="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

9 சேக்கிழார் தல யாத்திரை

8. சேக்கிழார் தல யாத்திரை

நல்லவர் நட்பு

‘நல்லவர் நட்பு நாள்தோறும் வளர்கின்ற சந்திரனைப் போல் வளரும்’, என்பது பெரியோர் வாக்கு. சிறந்த சிவ பக்தரும் பெரும் புலவரும் அரசியல் அறிஞரும் ஆகிய சேக்கிழார் அரச சபையில் இருந்த அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தார். அவரது நல்ல ஒழுக்கம், அடக்கமான பேச்சு, அருள் நிறைந்த பார்வை, அன்பு கனிந்த உள்ளம் முதலிய பண்புகள். சோழ அரசனைப் பெரிதும் கவர்ந்தன. அவன் அவரிடம் அளவற்ற மதிப்புக் கொண்டான்.

இளவரசன்-இராஜராஜன்

அநபாயன் தவ மைந்தன் இரண்டாம் இராஜ ராஜன். அவன் ஒட்டக்கூத்தர் மாணவன் அல்லவா?
அவன் சேக்கிழாருடைய புலமையையும் பக்தி யையும் கண்டு மனம் களித்தான்; அவருடைய அரசியல் அறிவைக் கண்டு வியந்தான்; அவருடன் நெருங்கிப் பழகலானான். சேக்கிழாரும் இராஜ ராஜனுடைய நல்ல இயல்புகளைக் கண்டு, அவணுடன் நெருங்கிப் பழகினார். சோழ அரச பரம் பரை பற்றிய பல செய்திகளையும் அரசியல் செய்தி களையும் பற்றி அடிக்கடி அவனிடம் பேசுவார் ; திருக்கோவில்களைப் பற்றியும் சைவ சமய வளர்ச்சி யைப் பற்றியும் அவனிடம் விரிவாகப் பேசுவார்.

ஒட்டக்கூத்தர்

அரசனான அநபாயச் சோழனுக்கும் இளவரசனான இராஜராஜனுக்கும் ஆசிரியரான பெரும் புலவர் யார்? ஒட்டக்கூத்தர் அல்லவா? சேக்கிழார் அமைச்சராக வந்தபொழுது ஒட்டக்கூத்தர் அவரினும் வயது முதிர்ந்தவராக இருந்தார். அப்பெருமான் சேக்கிழாரது பேரறிவைக் கண்டு மகிழ்ந்தார்; மற்ற நல்ல இயல்புகளைக் கண்டு பாராட்டினார். சேக்கிழாரும் அப்பெரியவரிடம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் காட்டி நடந்து வந்தார். இரு பெரும் புலவரும் மன மகிழ்ச்சியோடு பல செய்திகளைப் பற்றி விவாதிப்பது வழக்கம்.

சேக்கிழாரும் அரச சபையும்

சோழப் பெருநாட்டில் சிற்றரசர் பலர் இருந்தனர். அவர்களுடைய பிரதிநிதிகள் அரச சபையில் நாள்தோறும் கூடுவது வழக்கம். அமைச்சர்கள்,
சேனைத் தலைவர்கள், அரசாங்கப் பிரிவுகளின் உயர்ந்த உத்யோகஸ்தர்கள், நகரப் பெருமக்கள் முதலியவர் நாள்தோறும் அரச சபையில் கூடுவர். அவர்கள் அனைவரும் சேக்கிழாருடன் பழகி அவரிடம் மிகுந்த பற்றுக் கொண்டனர்; அவரது காலத்தில் சோழப் பெருநாடு மிக்க சிறப்படையும் என்று நம்பினர். இங்ஙனம் சேக்கிழார் அரசன் முதல் ஆண்டி ஈறாக இருந்த எல்லார் உள்ளத்தையும் தம் நல்ல இயல்புகளினால் கவர்ந்து மிக்க சிறப்புடன் முதல் அமைச்சராக இருந்து வந்தார்.

சோழ நாட்டுத் திருநாகேசுவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்து திருநாகேசுவரம் என்னும் சிவத்தலம் இருக் கின்றது. அது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். அங்குள்ள கோவில் மிகப் பெரியது. சேக்கிழார் அக்கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசிப்பது வழக்கம். அக்கோவில் எவ்வாறோ அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவருடைய தாயார், தம்பியார் பாலறாவாயர் ஆகிய இருவரும் அக் கோவிலுக்குச் சென்று வழிபடலாயினர். இதற்கு அடையாளமாக அக் கோவிலில் அவர்கள் மூவர் சிலைகளும் இருக்கின்றன.

