="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

3 குன்றத்தூர்

2. குன்றத்தூர்

புலியூர்க் கோட்டம்

தொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது என்பது முன் சொல்லப்பட்டது அல்லவா? அவற்றில் ஒன்று புலியூர்க் கோட்டம்[குறிப்பு 1] என்பது. இதன் தலைநகரம் புலியூர் என்பது. புலியூர், சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அதுவே புலியூர்க் கோட்டத்தின் தலைநகரம். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி, கோவூர், குன்றத்தூர் முதலியன இக்கோட்டத்தைச் சேர்ந்தவை.

குன்றத்தூர்

இது பல்லாவரம் (பல்லவபுரம்) என்னும் புகை வண்டி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில் இருப்பது; சென்னையிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது. இதற்குச் சென்னையில் இருந்து நேரே பேருந்து போகிறது. இவ்வூரில் ஒரு சிறிய குன்று இருக்கின்றது. அதனால் இவ்வூர் குன்றத்தூர் எனப் பெயர் பெற்றதுபோலும்!

பிரிவுகள்

குன்றத்துார் இப்பொழுது திருநாகேசுவரம், மணஞ்சேரி, நத்தம் என மூன்று பிரிவுகளாக இருக்கின்றது. திருநாகேசுவரம் என்பது சேக்கிழார் கட்டிய திருநாகேசுவரம் என்னும் சிவன் கோவிலை உடையது. அக்கோவிலின் பெயரே நாளடைவில் அதன் சுற்றுப்புற ஊரின் பகுதியைக் குறிக்கலாயிற்று. சோழ நாட்டில் இவ்வாறே ஒரு கோவிலின் பெயர் ஊரின் பெயராக விளங்குகிறது. திருநாகேசுவரத்தில் நெசவுத் தொழில் செய்கின்ற செங்குந்த முதலிமார் வசிக்கின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் திருநாகேசுவரம் கோவிலில் சிறப்பாகத் திருவிழாச் செய்து வருகின்றனர்.

மணஞ்சேரி என்பது திருநாகேசுவரத்தை அடுத்து இருக்கும் பகுதி. அப்பகுதியில் மூன்று நான்கு தெருக்கள் இருக்கின்றன. அப்பகுதியில் சேக்கிழார் மரபைச் சேர்ந்த வேளாளர் சிலர் இருக்கின்றனர்.

இடையில் வயல்கள்

திருநாகேசுவரத்திலிருந்து அரை மைல் தூரத்தில் முன் சொன்ன குன்று இருக்கின்றது. அதன் அடிவாரத்திலிருந்து இருக்கும் ஊர் நத்தம் என்று வழங்குகிறது. திருநாகேசுவரத்திற்கும் நத்தத்திற்கும் இடையில் உள்ள ஒரு கி. மீ. தூரம் கவனிக்கத்தக்கது. அந்தச் சாலையின் இடக்கைப் பக்கமாகச் சில தெருக்களும் இங்கும் அங்குமாகச் சில வீடுகளும் இருக்கின்றன. அவற்றின் எதிர்ப்புறத்தில் வயல்கள் காண்கின்றன. இந்த வயல்களில் அடிக்கடிப் பழைய பானை ஒடுகளும் வேறு சில புதை பொருள்களும் கிடைத்து வருகின்றன. சில இடங்களில் கட்டடத்துக்குரிய அடிப்படைச் சுவர்கள் இருக்கின்றன என்று உழவர்கள் உரைக்கிறார்கள். இந்த விவரங்களையும், இவ்வயல்களுக்கு அப்பால் நத்தம் இருப்பதையும் நோக்க, இந்த வயல்கள் உள்ள இடம் முழுவதும் பழைய காலத்தில் நகரப் பகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்பதை எளிதில் அறியலாம்.

நத்தம்

இந்த வயல்களைத் தாண்டியதும் நத்தம் காணப்படுகிறது. அஃது ஐந்தாறு தெருக்களைக்
கொண்ட ஒரு சிறிய கிராமமாக இருக்கிறது. தெருக்களில் பல பாழடைந்த கட்டடச் சுவர்களும் மேடுகளும் பள்ளங்களும் அவ்வூரின் பழைமையை மெளனமாக உணர்த்தி நிற்கின்றன. நத்தத்தில் சேக்கிழார் கோவில் இருக்கின்றது. அது மிகச் சிறிய கோவில். அக்கோவிலில் நாள்தோறும் பூசை நடைபெறுகின்றது. அக்கோவில் உள்ள இடமே சேக்கிழார் மாளிகை இருந்த இடமாகும் என்று அங்குள்ளவர் கூறுகின்றனர்.

