11 சேக்கிழார் அறிவுரை
சேக்கிழாரும் இராஜராஜனும்
சேக்கிழார் சீவகசிந்தாமணியை நன்றாகப் படித்தவர்; அதன் காவியச் சிறப்பை நன்கு அறிந்தவர்; ஆயினும் அரச சபையில் அதனை மிகுதியாக வெளிக்காட்டவில்லை. அரசன் அக் காவியத்தில் தன் கருத்தைச் செலுத்தினான்; சில பகுதிகளை இரண்டு மூன்று முறை வாசிக்கச் சொல்லிக் கேட்டு இன்பப்பட்டான்.
ஒரு நாள் மாலை இளவரசன் சேக்கிழாரை அழைத்துக் கொண்டு உலவச் சென்றான். இருவரும் ஒரு பூஞ்சோலையில் எதிர் எதிர் அமர்ந்தனர். அரண்மனையைச் சேர்ந்த அப் பூந்தோட்
டத்தில் மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, முதலிய மலர்கள் விரிந்து நறுமணத்தை நாற்புறமும் பரப்பின. மெல்லிய காற்று அங்கு வீச, மலர்கள் அசைந்தாடின. அக் காட்சி அமைச்சரையும் இளவரசனையும் வரவேற்கும் காட்சி போலக் காணப்பட்டது.
உரையாடல்
இளவரசன் : புலவர் பெருமானே, சீவகன் வரலாறு படிக்கவும் கேட்கவும் இன்பமாகவே இருக்கின்றது. அரசர் தினந்தோறும் அந் நூலினைத் தனியாகப் படித்தும் இன்பப் படுகிறார். நானும் சில பகுதிகளைப் படித்துப் பார்த்தேன். இன்பமாகத்தான் இருக்கிறது.
சேக்கிழார் : இளவரசரே, அந்நூல் படிக்கப் படிக்க இன்பம் தரும்; கதாநாயகனான சீவகன் வீரச் செயல்களும் பல கலைகளில் அவன் காட்டிய திறமையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். அந்த நூலினை நான் முழுவதும் வாசித்தவன். செய்யுட்கள் அழகானவை. அக் காவியத்தைப் பாடிய திருத்தக்க தேவர் சிறந்த புலவர் என்பது அக் காவியத்திலிருந்து புலப்படுகிறது. ஆனால்…
இளவரசன் : ‘ஆனால்’ என்ன? உங்கள் கருத்தைத் தெளிவாக்த் தெரிவியுங்கள். ‘ஆனால்’ என்னும் சொல், அந்நூலில் குறையுண்டு என்பதைக் குறிப்பாக உணர்த்துவது போலக் காண்கிறதே. அன்பு கூர்ந்து உங்கள் எண்ணத்தை
அறிவியுங்கள். உங்களைப் போன்ற பெரும் புலவர் கருத்தை அறிய வேண்டுவது அவசியம் அன்றோ?
சேக்கிழார் : இளவரசே, சீவகன் உங்களைப் போன்ற அரச மரபினன்; அரசன். அவன் வரலாறு படித்தறிய வேண்டுவது அவசியமே. அவன் வரலாறு தமிழ்க் கவியில் பாடப்பட்டிருப்பதால் காவிய நயத்துக்காக நூலை வாசிக்க வேண்டுவது நமது கடமை. ஆனால் அந்த வரலாறு இப்பிறப்பில் இன்பத்தைத் தருமே தவிர, ஆன்மாவிற்கு எவ்வகையில் துணை செய்ய வல்லது? நமது சைவ சமயத்தை வளர்க்க அஃது உதவி செய்யாது அல்லவா? ஆதலின் இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தரத்தக்க வரலாறுகளே அரசர்களும் குடி களும் போற்றிப் படிக்கத் தகுவன ஆகும்.
இளவரசன் : புலவர் பெருமானே, நீர் கூறியது உண்மை. அங்ஙனம் இருமையும் பயக்கத் தக்க வரலாறுகள் எவை?