தொண்டை நாட்டு திருநாட்டுத் திருநாகேசுவரம்

சேக்கிழார் தமது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேசுவரம் கோவிலைப் போன்ற ஒன்றைக் கட்ட விரும்பினார்; சோழ நாட்டுத் திரு
நாகேசுவரத்தை எப்பொழுதுமே தரிசிக்க இயலாது அல்லவா? தமது ஊரில் அத்தகைய கோவில் இருந்தால் தமது ஓய்வுக் காலத்தில் அதனைத் தரிசித்துக் கொண்டு இருக்கலாம் என்று அவர் எண்ணினார். அதனால் அப் பெரியார் குன்றத்தூரில் இன்று நாம் காணும் ‘திருநாகேசுவரம்’ என்னும் சிவன் கோவிலைக் கட்டினார் ; அதில் பூசை, விழா முதலியன குறைவற நடக்கப் பல நிலங்களை மானியமாக விட்டார். சேக்கிழார் அக் கோவிலைக் கட்டினார் என்பதற்கு அடையாளமாக, அக் கோவிலில் அவருக்குத் தனிக் கோவில் எழுப்பப்பட்டு இருக்கிறது; ஆண்டு தோறும் அவருக்குச் சிறப்பான முறையில் திருவிழாச் செய்யப்படுகிறது.

சேக்கிழார் யாத்திரை

பெரு நாட்டின் முதல் அமைச்சர் தமது பெரு நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் அல்லவா ? இக்காலத்தில் நமது மாநில அமைச்சர்கள் நமது மாநிலம் முழுவதையும் சுற்றிப் பார்க்கிறார்கள் அல்லவா? சுற்றிப் பார்த்து, நாட்டு நிலவரங்களை அறிந்து, அவற்றிற்குத் தக்கபடி அரசியல் நடவடிக் கைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆதலால் எல்லா அமைச்சர்களும் தம் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை நன்றாகப் பார்வையிடுதல் கடமை யாகும். அவர்கள் கிராமந்தோறும் செல்வார்கள்; விளைச்சல், நீர்ப் பாசனம், கிராம ஆட்சி முறை,
கோவில் நிர்வாகம், விவசாய வரி, தொழில் வரி முதலிய பல பொருள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பர் ; மேற்பார்வை இடுவர் ; குறைகளை நீக்குவர். இத்தகைய அரசியல் விவரங்களை அறிவதற்காகவே சேக்கிழார் நாடு முழுவதும் சுற்றலானார்.

அக்காலப் பாதைகள்

பிள்ளைகளே, இக்காலத்தில் நமது மாநிலத்தில் பல ஒழுங்கான பாதைகள் அமைந்திருக்கின்றன. சென்னை போன்ற பெரிய நகரங்களில் தார் போட்ட சாலைகள் இருக்கின்றன. சென்னையிலிருந்து வடக்கேயும் தெற்கேயும் மேற்கேயும் செல்வதற்கு அகன்ற பெரிய சாலைகள் ஒழுங்காக அமைக்கப் பட்டுள்ளன. அப்பாதைகள் வழியே லாரிகள், பேருந்துகள், பிற பிரயாண வண்டிகள் முதலியன பல நூறு கி.மீ. பிரயாணம் செய்கின்றன.

இத்தகைய ஒழுங்கான முறையில் அக்காலத் தில் பாதைகள் இருந்தன என்று கூறலாம். வடுக வழி கிழக்கு என்று ஒரு பெரிய பாதை தெலுங்க நாட்டுக்குச் சென்றது; வடுகல்ழி மேற்கு என்று ஒரு பெரிய பாதையும் வட மேற்குத் திசையில் சென்றது. காவிரி, கொள்ளிடம் முதலிய ஆற்றங்கரைகளை அடுத்துப் பெரிய பாதைகள் சென்றன. அப்பாதைகள் வழியாகத்தான் ஒரு நாட்டு மக்கள் பிற நாட்டு மக்களுடன் வாணிகம் செய்தனர் வாழ்க்கையில் உறவு கொண்டாடினர்.

உதாரணமாகக் காவிரியாற்றை எடுத்துக் கொள்வோம். அது மேற்கே குடகு மலைப் பிரதேசத்தில் உற்பத்தியாகிறது. அதன் கரை வழியே வரும் ஒருவன் குடகு நாட்டையும், மைசூர் நாட்டையும், பிறகு கொங்கு நாட்டையும், அதன் பிறகு சோழ நாட்டையும் எளிதில் அடையலாம் அல்லவா? வளமான இத்தகைய ஆற்றங்கரை களில்தான் நகரங்கள் அமைதல் இயல்பு. நாகரிக மக்கள் அங்குதான் மிகுதியாக வசிப்பார்கள்; எனவே கோவில்களும் ஆற்றங்கரையோரமே பலவாகக் கட்டப்படும்.

ஒர் ஆற்றுக்கும் மற்றோர் ஆற்றுக்கும் இடைப் பட்ட நிலப் பகுதியில் குறுக்குப் பாதைகள் உண்டாகும். மேலும், அக்காலத்தில் காசியில் இருந்து இராமேசுவரம் வரை யாத்திரை செய்யத் தக்க நல்ல பாதை இருந்தது. நம் தேவார ஆசிரியர் மூவரும் வடக்கே காளத்தி வரை தல யாத்திரை செய்து, பதிகங்களைப் பாடியுள்ளனர். இராஜ ராஜன், இராஜேந்திரன் முதலான சோழப் பேர்ரசர் படைகளைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதால், அப்படைகள் செல்லத் தக்க ஒழுங்கான பாதைகள் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறதல்லவா?

