="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

12 பெரிய புராண அரங்கேற்றம்

11. பெரிய புராண அரங்கேற்றம்

தில்லைவாழ் அந்தணர்

தில்லை, சைவ உலகத்தில், சிறந்த தலமாகக் கருதப் பட்டது. அந்தத் திருத்தலத்தில்தான் நடராஜப் பெருமானைப் பூசிக்க மூவாயிரம் குருக்கள் இருந்தனர். அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள்; சிறந்த ஒழுக்கம் உள்ளவர்கள். சோழ அரசர்கள் அவர்களைக் கெளரவமாக நடத்தி வந்தார்கள். அவர்கள் தில்லைவாழ் அந்தணர் எனப் பெயர் பெற்றனர்.

தில்லை நகரம்

தில்லை ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களாகச் சைவத்திற்குப் பெயர் பெற்ற தலம் ஆகும்.
பல்லவ அரசர் அதனை அலங்காரப் படுத்தினர். நகரத்தைச் சுற்றி மதில் எழுப்பப்பட்டு இருந்தது. அந்த நகரம் இன்றுள்ளதை விடப் பல கி. மீட்டர் சுற்றளவு உடையதாக இருந்தது. இராஜேந்திரன் அமைத்த கங்கைகொண்ட சோழபுரம் தில்லைக்கு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றது. அதனால் இராஜேந்திரன் காலம் முதல் தில்லை மிக்க சிறப்புப் பெற்றது. அநபாயன் பாட்டனான முதற் குலோத்துங்கன் காலத்தில் கடல்வரை நல்ல பாதை போடப்பட்டது. கடற்கரையில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது. சுவாமி அங்குக் கொண்டு செல்லப்பட்டது. பெரும்பாலும் நாள் தோறும் விசேஷமான பூஜைகள் நடைபெற்றன. அநபாயன் தந்தையான விக்கிரம சோழனும் அநபர்யனும் செய்த திருப்பணிகள் முன்பே கூறப் பட்டன அல்லவா? ஆகவே, சேக்கிழார் காலத்தில் தில்லை மெய்யாகவே ‘பூலோக கயிலாயம்’ என்று சொல்லத் தக்க முறையில் விளங்கியது.

சேக்கிழார் வேண்டுகோள்

இத்தகைய தில்லையை அடைந்த அமைச்சர் பெருமான் நல்ல நேரத்திற் புறப்பட்டுக் கோவிலை அடைந்தார்; விதிப்படி வலம் வந்தார்; திருச் சிற்றம்பலத்தின் முன் நின்று நடராஜப் பெருமானைத் தரிசித்தார். தரிசித்து, “பெருமானே ! பெருமை பொருந்திய நின் அடியர் வரலாறுகளை அடியேன் எவ்வாறு பாடுவேன்! எனக்கு முதல் தந்து அருள்க!” என்று வேண்டி நின்றார்.

‘உலகெலாம்’

அவ்வமயம் “உலகெலாம்” என்ற சொற்றொடர் அவர் காதிற் பட்டது. சேக்கிழார் அதனை இறைவன் தந்ததாக எண்ணி, அதனையே முதலாகக் கொண்டு, தமது நூலைப் பாடத் தொடங்கினார்.

“உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு வாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்”

என்பது கடவுள் வாழ்த்து.

நூல் பாடி முடித்தது

சேக்கிழார் கடவுள் வாழ்த்தை முதலாகக் கொண்டு நூல் பாடத் தொடங்கினார். ஒரு வருட காலம் தில்லையில் தங்கி நூலைப் பாடி வந்தார். தமக்கு அவ்வப்பொழுது உண்டான சந்தேகங்களைத் தில்லை வாழ் அந்தணர் முதலிய பலவூர்ப் பெரியோர்கட்கு ஆட்களை அனுப்பித் தீர்த்துக் கொண்டார்; இராப்பகலாகப் புராணம் பாடுவதை மேற்கொண்டார்; ஓராண்டு முடிவில் திருத் தொண்டர் புராணத்தைப் பாடி முடித்தார்.