சேக்கிழார் : இராஜராஜரே, இந்த உலகில் துய வாழ்வு வாழ்ந்து, மக்களை நல்வழிப் படுத்தி, அவர்களுக்குத் தொண்டு செய்து மறைந்த பெருமக்களுடைய வரலாறுகளே நமக்கு ஏற்றவை. அங்ஙனம் தோன்றி மறைந்த பெருமக்களே திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலியோர். அவர்கள் வடக்கே காளத்தி வரை கால்நடையாக நடந்து ஏறக்குறைய இருநூற்றுக்கு மேற்பட்ட கோவில்களைத் தரிசித்தவர்கள். அங்கங்கு இருந்த
மக்கள் உள்ளத்தைக் கடவுள்பால் திருப்பத் திருப் பதிகங்கள் பாடினவர்கள்; பல அற்புத்ங்களைச் செய்தவர்கள். திருநாவுக்கரசர் தமது எண்பத் தோரு வயது வரை யாத்திரை செய்து மக்கட்கு அறிவுரை-சமயவுரைகளைப் பதிகங்கள் மூலமாகப் போதித்து வந்தவர் என்றால், அப் பெருமக்களுடைய வரலாறுகள் எத்தகையனவாக இருத்தல் வேண்டும் அவற்றைக் கேட்பதால் – படிப்பதால் நமது சமய முன்னேற்றத்துக்குரிய பல தொண்டுகளைச் செய்ய யோசனை உண்டாகும். நமக்கும் இம்மையில் இன்பமும் மறுமையில் நற்பயனும் கிடைக்கும் அல்லவா?
இராஜராஜன் : அமைச்சர் பெருமானே, உங்கள் கருத்தை உணர்ந்தேன். நீங்கள் கூறுவது முற்றும் உண்மையே.
அரசனும் இளவரசனும்
அன்றிரவு இளவரசன். தன் தந்தையைக் கண்டு சேக்கிழார் கருத்தை விளங்க வுரைத்தான். அநபாயன் சிறந்த புலவன் அல்லவா? அவன் சேக்கிழார் யோசனையைப் பாராட்டினான்; சமண காவியமாகிய சிந்தாமணியைச் சைவர் படிக்கலாகாது என்று கூறாத அவரது பரந்த அறிவையும் பாராட்டினான்; மறுநாள் சேக்கிழாரைக் கண்டு பல ஐயங்களைப் போக்க விரும்பினான்.
அநபாயனும் அமைச்சரும்
மறுநாள் காலை சேக்கிழார் அரசியல் விஷயமாக அரசனைப் பார்க்கச் சென்றார். அப்பொழுது அரசன் அவரை முக மலர்ச்சியோடு வரவேற்று உட்காரச் செய்தான். அவரை அன்புடன் நோக்கி, “புலவரே, நீங்கள் இராஜராஜனிடம் நேற்றுக் கூறியவற்றைக் கேள்வியுற்றேன். உங்கள் யோசனை பாராட்டுதற்கு உரியது. ஆனால் அத் தகைய பெரியோர் வரலாறுகள் காவிய ரூபத்தில் இல்லையே! அவற்றை நாம் எவ்வாறு அறிவது?” என்று கேட்டான்.
அமைச்சர், “அரசர் பெருமானே, தேவார ஆசிரியர் வரலாறுகளைப் பற்றி நம்பியாண்டார் நம்பி என்பவர் பல சிறு நூல்களைப் பாடியுள்ளார் அல்லவா? அவற்றுடன் அவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களையும் ஆராய்ந்தால் அவர்களுடைய வரலாற்றுச் செய்திகளைப் பெரிதளவு அறியலாம். மேலும் அப்பெரியார்கள் யாத்திரை சென்ற இடங்களிலும் பிறந்த ஊர்களிலும் அவர்களைப் பற்றி வழங்கும் கதைகளும் ஆராயத் தக்கவை. அவற்றில் பொருத்தமானவற்றைக் கொண்டு இம்மூன்றையும் இணைத்து முறைப்படுத்தினால், அவர்கள் மூவருடைய வரலர்றுகளும் செவ்வையாகச் செப்ப முடியும். மற்ற அடியார்களுடைய வரலாறுகள் நம்பியால் திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிக்கப் புட்டுள்ளன அல்லவா? அவற்றோடு அவரவர்
பிறந்து வாழ்ந்த ஊர்களில் கூறப்படும் வரலாற்றுச் செய்திகளையும் இணைத்தால் விளக்கமான வரலாறு கூற முடியும்,” என்றார்.
