7 அநபாயச் சோழன்
விக்கிரம சோழன்
இவன் நமது அநபாயச் சோழனுக்குத் தந்தை. இவன் கலிங்கம் வரை தன் வீரத்தைக் காட்டிய பெருவீரன். இவன் காலத்தில் சிதம்பரம் மிகவும் சிறப்புப் பெற்றது. இப் பக்திமான் தன் சிற்றரசர் ஒரு வருடத்திற்குக் கட்டிய பகுதிப் பண முழுவதையும் சிதம்பரம் கோவிலை அழகு படுத்துவதில் செலவழித்தான். கோவிலைச் சேர்ந்த பல மண்டபங்கள் புதுப்பிக்கப் பட்டன; கோபுரங்கள் பெரியவையாகக் கட்டப்பட்டன; நடன சபை அழகு செய்யப்பட்டது. நடராசர் தேர் தூய பொன்னால் செய்யப்பட்டது. விலை உயர்ந்த நவரத்தினங்கள் அங்கங்குப் பதிக்கப் பட்டன. விக்கிரம சோழன் தன் பெயரால் (விக் கிரம சோழன் திருவீதி) திருவீதி ஒன்றை அமைத் தான். அதனில் பெரிய மாளிகைகளை எடுப்பித் தான். இவ்வாறு இவன் தில்லையில் செய்த திருப்பணிகள் பலவாகும்.
ஒட்டக் கூத்தர்
இவர் பெரிய தமிழ்ப் புலவர். இவர் விக்கிரம சோழன் மீது உலா ஒற்றைப் பாடியுள்ளார். விக்கிரம சோழன் மகனான அநபாயன் இவரிடமே கல்வி கற்றான். ஒட்டக்கூத்தர் அநபாயன் மீதும் ஒர் உலாப் பாடியுள்ளார். அவர் அநபாயன் மகனான இரண்டாம் இராஜராஜனுக்கும் ஆசிரியர் ஆவர். அவன் அரசனாக இருந்த பொழுது அவன் மீதும் உலாப் பாடியுள்ளார். இவை மூன்றும் மூவர் உலா எனப் பெயர் பெறும். அவர் தக்கயாகப் பரணி முதலிய பல நூல்களைப் பாடிய பெரும் புல்வர். அதனால் அவரிடம் கல்வி கற்ற அநபாயன் சிறந்த தமிழ்ப் புலவனாக விளங்கினான். இதனை,
-
-
- “ஆடும் கடை மணி ந்ாவசையாமல் அகிலமெல்லாம்:
- நீடும் குடையில் தரித்த பிசானென்று நித்தநவம்
- பாடும் பெருமான் கவி ஒட்டக்கூத்தன் பாதமயத்தைச்
- சூடும் குலோத்துங்க சோழனென்றே என்னைச் செப்புவரே”
-
என்று அநபாயனே பாடிய பாட்டினால் அறியலாம்.
அநபாயன்
அநபாயன் என்பது அவனது சிறப்புப் பெயர். இரண்டாம் குலோத்துங்கன் என்பது அவனது அபிஷேக நாமம். அவனைச் சேக்கிழார் தம் புராணத்தில் பத்து இடங்களில் “அநபாயன்” என்றே சுட்டியுள்ளார். அவனுடைய காலத்தில் செய்யப்பட்ட தண்டி அலங்காரம் என்னும் நூலிலும் அவன் ‘அநபாயன்’ என்றே குறிக்கப்
பட்டான். ஒட்டக் கூத்தரும் இப்பெயரையே பல இடங்களில் ஆண்டுள்ளார். அவனால் கோவில்களுக்கு விடப்பட்ட ஊர்கள் ‘அநபாயச் சோழ நல்லூர்’, ‘அநபாய மங்கலம்’ என்று இப்பெயர் கொண்டே விளங்குகின்றன.
சிறந்த சிவ பக்தன்
அநபாயன், தந்தையைப் போலவே, சிறந்த சிவ பக்தனாக இருந்தான். அவன் சிதம்பரத்தில் இருந்த அரண்மனையிலேயே பெரும் பொழுதைப் போக்கினான். நடராஜர் மீது பெரும் பக்தி கொண்டவன். ‘இவன் நடராஜருடைய திருவடிகள் – ஆகிய செந்தாமரையில் உள்ள அருளாகிய தேனைக் குடிக்கும் ஈப் போன்றவன்’ என்று அக்காலத்தார் அவனது பக்தியைப் பாராட்டினர்.
தில்லையில் செய்த திருப்பணிகள்
அநபாயன் தன் தந்தை விட்டுச் சென்ற திருப் பணிகளைக் குறைவற நிறைவேற்றினான்; கோபுரங்கள், சிற்றம்பலம், பல மண்டபங்கள், பிராகார மாளிகை, அம்மன் கோவில் இவற்றை மேலும் அழகு செய்தான். அவனுக்கு முன் இருந்த சோழ அரசர் சிலர் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தனர். ஆதலால் அவன். பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான். ‘பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன்’ என்ற பெயர் பெற்றான்; கோவிலை அடுத்த நான்கு வீதிகளையும் அழகு செய்தான். இவை யாவும் ஒட்டக்கூத்தர் கூறும் செய்திகள்.
அவன் திருவாரூர்க் கோவிலில் உள்ள தேவார ஆசிரியர் உருவச் சிலைகளுக்குப் பல ஆடை அணிகளும் பூசைக்குரிய பொருள் வசதியும் அளித்தான்; சுந்தரர், அவர் தகப்பனாரான சடையனார், தாயாரான இசைஞானியார் உருவச் சிலை களைத் திருவாரூர்க் கோவிலில் எழுந்தருளச் செய்தான். அப் பக்திமான் தன் பெயரால் பல கிராமங்களையும் நிலங்களையும் பல பெரிய கோவில்கட்குத் தானமாக அளித்தான்.
அமைதியான அரசியல்
அநபாயன் காலத்தில் பிற நாட்டு அரசர் படையெழுச்சி இல்லை; உள் நாட்டில் குழப்பம் இல்லை. சோழப் பெருநாடு கிருஷ்ணை முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்தது. நாடு நல்ல நிலையில் இருந்தது. அரசாட்சி அமைதியாக நடைபெற்று வந்தது. அதனால் அநபாயன் தமிழ் நூல்களைப் படிப்பதிலும் கேட்பதிலும், சைவத் திருப்பணிகளிலும் தன் காலத்தை இன்பமாகக் கழித்து வந்தான்.