சோக்கிழார் யாத்திரை – குறிப்புகள் தயாரித்தல்

காவிரியாற்றின் இரண்டு கரைகளிலும் பல நகரங்கள் உண்டு. அவற்றில் சிவன் கோவில்கள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை பாடல் பெற்ற தலங்கள். சேக்கிழார் அரசாங்க அலுவலைக் கவனித்துக் கொண்டே பாடல் பெற்ற கோவில்களையும் நன்றாகக் கவனித்தார்; அவை இருந்த ஊர்கள் – நாடுகள் – ஊர்களின் வளமை இவற்றை ஆராய்ந்தார்; ஓர் ஊர் ஒரு நாயன்மார் பிறந்த ஊராக இருந்தால் அங்குத் தங்கி, அந்த நாயனாரைப் பற்றிய தல வரலாற்றைக் கேட்டு அறிந்தார்; அவ் விவரங்கள் எல்லாவற்றையும். குறிப்பு எடுத்துக் கொண்டார்.

சேக்கிழார் இவ்வாறு ஆற்றோரம் அமைந்திருந்த பெரிய பாதைகள் வழியே சென்று, இக் கரையில் இன்ன கோவிலுக்குப் பிறகு இன்ன கோவில் அமைந்திருக்கிறது. இக் கோவிலில் திரு நாவுக்கரசர் இன்ன பதிகம் பாடினார், திருஞான சம்பந்தர் இன்ன பதிகம் பாடினார், சுந்தரர் இன்ன பதிகம் பாடினார் என்பன போன்ற விவரங்களைக் குறித்துக் கொண்டார்; நாயனார் பிறந்த ஊரில் அந்த நாயனார் வரலாறு கேட்டு அறிந்தார். அவ்வூர்க் கோவிலில் இருந்த அவரது உருவச் சிலையை ஆராய்ந்து குறிப்புகள் தயாரித்தார். அந்தக் கோவிலைப் பற்றிய பல செய்திகளையும் குறித்துக் கொண்டார்.
சிற்றரசர்

இந்த யாத்திரையில் சேக்கிழார் சோழ அரசலுக்கு அடங்கிய சிற்றரசர் பலரைச் சந்திக்க வேண்டியவர் ஆனார். அச்சிற்றரசருள் சிலருடைய முன்னோர்கள் நாயனாராக இருந்தவர். உதாரணமாகத் தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவலூரை ஆண்டவர் மலையமான்கள் என்பவர். அவருடைய முன்னோரே மெய்ப் பொருள் நாயனார் என்பவர். அந்த அரச மரபினர் தங்கள் முன்னோர் வரலாற்றை நன்றாக அறிந்திருப்பார்கள் அல்லவா? அதனால் சேக்கிழார் அவர்களைக் கண்டு தம் அரசியல் விஷயங்களைப் பேசிய பிறகு, அவர்கள் மரபில் தோன்றி மறைந்த நாயனார் வரலாற்றை விசாரித் துக் குறிப்புகள் எழுதிக் கொண்டார். இவ்வாறு அந்தந்தப் பரம்பரையினரைக் கேட்டு எழுதுவது மிகச் சிறந்தது அல்லவா? வழிப்போக்கர் பேச்சைக் கேட்டுத் தாறுமாறாக எழுதாமல், தக்கவர் மூலமாக விஷயங்களை அறிந்து எழுதுதல் பாராட்டிடத்தக்க முறையாகும்.

இந்த முறையைப் பின்பற்றிச் சேக்கிழார் சேரர்-சோழர்-பாண்டியர் முதலிய அரச மரபில் வந்த நாயன்மார் வரலாறுகளுக்கு வேண்டிய குறிப்புகளைத் தயாரித்தார்; மற்ற நாயனார். களைப் பற்றிய குறிப்புகளை அந்தந்த ஊராரைக் கேட்டுத் தயாரித்தார்.
சேக்கிழார் அரசாங்க வேலைகளை முன்னிட்டுச் சோழப் பெரு நாட்டில் பலமுறை யாத்திரை செய்தார். அப்பொழுது அந்தந்த நாட்டு இயற்கை அமைப்பு- ஊர் அமைப்பு முதலிய பல விவரங்களைக் கூர்ந்து கவனித்துக் குறிப்புகள் தயாரித்துக் கொண்டார்.

இளமை எண்ணம்

சேக்கிழார் இங்ங்ணம் அறுபத்து மூவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஏன் தயாரிக்க வேண்டும்? அவர் இளமையில் குன்றத்தூரில் படித்துக் கொண்டு இருந்த பொழுது என்ன எண்ணினார்? மக்களுக்குச் சமய உணர்ச்சியை ஊட்டிய சைவ சமய ஆசாரியர் வரலாறுகளைத் தாம் பாட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் என்பது முன் கூறப்பட்டதன்றோ? அந்த எண்ணம் பல ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. அமைச்சர் பதவி கிடைத்தது. யாத்திரை செய்ய வசதி உண்டானது ஆதலால், சேக்கிழார் தமது இளமை எண்ணத்தைச் செயலில் கொண்டு வர முயன்றார்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to சேக்கிழார் தல யாத்திரை, except where otherwise noted.

Share This Book