="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

40 39. கனி கொடுத்த கனிவு

39. கனி கொடுத்த கனிவு

தகடுர் அதியமானின் தலைநகரம் தகடுரை யொட்டி, உயரிய மலைத் தொடர் ஒன்று அமைந்திருந்தது.அதற்குக் குதிரைமலைத் தொடர் என்று பெயர்.அதியமான் தலைநகரில் ஒய்வாக இருக்கும் நாட்களில் இந்த மலைத் தொடரில் வேட்டையாடப் போவது வழக்கம்.குதிரைமலையில் நல்ல பழமரங்கள் இருந்தன. ஒருமுறை வேட்டையாடச் சென்றிருந்தபோது வேடர்களிடமிருந்து ஒரு நெல்லி மரத்தைப் பற்றி அதியமான் தெரிந்து கொண்டான். அது ஒரு அற்புத நெல்லிமரம்.அதன் கனி உண்டவர்களை நீண்டநாள் உயிர் வாழச்செய்யும் இயல்பு உடையது.ஒரே ஒரு கணிதான் அந்த மரத்தில் தோன்றுவது வழக்கம். அந்த ஒரு கனியையும் எவரும் பறித்துக் கொள்ள முடியாது! நெல்லிமரம் அப்ப்டிப்பட்ட உயரமான இடத்தில் அமைந்திருந்தது.

மலை உச்சியில் ஒரு பிளவு. அந்தப் பிளவின் செங்குத்தான பகுதியில் மரம் இருந்தது. மரத்தின் ஒரு துனியில் அந்த ஒரே ஒரு நெல்லிக்கனியும் இருந்தது. இதுவரை அந்த நெல்லிக்கனியைப் பறிக்க முயன்றவர்கள் யாவரும் தோல்வியே அடைந்திருந்தார்கள். அந்த அருமையான நெல்லிக்கனியை எப்படியாவதுதான் அடைந்துவிட வேண்டும் என்று விருப்பம் கொண்டான் அதியமான். காட்டு வேடர்களைக் கலந்து ஆலோசித்தான்.

“அரசே! செங்குத்தான பாறைப் பிளவில் ஏற முடியாது. நச்சுத்தன்மை பொருந்திய வண்டுகள் வேறு அந்தப் பிளவில் இருக்கின்றன. கொட்டினால் உடலில் நஞ்சு ஏறி இறக்க நேரிடும். முதலில் மாற்று மருந்துகளைத் துரவி வண்டுகளைக் கொல்ல வேண்டும். பின்பு மரத்திற்கு ஏறிச்செல்ல வசதியாகச்சாரம் கட்ட வேண்டும். செங்குத்தான பிளவின் உச்சிவரை உயர்ந்த மூங்கில் களால் சாரம் கட்டிவிட்டால் நெல்லிக்கனி கிடைத்தது போலத்தான்” என்றார்கள் வேடர்கள்.

“அப்படியே செய்வோம். மூங்கில்களைத் தயார் செய்து சாரம் கட்டுங்கள். மருந்தைத் துவி வண்டுகளைப் போக்குங்கள்.
கனி எப்படியும் நமக்குக் கிடைக்க வேண்டும். அதியமானின் வற்புறுத்தலான கட்டளையை மறுக்க முடியாமல் வேடர்கள் நெல்லி மரத்தில் ஏறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். சில நாட்களில் மருந்து தூவி வண்டுகள் அழிக்கப் பட்டன. அரிய முயற்சியின் விளைவாகச் சாரமும் அமைக்கப்பட்டது.வேடர்களும்,அதியமானும் சேர்ந்து முயன்று அந்த ஒரு நெல்விக்கனியை அடைந்தனர்.

அதியமான் நெல்லிக் கனியோடு அரண்மனைக்குத் திரும்பினான். பெற முடியாத பொருள் ஒன்றை அரிய முயற்சியால் பெற்றுக் கொண்டு வந்துவிட்ட மகிழ்ச்சி அவன் மனத்தில் நிறைந்திருந்தது.

அங்கே அரண்மனையில் ஒளவையார் அவனைச் சந்திப்ப தற்காகக் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் நெல்லிக்கனியோடு போய்ச் சேர்ந்தான்.அவன் ஒளவையாரைக் கண்டதும் தனக்குள் இப்படிச் சிந்தித்தான்.

