="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

35 34. முன்னோர் தவறு34. முன்னோர் தவறு

ஒருசமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், கடையேழு வள்ளல்களின் மரபினராகிய சிற்றரசர்கள் இருவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சிற்றரசர்களில் ஒருவனின் பெயர் இளவிச்சிக்கோ, மற்றொருவன் பெயர் இளங்கண்டீரக்கோ முன்னவன் சற்றே வயது முதிர்ந்தவன். பின்னவன் பருவத்தில் மிக இளைஞன். புலவருடைய முதுமையை வைத்துக் கொண்டு பார்த்தாலோ இருவருமே அவரது நோக்கிற்கு இளைஞர்கள்தாம்.

அவர்கள் இருவரையும் புலவர் நன்கு அறிவார். புலவரையும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு சிற்றரசர்களையும் சந்தித்தபோது இளங்கண்டீரக்கோவை மட்டும் வணங்கி அன்போடு தழுவிக்கொண்ட பெருந்தலைச்சாத்தனார், இளவிச்சிக்கோ நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவனைத் தம் கண்களால் நோக்குவதற்கே விருப்பமில்லாதவர் போலக் காணப்பட்டார் அவர்.

புலவர் தன்னைக் கவனிக்காது பாராமுகமாக இருப்பதைக் கண்டுகொண்ட இளவிச்சிக்கோ, தானாகவே வலுவில் அவருக்கு முன்வந்து நின்று, “புலவர் பெருமானே! தங்கள் அன்பன் இளவிச்சிக்கோ வணங்குகிறேன்” என்று கூறி அவரை வணங்கினான். ஆனால் இளவிச்சிக்கோவின் சொற்களைக் கேட்டும் அவன் தம்மை வணங்குவதை ஒரு பொருட்டாக மதிக்காமலே தலைகுனிந்து வீற்றிருந்து விட்டார் புலவர்.

‘ஒருகால் தான் கூறியதும் வணங்கியதும் புலவர் செவிகளில் விழாமல் இருந்திருக்கலாம்! தற்செயலாக அவர் தலைகுனிந்து கொண்டு விட்டார் போலும் என்று எண்ணிய இளவிச்சிக்கோ, இரைந்த குரலில், “ஐயா, தங்களைத்தான்! அடியேன் இளவிச்சிக்கோ வணங்குகின்றேன். ஆசீர்வதியுங்கள்” என்று மீண்டும் அவர் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பாதங்களைப் பற்றினான். ஆனால் புலவரோ, தீயை மிதித்து விட்டவர்போல நடுங்கித் தம் காலை அவன் கைகளிலிருந்து உதறிக்கொண்டு முகத்தில் வெறுப்பின் சாயை அழுத்தமாகப் படர ஒதுங்கி நின்று கொண்டார். அவர் வேண்டுமென்றே தன்னை அவமதிக்கின்றார் என்ற செய்தி இளவிச்சிக்கோவுக்கு அப்போதுதான் தெளிவாகப் புரிந்தது. இளவிச்சிக்கோ திடுக்கிட் டான்.அந்த ஒரே ஒரு கணத்தில் ஆத்திரம், ஏமாற்றம், அவமதிப்பு, அத்தனை உணர்ச்சிகளும் மின்னல் வேகத்தில் அவன் மனத்தைத் தாக்கின. உள்ளம் புலவர்மேல் சீறியது. உடலோ, அவமானம் தாங்கமுடியாமல் கூசிக் குறுகியது.

அருகிலிருந்த இளங்கண்டீரக்கோவுக்கும் புலவருடைய இந்தச் செயல் புதிர்போலவே இருந்து வந்தது. அவர் ஏன் இளவிச்சிக்கோவினிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொள் கிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியாமல் அவன் திகைத்தான். “தான் வணங்கியதை மட்டும் ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் செலுத்தி அன்போடு தழுவிக் கொண்டாரே! அவ்வாறிருக்க விச்சிக்கோவை வெறுப்பதன் காரணம்? . இளங்கண்டீரக்கோவின் சந்தேகம் வலுவடைந்தது.

அவன் துணிவை வரவழைத்துக் கொண்டு புலவரையே நேருக்கு நேர் கேட்டுவிட்டான்.

