அறிந்தவனாய் இருந்தான்.

“ஏமகூட மலையைக் கடந்து, மாமேரு மலையை அடைந்தால், அதற்கு அப்பால் அம்மருத்து மலை தெரியும்” என்று கூறினான் அவன் கூறியவாறே அனுமனும் அம்மலைகளைக் கடந்து அரிய மருந்து மலை இருக்கும் இடம் அடைந்தான்; அதனை வாணர மகளிர் காவல் காத்திருந்தனர்; வானரத் தலைவனாகிய அனுமனுக்கு அதைத் தந்து உதவினர்.

மறுபடியும் இருந்த இடத்திலேயே அம்மலையைக் கொண்டு வந்து வைக்குமாறு வேண்டினர்; அதற்கு இசைந்து அம்மலையை அடியோடு பெயர்த்து, ஒருகையிலேயே தாங்கிக் கொண்டு, காடும், மலையும் கடந்து, ககனமார்க்கமாய் வந்து சேர்ந்தான்.

மலைக்காற்று பட்டதும் அலைஅலையாய் வானரர் உயிர்த்து எழுந்தனர்; அனுமன் உதவியை இராமன் பெரிதும் பாராட்டினான். இருந்த இடத்தில் மறுபடியும் மலை கொண்டு சேர்க்கப்பட்டது.

போருக்குத் தூண்டிவிட்ட மாலியவானே மனம் மாறினான்; ‘போரும் அமைதியும்’ பற்றி எழுதும் எழுத்தாளனாய் மாறினான். “அனுமன் ஆற்றல் அளவிடற்கு அரியது; இராமன் வீரம் வியத்தற்கு உரியது” என்று கூறித் தனி ஒரு “சீதையை விட்டு விடு வதே கும்பிடுபோட்டுச் செய்தத்தக்கது” என்றான்.

சஞ்சீவி பருவதத்தால் வானரவீரர் உயிர் பெற்ற செய்தி அறிந்து. இறந்துவிட்ட தன் வீரரை உயிர்ப்பிக்க இராவணன் நினைத்தான்; குறி தவறிவிட்டது; மரித்து விட்ட அவர்கள் உடலை ஏற்கனவே கடலில் எறிந்து விட்டமை நினைவுக்கு வந்தது.

தரையில் தட்டிய பந்து உயர எழுவது போல மீண்டும் வீரம் பேசிப் போர்வினை ஆற்ற இராவணன் விரும்பினான். இந்திரசித்து தான் நிகும்பலை என்னும் கோயில் சென்று, வேள்விகள் இயற்றி, வேண்டிய வரங்களைப் பெற்று வருவதாய் விளம்பினான்; அவற்றால் படைக்கருவிகளும் மிக்க ஆற்றலும் சேரும்’ என்று கூறினான். ‘இதில் முந்திக் கொள்வது சிந்திக்கத் தக்கது’ என்று பேசினான்.

எதிரிகளைத் திசை திருப்ப யோசனை ஒன்று வெளியிட்டான் இந்திரசித்து; மகோதரன் மந்திர மாயையால் சனகனைப் படைத்தது போலச் சீதையின் உருவச் சிலையினை உருவாக்கி; அவர்களை வலையில் மாட்டுவது’ என்று தீர்மானித்தான்; அவ்வாறே அவ்வுருவை உருவாக்கினான். அதன் கூந்தலைப் பற்றி இழுத்து வந்து அனுமன்முன் நிறுத்தி அவனைப் பதற வைத்தான் இந்திரசித்து. “பாவி மகளே! நீ வந்துதானே அரக்கர் ஆவியை அழித்தாய், என் தந்தையை மயக்கி, அவரையும் அழிக்கத் தொடங்கினாய்” என்று கூறி அவ்வுருவத்தைத் தன்வாளால் தடிந்தான்; குருதி கொட்டியது” ‘அவள் சீதையே’ என்று தவறாய் நினைத்தான் அனுமன், துடித்து அழுதான்.

“இது முன்னுரை; பின்னுரை ஒன்று உள்ளது” என்றான் இந்திரசித்து.

“’அயோத்திக்குச் சென்று தம்பி பரதனையும் தாயர் மூவரையும் இதேபோல வெட்டி மாய்க்கப் போகிறேன்” என்று கூறி, அனுமன் காணும்படி அயோத்தி நோக்கி வடதிசை பறந்தான்.