“தம்முடைய அறிவுரைகளால் இளைஞர்களையும் முதியோர்களையும் என்போன்ற அரசர்களையும் பண்பட்டு வாழச் செய்கின்ற இவருக்கு மூப்பு வந்துவிட்டது. இவர் இன்னும் நீண்டநாள் உயிர் வாழ்ந்தால் இந்த உலகத்துக்கு எவ்வளவு பயன்? என் போன்ற அரசர்கள் உலகத்தை நாங்களே பாதுகாப்பதாக எண்ணிக்கொண்டு தலை கனத்து இறுமாந்து திரிகின்றோம். உண்மையில் உலகத்தை வாழ்விப்பவர்கள் இவரைப் போலத்துாய உள்ளம் பெற்ற புலவர்கள் அல்லவா? என்னிடம் இருக்கும் இந்த நெல்லிக்கனியை இவருக்கு அளித்து இவரை நீண்டநாள் வாழச் செய்தால் என்ன?

அதியமான் ஒளவையாரை வணங்கினான். ஒளவையார் வாழ்த்தினார்.

“தாயே! இதை என் அன்பளிப்பாக ஏற்று உண்ண வேண்டும்” நெல்லிக் கனியைப் பணிவாக எடுத்து அவரிடம் நீட்டினான்.

“இது என்ன அதியா? நெல்லிக் கனியா?” – “ஆமாம் தாயே!” ஒளவையார் வாங்கிக் கொண்டார்.

“இது மாதிரி நெல்லிக் கனியை நான் இதுவரை கண்டதே. இல்லையே? என்ன கனிவு? என்ன திரட்சி? எவ்வளவு அருமையான நெல்லிக்கனி இது? இதை எங்கிருந்து கொண்டு வந்தாய் நீ”

“முதலில் இதைச்சாப்பிடுங்கள்தாயே! மற்றவற்றை எல்லாம் பின்பு கூறுகின்றேன்.”
ஒளவையார் நெல்லிக்கனியை எடுத்து உண்டார். உண்ணும் போதே அதன் சுவையை வியந்தார். அதியமான் அந்த நெல்லிக்கனி தனக்குக் கிடைத்த விவரத்தைக் கூறினான்.அதோடு அந்தக் கனியின் பயனையும் கூறினான்.

“அதியா! உண்டாரை நீண்டநாள் வாழ வைக்கும் இந்தக் கனியை, நீ அல்லவா உண்டிருக்க வேண்டும்? எனக்கு ஏன் கொடுத்தாய்? சாகின்ற வயதை எட்டிக் கொண்டிருக்கும் கிழவி நான்! முன்பே சொல்லியிருந்தால் இதை நான் உண்டிருக்க மாட்டேனே!”

“நீங்கள் மறுப்பீர்கள் என்பதற்காகவே அதன் பயனை முதலில் உங்களிடம் நான் கூறவில்லை”

“சிவபெருமான் திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை யெல்லாம் தாம் உண்டுவிட்டு அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தாராம். இந்த அரிய கனியை அடைய முயற்சி களையெல்லாம் நீ செய்துவிட்டு, இப்போது நான் உண்ணுமாறு கொடுத்துவிட்டாயே! சிவபெருமானைப் போல நீ நீடுழி வாழ்க!”

“தாயே! நீங்கள் உண்டால் எத்தனையோ பேரை வாழ்விக்க முடியும்.நான் கேவலம் ஒரு நாட்டைக்காக்கும் காவலாளி. நீங்கள் உலகைக் காக்கும் அறிவுத்தாய். நீங்கள் ஊழி ஊழி காலம்
அழியாமல் வாழ வேண்டும். இந்த உலகம் நெறியோடு வாழ உங்களைப் போன்றவர்கள் அறிவுரை கூறுவது என்றும் தேவை.”

“நீ கொடுத்த கனியில் கணிவைவிட உன் இதயக் கனிவுதான் மிகுதி அதியா”

“அவ்வளவு புகழ்ச்சிக்கு அதியன் தகுதியில்லாதவன் தாயே?”

“உண்மை அப்பா! புகழ் என்ற சொல்லின் எல்லைக்கு அப்பாற்பட்டதுதான் உன் புகழ்”.

நெல்லிக் கனியைவிட இதயக் கனியே உயர்வாகத் தோன்றுகிறது, புலவர் ஒளவையாருக்கு.

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்றொருவன் போல்
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே (புறநானூறு-91)

வலம்படு = வெற்றி உண்டாக, ஒன்னார் = பகைவர்கள், நறவு = மது, சுழல் = வீரக்காப்பு, தொடி = வீரவளை, ஆர்கலி = மகிழ்ச்சி, பொலந்தார் = பொன்மாலை, புரை = போல, சென்னி = தலை, நீலமணிமிடற் றொருவன் = சிவபெருமான், மன்னுக = நிலைபெற்று வாழ்க, ஆதல் = பயன், தீங்கனி – இனிய கனி.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to 39. கனி கொடுத்த கனிவு, except where otherwise noted.

Share This Book