“ஐயா! நானும் இளவிச்சிக்கோவும் ஒரே தகுதி யுடையவர்கள்தாம். தாங்கள் என்னை மட்டும் வரவேற்று அன்போது தழுவிக் கொண்டிர்கள். அவனை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டேன் என்கிறீர்கள் இதன் காரணம் எனக்கு விளங்கவில்லையே?”

தான் கேட்கவேண்டிய வினாவையே தன் சார்பில் கண்டீரக்கோ கேட்டுவிட்டதனால் புலவர் கூறப்போகும் பதிலை ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் கொண்டு நின்றான் விச்சிக்கோ

“நான் இவனை வெறுப்பதற்குத்தகுந்த காரணம் இருக்கிறது. கண்டீரக்கோ! அது சாதாரணமாக நர்லைந்து வார்த்தைகளில் சொல்லி முடித்துவிடக்கூடிய காரணமில்லை. அதனுள் ஒரு பெரிய சோகக் கதையே அடங்கியிருக்கிறது.”
புலவர் பெருந்தலைச் சாத்தனார் இவ்வாறு கூறவும்,

“பெருந்தகையீர்! அந்தச் சோகைக் கதையைத் தாங்களே சிரமத்தைப் பாராமல் தெரிவித்துவிட்டால் உண்மையை நாங்கள் புரிந்து கொள்வோம்” என்று மேலும் தூண்டினான் கண்டீரக்கோ.

“கதையைச் சொல்கிறேன் கேள், கண்டீரக்கோ! உன் நண்பனையும் கேட்கச்சொல்.நான் ஏன் உன்னுடைய நண்பனின் வணக்கத்தையும் வரவேற்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கதை மூலம் உன் நண்பனும் தெரிந்து கொள்ளட்டும்.”

“சரி இருவருமே கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறோம். நீங்கள் கதையைக் கூறுங்கள்”

“இந்த இளவிச்சிக்கோவின் முன்னோர்களில் நன்னன் என்று ஒர் அரசன் இருந்தான். சிறந்த கொடைப் பண்பும் வீரமும் உடையவனாயினும் முன்கோபமுடையவன். எதையும் சிந்தித்து ஆராய்ந்து செய்யாமல் திடீரென்று செய்துவிடுவான்.தான் தவறு செய்யும்போது தானாக உணர்ந்தோ, பிறர் கூறுவதைக் கேட்டோ தன்னைத் திருத்திக் கொள்ளுகின்ற குணம் அவனிடம் இல்லை. இதனால்தான் வாழ்க்கையில் எந்த அரசருமே செய்யத் துணியாத ‘பெரும் பாதகம்’ ஒன்றைச் செய்து எல்லோராலும் தூற்றப் பட்டான் அந்த நன்னன்.

அவனுடைய தலை நகரத்தின் எல்லையிலே ஆற்றோரத்தில் நகரின் காவல் மரம் அமைந்திருந்தது. அது ஒரு நல்ல மாமரம். அந்த மாமரத்தில் காய்க்கும் காய்களையோ, கனிகளையோ எவரும் தீண்டவே கூடாது. காவல் மரம் என்றால் அது அரசனைப் போலவே எண்ணி மரியாதை செலுத்துவதற்குரிய ஒரு புனிதமான பொருள் அல்லவா? அதுவும் நன்னன் தன் காவல் மரத்துக்கு மற்ற அரசர்கள் இயற்கையாகச் செய்யும் கட்டுப்பாடுகளைவிட அதிகமாகவே கட்டுப்பாடுகள் செய்திருந்தான்.

ஒரு நல்ல கோடை காலத்தில் அந்த மாமரம் கொத்துக் கொத்தாகக் காய்ந்திருந்தது. வளமான காய்கள் மரம் எங்கனும்
நிறைந்து குலுங்கின. காணக் கவின் மிகுந்து காட்சியளித்தது மாமரம். அருகிலுள்ள ஆற்றில் குளிர்ந்த நீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. ஆற்று நீரையும் மாமரத்தையும் ஒருங்கு கண்டவர் எவராயினும் அவருக்கு நாவில் நீர் ஊறாமல் இராது. ஆனால் கட்டுப்பாட்டை எண்ணித்தம்மை அடக்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