சேக்கிழார் கோவிலுக்கு எதிரில் இரண்டு பழைய கோவில்கள் இருக்கின்றன. ஒன்று சிவன் கோவில்; மற்றொன்று பெருமாள் கோவில். பெருமாள் கோவில் முக்காற்பாகம் அழிந்து விட்டது. அக்கோவிலில் பெருமாளின் பெயர் திருவூரகப்பெருமாள் என்பது. சிவன் கோவில் ஓரளவு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு கோவில்களிலும் பழைய காலக் கல்வெட்டுகள் இருக்கின்றன. மலை மீதுள்ள முருகர் கோவில் சேக்கிழார்க்கு மிகவும் பிற்பட்டது.

பாலறாவாயர் குளம்

சேக்கிழார் கோவிலை அடுத்து ஒரு குளம் இருக்கிறது. அதனை அமைத்தவர் பாலறாவாயர் என்பவர். அவர் சேக்கிழார்க்குத் தம்பியார் ஆவர். ‘பாலறாவாயர் குளம்’ என்பது இப்பொழுது ‘பல்லவராயர் குளம்’ என்று வழங்குகிறது. அக் குளம் இப்பொழுது கவனிப்பவர், இல்லாததால் சீர்கெட்டுக் கிடக்கிறது.

சேக்கிழார் மரபினர்

சேக்கிழார் மரபினர் நத்தத்தில் இருக்கின்றனர். அவர்கள் சைவம்-வைணவம் ஆகிய இரண்டு சமயங்களையும் சார்ந்தவர்கள்; உழு தொழில் செய்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் முன்னோரான சேக்கிழார் சிறப்பை அறியத் தக்க நிலைமையை இப்பொழுதுதான் அடைந்து வருகிறார்கள்.

பழைய காலக் குன்றத்தூர்

குன்றத்தூரைப் பற்றித் திருநாகேசுவரம் கோவிலிலும் நத்தம் கோவில்களிலும் உள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு சில செய்திகளை அறியலாம். ஏறக்குறையச் சேக்கிழார் காலத்தில் அவ்வூர் பெரிய நகரமாக இருந்தது. பல பெரிய தெருக்கள் இருந்தன. மாட மாளிகைகள் இருந்தன. கோவில்கள் நல்ல நிலையில் விளங்கின. திரு நாகேசுவரம் கோவிலில் தேவரடியார் பலர் இருந்து கோவில் பணிகளைச் செய்து வந்தனர்; இசையையும் நடனத்தையும் வளர்த்தனர். கோவிலை அடுத்து ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் சைவ அடியார்கள் தங்கியிருந்தனர். கோவிலை மேற்பார்க்க ஒரு சபையார் இருந்தனர்.

குன்றத்தூர், செம்பரம்பாக்கம் ஏரிப் பாய்ச்சலை உடையது; செழுமையான வயல்களால் சூழப்பட்டது; சிறந்த மருத்துவர் ஒருவரைப் பெற்றிருந்தது. அம்மருத்துவர் குன்றத்
தூரில் வைத்தியம் செய்து வந்தார். அந்த வைத்தியர் ஆசிரியராகவும் இருந்தார். அவரிடம் பலர் கல்வி பயின்றனர்.

குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் சைவத்திலும் வைணவத்திலும் பக்தி மிகுந்தவர்கள். அவர் கள் சேக்கிழார் கட்டிய சிவன் கோவிலுக்குப் பல தான தருமங்கள் செய்தனர்; பெருமாள் கோவிலையும் கவனித்து வந்தனர்.


  1. சோழர் ஆட்சி காலம் கி.பி. 900-1300.
    மற்ற இருபத்து மூன்று கோட்டங்களின் பெயர்கள் இவை : 1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4 செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்துார்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 20. குன்றவட்டானக் கோட்டம் 13 பல்குன்றக்கோட்டம் கோட்டம் 14. இளங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17 படுவூர்க் கோட்டம், 18. கடிகர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேர்த்துார்க்கோட்டம்

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to குன்றத்தூர், except where otherwise noted.

Share This Book