="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

22 21. யாரைப் புகழ்வது?

21. யாரைப் புகழ்வது?

ஏனாதி திருக்கிள்ளி என்று ஒரு சோழ அரசன். பல முறை அடிக்கடி போர்களில் ஈடுபட்டவன். இதன் காரணமாக இவன் உடலில் புண்களும் தழும்புகளும் இல்லாத இடமே கிடையாது. எந்தப் போரிலும் வீரர்களை முன்னணிக்கு அனுப்பிவிட்டுத் தான் சும்மா இருந்துவிடுகிற வழக்கம் இவனிடம் இல்லை. ஒவ்வொரு போரிலும் தானே முன்னணியில் நின்று பகைவர்களோடு வாளோ, வேலோ,வில்லோ எடுத்துப்போர்செய்வான்.அதனால் ஏற்படுகின்ற காயங்களையும், புண்களையும் தயங்காமல் ஏற்றுக் கொண்டு மகிழ்வான்! புண்கள் வவிக்கும்போதோ, காயங்களால் ஏற்பட்ட தழும்புகளைக் காணும்போதோ, இப்படிக் காயங்களை அடைந்துவிட்டோமே என்று அவன் வருந்துவதில்லை. அதற்கு நேர்மாறாக காயங்களையும் புண்களையும் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைவதும், காயங்களும், புண்களும் பெறாத நாட்களைப்
பயனற்ற தினங்களாகக் கணக்கிடுவதும் அவன் வழக்கங்களாக இருந்தன.

உடலிலுள்ள ஆடைஅணிகளைக் களைத்து விட்டுப் பிறந்த மேனியோடு நின்றானானால் காண்பவர்களின் கண்களுக்கு ஒரே அருவருப்பாக இருக்கும். வில்லம்புகளும்,வேல் நுனிகளும் வாள் நுனிகளும் குத்தியும் கீறியும் ஆழப்பதிந்தும் உண்டாக்கிய வடுக்களும் தழும்புகளும் நிறைந்த அவன் தேகம் காண்பதற்குப் படுவிகாரமாக இருக்கும்.

ஏனாதி திருக்கிள்ளிக்குப் புலவர்களில் பலர் நெருங்கிய நண்பர்கள்.அத்தகைய நண்பர்களில் மதுரைக் குமரனார் என்பவர் மிகவும் முக்கியமானவர். திருக்கிள்ளியோடு பல விதங்களிலும் நெருங்கிப் பழகுகிறவர். தயங்காமல் பயப்படாமல் அவனிடம் எதைப் பற்றியும் துணிவாக எடுத்துப் பேசும் தைரியம் அவருக்கு உண்டு.

ஒருநாள் ஏனாதி திருக்கிள்ளியும் மதுரைக் குமரனாரும் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு கேட்பவர்போலக் குமரனர் கிள்ளியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

“அரசே! சிந்தித்துப் பார்த்தால் உன்னைப் புகழ்வதா, உன் பகைவர்களைப் புகழ்வதா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது!”

“ஏன்? இதென்ன புதுமாதிரிச் சந்தேகமாக இருக்கின்றதே!”

“புதுமை ஒன்றும் இல்லை! ஒரு விதத்தில் பார்த்தால் உன்னைக் காட்டிலும் உனக்குத் தோற்றுப்போய் ஒடுகிறவர்கள் சாமர்த்தியசாவிகளாய்த் தோன்றுகிறார்கள்? வெற்றி பெற்றாலும், போருக்குப் போர் ஏமாறுகிறவன் நீதான்!”

“அதென்ன புலவரே புதிதாக ஏதோ புதிர் போடுகிறீர்கள்! எந்தப் போரிலும் யாருக்கும் நான் தோற்றது இல்லையே? நான் எப்படி ஏமாளி ஆவேன்?”

“ஏமாளிதான்! அதற்குச் சந்தேகம் இல்லை! உன் பகைவர்களைப் பார் ஒருவருக்காவது உடம்பில்ஒரு சிறு இரத்தக் காயமாவது இருக்கிறதா? உன் உடம்பையும் பார். உடம்பெல்லாம் கோழி கிளறின தரைமாதிரிக் காயங்கள் உன்தேகத்தை நிறைத்துக் கொண்டிருக்கின்றன!”

“அதனால்…?”

“உன் பகைவர்கள் கண்ணுக்கு இனியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் செவிகளால் அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போது கெட்டவர்களாகத் தோன்றுகிறார்கள்! நீயோ கண்ணுக்கு அழகற்றவனாகத் தோன்றுகிறாய்! செவிகளால் உன்னைப் பற்றிக் கேள்விப்படும்போது உனது தூய புகழ் முழங்குகிறது. உங்கள் இருவரில் யாரைப் புகழ்வதென்று எனக்குத் தெரியவில்லை.”

“யாரைப் புகழ வேண்டும் என்பது உம்முடைய இஷ்டமோ அவரைப் புகழ வேண்டியதுதானே?”

“அவர்கள் கண்ணுக்கு அழகர்கள் செவிக்கு இழிவான வர்கள்! நீ கண்ணுக்கு விகாரமானவன்! செவிக்கும் மனத்திற்கும் அழகன்! ஆனால் இந்தப் பாழாய்ப்போன உலகம் கண்ணுக்கு அழகான உன் பகைவர்களைப் புகழாமல் கண்ணுக்கு அருவருப்பான உன்னையல்லவா புகழ்கிறது?”

“அதுவும் என் பாக்கியம்தான்”

“கிள்ளீ! இந்தப் புண்தான் உனது புகழ், இந்தப் புண்ணைப் பெற முடியாததுதான் உன் பகைவர்களின் இகழ்! நீ வாழ்க!”

யாரைப் புகழாவிட்டாலும் பழிப்பதுபோலப் புகழும் சாதுரியவானான புல்வரைப் புகழத்தான் வேண்டும்!

நீயே அமர்காணின்அமர் கடந்தவர்
படைவிலக்கி எதிர்நிற் றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக் கினியை கட்கின் னாயே

அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின்
ஊறறியா மெய்யாக் கையொடு
கண்ணுக் கினியர் செவிக் கின்னாரே
அதனால் நீயுமொன் றினியை அவருமொன் றினியர்
ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி
நின்னை வியக்கும்இவ் வுலகம்அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே! (புறநானூறு – 167)

அமர் = போர், கடந்து = வென்று, வடு = புண்கள், யாக்கை = உடல், ஊறு = துன்பம், புறங்கொடுத்தலின் = முதுகுகாட்டி ஒடிவிடுதலால், ஒவ்வாயாவுள’ = பொருந்தாதவை என்ன இருக்கின்றன, உரைத்திசின் = உரைப்பாயாக கழல் = வீரக்காப்பு, கடுமான் = விரைந்து ஒடும் குதிரைகள்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 21. யாரைப் புகழ்வது?, except where otherwise noted.

Share This Book