ஒரு சமயம் வெளியூரிலிருந்து வந்த இளங்கன்னிப் பெண் ஒருத்தி இந்த மாமரத்தின் அருகில் ஒடும் ஆற்றிற்கு நீராடச் சென்றிருக்கிறாள் பாவம்! அவள் ஒர் ஏழைப் பெண். வயிறு உணவைக் கண்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. நீராடிக் கொண்டிருந்த பொழுது அருகிலிருந்த மாமரத்திலிருந்து கனிந்து முற்றிய காய் ஒன்று ‘தொபுக்கென்று தண்ணீரில் விழுந்து அவளருகே மிதந்து வந்தது. தமிழ்க் கவிதைகளை நன்றாகப் படித்த பெண்தான் அவள். ஆனால் அருகேயிருப்பது காவல்மரம் என்பதும் அதிலிருந்து விழுந்த காய்களை எப்போதும் எவரும் எந்த நிலையிலும் உண்ணக்கூடாது என்பதும் அறியாதவள். எனவே பசி மிகுதியால் தண்ணிரில் மிதந்து வந்த முதிர்காயை எடுத்துத் தின்னத் தொடங்கினாள். காவல் மரத்திலே இருந்த காவலன் ஒருவன் இதைப் பார்த்துவிட்டான்.அவள் ஏதுமறியாத பேதைப் பெண் என்பதையும் பாராமல் அரசன் முன்னிலையில், நீராடிக் கொண்டிருந்தவளை அப்படியே கொண்டு போய் நிறுத்திவிட்டான் காவலன். அப்போது அருகிலிருந்த புலவர் பெருமக்களும், பெரியோர்களும் “இவள் அறியாப் பெண்! கன்னிகை வேண்டுமென்றே இவள் குற்றம் செய்யவில்லை. இவளைத் தண்டிக்கக்கூடாது” என்று அரசனிடம் மன்றாடினர். ‘பெண் கொலை பெரும் பாவம்’ என்று அறவோர்கள் பலமுறையும் எடுத்துக் கூறினர். தான் வேற்றுாராள் என்றும், அது காவல் மரத்தின் காய் எனத் தனக்குத் தெரியாதென்றும் அந்த இளம் பெண்ணும் கண்ணிர் சிந்திக் கதறினாள். ஆனால் பிடிவாதமும் முன்கோபமும் மிக்கவனான நன்னன், யார் சொல்லியதையும் கேட்காமல் வஞ்சிக்கொடி போலிருந்த அந்த அழகிய இளம் பெண்ணைக் கொலைக்களத்திற்குக் கொண்டு
போய்க் கொன்றுவிட்டான். அன்றிலிருந்து அவனையும் அவன் வம்சத்தினரையும் பெண் கொலை புரிந்த பாவத்திற்காகப் புலவர்களும், அறவோர்களும் ஏறெடுத்துப் பார்ப்பதும் இல்லை.உன் நண்பன் இளவிச்சிக்கோ அந்த நன்னனுடைய மரபிலே தோன்றியவனாகையால் நான் அவனை வணங்கி வரவேற்கவில்லை. காரணம் இதுதான்” புலவர் கூறிமுடித்தார். கண்டீரக்கோ பெருமூச்சு விட்டான். விச்சிக்கோ உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான், அது காலியாக இருந்தது!

பண்டும் பண்டும் பாடுநருவப்ப
விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅற்
கிழவன் சேட்புலம் படரி னிழை யணிந்து
புன்றலை மடப்பிடி பரிசி லாகப்
பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீரக்கோ னாகலி னன்று
முயங்க லான்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருகனன்றியு நீயு
முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்
பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை
யணங்குசா லடுக்கம் பொழியுநும்
மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே (புறநானூறு – 151)

பண்டு = முன்பு, சிமைய = உச்சி, வரை = மலை, இழை = ஆபரணம், பிடி=பெண் யானை, தம்பதம் = தம் தரமறிந்து, முயங்கல் =தழுவிக் கொள்ளுதல், மருதன்=மரபில் வந்தவன், அடுக்கம் = மலை, மணங்கமழ் = மணம் வீசும், வரைந்தனர் = நீக்கினர்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 34. முன்னோர் தவறு, except where otherwise noted.

Share This Book