="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

6 5. பரணர் கேட்ட பரிசு

5. பரணர் கேட்ட பரிசு

பரணர் அந்தச்செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய்யென்பதா? அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா! எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர்.

அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும்? உண்மையில் அது சிறிது அருவருப்பை உண்டாக்கக்கூடிய செய்திதான்.

“கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் பட்டுப் போர்வை அளித்த சிறப்பால் பாவலர் பாடும் புகழை உடையவன்.

ஆவியர் குடிக்கு மன்னன். ‘வையாவிக்கோப் பெரும்பேகன்’ என்ற பெரும் பெயர் பெற்றவன். அத்தகையவன் ஒழுக்கத்துக்கும், பண்பாட்டுக்கும் முரணான செயலில் இறங்கியிருந்தான். கற்பிலும் அழகிலும் சிறந்தவளாகிய தன் மனைவி கண்ணகியை மறந்தான். தலைநகருக்கு அருகிலிருந்த ‘முல்லைவேலி நல்லூர்’ என்ற ஊரில் வசிக்கும் அழகி ஒருத்தியிடம் சென்று மயங்கிக் கட்டுண்டிருந்தான். இந்தச் செய்தியைக் கேட்டபோதுதான் பரணர் இதை நம்ப முடியாமல் தவித்தார்.

செய்தியை உறுதி செய்து கொள்வதற்காகப் பேகனின் அரண்மனைக்குச் சென்றார்.அரண்மனையில் பேகனைச் சந்திக்க முடியவில்லை. அவன் சில வாரங்களாக அரண்மனைக்கே வருவதில்லை என்றும் முல்லைவேலி நல்லூரில் அந்த அழகியின் வீட்டிலேயே தங்கிவிட்டான் என்றும் அமைச்சர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார் பரணர்.

பேகனுடைய மனைவி கண்ணகியைக் கண்டார். கண்ணகி என்ற பெயரில் நடமாடிய துயர ஒவியத்தைக் கண்டார் என்பது தான் பொருத்தம். அழுது அழுது சிவந்த கயல்விழிகள் மைதீட்டு தலை மறந்து பல நாட்களான இமைகள் எண்ணெய் தடவி வாரிப் பூச்சூடிக் கொள்ளாமல் குலைந்துகிடந்த கூந்தல், பறிகொடுக்க முடியாத பொருளை யாரோ உரிமையில்லாதவள் பறித்துக் கொண்டு போய் விட்டாளே அந்த ஏக்கம் தங்கிப் படிந்த முகம்.

கண்ணகி கண்ணகியாக இருக்கவில்லை. கைப்பிடித்த கணவன் கணவனாக இருந்திருந்தால் அவளும் கண்ணகியாக இருந்திருப்பாள். வள்ளல், மன்னன், கொடையாளி என்று ஊரெல்லாம் புகழத்தான் புகழ்கிறது. ஆனால், அந்தக் கொடையாளிக்கு ஒழுக்கத்தின் வரம்பு புரியவில்லை.பொன்னைக் கொடுக்கலாம்; பொருளைக் கொடுக்கலாம்;அவை கொடைதன் மனைவியின் இடத்தையே யாரோ ஒரு பெண்ணுக்குக் கொடுத்துவிடுவதா கொடை? பேகன் ஒழுக்கம் என்ற உயரிய பதவியிலிருந்து வழுக்கி விழுந்துவிட்டான். கண்ணகி நடமாடும் துயரமாகி அந்த அரண்மனையே கதியாக இருந்து வந்தாள்.

பரணருக்கு எல்லா விவரங்களும் தெளிவாகப் புரிந்தன. தன்னுடைய அன்புக் குரியவனான வள்ளலின் நிலை எவ்வளவிற்குத் தாழ்ந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்தார். ‘மனைவி என்ற பொறுப்பான பதவியை ஆளும் “ஒரு பெண் எதை வேண்டுமானாலும் இழந்துவிடலாம்; ஆனால், எந்த ஆண்மகனின் இதயத்தில் அந்தப் பொறுப்பை அவள் வகிக்கின்றாளோ, அங்கிருந்தே உருட்டித் தள்ளப்பட்டால் அவளால் அதை இழக்க முடியுமா?”