நூல் அரங்கேற்றம்

அமைச்சர் பெருமான் நூலைப் பாடி முடித்தார் என்பதை அரசர் பெருமான் கேள்விப்பட்டான், நூல் அரங்கேற்றம் செய்ய ஒரு நாளைக் குறிப்பிட்டான்.
தமிழ் நாட்டுப் புலவர்-சைவப் பெருமக்கள். சிற்றரசர் முதலியோருக்கு ஒலைகளைப் போக்கினான். அரங்கேற்றத்திற்கு உரிய நாளில் தில்லை நடராஜப் பெருமான் திருக்கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சபை கூடியது.[குறிப்பு 1]

நடராஜப் பெருமானது உருவச் சிலை அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மன்னர் மன்னனான அநபாயன் நடு நாயகமாக வீற்றிருந்தான். அவன் அருகில் இளவரசன் இராஜராஜன் இருந்தான். அரசனுக்கு மறு பக்கத்தில் அவைப் புலவரான ஒட்டக்கூத்தர் இருந்தார். ஒரு பக்கம் சைவப் பெருமக்கள் கூடி இருந்தனர். ஒரு பால் புலவர்கள் குழுமி இருந்தனர் ; ஒரு மருங்கில் சிற்றரசர் திரண்டு இருந்தனர்.

சேக்கிழார் பெருமான் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் ஒரு சிறிய மேசை இடப்பட்டிருந்தது. அதன் மீது திருத்தொண்டர் புராண நூல் வைக்கப் பட்டிருந்தது. அவரது சிவ வேடம் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தது. அப் பெருமான் குறித்த நேரத்தில் மேற்சொன்ன கடவுள்
வாழ்த்தைப் பாடி, நூலை அரங்கேற்றம் செய்யலானார்.

அவர் தமக்கு முன் இருந்த நூல்களுடன், தம் காலத்தில் இருந்த பெரியோர்களைக் கேட்டுப் பல செய்திகளைச் சேகரித்தார் என்று முன் சொன்னோமல்லவா? அந்தப் பெரியோர்கள் தாம் சொன்ன குறிப்புகள் சேக்கிழார் பாடிய நூலில் இருந்ததைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். சேர- சோழ-பாண்டியர் வரலாறுகள் ஒழுங்காகப் பிழையின்றிக் கூறப்பட்டு இருந்ததால் அம் மரபுகளைச் சேர்ந்த அரசர்கள் மன மகிழ்ச்சி கொண்டார்கள். நூல் முழுவதும் சிவன் அடியார் பெருமையே பேசப்பட்டு இருந்ததால் சைவப் பெரியார் மனம் களித்தனர். காவிய இலக்கணம், செய்யுள் இலக்கணம் முதலிய இலக்கண-இலக்கியப் பண்புகள் நிறைவுற்று இருந்ததைக் கண்ட புலவர் பெருமக்கள் அந்நூலினைப் பாராட்டினார்கள். இங்ஙனம் பல வகைப்பட்ட தமிழ் நாட்டுப் பேரறிஞர் முன்னிலையில் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அரச வரிசைகள்

அநபாயன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் சேக்கிழாரையும் அவர் பாடிய புராணத்தையும் யானை மீது ஏற்றித் தில்லைப் பிரான் திருக்கோயிலை வலம் வரச் செய்தான். தான் சேக்கிழார் பின்னிருந்து கவரி வீசி மகிழ்ந்
தான். அரண்மனையை அடைந்ததும் அவருக்குத் “தொண்டர் சீர் பரவுவார்” என்ற பட்டத்தையும் விலை மதிப்பற்ற ஆடை அணிகளையும் தந்தான். பல சிற்றுார்களை வழங்கினான்.

பாலறாடிாயர்க்குப் பதவி

அரசன் அவரை நோக்கி, “சைவப் பெரியீர், சைவ உலகம் செய்த நற்பேற்றின் பயனாக வந்த புலவர் மணியே, தாங்கள் இன்று முதல் தவ முனிவராக இருக்க வேண்டுபவர் ஆயினீர். இனி உம்மை அமைச்சராக வைத்திருப்பது பாபம். யான் தங்களிடத்தில் வேலை வாங்குதல் தவறு. தங்கள் மரபு அரசாங்கத்தில் பெயர் பெற வேண்டும்; ஆதலால் தங்கள் அருமைத் தம்பியார் பாலறாவாயர் தொண்டை மண்டலத்தைக் காத்து வரும் மாகாணத் தலைவராக இருக்கக் கடவர். தாங்கள் சிவ ஸ்தல யாத்திரை செய்து கொண்டு, சைவ சமய வளர்ச்சிக்கும் தங்கள் ஆன்ம அமைதிக்கும் உரிய செயல்களில் ஈடுபடலாம்!” என்று அன்பும் பணிவும் தோன்றக் கூறினான்.