இந்த அதிர்ச்சி தரும் செய்தியும், அஞ்சத்தக்க நிகழ்ச்சிகளும் அனுமனை அலைத்தன; அவனை நிலைகொள்ளச் செய்யவில்லை; தலைவனைக் கண்டு பேசிப் பகைவர் உயிர்களுக்கு உலைவைக்க ஓடினான்; மலை குலைந்தாலும் நிலை குலையாத மன்னன் மகன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தான்; ‘இது உண்மை’ என்று கருதி இடரில் விழுந்தான். அரக்கர் மாயைகளை அறிந்த வீடணன், உண்மை அறிய, வண்டு வடிவம் கொண்டு சென்று சீதையைக் கண்டு வந்தான்.

அவளைச் சோகவடிவில் அசோக வனத்தில் முன்பு இருந்த நிலையிலேயே கண்டான்; காற்றுக்கு அசையும் இலை தழைகளைப்போல அவள் உயிர்ப்பு அசைவைக் காட்டியது; அனுமனுக்குச் செல்ல இருந்த உயிர் திரும்பி வந்தது.

‘சீதை சாகவில்லை; அவர்கள் திட்டம் வேகவில்லை’ என்பதை உணர்ந்தனர். ‘திசை திருப்பச் செய்த சூழ்ச்சி இது’ என்பதை அறிந்தனர். அரக்கன் மகன் இந்திரசித்து நிகும்பலை வேள்வி நடந்துவதை அறிந்து, குரங்குப் படைகளோடு சென்று அவனைத் தாக்கினர்; வெண்ணெய் திரளும் போது அவனுக்குத் தாழி உடைந்தது; எடுத்த வேள்வி முற்றுப் பெற வில்லை; நிறைவுரை எழுதுதற்கு முன் இலக்குவன் விட்ட அம்புகளுக்கு அவன் பதிலுரை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

போரில் தேரை இழந்தான்; படைகள் அழிந்தன; தனித்து நின்று அவன் போர் செய்து பழக்கம் இல்லை; செல்வ மகன்; அவன் கால்கள் செருக்களத்தில் பதியா; மண்ணில் படியா; விமானம் ஏறி விண்ணில் பறந்து மன்னன் இராவணன் முன் சேர்ந்தான்.

தேர்வில் தோற்றுவிட்டுத் தேர்வாளர்களைப் பழிக்கும் மாணவரைப் போல் பகைவர்மேல் பழி போட்டு விட்டுப் பரிதாபகரமாய் நின்றான். படைகள் அழிவு பெற்ற மனக்கலக்கத்தோடு மாரதனான இந்திரசித்து, அழிவின் விளம்பைக் கண்டான்; இது வரை “மூத்தோர் வார்த்தைகள் அர்த்த மற்றவை” என்று அறிவித்த அவன், மனம்மாற்றி வயதுக்கு மீறிய அறிஞனாய்ச் செயல்பட்டான்.

“வறண்ட பாலை வனத்தில் நெற்பயிர்களைத் திரள விளைவிப்பதில் பயனில்லை” என்று கூறினான். பேரழகிற்கு இருக்கும் ஆற்றலைப் பிறழ உணர்ந்து அவர்கள் வேல்விழிக்கு வேந்தர் இரையாகிறார்கள்’ என்று ஒரு சரித்திரம் எழுதத் தொடங்கினான். அந்தச் சரித்திர பாடத்தை நரித்தனம் படைத்த தன் தந்தைக்குச் சொல்லி வைத்தான்; “’உயிர்மேல் உமக்கு ஆசை இருந்தால், இனியாவது உத்தமனாய்ச் செயல்படுக; நெருப்பாகிய அவள்மீது வைத்திருக்கும் விருப்பை விட்டுவிட்டு அவளை அவள் கணவன்பால் அகற்றுக; இதுதான் அறிவுடைய செயல் என்று அந்தச் சரித்திரத்தின் கடைசி வாசகத்தைப் படித்து முடித்தான்.

“அறம் நோக்கி அவளை விட்டுவிடுக என்றான்; நான் மீண்டும் போர்களம் செல்லவில்லையேல், மறம் நோக்கி உலகம் என்னைப் பழிக்கும்.” என்று கூறி, அவன்தன் முடிவை வீரத்தில் எழுதி வைத்து, வேறுவழி இல்லாமல் போர்க்களம் புகுந்தான்.