நினைக்க நினைக்கப் பரணருக்கு உள்ளம் கொதித்தது. பேகனை அவன் மனைவிக்கு மீட்டுத் தரமுடியுமானால் அதுவே தம் வாழ்நாளில் தாம் செய்த தலைசிறந்த நற்செயலாக இருக்கும் என்ற உறுதி மாத்திரம் அவர் மனத்தில் ஏற்பட்டது.

தாம் வந்த காரியங்களை எல்லாம் மறந்து, உடனே முல்லைவேலி நல்லூருக்குப் புறப்பட்டார். ஆடல் பாடல்களில் சிறந்த அழகிகள் வசிக்கும் ஊர் அது. ஊரைச் சுற்றி எங்கு நோக்கினும் அடர்ந்து படர்ந்து பூத்துச் சொரிந்திருக்கும் முல்லைக் கொடிகள் காடுபோல மண்டிக் கிடந்தன. ‘முல்லைவேலி’ என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருந்தது. ஊருக்கு மட்டுமில்லை; ஊரிலுள்ள அழகிகளின் வாயிதழ்களுக்கு உள்ளேயும், சீவி முடித்த கருங்குழலிலும்கூட முல்லைப் பூக்கள்தாம் ‘வேலியிட்டிருந்தன’. அந்த ஊர்ப் பெண்கள் சிரித்தால் முல்லை உதிர்ந்தது. சிங்காரித்தாலோ, கூந்தலில் முல்லை மலர்ந்தது. ஆண் பிள்ளையாகப் பிறந்தவன் எத்தனை திடசித்தம் உடையவனாக இருந்தாலும் கவரக்கூடிய அழகிகள் அவர்கள்.

“இப்படி ஒழுக்கத்தை அடிமை கொள்ளும் அழகு நிறைந்த அந்த ஊருக்கு ‘நல்லூர்’ என்று பெயரின் பிற்பகுதி அமைந்திருந்ததுதான் சிறிதுகூடப்பொருத்தமில்லாமல் இருந்தது. ஆண் பிள்ளைக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஒழுக்கமும் பண்பாடும் அழிவதற்குக் காரணமான அழகு அமையக்கூடாது. ஒழுக்கத்தையும் அறிவையும் பண்பாட்டையும் வளர்க்கின்ற
கருவியாகப் பயன்பட வேண்டும், தூய அழகு” அந்த ஊருக்குள் நுழையும்போது பரணருக்கு இத்தகைய சிந்தனைகளே உண்டாயின.

அங்குமிங்கம் ஊருக்குள் அலைந்து திரிந்த பின்னர் பேகனைக் கவர்ந்த அழகியின் வீட்டைக் கண்டுபிடித்தார்.

பேகன் உள்ளேதான் இருந்தான். பரணர் வாயிலில் நின்று கூப்பிட்டார். முதலில் ஒரு பெண்ணின் தலை உள்ளிருந்து தெரிந்தது.அந்த அழகிய முகம்,போதையூட்டுகிற அந்தக் கவர்ச்சி, பரணரே ஒரு கணம் தம் நிலை மறந்தார். அவள்தான் பேகனை மயக்கிய பெண்ணரசியாக இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

பெண்ணின் தலை மறைந்ததும் பேகன் வெளியே வந்தான். அப்போதிருந்த அவன் தோற்றத்தைக் கண்டு புலவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. கலைந்து பறக்கும் தலைமயிர்; பூசிய சந்தனம் புலராத மார்பு; கசங்கிய ஆடைகள்; சிவந்த விழிகள். அவனை நோக்கிய அவர் கண்கள் கூசின. வீட்டுவாயிலில் போற்றி வணங்கத்தக்க புலவர் வந்து நின்று கொண்டிருப்பதைக் கண்ட பேகன் அந்த நிலையில் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல விழித்தான்.