அநபாயன் வியப்புக் கொண்டான். அவன் அமைச்சரை நோக்கி, ‘ஐயனே, உமது யோசனை நல்லதே. ஆயின், இவ்வளவு அரும் பாடுபட்டு நாயன்மார் வரலாறுகளைத் தொகுப்பவர் யாவர்? இவ்வரிய வேலைக்குப் பல ஆண்டுகள் வேண்டும். பொறுமையும் சமயப் பற்றும் வேண்டும். தமிழ் நாடு முழுவதும் சுற்ற வேண்டுமே!’ என்று கூறினான்.
அமைச்சர், பெருமானே, நான் தங்களிடம் அமைச்சனாக வந்த நாள் முதல் இந்த வேலையில் ஈடுபட்டேன்; என்யாத்திரைகளில் எல்லாத் தலங்களையும் சுற்றிப் பார்த்தேன்; குறிப்புகள் சேகரித்தேன்; பின்னர் ஓய்வு நேரங்களில் அவற்றை முறைப்படுத்தி வைத்திருக்கிறேன்!” என்று பதில் உரைத்தார்.
நாயன்மார் வரலாறுகளைக் கேட்டல்
அந்தப் பதிலைக் கேட்டு அநபாயன் ஆச்சரியம் கொண்டான். “என்ன, நாயன்மார் வரலாறுகளை ஆராய்ந்து முறைப்படுத்தியிருக்கிறீர்களா? எங்கே, கூறுங்கள், கேட்போம்!” என்று மிக்க ஆவலுடன் கூறினான்.
சேக்கிழார் மாதிரிக்காக ஓர் அடியார் வரலாற்றை விளக்கமாக உரைத்தார். அரசன் ஆனந்தப்
பரவசம் அடைந்தான். அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் அரும்பியது. அவன் மற்றவர் வரலாறுகளையும் கூறும்படி வேண்டினான். புலவர் பெருமான் நாள் தோறும் அவ் வரலாறுகளைக் கூறி வந்தார்.
புராணம் பாட வேண்டுதல்
அரசன் உண்மைச் சைவன் அல்லவா? அவன் மனத்தில் பெரியதோர் மாறுதல் உண்டாயிற்று. சேக்கிழாரைக் கொண்டே நாயன்மார் வரலாறுகளைப் பெரியதோர் புராணமாகப் பாடி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தான். ஆதலின் அவன் எழுந்து அமைச்சரை மார்புறத் தழுவி, “பெரியீர், உம்மை அமைச்சராகப் பெற்ற நான் பாக்கியம் செய்தவனானேன். நம் சைவ சமயத்துக்காக அரும்பாடு பட்ட பெரியோர் வரலாறுகள் ஒரு காவியமாக வர வேண்டும் என்று எனக்கு நெடு நாளாக எண்ண முண்டு. ஆனால் அதற்கு உரிய முயற்சியும் உழைப்பும் அதிகம் வேண்டுமே அப் புணியை மேற்கொள்பவர் யாவர் என்று எண்ணி ஏங்கினேன். என் பிறவி இன்று பயன் பெற்றது. தாங்களே அடியார் வரலாறுகளை ஒரு புராண மாகப் பாடித் தருதல் வேண்டும். சைவ உலகம் நல்வழிப்பட என்றென்றும் தங்கள் பெயர் இருக்கத் தக்கவாறு திருத்தொண்டர் புராணம் பாடி அருளுக!” என்று வேண்டினான்.
தில்லையை அடைதல்
சேக்கிழார், “பெருமானே, நான் தில்லைப் பெருமான் அருளைப் பெற்றுப் பாட முயல்வேன். நான் தில்லையில் இருந்தே அவ்வேலையை முடிப்பேன்!” என்றார். உடனே அரசன் தில்லையில் இருந்த மாளிகை ஒன்றில் அமைச்சர்க்கு வேண்டிய வசதிகளைச் செய்வித்தான். நல்ல நாளில் சேக்கிழார் அரசனிடமும் இளவர்சனிடமும் விடைபெற்றுத் தில்லையை அடைந்தார். அரசன் தயாரித்து வைத்த அழகிய மாளிகையில் எல்லா வசதிகளுடனும் தங்கினார்.