சேக்கிழார் தல யாத்திரை

சேக்கிழார் பெருமான் அரசன் விருப்பப்படி அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். நாயன்மார் பாடல் பெற்ற ஸ்தலங்கட்கு யாத்திரை சென்றார். அங்கங்குப் பல திருப்பணிகள் செய்தார். தமது பிறந்த இடமாகிய குன்றத்துரில்
தங்கித் திருநாகேசுவரப் பெருமானைப் பணிந்து தவம், கிடந்தார்.

சேக்கிழார் சிறப்பு

சேக்கிழாரது திருத்தொண்டர் புராணம் இல்லாவிடில் நாயன்மார் வரலாறுகளை நாம் விளக்கமாக அறிய முடியாது; நாயன்மார் காலத்துச் சைவ சமய நிலைமையை நாம் அறிய வழியில்லை. அந்தக் காலத்தில் இந்த நாட்டில் இருந்த பெளத்த சமயத்தைப் பற்றியும் சமண சமயத்தைப் பற்றியும் தெளிவாக அறிய முடியாது. அக்கால உள்நாட்டு-வெளி நாட்டு வாணிகம்-நாட்டு நடப்பு-பலவகைப்பட்ட மக்களுடைய பழக்கவழக்கங்கள், பலவகைப்பட்ட நில வகைகள் முதலிய விவரங்களை உள்ளவாறு
உணர முடியாது.

திருத்தொண்டர் புராணத்தில் கூறப்படும் நாயன்மார் காலம், நீங்கள் வரலாற்றில் படிக்கும் பல்லவர் காலம் ஆகும்.[குறிப்பு 2] அந்தக் காலத்துத் தமிழ் நாட்டுச் சைவ-பெளத்த-சமண சமயங்களின் நிலைமையைத் திருத்தொண்டர் புராணத்தைத் தவிர வேறு தமிழ் நூலில் விரிவாகக் காண இயலாது. அக்காலத் தமிழ் அரசர்களைப் பற்றிய ப்ல விவரங்களை இக் காவியத்திற் காணலாம், பல்லவர்-சாளுக்கியர் போர், பல்லவர்-தமிழ் அரசர் போர், பாண்டியர்-சாளுக்கியர் போர், அக்காலத்தில் உண்டான பெரும் பஞ்சங்கள் முதலிய
சரித்திர சம்பந்தமான செய்திகளையும் இப்பெரிய நூலில் காணலாம்.

திருத்தொண்டர் புராணத்திற்குப் பெரிய புராணம் என்னும் பெயரும் உண்டு. இந்நூல் எளிய நடையில் பாடப்பட்ட 1253 செய்யுட்களை உடையது. இது தமிழ் மக்களது செல்வம் எனலாம். இது இலக்கியம்-வரலாறு-கலைகள்-சமயங்கள் முதலியவை பற்றிய விவரங்களைக் கூறும் பெருங்காவியம். ஆதலின் நாம் இப் பெரு நூலினைப் படித்து, இதனை மிக்க ஆராய்ச்சியோடு நமக்குப் பாடித் தந்த சேக்கிழார் பெருமானுக்கு நன்றி செலுத்துவோமாக!

சேக்கிழார் திருப்பெயர் வாழ்க செழித்து வாழ்க!!.

  1. சிவபெருமான் உணர்தற்கு அருமையானவன; கங்கையையும் பிறைச் சந்திரனையும் முடியில் தரித்தவன்; சோதி வடிவானவன்; சிற்றம்பலத்தில் நடனம் செய்பவன்; அப்பெருமானுடைய மலர் போன்ற சிலம்பணிந்த திருவடிகளை வணங்குவோம்.
  2. கி. பி. 300-900.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to பெரிய புராண அரங்கேற்றம், except where otherwise noted.

Share This Book