“நான் இப்போது என் கண்களுக்கு முன்பு யாரைக் காண்கிறேன்? கடையெழு வள்ளல்களில் ஒருவனும் ஒழுக்கம் மிகுந்தவனுமாகிய பேகனா, என் முன் நிற்பது?”

பரணருடைய சொற்கள் பேகன் மனத்தில் தைத்தன. அவன் பதில் பேசவில்லை. அப்படியே குனிந்த தலை நிமிராமல் நின்றான்.

“பேகன் கருணை மிகுந்தவன் என்றல்லவா எல்லோரும் சொல்கிறார்கள்? தோகை விரித்தாடும் மயிலைக் கண்டு குளிரால் நடுங்குவதாக எண்ணிக்கொண்டு போர்வையை எடுத்துப் போர்த்திய வள்ளலாமே அவன்?”

வார்த்தை அம்புகளைத் தாங்கிக்கொண்டு அடித்து வைத்த சிலையென நின்றான் பேகன். “ஏதேதோ வீண் சந்தேகப்படுகிறேனே நான்? நீதான் பேகனாக இருக்கவேண்டும். உன்னைப் பார்த்தால் பேகன் மாதிரிதான் இருக்கிறது.”

“போதும்! பரணரே! இன்னும் என்னை வார்த்தைகளால் கொல்லாதீர்கள். நான்தான் நிற்கிறேன். உங்கள் பழைய பேகன்தான். வேண்டியதைக் கேட்டு வாங்கிக்கொண்டு போகலாம்.”

அவனால் பொறுக்க முடியவில்லை. அவருக்குப் பதில் கூறிவிட்டான். பதிலில் தன் குற்றத்தை உணர்ந்த சாயையைவிட ஆத்திரத்தின் சாயைதான் மிகுதியாக இருந்தது.

“ஓகோ என் ஒழுக்கத்தைப் பற்றிக் கேட்க நீர் யார்? நீர் ஏதாவது பரிசில் பெற்றுப்போக வந்திருந்தால், அதை கேட்டு வாங்கிக் கொண்டு செல்லுங்கள்” என்று நீ கோபப்படுகிறாய் போலிருக்கிறது.

“ஆமாம்! கோபம்தான். வீணாக என் மனத்தை ஏன் புண்படுத்துகிறீர்? விருப்பமிருந்தால் உமக்கு வேண்டிய பரிசிலைக் கேட்டுவாங்கிக்கொண்டுஎன்னை விடும்.என் விருப்பப்படி நான் இருந்தால் அதைக் கேட்க நீர் யார்?”

பேகனுக்கு உண்மையிலேயே கோபம்தான் வந்துவிட்டது.

“அப்படியா? சரி! நான் எனக்கு வேண்டிய பரிசிலைக் கேட்கட்டுமா?”

“நன்றாகக் கேளும்! மறுக்காமல் தருகிறேன். கொடுப்பதில் என்றும் எப்போதும் எந்த நிலையிலும் நான் பின்வாங்கு வதில்லை.ஆனால் என் சொந்த வாழ்க்கைவிருப்பங்களில் மட்டும் பிறர் தலையிட வந்தால் நான் அதை விரும்பவில்லை.”

“நான் விரும்பியது எதுவாக இருந்தாலும் கேட்கலாமல்லவா?”

“திரும்பத் திரும்ப விளையாடுகிறீரா என்னோடு? உமக்கு வேண்டுமென்பதைக் கேளுமே!”
“இதோ என் விருப்பத்தைக் கேட்கிறேன். எனக்கு நீதான் வேண்டும்.”

“என்ன?” பேகன் திடுக்கிட்டான். “ஏன் விழிக்கிறாய்? விரும்பியதைக் கேள்’ என்றாய், கேட்டுவிட்டேன். நீ சொன்ன சொல் தவறும் வழக்கத்தை இன்னும் மேற்கொள்ளவில்லையானால் சொன்னபடி உன்னை எனக்குக் கொடு!”

“நானா வேண்டும்? என்ன விளையாட்டு இது புலவரே? நான் எதற்கு உமக்கு? என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்?”