இந்திரசித்து, மற்றொரு கும்பகருணன் ஆகிப் போர்க்களத்தில் இலக்குவன் அம்புக்கு இரையானான்; அவன் தலையை அறுத்துத் தன்தமையன் இராமன் திருவடிகளில் காணிக்கையாய் வைத்தான் இலக்குவன். இந்திரசித்தன் தறுகண்மை படச் செயல்பட்ட ‘மாவீரன்’ என்ற புகழை நிலைநாட்டினான்; மறவர் வரிசையில் இந்திரசித்து ஒருவனாய் வைக்கப்பட்டான்.

வாய்விட்டு அழுவதற்கு மண்டோதரிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது; சேர்த்து வைத்த துயரமெல்லாம் ஒப்பாரி வடிவம் பெற்றன. “ஒப்பு யாரும் இல்லாத அந்தச் சீதையால்தான் இந்தக் கதி வந்தது” என்று அந்த ஒப்பாரி சொல்லாமல் சொல்லியது; அவள் சொற்கள் ஈட்டிபோல் இராவணன் நெஞ்சில் பாய்ந்தன; அங்கே மறைந்திருந்த வஞ்சிக்கொடி நினைவில் அவை தைத்தன.

எஞ்சி அவளைக் கொல்ல வாளோடு புறப்பட்ட இராவணனை மகோதரன் தடுத்தான்; “கொட்டிய பாலை எடுக்க முடியாது; வெட்டிய சீதையைத் திரும்பப் பெறமுடியாது, ஒருவேளை போரில் நீ வெற்றி கண்டால் வெறுமை யைத்தான் காண்பாய்; கண்கெட்டபின் கதிரவனை வணங்க முடியாது; சித்திரத்தைச் சிதைத்து விட்டால் வெற்றுச் சுவர்தான் எஞ்சி நிற்கும்” என்று கூறிச் சாம்பல் படிந்த நெருப்பை ஊதிக் கனலச் செய்தான்; ஆசை அவனைத் தடுத்து நிறுத்தியது.

சீதையை அடையவில்லை; அதனால் வந்தது வெறுப்பு: மகனை இழந்தான்; அதனால் நேர்ந்தது பரிதவிப்பு; பகைவன் என்பதால் இராமன்பால் எழுந்தது காழ்ப்பு; அனைத்தும் ஒன்று சேர்ந்து இராவணனை மறுபடியும் போர்க்களத்தில் கொண்டுவந்து நிறுத்தின.

மூலப்படை முழுவதும் நிலைகெட்டு நிருமூலமாகி விட்டன; வானரரைக் களப்பலி இடுதற்கு மண்டோதரி மற்றொரு மகனைப் பெற்றுத்தரவில்லை; கடமை வீரன் கும்பகருணன் மறுபடியும் பிறக்கப் போவதில்லை; இனி யாரை நம்பி இராவணன் வாழ முடியும்?

வீணை வித்தகன்; மத யானைகளை எதிர்த்த½வன்; வேதம் கற்றவன்; சிவனை வணங்கிச் சீர்மைகள் பெற்றவன்; மூவர்களை நடுங்க வைத்தவன்; தேவர்களை ஏவல் கொண்டவன்; களம் பல கண்டவன்; கார் வண்ணனைக் கடும்போரில் நேருக்குநேர் சந்தித்தான்.

இராமன் கூரிய அம்புகள் கம்பன் சொற்களைப் போல, இராவணன் மார்பில் ஆழப்பதிந்தன; தேரும் கொடியும் உடன்கட்டை ஏறின; தோல்வி, முகவரி தேடி முன்வந்து நின்றது; அவதாரப் பணி நிறைவேறிற்று; அரக்கரை அழித்து, அறத்தை நிலை நாட்டினான் இராமன்.

அறம் வென்றது; பாவம் தோற்றது.

இறுதி அவலம்
இராவணன் பரு உடல், பார்மீது கிடந்தது; அவன் ஆருயிர் அனைய மனைவி மண்டோதரி, அவன் உடல்மீது விழுந்து படிந்து, புரண்டு அழுதாள்.

“எள் இருக்கும் இடமும் இன்றிச் சீதையைக் கரந்த காதல் உள்ளிருக்குமோ என்று தடவியதோ இராமன் வாளி” என்று கதறி அழுதாள்.