“என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? முதலில் வாக்கைக் காப்பாற்று.”

“சரி? என்னையே கொடுக்கிறேன். இதோ எடுத்துக் கொள்ளும் உம் விருப்பப்படி செய்யும்.”

“மகிழ்ச்சி, அரசே இப்போது நீ என் உடைமை. ஆகையால் நான் சொல்லுகிறபடியெல்லாம் கேட்க வேண்டும்.”

“ஆம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.”

“அப்படியானால் இப்போது என்னோடு புறப்படு! போகலாம்.”

“எங்கே புறப்பட வேண்டும், பரணரே எதற்காக” பேகன் தயக்கத்தோடு கேட்டான்.

“எங்கே, எதற்காக என்றெல்லாம் கேட்க நீ என்ன உரிமை பெற்றிருக்கிறாய்? நீ எனக்குச் சொந்தம். நான் கூப்பிடுகிறேன். வா! தயங்குவதற்குக்கூட உனக்கு உரிமை இல்லையே?”

வேறு வழியில்லை. தட்டிக் கழிக்க முடியாமல் பரணரைப் பின்பற்றி நடந்தான் பேகன், பரணர் முன்னால் நடந்தார். தனக்கு மன மயக்கமூட்டிய அந்த அழகியின் வீட்டைத் திரும்பி நோக்கிக் கொண்டேபேகன் வேண்டா வெறுப்பாகச் சென்றான்.இருவரும் ஒரு தேரில் ஏறிக் கொண்டு தலைநகரை நோக்கிச் சென்றனர்.
பரணர் அவனை அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு போனார். இருவரும் அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். புலவர் பேகனின் மனைவி கண்ணகியிடம் அவனை அழைத்துக் கொண்டு போனார்.

புலவரும் தன் கணவனும் வருவதைக் கண்ட கண்ணகி கண்ணிரைத் துடைத்துக் கொண்டு எழுந்திருந்து நின்றாள்.

“பேகா எனக்குச் சொந்தமான உன்னை நான் இவளுக்குக் கொடுத்திருக்கிறேன். இனிமேல் நீ இந்தக் கண்ணகி ஒருத்திக்குத்தான் உரியவன். உடல் மட்டுமில்லை, உன் உள்ளமும் இவளுக்கே உரிமை!”

கண்ணகிக்கு ஒன்றுமே புரியவில்லை. பேகன் தலைகுனிந்து நின்றான். புலவர் இருவரையும் மனத்திற்குள் வாழ்த்திக் கொண்டே அங்கிருந்து சென்றார். ஒரு பெண்ணுக்கு அவளுடைய உயிரினும் சிறந்த பொருளை மீட்டுக் கொடுத்த பெருமை அவருக்கு சாதாரணமான பெருமையா அது?

“மடத்தகை மாமயில் பணிக்குமென் றருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக
பசித்தும் வாரேம் பாரமும் இலமே!
களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந்துறையுநர் நடுங்கப் பண்ணி
அறஞ்செய் தீமோ அருள்வெய் யோயென
இஃதுயாம் இரந்த பரிசில் அஃதிருளின்
இனமணி நெடுந்தேர்ஏறி
இன்னா துறைவி அரும்படர்களைமே” (புறநானூறு-145)

மடத்தகை =மெல்லிய இயல்பையுடைய, பனிக்கும் = குளிரும், படாஅம் = போர்வை, கெடாஅ = கெடாத, இசை = புகழ், கடாஅ = மதம், கலிமான்= எழுச்சியையுடைய குதிரைகள், கருங்கோடு = கரிய கோட்டை உடைய, அருள் வெய்யோய்=அருளை விரும்புகிறவனே,
இன்னாதுறைவி = துயரத்தோடு வசிக்கின்ற கண்ணகி, அரும்படர் = அரிய துன்பம், களைமே = போக்குவாயாக.

(மேலே கண்ட நிகழ்ச்சிகள் பாடலின் கருத்தைத் தழுவி எழுதியவை).

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 5. பரணர் கேட்ட பரிசு, except where otherwise noted.

Share This Book