“வெள்எருக்கஞ் சடைமுடியான் வெற்புஎடுத்த
திருமேனி மேலும்கீழும்
எள்இருக்கும் இடன்இன்றி உயிர் இருக்கும்
இடன்நாடி இழைத்த வாறோ?
கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து
தடவியதோ? ஒருவன் வாளி”

என்று ஏங்கினாள்; அவன் உயிரைத் தேடித் தன் உயிரை அனுப்பினாள்; அது திரும்பவே இல்லை.

முடிவுரை
நிகழ்ச்சிகள் வேகமாய்த் தொடர்ந்தன; வீடணன் இலங்கைக்கு ஆட்சிக்கு உரியன் ஆனான்; இலக்குவனைக் கொண்டு இராமன் அவனுக்குப் பட்டம் சூட்டினான்; அனுமன் அசோகாவனத்துக்குச் சென்று, சீதைக்குச் செய்தி சொல்லி, அவள் சோகத்தை மாற்றினான்.

அழைத்துவரப்பட்ட சீதை வரவேற்பில் ஒருதடை ஏற்பட்டது; இராமன் சராசரி மனிதனாய் நடந்து கொண்டான்; சீதையை ஏற்க மறுத்தான்; “பகைவன் பிடியில் இருந்த அவளை மாசுபடிந்தவள் என்று உலகம் நினைக்க வாய்ப்புண்டு” எனக் கருதி அவளை ஏற்கத் தயங்கினான்; “இவளா என் மனைவி?” என்ற நாடகத்தை நடித்துக் காட்டினான்.

இலக்குவன் பதறிப்போனான்; வானவர் அழுது விட்டனர்; பேய்களும் சீதைக்காகக் கண்ணிர் விட்டன.

இராமன், ‘அவள் விரும்பினால் தீக்குளிக்கலாம்’ என்று கூறினான்; அவளை இராவணனே தீண்ட முடியவில்லை; தீமட்டும் எப்படி அவளைத் தீண்டும்? தேர்வில் வெற்றி கண்டாள்; அவள் தூய்மை நிறுவப் பட்டது. “அவள் கற்பில் மாசு ஏற்படவில்லை” என்பதை உலகம் அறியச் செய்தான். இராமன் அதற்கே இந்நாடகத்தை நடத்தினான்.

பரதன், இராமன் வருகைக்காகக் காத்து இருந்தான்; உயிர்விடுதற்குக் காலம் தாழாமல் இருக்க, நெருப்பை மூட்டி வலம் வந்தான்; உயிர் காக்கும் உறுதுணைவனாய் அனுமன் செயல்பட்டான். குறித்த நேரத்தில் இராமனும் மற்றையோரும் அங்கு வந்து சேர்ந்தனர்; அனுமன் அவசரச் செய்தியாய் முன்வந்து பரதனைச் சந்தித்தான்.

எல்லாம் இனிமையாய் முடிந்தன; அவற்றைச் சொல்லச் சொற்கள் போதா, இதோ கம்பன் கவி!

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!

அரியணையை அனுமன் தாங்கினான்; அங்கதன் உடைவாள் ஏந்தினான்; பரதன் வெண்கொற்றக்குடை கவிழ்த்தான்; இலக்குவனும் சத்துருக்கன இளைஞனும் கவரி வீசினர்; திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர் எடுத்துக் கொடுக்க, வாங்கி, வசிட்டரே இராமனுக்கு முடி சூட்டினார்.

“தீமைகள் தோன்றுதலைத் தவிர்க்க முடியாது; அவை படைப்பின் செயற்பாடு; என்றாலும் அவை என்றும் நிலைத்துநின்று வெற்றி பெறுதல் இல்லை” என்பது இக்காவியம் தரும் படிப்பினை; வாழ்க உலகெலாம்.

வண்மைஇல்லை ஒர் வறுமை இன்மையால்;
திண்மைஇல்லை நேர் செறுதர் இன்மையால்;
உண்மைஇல்லை பொய்யுரை இல்லாமையால்;
வெண்மை இல்லை பல்கேன்வி மேவலால்

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, ரா.சீனிவாசன் has waived all copyright and related or neighboring rights to யுத்த காண்டம், except where otherwise noted.